பெரியார்: சாதி ஒழிப்புச் சூரியன்!

By விடுதலை ராஜேந்திரன்

சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் எதிரான சாதி அமைப்புதான், பெரியாரின் முதன்மையான இலக்கு.

நாட்டின் விடுதலைக்கான போராட்டம் மக்களின் சமத்துவத்தையும் உறுதிசெய்ய வேண்டும்; அதை காங்கிரஸ் கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸுக்குள்ளே போராடினார் பெரியார். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் துறைகளில் மிகவும் ஒடுக்கப்பட்டுக் கிடந்த அனைத்துப் பிரிவினருக்கும் சம வாய்ப்பை உறுதிசெய்வதுதான் அவரது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை. காங்கிரஸ் அதை மறுத்தபோது, பெரியார் 1925-ல் வெளியேறினார். 90 ஆண்டுகளுக்குப் பின் 2015 செப்டம்பரில் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி - 50% கட்சிப் பதவிகளை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு உறுதிசெய்வதாகத் தீர்மானித்திருப்பது - வரலாற்றின் திருப்பம் மட்டும் அல்ல; பெரியார் காலத்தே எவ்வளவு முந்தியிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

சமத்துவத்துக்கும் சுயமரியாதைக்கும் எதிரான சாதி அமைப்புதான், அவரது முதன்மையான இலக்கு. சாதியமைப்புக்குக் கருத்தியலை வழங்கி, அதை சாஸ்திரம், மதம், கடவுள் பெயரால் நியாயப்படுத்தப்பட்டபோது, பெரியாரின் சாதி எதிர்ப்பு, சாஸ்திரத்தையும் மதத்தையும் கேள்விக்குள்ளாக்கியது. மதம் - கடவுளால் உருவாக்கப்பட்டது என்று பதில் வந்தபோது, கடவுளையும் அதன் மீதான நம்பிக்கைகளுக்கும் எதிராக பெரியார் கிளர்ந்து எழுந்தார். பெரியாரை கடவுள் - மத - சாஸ்திர எதிர்ப்புக்கு இழுத்துச் சென்றது அவரது சாதி எதிர்ப்புக் கொள்கைதான்!

வளர்ச்சி நோக்கிய மானுடப் பற்று என்பதைத் தவிர, தனக்கு வேறு எந்தப் பற்றும் கிடையாது என்று திட்டவட்டமாகப் பறைசாற்றிய பெரியார், சமூக சுயமரியாதைக்காகத் தனது சொந்த சுயமரியாதையைப் பலியிட்டுக்கொண்டார். “மற்றவர்களால் செய்ய முடியாததை என்னால் மட்டும் எப்படிச் செய்ய முடிகிறது என்றால், நான் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பது இல்லை. உங்கள் பாராட்டு எனக்குத் தேவையில்லை” என்று கூறிய பெரியார், “தனி மனிதர்களைப் பெருமைப்படுத்தியதால், அவர்களுடைய தவறான கொள்கைகள் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றுவிடுகிறது. என்னுடைய காரியங்களுக்கு அப்படிப்பட்ட விபரீதப் பலன் ஏற்பட வேண்டாம் என்றே கருதுகிறேன். நான் தெய்வத் தன்மை பொருந்தியவனாகக் கருதப்பட்டால், என் வார்த்தையை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள். நான் அயோக்கியன் என்று சொல்லப்பட்டால் என் வார்த்தைகள் மிகவும் ஜாக்கிரதையாகக் கவனிக்கப்படும்” என்றார். அதையும் கடந்து, “என்னை அறியாமலே நான் ஏதாவது மதிப்புப் பெற வேண்டுமென்று கருதியிருந்தாலும், நானே எனக்குத் தீங்கு தேடிக் கொண்டவனாவேன்” என்று தன்னையும் புகழ் பொறிக்குள் சிக்கிக்கொள்ளாமல் சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.

பற்றற்ற - புகழ் மறுப்பு மனிதராகக் களமிறங்கிய அவரின் லட்சியத்தை ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால், ‘மக்களுக்கிடையிலான சமத்துவம், சுயமரியாதை.’

ஒரு பக்கம் - சாதியக் கட்டமைப்பை நியாயப்படுத்துகிறவர்கள். மற்றொரு பக்கம் சாதி அடிப்படையில் கல்வி, வேலைகளில் இன்னும் எத்தனை காலத்துக்கு இடஒதுக்கீடுகளை வழங்குவது என்று கேட்கிறார்கள். இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்தச் சாதி அமைப்பைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று கேட்க இவர்கள் தயாராக இல்லை.

கடந்த 50 ஆண்டுகளாக இடஒதுக்கீடு கொள்கைகள் அமல்படுத்தப்பட்டும், பட்டியல் இனப் பிரிவினரான தலித் மக்கள் - முதல் பிரிவு பதவிகளில் அவர்களுக்கான 15% இடங்களைக்கூட இன்னும் முழுமையாக எட்டிப் பிடிக்கவில்லை. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு 1993-ல் அமலுக்கு வந்தாலும் முதல் பிரிவு பதவிகளில் 8%-ஐ மட்டுமே அவர்களால் நெருங்க முடிந்திருக்கிறது. 1.1.2011-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, பாரத ஸ்டேட் வங்கி, ரிசர்வ் வங்கி உள்ளிட்ட வங்கித் துறைகளில் 474 பொது மேலாளர்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த ஒருவர்கூட இல்லை. இந்த உரிமைகளுக்கு எல்லாம் சாதி சங்கத் தலைவர்கள் இங்கே குரல் கொடுப்பதில்லை. ஆனால், அரசியல் லாபங்களுக்கும் தலைமை அதிகாரத்துக்கும் சாதி வெறியூட்டி அணி திரட்டுகிறார்கள்.

சாதிக்கு என்று தனிக் குருதி இல்லை. எட்டு வகை ரத்தப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றுதான் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் எந்த சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் செலுத்தப்படுகிறது. மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் சாதி பார்க்காமல் எந்த சாதியைச் சார்ந்தவருக்கும் பொருத்தப்படுகின்றன. சாதி அடையாளப் பெருமை பேசுகிற எவரும் சொந்த சாதிக்காரன் குருதி வேண்டும் என்றோ, சொந்த சாதிக்காரன் உடல் உறுப்பு வேண்டுமென்றோ கேட்கத் தயாராக இல்லை. இன்று சாதியம் மதம் சார்ந்து மட்டும் நிற்கவில்லை. அவ்வப்போது வந்துபோகும் தேர்தல்களும் சாதிக்கு உயிரூட்டிக்கொண்டிருக்கின்றன. வாக்கு வங்கி அரசியலை நம்பியிருக்கும் பெரிய அரசியல் கட்சிகள், சாதிக்கு எதிராக வாய் திறப்பதே இல்லை. தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும், பல அரசியல் கட்சிகள் மவுனம் சாதிப்பதையே பார்க்கிறோம்.

சமூகத்தில் - தீண்டாமை சட்டத்தில் மட்டுமே ஒழிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மதத்தின் அடிப்படையில், அதே சட்டத்தால் இன்று வரை தீண்டாமை - ‘பழக்க வழக்கங்கள்’, ‘ஆகம முறைகள்’ என்ற அடிப்படையில் காப்பாற்றப்பட்டுவருகின்றன. அதன் காரணமாகத்தான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் முடங்கிக் கிடக்கிறது.

சாதிக்கும் மதத்துக்கும் உள்ள நெருக்கமான உறவுகளை பெரியார் எடுத்துச் சொன்னபோது, ‘மத விரோதி’ என்று தூற்றப்பட்டார். இன்று என்ன நடக்கிறது? சாதியமைப்புகளை மதவாத செயல்திட்டத்துக்குள் கொண்டுவரும் முயற்சிகள் தமிழகத்திலேயே தொடங்கிவிட்டன. சாதி-மத-மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசுகிற சிந்தனையாளர்கள் மகாராஷ்டிரத்திலும் கர்நாடகத்திலும் சுட்டுக் கொல்லப்படும் அதிர்ச்சியான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கருத்துக்களில் சமரசமின்றிப் போராடிய பெரியார், கருத்து மாறுபாடுடைய தலைவர்களை மதித்தார். அவர்களுடன் கருத்து விவாதம் நடத்தினார். பொது வாழ்க்கையில் அவர் காட்டிய நேர்மையின் பண்புகளுக்கு எத்தனையோ சான்றுகளைக் கூறலாம். உதாரணத்துக்கு ஒன்று: ராஜாஜியின் ஆலோசனை பெற்றுத்தான் மணியம்மையைத் திருமணம் செய்தார் பெரியார் என்று அவர் மீது கடும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பெரியார் எந்தப் பதிலும் தரவில்லை. அவரது மறைவுக்குப் பிறகு, ஆவணங்களைப் பரிசீலித்தபோது அதில் ராஜாஜி எழுதிய கடிதம் கிடைத்தது. மணியம்மையார் திருமணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று ராஜாஜி எழுதிய அந்தக் கடிதத்தை பெரியார் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு இறுதிவரை சான்றாதாரமாகப் பயன்படுத்தவில்லை. கடித உறையில், ‘இது நமக்குள் ரகசியமானது’ என்று ராஜாஜி எழுதியிருந்தார். கொள்கை எதிரிகளிடம்கூட அந்த நம்பகத்தன்மையை பெரியார் இறுதிவரை காப்பாற்றினார்.

பெரியாரின் ஒவ்வொரு கூட்டமும், “நான் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள்; உங்களுக்குச் சரி என்று பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்; இல்லையேல் தள்ளிவிடுங்கள்” என்ற கருத்துச் சுதந்திரத்துடன்தான் அவரது உரை நிறைவடையும். ஜனநாயக வெளிக்குள்தான் அவரது பயணம் நடந்தது.

இன்று அதிகாரங்களின் துணையுடன் மதவாதமும், சாதித் தலைவர்கள் வழியாக சாதி வெறியும் கரம் கோத்து நிற்கும் சூழலில் பெரியார் பேசிய கொள்கைகளின் நியாயங்கள் மேலும் அதிகரித்திருக்கின்றன.

- விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம், ‘புரட்சி பெரியார் முழக்கம்’ இதழாசிரியர், தொடர்புக்கு: viduthalaikr@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

44 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்