கொஞ்ச காலத்துக்கு முன்புவரை ‘அப்பாயி’ என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. அப்பாவைப் பெற்றவர் என்று அதற்குப் பொருள். ‘அம்மாயி’, ‘அப்பாயி’ இரண்டையுமே புழங்கிக்கொண்டிருந்தவர்கள் ‘பாட்டி’ என்ற ஒரே சொல்லை அவற்றுக்குப் பதிலாக இப்போது பயன்படுத்துகிறார்கள். ‘பாட்டி’ என்பதற்கு ‘பெற்றோரின் தாய்’ என்ற பொத்தாம்பொதுவான பொருள்தான் உண்டு. ‘அப்பாயி’ என்ற துல்லியமான சொல்லைப் பொதுத் தமிழ் தக்கவைத்துக்கொள்ளவில்லை என்பதற்கு என்ன சமாதானம் சொல்லலாம்?
பொதுத் தமிழ் பொத்தாம்பொதுத் தமிழாகிறது என்றுதான் சொல்ல முடியும். இன்னொரு சிக்கலும் உண்டு. இந்தச் சொல் புழக்கத்தில் இருந்தபோதுகூட எழுத்தில் வந்தததாகத் தெரியவில்லை. எழுத்துத் தமிழ் இப்படி ஒதுங்கியிருந்தே அந்தச் சொல்லைத் தொலைத்துவிட்டது. அதற்கான காரணத்தை மொழிக்குள் தேட முடியாது. மொழிக்கு வெளியே தேடிக் காணலாம். அது மொழியில் தெரியும் ஒரு வகை பகட்டு நாகரிகத்தின் சுய ஒதுக்கம்.
சொல்லுக்குத் தேவையில்லையா?
கால மாற்றத்தில் தேவை அற்றுப்போகும் சொற்களை மொழி உதிர்த்துக் கொட்டிவிடுகிறது. அப்படி உதிர்த்த சொல்தான் ‘அப்பாயி’. பாட்டி வீட்டுக்குப் போகும் குழந்தையைக் கேட்டால், “நான் சீர்காழி பாட்டி வீட்டுக்குச் செல்கிறேன்” என்றோ, “மாயவரம் பாட்டி வீட்டுக்குச் செல்கிறேன்” என்றோ சொல்லும். ஊரைச் சேர்த்துச் சொல்லி, தான் செல்வது அம்மாயி வீடா, அப்பாயி வீடா என்ற துல்லியத்தைத் தன் சொல்லில் சாதித்துவிடுகிறது. இப்படிப்பட்ட சொற்களுக்குத் தேவை அற்றுப்போகாது. சுந்தர ராமசாமி தன் புத்தகம் ஒன்றில், ‘என் தாத்தாவின்…’ என்று எழுதி, அதன் விளக்கமாக அடைப்புக்குறிகளுக்குள் ‘என் அம்மாவின் அப்பா’ என்று எழுதுகிறார். இன்னொரு புத்தகத்தில், ‘எங்கம்மாவின் அப்பா’ என்று விரிவாக எழுதிவிட்டு, ‘என் தாத்தா’ என்று அதைச் சுருக்கியும் சொல்கிறார். உறவைத் துல்லியமாகச் சொல்வதற்கு நம் காலத்திலும் தேவை இருந்துதானே இப்படி எழுதுகிறார்!
பொதுத் தமிழ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நம் பள்ளிக்கூடப் புத்தகங்கள் வெகுவாக நிச்சயிக்கின்றன. உரையாடலாக அமைத்திருக்கும் ஒரு பாடத்தில் ‘நூல் விற்பனை நிலையம்' என்ற தொடர் வருகிறது. இந்தத் தொடர் என்ன சொல்கிறது என்பதோடு, எதைத் தவிர்க்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். மொழித் தூய்மையோ வேறு வளர்ச்சிப் போக்கோ பேச்சுத் தமிழில் பரவலாகப் புழங்கும் ‘புத்தகக் கடை’ என்பதைத் தவிர்த்துவிட்டது. கிராமங்களிலும் பேச்சுவழக்கிலும் இருக்கும் சொற்கள் ‘நாங்கள்தான் இருக்கிறோமே' என்று எழுதுபவருக்கு எதிரே வந்து நிற்கும். இருந்தாலும், பொதுத் தமிழ் அவற்றிலிருந்து ஒதுங்கி மேலே செல்கிறது. ‘பலசரக்குக் கடை’யிலிருந்து பொதுத் தமிழ் விலகி ‘பல்பொருள் அங்காடி’க்குச் சென்றது மொழி வரலாற்றில் ஒரு திருப்பம். சொல்லில் விவரச் செறிவில்லாமலும், விவரங்களை உடம்பு வளைந்து தழுவிக்கொள்ளும் கற்பனை இல்லாமலும் நம் பொதுத் தமிழ் எழுத்துத் தமிழாகவே இளைத்துவிட்டது.
எழுத்து மொழியின் டம்பம்
பிரெஞ்சு மொழியைச் செம்மையாக்க அர்ப்பணிப்போடு பணியாற்றியவர் தூய்மைவாதியான மல்ஹெர்ப். இதற்காகவே செயின்ட் ஜான் துறைமுகத்தின் சுமைத் தொழிலாளர்கள் பேசுவதை அவர் உற்றுக் கேட்பார் என்பது வரலாறு. தான் படித்ததையெல்லாம்விட, அடுப்படியில் (சமையலறை என்று வாசித்துக்கொள்ளவும்) பணிப் பெண்கள் பேசிக்கொண்டவற்றை ஒட்டுக்கேட்டதுதான் மிகவும் உதவியாக இருந்தது என்கிறார் அயர்லாந்தின் நாடக ஆசிரியர் சிங். சாமானியர்களின் கற்பனை வளத்தை அவரைப் போலவே புகழ்கிறார் எப்.எல்.லூகஸ். மொழிக்கும் கல்விக்கும் உள்ள தொடர்பு பற்றிய கசப்பான உண்மையாக அவர் சொல்வது இதுதான்: “நாகரிகமும் கல்வியும் அறிவைக் கூர்மையாக்கினாலும் மொழியின் கருக்கை அழித்துவிடுகின்றன.” இவற்றை அப்படியே இங்குள்ள நிலவரத்துக்குப் பொருத்த முடியாது. ஆனாலும், நம் எழுத்துத் தமிழுக்குச் சில அசட்டு ஆர்வங்கள் உண்டு என்பது உண்மை. தானே பொதுத் தமிழாகவும் இருக்க வேண்டும், எதைப் பற்றி எழுதினாலும் அதற்கு அறிவியல் மொழியின் சாயல் வேண்டும், சிந்தனை ஆழப் பாசாங்கில் பேச்சுமொழியிலிருந்து தன்னை நாசூக்காக உயர்த்திக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் எழுத்துத் தமிழின் போக்கு. நெல்லை அவித்து, காயவைத்து அரைப்பதாக எழுதுகிறோம். அவித்த நெல்லை ‘ஆவாட்டு’வார்கள்; காயப்போடுவதில்லை. கருக்கு இழந்த மொழியில்தான் அவித்த நெல் காயும்.
விறைத்துப்போன உரைநடை
பாடப் புத்தகத்தில் பேச்சுமொழியில் பாடங்கள் உண்டு. வட்டாரவழக்கில் எழுதிய பாடங்களும் உண்டு. பழைய தமிழிலும், இலக்கிய நடையிலும் பாடங்கள் உண்டு. இவற்றுக்கு மேல் என்ன வேண்டும் என்று கேட்பீர்கள். இவற்றையெல்லாம் கோத்து, விவரித்து, மாணவர்களுக்கு மொழிப் பயிற்சியின் இலக்கைக் காட்டும் புத்தக மொழியோ விறைத்துப்போன எழுத்து மொழியாக இருக்கிறது. நான் சொல்வது பேச்சுத் தமிழுக்கான சலித்துப்போன பரிந்துரை என்று தள்ளக் கூடாது. சொற்களில் நம் கலாச்சார அச்சின், சிந்தனைத் தடத்தின் பதிப்பு தெரியும். எழுத்துத் தமிழ் இந்த அச்சு ஆழமாகப் பதிந்த சொற்களை விட்டு விலகிப் பயணிக்கிறது. கொடி முந்திரி மறைந்து, அதன் இடத்தில் திராட்சைப் பழம் நிலைத்தது. துவரை அரிசி, துவரம் பருப்பானது. உங்கள் எல்லோருக்குமே திருமணப் புடவை தெரியும்; முகூர்த்தப் புடவை தெரியும். தாலிகட்டிப் புடவை என்ற தொடர் சிலருக்குத்தான் பழக்கமிருக்கும். உடுத்திக்கொண்டு மனையில் (மணமேடையில் என்று வாசித்துக்கொள்ளவும்) அமர்ந்து தாலிகட்டிக்கொண்ட புடவைக்கு அதுதான் பெயராக இருந்தது. ‘‘பழையவை கழிந்து புதிய சொற்கள் வந்துவிட்டன. எல்லாம் ஒன்றுதானே!” என்று சொல்லக்கூடும். தாலி கட்டிக்கொண்ட பிறகுதான் புடவைக்கு அந்தப் பெயருக்கான தகுதி வரும். தாலிகட்டிப் புடவையால் பேரப்பிள்ளைக்குத் தூளி கட்டுவார்கள்; அதையே மடித்து தொட்டிலில் மெத்தையாகப் போடுவார்கள். கடைக்குச் செல்பவர்கள் முகூர்த்தப்பட்டு வாங்கலாம், திருமணப் புடவை வாங்கலாம், கடைக்காரரும் இவற்றை விளம்பரப் படுத்தலாம், விற்கலாம்; தாலிகட்டிப் புடவையை விளம்பரம் செய்து விற்க முடியுமா? திருமணப் புடவை திருமணத்துக்குப் பிறகுதானே தாலிகட்டிப் புடவையாகும்! இந்தச் சொற்களுக்கெல்லாம் கூச்சப்படும் எழுத்துத் தமிழ் நம் கலாச்சாரத்துக்குத்தானே கூச்சப்படுகிறது!
- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: prof.jayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago