முகப்பில் இருவாச்சிப் பறவையின் சின்னத்துடன் உயர்ந்தெழுந்து நிற்கிறது மும்பை சாலிம் அலி சவுக்கில் உள்ள ‘பாம்பே இயற்கை வரலாற்றுக் கழகம் (பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி). சுருக்கமாக, பி.என்.எச்.எஸ் (BNHS).
பி.என்.எச்.எஸ்-ஸுக்குச் செல்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். 1, ஜெர்டான்ஸ் கோர்ஸர் என்னும் பறவை. 2, இந்தியாவின் பறவைத் தாத்தா என்று அறியப்படும் சாலிம் அலி (1896-1987) தன் வாழ்நாளின் கணிசமான பகுதியைக் கழித்த இடம் அது.
பி.என்.எச்.எஸ். ஒரு அறிமுகம்
முதலில் பி.என்.எச்.எஸ்-ஸைப் பற்றிய சுருக்கமான ஒரு அறிமுகம். இந்தியாவில் இயற்கை அறிவியல், இயற்கைப் பாதுகாப்பு போன்றவற்றில் ஈடுபட்டிருப்போருக்கு கிட்டத்தட்ட ஒரு புனிதத்தலம் போன்றது பி.என்.எச்.எஸ். பறவைகள், விலங்குகள் என்று இயற்கையின்மீது ஆர்வம் கொண்ட, தொழில் முறை சாராத ஆறு ஆங்கிலேயர்களும் இரண்டு இந்தியர்களும் 1883-ல் இதே நாளில் (செப்டம்பர்-15) விக்டோரியா மியூசியத்தில் சந்தித்து உருவாக்கியதுதான் பி.என்.எச்.எஸ். ஆரம்பத்தில் தொழில் முறை சாராதவர்கள் சேர்ந்து ஆரம்பித்திருந்தாலும் கூடிய விரைவில் நிபுணத்துவத்துடன் கூடிய செயல்பாட்டை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். இந்தியாவில் காணப்படும் உயிரினங்களைப் பற்றிய வரலாற்றைச் சேகரித்தல், அந்த உயிரினங்களைப் பிடித்துவந்து அவற்றைப் பற்றி ஆராய்ந்து, அவற்றை அறிவியல்பூர்வமாக வகைப்படுத்துதல், உயிரினங்களைப் பாதுகாக்கும் செயல்பாடுகளை மேற்கொள்ளுதல், இந்தத் துறைகளில் கள ஆய்வு மேற்கொள்ளுதல் என்று முக்கியமான பல வேலைகளைக் கடந்த 132 ஆண்டுகளாக, இந்த அரசு சாராத நிறுவனம் செய்துவருகிறது. பி.என்.எச்.எஸ் 1886-ல் ஆரம்பித்த ‘ஜர்னல் ஆஃப் பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி’ என்ற இதழ் இன்றும் தொடர்ந்து வருடம் மும்முறை இதழாக வந்துகொண்டிருக்கிறது. கூடுதலாக, ‘ஹார்ன்பில்’ என்ற காலாண்டிதழும் பி.என்.எச்.எஸ்ஸால் வெளியிடப்படுகிறது. பி.என்.எச்.எஸ்-ஸின் செயல்பாடுகள் தொடர்பான புத்தகங்களும் வெளியிடப்படுகின்றன. உலகப் புகழ்பெற்ற பறவையியல் அறிஞர் சாலிம் அலி, எஸ்.எச். பிரேட்டர், ஜே.சி. டேனியல் (மலையாளத் திரைப்படப் பிதாமகன் ஜே.சி. டேனியலும் இவரும் வேறு) போன்றோர் இங்கே பணியாற்றியிருக்கிறார்கள்.
சாலிம் அலியை ஏமாற்றிய கலுவிக் கோடி
இப்போது ஜெர்டான்ஸ் கோர்ஸர் என்ற பறவைக்கு வருவோம். ஆந்திரத்தின் கடப்பா பகுதியை மட்டும் வாழிடமாகக் கொண்டிருக்கும் இந்தப் பறவை, உலகின் மிகவும் அரிதான பறவைகளுள் ஒன்று. 1848-ல் டி.சி. ஜெர்டான் என்ற ஆங்கிலேயப் பல் மருத்துவர் மற்றும் இயற்கை ஆர்வலரால் தான் இந்தப் பறவை முதன்முதலில் விவரிக்கப்பட்டிருந்தது (அவர் நினைவாகப் பறவைக்கும் இந்தப் பெயர்). ஜெர்டான்ஸ் கோர்ஸருக்கு உள்ளூர் மக்களின் மொழியில் ‘கலுவிக் கோடி’ என்ற பெயர் உண்டு (இனி, இதே பெயர் கட்டுரையில் தொடரும்). 1900-ல்தான் அந்தப் பறவை கடைசியாகப் பார்க்கப்பட்டிருந்தது. அதற்குப் பிறகு, பல்வேறு தேடல்களுக்குப் பிறகு 1986-ல் கடப்பா மாவட்டத்தில் அந்தப் பறவை மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது. அய்த்தண்ணா என்ற உள்ளூர்க்காரர் அந்தப் பறவையைப் பிடித்துவைத்து, பி.என்.எச்.எஸ்-ஸைச் சேர்ந்த பரத்பூஷண் என்பவருக்குத் தகவல் தெரிவித்தார். சாலிம் அலிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் தொடர்பு என்பது இன்றளவுக்கு வளராத காலம் என்பதால், பறவை பிடிபட்ட மூன்றாம் நாளில்தான் சாலிம் அலியால் வந்து பார்க்க முடிந்தது. ஆனால், அதற்குள் அந்தப் பறவை இறந்துவிட்டிருந்தது. ஒருங்கிணைந்திருந்த இந்தியத் துணைக் கண்டத்தில் பர்மாவில் ஆரம்பித்து, பாகிஸ்தான், கேரளம், அந்தமான் என்று எல்லாத் திசைகளிலும் எல்லாப் பறவைகளும் அவர் பார்வைக்குத் தப்பியதே இல்லை. அநேகமாக இந்திய வரலாற்றில் அதிகமான பறவை இனங்களைப் பார்த்தவர் அவராகத்தான் இருப்பார். அவரையே ஏமாற்றிவிட்டது கலுவிக் கோடி. (செந்தலை வாத்தும் இமாலயக் காடையும்கூட அவருக்குக் கடுக்காய் கொடுத்திருக்கின்றன.)
இமாலய மொனால் பறவையுடன் பதப்படுத்துநர்.
தொலைந்த பொக்கிஷம்
அது கண்டுபிடிக்கப்பட்ட பகுதி உடனடியாக சரணாலயமாக அறிவிக்கப்பட்டது (லங்கமல்லேஸ்வர காட்டுயிர் சரணாலயம்). அங்கே சரணாலயம் அமைந்திருப்பது குறித்த பிரக்ஞையின்றி ஆந்திரப் பாசனத் துறை அந்த இடத்தின் வழியாக தெலுங்கு-கங்கைத் திட்டத்தின் கீழ் கால்வாய் தோண்டியதால் அந்தப் பறவையின் இருப்பு குறித்து மறுபடியும் அச்சம் ஏற்பட்டுவிட்டது. 2008-க்குப் பிறகு, கலுவிக் கோடி பறவை மறுபடியும் பார்க்கப்படவில்லை. 86 ஆண்டு காலத் தேடலுக்குப் பிறகு கண்டறியப்பட்ட இந்த உலகின் அரிய பொக்கிஷம் ஒன்று நமது பொறுப்பற்ற தன்மை காரணமாக மறுபடியும் தொலைந்துபோயிருக்குமோ என்று இயற்கை ஆர்வலர்கள் கவலை கொண்டிருக்கிறார்கள். உலகின் பல்வேறு இயற்கை ஆர்வலர்களும் பறவைக் காதலர்களும் கலுவிக் கோடியைப் பார்ப்பதற்காகத் தங்கள் சொத்து முழுவதையும் எழுதிவைக்கக் கூடத் தயாராக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அரிய பறவையின் நூற் றாண்டுக்கு முந்தைய மிகச் சிலஸ்பெஸிமன்கள் (பாடம் செய்யப்பட்ட பறவைகள்) உலகின் மிகச் சில உயிரியல் அருங்காட்சியகங்களில் மட்டுமே இருக்கின்றன. பி.என்.எச்.எஸ்-ஸிலும் ஒரு ஸ்பெஸிமன் இருக்கிறது என்று கேள்விப்பட்டதே அங்கே சென்றதற்குப் பிரதான காரணம்.
பி.என்.எச்.எஸ்-ஸின் உயிரியல் அருங்காட்சியகத்தில் பாடம் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டிருக்கும் உயிரினங் களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்தைத் தாண்டும். ஆசியாவிலேயே மிகப் பெரிய தொகுப்பு இது. பாலூட்டிகள்-20,000, பறவைகள்-29,000, பறவை முட்டை கள்-5,400, நீர்-நிலம் வாழ்வனவும் ஊர்வனவும்-8,500, பூச்சிகள்-50,000 என்று பிரமிக்க வைக்கிறது அவர்களின் தொகுப்பு. உலகிலேயே வேறெங்கும் இல்லாத உயிரினங்களின் மாதிரிகள் இவர்களிடம் உண்டு. அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ‘செந்தலை வாத்து’ இவர்களின் அரிய பொக்கிஷங்களுள் ஒன்று. இப்படி உயிரினங்களைப் பிடித்துவைத்துப் பாடம் செய்வதால் அவை அழிந்துவிடாதா என்ற கேள்வி எழலாம். புகைப்படங்கள் முதலான தொழில்நுட்பம் வளராத காலத்தில் ஒரு உயிரினத்தைப் பற்றிய தெளிவான அறிவு வேண்டுமென்றால், அதைப் பிடித்து ஆராய்ச்சி செய்துதான் தெரிந்துகொள்ள முடியும். ஒரு உயிரினத்தைப் பற்றிய தெளிவான அறிவு இருந்தால்தான் அதைக் காக்க முடியும். அதனால்தான் இந்த வழிமுறை. ஒரு இனத்தின் ஒரு ஜோடி உயிர்களை அறிவியல் நோக்கில் பிடிப்பதால் அது அழிந்துவிடாது என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது.
இப்படி அரிய பொக்கிஷங்கள் இருப்பதால் அவற்றை எல்லோருக்கும் திறந்துகாட்டிவிட மாட்டார்கள். உரிய அனுமதி பெற்று வந்திருந்ததால் நம்மை அனுமதித்தார்கள். அங்குள்ள ஆராய்ச்சியாளர்களும் பாலூட்டியியலாளரும் பதப்படுத்துநரும் மிகவும் பொறுமையுடன் எல்லாவற்றையும் பற்றி விளக்கிச் சொன்னார்கள். ஸ்பெஸிமன்களையெல்லாம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும் அறைகளில் மிகவும் கவனமாக அவர்கள் பராமரித்துவருவதை அறிய முடிந்தது. நம் மனத்துக்குள் ‘கலுவிக் கோடியை எப்போது காட்டப் போகிறீர்கள்?’ என்ற கேள்வி அரித்துக்கொண்டிருந்தது. அழிந்துவரும் விலங்கினமான அலங்கு போன்றவற்றைக் காட்டிவிட்டு, பறவைகள் பிரிவுக்கு வந்தார்கள்.
வானம் அளந்த பறவை
இமயமலைப் பகுதியில் மட்டும் காணப்படுவதும், அழிவின் விளிம்பில் இருப்பதுமான டிராகோபான் ஃபெசண்ட் (காட்டுக்கோழி இனம்) என்ற பறவையின் ‘ஸ்பெஸிம’னைக் கையில் கொடுத்தார்கள். வடக்கு சிக்கிமில் 1914-ல் பிடிக்கப்பட்ட இந்தப் பறவை இப்போது நம் கையில் சலனமின்றி. இமாலய மொனால் என்ற அழகு சிங்காரனையும் காட்டினார்கள் அடுத்துக் காட்டப்பட்ட பறவை தேன்சிட்டு. எங்கும் காணும் பறவைதான். அந்த ஸ்பெஸிமனை முக்கியத்துவப்படுத்துவது ‘Salim Ali’ என்ற கையெழுத்துதான். ஆம், அந்த ஸ்பெஸிமனைக் கொண்டுவந்தவர் சாலிம் அலி. சாலிம் அலி ஏந்திய தேன்சிட்டு இப்போது நம் கையில். இடையில் 70 ஆண்டுகள்! பக்கத்திலேயே மிகவும் குட்டியாக ஒரு பறவை, செம்மார்பு மலர்க்கொத்தி (ஃபயர் பிரெஸ்ட்டட் ஃப்ளவர்பெக்கர்). இந்தியாவிலேயே மிகச் சிறிய பறவை என்றார்கள். வடகிழக்கிந்தியாவில் மட்டுமே காணப்படும் பறவை இது. இவ்வளவு சிறியதாக இருந்துகொண்டு வானத்தையே அளந்த பறவை வெறும் 9 கிராம் எடை, 7 செ.மீ நீளம்தான் என்றால் நம்ப முடிகிறதா!
அழிந்துவிட்டதாகக் கருதப்படும் ‘செந்தலை வாத்து’ ஒன்றை நம் கையில் கொடுத்தார்கள். 1903-ல் பிடிக்கப்பட்ட பறவை. கடைசியாக 60-களில் பார்க்கப்பட்ட பறவை. இப்போது முற்றிலும் அழிந்துவிட்டதாகக் கருதப்படும் பறவை! வானம் மிகவும் விஸ்தீரணமானது, இது போன்ற பறவைகளுக்கு இடமில்லாமல் பூமிதான் மிகவும் குறுகிவிட்டதோ என்று தோன்றியது.
தவிட்டு நிறப் பறவையொன்றைக் கொடுத்து, “இதோ உங்கள் கனவுப் பறவை கலுவிக் கோடி” என்றார்கள். காலம் மெதுவாகவும் இதயத் துடிப்பு வேகமாகவும் ஓட ஆரம்பித்தது. உலகத்து அளவுகோல்களின்படி அவ்வளவு அழகு என்று சொல்லிவிட முடியாத பறவைதான். ஆனால், அவ்வளவு அரிதாக இருப்பதால் அவ்வளவு அழகாக ஆகியிருக்கிறது அந்தப் பறவை. கையில் எடுத்துப் பார்த்தபோது, அதில் இணைக்கப்பட்டிருந்த பட்டியில் 17.01.1986 என்று எழுதப்பட்டிருந்தது. முகத்தில் கேள்வியுடன் பார்த்தபோது, அங்கிருந்த பதப்படுத்தல் நிபுணர் புன்னகையுடன் சொன்னார், “நீங்கள் கையில் வைத்திருப்பது 86 ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்பட்டு, சாலிம் அலி வந்து பார்ப்பதற்குள் இறந்துபோன அதே பறவைதான்.”
- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
பி.என்.எச்.எஸ். நிறுவப்பட்ட நாள் செப்டம்பர்-15, 1883
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago