கரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து, 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அஞ்சல் முறையில் வாக்களிப்பதற்குத் தேர்தல் ஆணையம் வழிவகுத்துள்ளது. இதுவரை அஞ்சல் முறையில் வாக்களிக்கும் வாய்ப்பானது மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுவந்தது. இம்மாற்றம் கரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்களைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களைத் தொற்றிலிருந்து காக்க அஞ்சல் முறையைவிட அவர்களுக்காகப் பிரத்தியேகமாக வாக்குச்சாவடிகள் அமைப்பது சிறந்ததா என்பது விவாதத்துக்குரியது.
ஆனால், வாக்களிப்பதைச் சுலபமாக்கி, வாக்களிப்பதற்கு உள்ள தடைகளைக் களைய முனையும் எந்தத் தீர ஆராய்ந்த முயற்சியும் வரவேற்புக்குரியது. இதுபோல் வாக்களிக்க இயலாமல் சிரமப்படும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மின்னல் வேகத்தில் பரவிய கரோனாவும், அதற்கடுத்து அரங்கேறிய பொதுமுடக்கமும் புலம்பெயர் தொழிலாளர்களை வெகுவாகப் பாதித்தன. பெரும் எண்ணிக்கையில் அவர்கள் இடம்பெயர நேர்ந்தது. தங்களுடைய வீடு திரும்பும் நீண்ட பயணத்தில், அவர்கள் சந்தித்த இடர்ப்பாடுகளும் அவமானங்களும் நமது மனதை உலுக்கின. அரசியல்ரீதியாக அவர்கள் அதிகாரமற்றவர்களாக இருப்பதை உணர்த்தியது.
புலம்பெயர்ந்தவர்களின் வாக்குகள்
நம் நாட்டுக்குள் இடம்பெயரும் தொழிலாளர்கள் வேலை தேடிச் செல்லும் இடத்தில், தங்களுடைய நிரந்தர வசிப்பிடத்தை உருவாக்கிக்கொள்வது குறைவு; பருவ காலங்களில் இடம்பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையே அநேகம். இவர்கள் வாக்களிக்கும் நாளில் தங்களுடைய சொந்தக் கிராமத்துக்குத் திரும்பி வாக்களிப்பதையே விரும்பினாலும், செலவுசெய்து செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் வசிக்கும் மாநிலத்திலும் அவர்களுக்கு வாக்குரிமை இல்லாததால், அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். இந்தத் தொழிலாளர்கள் வலிமை மிக்க வாக்குவங்கியாகத் திகழவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
வயது வந்த ஒவ்வொரு இந்தியரும் வாக்களிக்க உறுதிசெய்வதே தேர்தல் ஆணையத்தின் லட்சியமாக இருக்க வேண்டும். இந்தியாவில் தற்போது 91.05 கோடி பதிவுபெற்ற வாக்காளர்கள் உள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில், 67.4% வாக்காளர்கள் அதாவது, 61.36 கோடி மக்கள் வாக்களித்தார்கள். மீதமுள்ள 29.68 கோடி வாக்காளர்கள் மூன்றில் ஒரு பங்கு ஆவார்கள். இவர்களைப் பற்றித்தான் தேர்தல் ஆணையம் அக்கறை செலுத்த வேண்டும். அரசியலில் ஆர்வமில்லாமல் வாக்களிக்காமல் போனவர்களின் எண்ணிக்கை 10% என்று தேசிய தேர்தல் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதுபோக மீதமுள்ள 20.57 கோடி இந்தியர்கள் வாக்களிக்க முடியாத நிலை இருக்கிறது. இதில் மூன்று கோடி வெளிநாடுவாழ் இந்தியர்களும் அடக்கம். வெளிநாடுவாழ் இந்தியர் நேரடியாக வந்துதான் வாக்களிக்க வேண்டும் என்கிற விதி இருப்பதால், மூன்று கோடி பேரில் வெறும் 24,000 பேர் மட்டுமே வாக்களிப்பதற்குப் பதிவுசெய்துள்ளனர்.
எல்லோரும் குடிமக்கள்
வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாங்கள் நியமிக்கும் நபர்களைக் கொண்டு வாக்களிக்கும் வசதியை உறுதிசெய்யும் வகையில், கடந்த மக்களவையில் மசோதா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களவையில் நிறைவேறிய பிறகு அது காலாவதியாகிவிட்டாலும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மீதுள்ள அக்கறை, ஏழை புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் சற்றே பாராமுகமாக இருப்பது தெரிகிறது. இத்தனைக்கும் இந்தியாவின் உழைக்கும் மக்களில், ஐந்தில் ஒருவர், அதாவது 13.9 கோடிப் பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்று 2017-ன் பொருளாதாரக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அவர்கள் பொருளாதாரரீதியாக வாழ்வாதாரத்தைத் தேடி கட்டிடத் துறை, செங்கல்சூளைகள், சுரங்கங்கள், சாலை அமைத்தல், வாட்ச்மேன் வேலை, விவசாயம் என்று பல துறைகளில் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் எங்கேயும் நிரந்தரமாகத் தங்கிவிட நினைப்பதில்லை. எப்படியாவது சொந்த ஊருக்குத் திரும்பிவிட வேண்டும் என்றே காத்துக் கிடக்கிறார்கள். எப்போது தங்கள் வேலைப்பருவம் முடியும் என்றே தவிக்கிறார்கள். குறைந்த கூலிக்கு சக்கையாகக் கசக்கிப் பிழியப்படுவதோடு, பரிதாபமான இடங்களில் தங்கவைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு நலத்திட்டப் பலன்கள், வாக்குரிமை என்று எதுவும் கிடைப்பதில்லை. இவர்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட, மறக்கப்பட்ட வாக்காளர்கள். தங்களுடைய சொந்தக் கிராமத்தில் தனக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
வாக்காளர்களின் வாக்குகளை இடம் மாற்றுவது என்பது இயலாத ஒன்றல்ல. சேவை வாக்காளர்கள் மின்னணு அஞ்சல் வாக்குச்சீட்டு முறை (ETPBS) வாயிலாகவும், வகைப்படுத்தப்பட்ட சேவை வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கும் ஒருவரைக் கொண்டு தங்களுடைய வாக்கைச் செலுத்தும் வசதியும் நடைமுறையில் உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைத்து, அதன் மூலம் இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் தங்கள் வாக்கை டிஜிட்டல் முறையில் செலுத்தும் முறையைப் பரிசோதித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது புழக்கத்துக்கு வர சில காலமாகும்.
வாக்களிக்கும் உரிமை
புலம்பெயர் தொழிலாளர்களின் உடனடித் தேவையைக் கணக்கில் கொண்டு, தேர்தல் ஆணையம் பல்வேறு மாநிலங்களில் உள்ள மாவட்ட ஆட்சியரகங்களை ஒருங்கிணைக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளரின் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள முகவரியின் அடிப்படையிலும், அவர்கள் தற்காலிகமாகத் தங்கியுள்ள காலத்தையும் கணக்கில் கொண்டு, அவர்கள் வேலை செய்யும் இடத்துக்கு அருகிலேயே சென்று வாக்களிக்கத் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் தேர்தல்களை நேர்மையாக நடத்தும் அதே வேளையில், இவர்களின் வாக்குகளை அவர்களுடைய தொகுதிகளுக்கு இடம்மாற்றுவதையும் சாதிக்க இயலும்.
வாக்களிப்பதைப் பொதுக் கடமையாக மக்களிடம் வலியுறுத்தாமல், அதை மக்களின் பொது உரிமையாக அரசு அணுக வேண்டும். ஏறத்தாழ வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டும், மறக்கப்பட்டும்விட்ட முகம் தெரியாத புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்கை இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் செலுத்த வழிவகுக்க வேண்டும். தாமஸ் ஜெஃபர்சன், “நமது அரசு பெரும்பான்மையினரால் அல்ல தேர்தலில் பங்கேற்கும் பெரும்பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு” என்று கூறினார். ஒவ்வொரு இந்தியரும் தேர்தலில் பங்கேற்பதை உறுதிசெய்வதன் மூலமே, இந்தியா ஒரு உண்மையான பிரதிநிதித்துவ ஜனநாயகமாகத் திகழ இயலும்.
- சி.ஆர்.கேசவன், அறங்காவலர், தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை.
எம்.வீ.ராஜீவ் கவுடா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் - காங்கிரஸ் கட்சி ஆராய்ச்சித் துறைத் தலைவர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
21 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago