போகோ ஹராம் எனும் பெயரை நம்மில் யாரும் மறந்திருக்க முடியாது. 2014-ல் நைஜீரியாவின் தொலைதூர கிராமமான சிபோக்கில் உள்ள பள்ளியிலிருந்து 276 மாணவிகளைக் கடத்திச்சென்றதன் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்ட பயங்கரவாத அமைப்பு இது. ஆறு ஆண்டுகளாக இந்த அமைப்பினரால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் சிறுமிகளை மீட்கும் பணியில் ஆயிஷா வகீல் (51) எனும் பெண்மணி ஈடுபட்டிருக்கிறார்.
அது தொடர்பான இவரது அனுபவங்கள், ‘தி கார்டியன்’ இதழில் சிகா ஒடுவா எனும் நைஜீரியப் பெண் பத்திரிகையாளர் எழுதியிருக்கும் நெடுங்கட்டுரையில் பதிவாகியிருக்கின்றன. சிறுமிகளை மீட்கும் பணியில் மட்டுமல்ல, போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களையும் அமைதிப் பாதைக்கு அழைக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கும் ஆயிஷா சட்டம் பயின்றவர்; சமூகச் செயற்பாட்டாளர். இவரது முயற்சியின் பின்னணியில் இருக்கும் பாசப் போராட்டம் உன்னதமானது!
மதத்தின் பெயரால் வன்முறை
2002-ல் நைஜீரியாவின் போர்னோ மாநிலத் தலைநகரான மைதுகுரியில் முகம்மது யூசுஃப் எனும் மதகுருவால் போகோ ஹராம் இயக்கம் தொடங்கப்பட்டது. ‘பெண்கள் கல்வி பயிலக் கூடாது; ஆண்கள் மதக் கல்வியைத்தான் பெற வேண்டும்; இஸ்லாமியச் சட்டப்படிதான் ஆட்சி நடக்க வேண்டும், அனைவரும் இஸ்லாமிய மதத்தைத் தழுவ வேண்டும்’ எனும் குறிக்கோள்களுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு அல்-கொய்தா அமைப்பு துணை நின்றது.
அண்டை நாடுகளிலும் பரவியிருக்கும் இந்தக் குழுவின் வன்முறைகளால் இதுவரை 30,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் அகதிகளாகியிருக்கின்றனர். இந்த அமைப்பு உருவானதன் பின்னணியில் பல்வேறு காரணிகள் உண்டு.
» பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டைப் பிரித்தாளும் கருவியாக்குகிறதா பாஜக?
» கட்டணமில்லா மின்சாரம் விவசாயிகளுக்குத் தொடர்ந்து கிடைக்கட்டும்
நீண்டகாலம் ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த நைஜீரியாவில், 1979-ல் அதிபர் சேஷூ சகாரியின் தலைமையில் ஜனநாயக அரசு அமைந்தது. எனினும் அது நீண்டகாலம் நிலைக்கவில்லை. 1983-ல் நடந்த ராணுவப் புரட்சிக்குப் பின்னர் மீண்டும் சர்வாதிகார ஆட்சியின் கீழ் அந்நாடு வந்தது. ஒருவழியாக, 1999-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்குப் பின்னர் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பியது. நைஜீரியாவின் மக்கள் தொகையில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஏறத்தாழ சமமான எண்ணிக்கையில் உள்ளனர். இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்வதுண்டு.
1999-ல் நைஜீரியாவில் மதசார்பற்ற ஜனநாயக அரசு அமைந்தது, இஸ்லாமிய மதக் கொள்கைக்கு ஆபத்து நேரலாம் எனும் அச்சத்தை இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் நைஜீரியாவின் பெரும்பாலான மாநிலங்கள் ஷரியா சட்டத்தை அமல்படுத்தின. இதைத் தொடர்ந்து இரு தரப்பு மோதல்கள் மேலும் அதிகரித்தன. அந்தக் காலகட்டத்தில்தான் ‘ஜமாஅத் அல் அஸ் சுன்னா லிட்-டவா வல்-ஜிஹாத்’ எனும் அமைப்பை யூசுஃப் தொடங்கினார். இந்த அமைப்புதான் நாளடைவில் ‘போகோ ஹராம்’ என்று அழைக்கப்பட்டது. ‘போகோ’ என்றால் மதச்சார்பற்ற கல்வி என்றும், ‘ஹராம்’ என்றால் (பாவச்செயல்) என்றும் அர்த்தம்.
வடக்கு மாநிலங்களில் ஏற்றத்தாழ்வு நிலவுவதாகவும், மேற்கத்திய கலாச்சாரம் பரவிவருவதாகவும் முஸ்லிம்களிடையே எழுந்த கோபத்தை அவரது அமைப்பு எதிரொலித்தது. குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை அரசு கட்டாயப்படுத்தியதையும் யூசுஃப் கடுமையாக எதிர்த்தார்.
பயங்கரவாதியுடன் நல்லுறவு
ஆயிஷா பிறப்பால் கிறிஸ்தவர். மைதுகுரி பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர், அல்காலி கானா வகீல் எனும் முஸ்லிம் இளைஞரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டவர். திருமணத்துக்காக மதம் மாறினார். அதன் பின்னர் யூசுஃபின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது.
1990-கள் முதல் மேற்கத்திய நடைமுறைகள் திணிக்கப்படுவதைக் கண்டித்து நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பிரச்சாரமும் செய்துவந்தார் யூசுஃப். இதனால், முஸ்லிம்கள் மத்தியில் இவருக்கு நன்மதிப்பு உருவானது. மைதுகுரியில் மசூதி ஒன்றைத் தொடங்கி, மதக் கல்வியை அவர் முன்னெடுத்துவந்தார். தனது மகனைப் போல அவரைக் கருதிய ஆயிஷா, அவருக்காகவும், அவரது குடும்பத்துக்காகவும் உணவெல்லாம் சமைத்துத் தந்திருக்கிறார்.
யூசுஃபும் ஆயிஷா மீது மரியாதை கொண்டிருந்தார். அந்த அடிப்படையில், அரசுடனான மோதலைக் கைவிடுமாறு அவரிடம் ஆயிஷா கேட்டுக்கொண்டார். ஆனால், அதை யூசுஃப் ஏற்கவில்லை. அதைவிட துயரம், ஆயிஷாவின் வீட்டுக்கு அருகே வசித்துவந்த பதின்ம வயதுப் பையன்கள் யூசுஃபின் அமைப்பில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கொள்ள ஆரம்பித்ததுதான். அந்தச் சிறார்களைத் தனது சொந்த மகன்களாகவே கருதி பாசம் காட்டியவர் ஆயிஷா. மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று அவர்களிடம் ஆயிஷா மன்றாடினார். ஆனால், அந்தச் சிறார்கள் அதற்குச் செவிமடுக்கவில்லை. ஒருகட்டத்தில் அவர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாகவே ஆகிவிட்டனர்.
தீவிரமடைந்த பயங்கரவாதம்
2005-ல் டென்மார்க் நாளிதழ் ஒன்றில் முகம்மது நபி குறித்த கேலிச்சித்திரம் வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன. அப்போது நைஜீரியாவில் நடந்த போராட்டங்கள் வன்முறைச் சம்பவங்களாக மாறியதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
பொதுமக்கள் முதல் போலீஸார் வரை ஏராளமானோரைக் கொன்று குவித்துவந்த போகோ ஹராமின் அட்டூழியத்துக்கு முடிவுகட்ட நினைத்த நைஜீரிய அரசுப் பாதுகாப்புப் படைகள், 2009 ஜூலையில் அந்த அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தின. இதில் கைதுசெய்யப்பட்ட யூசுஃப், பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்துடன் போகோ ஹராம் அமைப்பு பலவீனமடைந்துவிடும் என்று நைஜீரிய அரசு கருதியது. ஆனால், அந்தக் கணிப்பு விரைவிலேயே பொய்த்தது.
2010-ல், அபுபக்கர் ஷெகாவு என்பவர் தலைமையில் இந்த அமைப்பு புத்துயிர் பெற்றது. நைஜீரிய அரசைக் கவிழ்த்துவிட்டு, இஸ்லாமிய அரசை உருவாக்குவதுதான் லட்சியம் எனும் இலக்குடன் இந்த அமைப்பு முன்பைவிடத் தீவிரமாக இயங்கத் தொடங்கியது. அரசை அகற்ற வேண்டுமானால் மேற்கத்திய கல்வியைக் கற்றுத்தரும் கல்வி நிலையங்களைத் தகர்க்க வேண்டும் என்று இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டனர். கல்லூரிகளுக்குள் நுழைந்து மாணவர்களை எரித்துக்கொல்வது, மாணவிகளைக் கடத்துவது, கொலை செய்வது என்று கொடூரச் சம்பவங்களில் இந்த அமைப்பினர் ஈடுபட்டு வந்தனர். அப்படித்தான், 2014-ல் சிபோக் பள்ளியிலிருந்து 276 மாணவிகளைக் கடத்திச் சென்றனர்.
அந்த மாணவிகளில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். அவர்களில் சிலர் தப்பி வந்துவிட்டதாகவும், பலர் மதமாற்றம் செய்யப்பட்டதாவும், அந்த அமைப்பினரே பல மாணவிகளைத் திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இப்படியான சூழலில்தான் அந்த அமைப்பின் பிடியில் இருக்கும் மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ஆயிஷா.
அனைவருக்கும் பொதுவான அன்னை
போகோ ஹராமைச் சேர்ந்தவர்கள் இப்போதும் ஆயிஷாவின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கவே செய்கிறார்கள். காரணம், இவர்களைப் பயங்கரவாதிகளாக ஆயிஷா பார்ப்பதில்லை. இவர்கள் மனம் வருந்தி அமைதிப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று தினமும் பிரார்த்திக்கும் ஆயிஷா, இவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்கிறார். இவர்களின் குடும்பத்தினருக்கும் உதவுகிறார்.
ஒருமுறை, ஒரு செய்தி சேனலின் நேரலை விவாதத்தில் கலந்துகொண்ட ஆயிஷா, “ஒரு தாயாகக் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து வன்முறையைக் கைவிடுங்கள்” என்று போகோ ஹராம் அமைப்பினருக்குக் கோரிக்கை விடுத்தார். அதன் பின்னர், ‘மாமா போகோ ஹராம்’ (போகோ ஹராமின் அன்னை) என்றே மக்களும் ஊடகவியலாளர்களும் இவரை அழைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த அமைப்பினர் மைதுகுரியில் தாக்குதல் நடத்தும் சமயங்களில் இவரது வீட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
அதேசமயம், அரசுப் படைகளைச் சேர்ந்தவர்களுக்கும் இவரது வீட்டில் அடைக்கலம் கிடைக்கும். பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினரையும் தன் வீட்டிலேயே தங்கவைத்து, அனைவருக்கும் உணவு பரிமாறுவதும் உண்டு. பலரை மனம் மாறச் செய்து, இந்த அமைப்பிலிருந்து வெளியே கொண்டு வந்திருக்கிறார். திருந்தி வாழும் இளைஞர்களுக்கும் உதவிகளைச் செய்கிறார்.
மறுபுறம், தனது நல்லிணக்க அணுகுமுறையாலேயே பலவிதத் தொந்தரவுகளைச் சந்திக்கிறார் ஆயிஷா. சட்டத்தின் பார்வையில் சந்தேகத்துக்குரியவராகவே கருதப்படுகிறார். சிபோக் மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, ‘தேடப்படும் குற்றவாளிகள்’ பட்டியலில் இவரது பெயரையும் சேர்த்தது நைஜீரிய ராணுவம். அகதிகளுக்கு உதவும் வகையில் இவர் தொடங்கிய தொண்டு நிறுவனம், நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மகளே மனிதக் கேடயம்!
அதையெல்லாம் தாண்டி, இரு தரப்புக்கும் இடையிலான சமாதானத் தூதுவராகத் தொடர்ந்து செயலாற்றுகிறார். இவரது தன்னலமற்ற பணிக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். மைதுகுரி பல்கலைக்கழகத்தில் இவரது மகள் உம்மி படித்து வந்தார். அப்போது அந்தப் பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் நடத்த போகோ ஹராம் அமைப்பினர் திட்டமிட்டனர். இந்த அமைப்பின் உறுப்பினர்கள் ஆயிஷாவைத் தங்கள் தாயாகக் கருதுபவர்கள் என்பதால், அதுகுறித்து ஆயிஷாவுக்கு முன்பே தகவல் கிடைத்துவிட்டது. தாக்குதல் நடக்கும் சமயத்தில் உம்மி அங்கு இருக்க வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அவர்களிடம் பேசிய ஆயிஷா, “மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது பாவம். இதைக் கைவிடுங்கள்” என்று மன்றாடிக் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர்கள் தங்கள் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. இதையடுத்து, தாக்குதலை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைத்த ஆயிஷா, தன் மகள் உம்மியை அன்றைய தினம் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைத்தார். தாக்குதல் நடத்த வந்த பயங்கரவாதிகள் பல்கலைக்கழக வளாகத்தில் உம்மியைக் கண்டதும் கடைசி நேரத்தில் அதைக் கைவிட்டனர். இப்படி தன் சொந்த மகளையே மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான மாணவர்களைக் காப்பாற்றியவர் ஆயிஷா.
மீண்டும் மீட்புப் பணி
சிபோக் மாணவிகளை மீட்க, இந்த அமைப்பைச் சேர்ந்த அலி கர்கா எனும் இளைஞரிடம் தொடர்ந்து பேசி ஒரு ரகசியத் திட்டத்தை வகுத்தார் ஆயிஷா. ஆயிஷாவின் வார்த்தைகளுக்காக, அந்தப் பணியில் ஈடுபட்டார் அலி கர்கா. ஆனால், அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. அவரைச் சித்திரவதை செய்து கொன்றனர் பயங்கரவாதிகள். தகவல் அறிந்த ஆயிஷா கதறி அழுததை வேதனையுடன் பதிவுசெய்திருக்கிறார் சிகா ஒடுவா.
இதோ இப்போதும், போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த உஸ்மான் எனும் இளைஞர் மூலம், மாணவிகளை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் ஆயிஷா. இதற்கிடையே, இந்த அமைப்பினரை வேட்டையாடுவதில் நைஜீரிய ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர். இவ்விஷயம் குறித்துப் பேச ஆயிஷாவின் அலுவலகத்துக்கு ரகசியமாக வந்துசெல்ல வேண்டிய நிலையில் உஸ்மானும் இருக்கிறார்.
இப்படியான சூழலில், போகோ ஹராம் அமைப்பின் பிடியிலிருந்து மாணவிகள் மட்டுமல்ல, தனது ‘மகன்’களும் மீட்கப்பட வேண்டும் என்று காத்திருக்கிறார் இந்தத் தாய்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago