திராவிட இயக்க வரலாற்றில் மிகுந்த சுவாரஸ்யமான வரலாற்றுக்குச் சொந்தக்காரர் நாவலர் நெடுஞ்செழியன். திமுகவில் நாவலருக்கு இணையாக வேகமாக வளர்ந்த தலைவர் யாரும் கிடையாது. பெரியாரின் திராவிடர் கழகத்தில் இணைந்தபோது, நாவலர் நெடுஞ்செழியனுக்கு 24 வயது. 1949-ல் திமுக உதயமானபோது, 29 வயதேயான நெடுஞ்செழியன் அந்தக் கட்சியினுடைய துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அண்ணாவால் நடமாடும் பல்கலைக்கழகம் என்று போற்றப்பட்ட அவர் ஆறே ஆண்டுகளில், மிக இளம் வயதில் திமுகவின் தலைமைப் பொறுப்புக்கு வந்தார். ஆம், 1956 மே மாதத்தில் திருச்சி மாநில மாநாட்டில், “தம்பி வா! தலைமை தாங்க வா! உன் ஆணைக்கு நாங்கள் எல்லாம் அடங்கி நடப்போம். தலைமையேற்க வா!” என்று அண்ணாவால் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு முன்மொழியப்பட்டபோது அவருடைய வயது 35. மீண்டும் அண்ணா அதே பதவியில் அமரும் வரை நான்காண்டு காலம் தலைமைப் பொறுப்பில் இருந்தார் நெடுஞ்செழியன்.
திராவிட இயக்கத்தின் தாயான நீதிக்கட்சியில் பற்றுள்ள குடும்பத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன் பிறந்த ஊர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கண்ணபுரம். பெற்றோரால் சூட்டப்பட்ட பெயர் நாராயணசாமி. தமிழ்ப் பற்றும் திராவிட இயக்கம் முன்னெடுத்த பெயர் அரசியலும் ‘நெடுஞ்செழியன்’ என்று தன் பெயரை மாற்றிக்கொள்ள வழிவகுத்தது. சீனுவாசன் என்ற இவரது தம்பி இப்படியே ‘இரா.செழியன்’ ஆகி தலைசிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவராகப் பார்க்கப்பட்டார்.
அண்ணாவைப் போல தம்பிகள்
அண்ணா எப்படியோ தம்பிகளும் அப்படியே என்று நகர்ந்த காலகட்டம் அது. அண்ணாவைப் போலவே ‘எம்.ஏ.’ படித்தவர்களில் நெடுஞ்செழியனும் ஒருவர். இலக்கணம், இலக்கியம், வரலாறு, அரசியல் என்று பரந்த வாசிப்புகொண்ட நெடுஞ்செழியன், ராமாயணம், மகாபாரதம், பெரியபுராணம் போன்றவற்றையும் கரைத்துக் குடித்திருந்தார். பிரசங்கம் செய்வதற்காக அல்ல; வைதீகத்துக்கு எதிரான வாதங்களுக்கான சான்றுகளை உருவி அடிப்பதற்குத்தான்.
திருப்பூரில் திராவிடர் கழகக் கூட்டத்துக்குப் பிறகுதான் நெடுஞ்செழியனின் பேச்சு எல்லோர்க்குமானது. கூட்டம் ஆர்ப்பரிக்கும் பேச்சுக்குச் சொந்தக்காரர் என்றாலும், பேச்சைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்; பல வார்த்தைகள் சாமானியர்க்குப் புரியாது. “நெடுஞ்செழியன்... நாலரைக் கட்டைத் தமிழ் குறையணும். பாமரருக்கும் புரியும் தமிழ்ல பேசணும். நீ பேசுறது பண்டிதர்களுக்குத்தான் புரியும்” என்றார் பெரியார். பண்டிதர்களுக்கான சரக்கை சாமானியர்க்கான மொழியில் பேசலானார் நெடுஞ்செழியன்.
திமுக முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டதும், 15 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றதும் அண்ணாவின் உழைப்பால் கிடைத்ததாக இருக்கலாம். ஆனால், அப்போதும் திமுகவின் பொதுச்செயலாளர் நாவலரே. திமுகவுக்கு முதல் மேயர் கருணாநிதியின் உழைப்பால் கிடைத்திருக்கலாம். ஆனால், அப்போதும் திமுகவின் பொதுச்செயலாளர் நாவலரே. ஆனால், தான் நன்றாக இருக்கும் காலத்திலேயே கட்சியில் அடுத்தடுத்த தலைவர்கள் உருவாக வேண்டும்; அவர்களுடைய செயல்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அண்ணா எண்ணியதன் விளைவே நாவலருக்கு வந்த பதவி என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் மனதில் அண்ணாவே நீக்கமற நிறைந்திருந்தார். அதே சமயம், கட்சியில் எல்லோரும் செயல்படுவதற்கான இடமும் இருந்தது.
நேருவுக்குக் கறுப்புக் கொடி
நெடுஞ்செழியன் ஒன்றும் பெயருக்குப் பொறுப்பில் இருப்பவராக இல்லை. கழகத்தின் சட்டதிட்டத்துக்குப் புறம்பாக நடந்த தாராபுரம் கிளைக் கழகத்தையே கலைத்தார். சென்னை மற்றும் நெல்லை மாவட்டச் செயலாளர்களைப் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலக்கி வைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய ஒன்றியத்தின் ஒப்பில்லா பிரதமர் நேரு சென்னை வந்தபோது, அவருக்கு எதிராக திமுகவினர் கறுப்புக் கொடி காட்டியதும் அவரது தலைமையில்தான். திமுகவின் முதல் வரிசைத் தலைவர்களிடையே அவருக்குப் பெரும் மதிப்பு இருந்தது. ஆனால், தொண்டர்களிடமும் மக்களிடமும் அவர் எப்போதும் இரண்டாமவராகவே பார்க்கப்பட்டார்.
அண்ணா மறைந்தார். ஆற்றல்மிகு கருணாநிதி முதல்வரானார். கட்சித் தலைமை நெடுஞ்செழியனிடம் இருந்தது. ஏற்கெனவே நெடுஞ்செழியனின் முதல்வர் கனவைக் கலைத்த எம்ஜிஆர், “கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரே தலைமையே வேண்டும்; கட்சித் தலைமை ஒருவரிடமும், ஆட்சித் தலைமை இன்னொருவரிடமும் இருந்ததால்தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சீர்குலைந்தது. அந்த நிலை திமுகவுக்கு வரக் கூடாது என்பதால்தான் இதைக் கூறுகிறேன்” என்று சொல்லி, நண்பர் கருணாநிதியைக் கட்சித் தலைமை நோக்கி நகர்த்த நெடுஞ்செழியனை இரண்டாம் இடத்துக்குத் தள்ளினார். திமுகவில் தலைவர் என்ற பதவி இப்படித்தான் உருவாக்கப்பட்டது. அதாவது, நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகவே நீடித்தார்; ஆனால், அவருக்கு மேல் தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டது; அதில் கருணாநிதி அமர்ந்தார். ஆக, அண்ணாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர், கருணாநிதிக்கு அடுத்த நிலைக்குப் போனார்.
சீக்கிரமே மனம் கசந்தார். மதிமுக - மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம் – கட்சியைத் தொடங்கினார். திமுகவில் இருந்தபோது, எம்ஜிஆர் நீக்கத்துக்கு வலுவாகக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர் நெடுஞ்செழியன். நகைமுரணாக, எம்ஜிஆரின் அதிமுகவிலேயே பின்னர் தன்னை இணைத்துக்கொண்டார். இப்போது எம்ஜிஆருக்கு அடுத்த நிலையில் அமர்ந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா அந்த இடத்தில் அமர நெடுஞ்செழியனின் இடம் அப்படியே நீடித்தது; ஆம், அவர் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் அமர்ந்தார்.
தமிழும் கண்ணியமும்
வரலாற்றில் ‘இரண்டாமவர்’ என்பது முக்கியத்துவம் பெறாத இடம் என்றாலும், முக்கியமான இடம். ‘முதலாமவர்’ எல்லாமுமாகத் திகழ ‘இரண்டாமவர்’ உறுதுணையாக இருக்க வேண்டும். விசுவாசம் முக்கியம். ‘முதலாமவர்’ வைத்திருக்கும் நம்பிக்கையைக் குலைத்திடக் கூடாது; அதே சமயம், அவருக்கான மனசாட்சியாகவும், அமைப்பையும் அவரையும் இணைக்கும் பாலமாகவும் அவர் இருக்க வேண்டும். தன்னுடைய பணியைப் பெருமளவில் திறம்படச்செய்தார் நெடுஞ்செழியன். தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவோ வலிகளைச் சுமந்தாலும், திராவிட இயக்கத்தின் மீதான பற்று அவரை உறுதிபடக் கோத்திருந்தது. தமிழ் உயிர்ப்பான உந்துவிசையாக இருந்தது. அதனால்தான், அதிமுகவில் இருந்து மறைந்தாலும் தன் அஞ்சலிக் குறிப்பில் திமுக தலைவர் கருணாநிதி இப்படி எழுதினார்: “நாவெல்லாம் தமிழ் மணக்க/ செவியெல்லாம் தமிழ் மணக்க/ சிந்தையெல்லாம் தமிழ் மணக்க/ அன்று மேடையேறிய நாவலர் என் நண்பர்/ தன்மான இயக்கத்தின் தூண்/ சாய்ந்துவிட்டதே என/ தமிழகம் புலம்பிட மறைந்து விட்டார்/ அவர் புகழ் வாழ்க!/ அவர் பரப்பிய பகுத்தறிவு வெல்க!”
இன்று திமுக, தன்னுடைய இரண்டாவது பொதுச்செயலாளருக்கு நூற்றாண்டு விழா எடுக்கிறது. அடுத்தது, அதிமுகவும் தனது முன்னோடிக்கு விழா எடுக்கும் என்று நம்பலாம். அரசியல் களத்தில் எதிரிகளாக நிற்கும் இரு கட்சிகளும் புகழஞ்சலி செலுத்தும் வாழ்க்கை முன்னோடிகளைத் தாண்டிய எல்லோருக்கும் வாய்க்கவில்லை. நெடுஞ்செழியனுக்கு வாய்க்கக் காரணம், அவருடைய தமிழும் கண்ணியமும்!
- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in
ஜூலை 11: இரா.நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு நாள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago