“இமயமலையில், இன்னமும் எல்லை வரையறுக்கப்படாத பகுதி ஒன்றில் இந்திய - சீனத் துருப்புகளுக்கு நடுவே நடந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் கடும் இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன” என்று தொடங்குகிறது ‘சீனா டெய்லி’ எனும் சீன நாளிதழின் தலையங்கம்.
உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Actual Control) இந்தியத் துருப்புகள் இரு முறை தாண்டி வந்ததால் சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர் என்றும், ‘ஆத்திரமூட்டும்’ அவர்களது செயல், இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை மீறும் வகையில் அமைந்தது என்றும் அந்தத் தலையங்கம் குற்றம் சாட்டுகிறது.
ஏறத்தாழ சீனாவின் எல்லா ஊடகங்களும் சீன அரசால் நடத்தப்படுகின்றன என்பதால், ‘சீனா டெய்லி’ இதழின் கருத்து இப்படித்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், “சில இந்திய அரசியல்வாதிகள், தங்கள் அரசியல் லாபத்துக்காக மக்கள் மத்தியில் தேசியவாத உணர்ச்சியைத் தூண்டிவிடுவதன் மூலம் பதற்றத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார்கள்” என்று அந்நாளிதழ் சுட்டிக்காட்டுவது கவனிக்கத்தக்க விஷயம். அக்கறையுடன் பரிசீலிக்க வேண்டிய விஷயமும்கூட!
» காந்தி மற்றும் லீயிடம் கற்க வேண்டிய பாடம்
» அரசு அலுவல்களைக் கணினிமயமாக்குவதை இனியும் தாமதிக்கலாமா தமிழ்நாடு?
பரஸ்பரக் குற்றச்சாட்டுகள்
20 இந்திய வீரர்களைப் பலிகொண்ட இந்தச் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளிவந்த சில மணி நேரங்களில், மத்திய அரசு மீது விமர்சனங்கள் எழுந்தன. கரோனா ஊரடங்கு தொடர்பாக மாநில முதல்வர்களிடம் காணொலிக் காட்சியில் உரையாடிய பிரதமர் மோடி, இது குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தால், பாஜகவினர் வரிந்து கட்டிக்கொண்டு விமர்சிப்பது வழக்கம் என்பதால், இந்த முறை காங்கிரஸ் அதைக் கையில் எடுப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், தனது ஆட்சிக்காலத்தில் சீனா விஷயத்தைக் காங்கிரஸும் மிகுந்த கவனத்துடன், நிதானத்துடன்தான் கையாண்டது. நிதர்சனம் அதுதான்.
இன்னொரு புறம், சீனப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி சீனத் தயாரிப்புத் தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தூக்கிப் போட்டு உடைக்கும் போராட்டங்களும் நடந்துவருகின்றன. இவை அர்த்தமற்றவை. மாறாக, சீனாவுடனான எல்லைப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள முயல்வதே தீர்வை நோக்கி இட்டுச்செல்லும்.
எல்லை விஷயத்தில் சீனாவின் பிடிவாதம்
உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் (Line of Actual Control) இந்தியப் பகுதியில் அமைந்திருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கட்டுமானப் பணிகளைச் சீனா மேற்கொண்டு வருவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது. சம்பவம் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு, கிழக்கு லடாக்கில் இருக்கிறது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துவரும் இந்தப் பகுதியைச் சீனா சொந்தம் கொண்டாடுகிறது. பல ஆண்டுகளாகவே சீனா கடைப்பிடிக்கும் உத்தி இது.
19-ம் நூற்றாண்டில் தனது ராஜ்ஜியத்தை விஸ்தரிக்க பிரிட்டிஷ் இந்திய அரசு எடுத்த முயற்சிகளின் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையில் எல்லையை உருவாக்கும் பணிகள் தொடங்கின. 1914-ல் சிம்லாவில் நடந்த சந்திப்பில், திபெத்தின் ஆட்சி அதிகாரத்தை வரையறுக்கவும், இந்தியா - சீனா இடையிலான எல்லையைத் தீர்மானிக்கவும் பிரிட்டிஷ் அரசு முயன்றது. முத்தரப்புப் பிரதிநிதிகள் கலந்துகொண்டாலும், அப்போது மெக்மொஹன் கோடு தொடர்பான ஒப்பந்தத்தில் பிரிட்டனும் திபெத்தும் மட்டுமே கையெழுத்திட்டன.
அந்தக் கோடுதான் இந்தியா- சீனா இடையில் இமயமலைப் பகுதியில் நீண்டிருக்கும் எல்லை என்று பிரிட்டிஷ் இந்திய அரசு முடிவுசெய்தது. ஆனால், தான் கையெழுத்திடாத ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டது சீனா. அதேசமயம், அந்தச் சமயத்தில் பல்வேறு வகைகளில் பலவீனமாக இருந்த சீனா, பெரிய அளவில் எதிர்ப்பையும் காட்டவில்லை.
இந்தியாவுக்குத் தலைவலி
1949-ல் மாசே துங் தலைமையில் சீன மக்கள் குடியரசு ஆட்சி அமைந்த பின்னர், சீனா பலம் பெற ஆரம்பித்தது. அதற்கு முன்பே இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்ட நிலையில், ஆசியாவில் யாருக்கு முக்கியத்துவம் எனும் அதிகாரப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள சீனா தீர்மானித்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வரையறுக்கப்பட்ட மெக்மொஹன் எல்லைக் கோட்டைச் சீனா ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நிலையில், அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலை சுதந்திர இந்தியாவுக்கு வந்தது.
அந்தக் காலகட்டத்தின் வரைபடங்களில் இந்த எல்லைக் கோடு தெளிவாகக் குறிப்பிடப்படாததைச் சீனா பல முறை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. எனினும், “மெக்மொஹன் வரைந்த கோடுதான் எங்களுக்கு ஆதாரம். வரைபடம் இல்லாவிட்டாலும் இதுதான் எங்கள் எல்லைக்கோடு. இந்த எல்லைக்கோட்டைத் தாண்டிவர யாரையும் அனுமதிக்க மாட்டோம்” என்று பிரதமர் நேரு தீர்மானமாகத் தெரிவித்துவிட்டார். இவ்விஷயத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனும் சீனாவின் யோசனையையும் இந்தியா உறுதியாக மறுத்துவிட்டது. பேச்சுவார்த்தை என்று வந்துவிட்டால், ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளைச் சீனா முன்வைக்கும் எனும் ஜாக்கிரதை உணர்வுதான் அதற்குக் காரணம்.
நேரு எதிர்கொண்ட நெருக்கடிகள்
எனினும், இந்தப் பிரச்சினை அரசியல் ரீதியாக நேருவுக்குப் பெரும் தலைவலியாக அமைந்தது. அவ்வப்போது எல்லை தாண்டி வந்து வாலாட்டும் சீனாவை அடக்கிவைக்குமாறு ஜனசங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. திபெத்தை முன்வைத்தும் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. 1959-ல், சீனாவின் அடக்குமுறைக்கு எதிராகத் திபெத்தில் நடந்த கிளர்ச்சியின்போது, தலாய் லாமா அடைக்கலம் கோரி இந்தியாவுக்கு வந்தார்.
அவரை இந்தியா அரவணைத்துக்கொண்ட பின்னர், சீனாவை விமர்சித்து தலாய் லாமா அறிக்கைகளை வெளியிட்டார். இது சீனாவை ஆத்திரப்படுத்தியது. இதற்கிடையே, லடாக்கில் உள்ள அக்சாய் சின் பகுதியில் சீனா சாலை அமைத்தது, லாங்ஜு பகுதியில் இரு தரப்பினருக்கும் நிகழ்ந்த மோதல் என்பன போன்ற காரணிகள் இரு தரப்பையும் பதற்றத்தின் எல்லைக்குத் தள்ளின.
இந்நிலையில், பிரதமர் நேருவுக்கும் சீனப் பிரதமர் சூ என்லாய்க்கும் இடையில் கடித வாயிலாகக் கண்டனங்களும் எச்சரிக்கைகளும் அறிவுறுத்தல்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. சீனா விஷயத்தில் நேரு மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் விமர்சித்து வந்தனர். இவற்றுக்கு இடையே, பேச்சுவார்த்தை இல்லாமல் நட்பு ரீதியாக இந்தியாவுக்கு வருகை தருமாறு சீனப் பிரதமர் சூ என்லாய்க்கு நேரு அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று வந்து சென்ற சூ என்லாய், “நாங்கள் முன்வைக்கும் மேற்குப் பிராந்திய எல்லைக்கோட்டை இந்தியா ஏற்றுக்கொண்டால், இந்தியா முன்வைக்கும் கிழக்குப் பிராந்திய எல்லைக்கோட்டை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்று இந்தியச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதன் மூலம் மெக்மொஹன் கோட்டைச் சீனா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை உறுதிசெய்தார்.
எல்லையில் போர் மேகம்
சீனாவின் அத்துமீறல்களைத் தடுக்க அந்நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், மத்திய அரசு ‘முன்னேறிச் செல்லும் கொள்கை’யை முன்னெடுத்தது. இந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பு அமைச்சகம், ராணுவம் ஆகியவற்றில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததை ‘தி டைம்ஸ்’ இதழில் பணிபுரிந்த நெவில் மாக்ஸ்வெல் எழுதிய ‘இந்திய- சீனப் போர்’ புத்தகம் பதிவு செய்திருக்கிறது. அப்படியான ஒரு சூழலில், பலம்பொருந்திய சீனாவுடன் போர் சாத்தியமா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது. எனினும், சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள பகுதிகளில் முன்னேறிச் செல்வது, அங்கு முகாம்களை அமைப்பது போன்றவை முக்கிய இலக்குகளாக இருந்தன.
இந்தியா சுதந்திரமடைந்த பிறகும் கோவாவைப் போர்த்துகீசியர்கள் ஆட்சி செய்தனர். மத்திய அரசு பல முறை கேட்டுக்கொண்டும் கோவாவை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள போர்த்துகீசியர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து 1961 டிசம்பர் 19-ல் அங்கு நுழைந்த இந்திய ராணுவம், எளிதில் போர்த்துகீசியர்களை வென்றது. கோவா இந்தியா வசமானது. இந்த வெற்றி இந்திய ராணுவத்தின் மீது மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை விதைத்தது. இதே உத்வேகத்துடன் சீனாவையும் ஒரு கை பார்க்க வேண்டும் என்று மக்கள் விரும்பினர்.
பெரும் தோல்வி
அரசியல் அழுத்தங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, காரியங்கள் படிப்படியாக அரங்கேறின. எல்லையில் சீன முகாம்களுக்கு அருகே இந்திய ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டன. எனினும், பனிமலைகளில் நன்கு பழக்கப்பட்ட சீன ராணுவத்தினருடன் ஒப்பிட இந்திய ராணுவத்தினர் தடுமாறியதாக, நெவில் மாக்ஸ்வெல் பதிவுசெய்திருக்கிறார். சீன வீரர்கள் நவீன ஆயுதங்களில் பயிற்சி பெற்றவர்களாக இருந்தனர். சீன வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கம்பளி உடைகள், குளிரைத் தாங்கும் கனமான பூட்ஸுகள் இந்திய ராணுவத்தினரிடம் இல்லை என்றாலும் இந்தியர்கள் தீரத்துடன் சண்டையிட்டனர்.
இதற்கிடையில், எல்லையில் முன்னேறிச் செல்வது தொடர்பாக, ஊடகங்கள் மூலம் வெளியுலகத்துக்குத் தெரிவிக்கும்போது இந்தியா பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. சீனத் துருப்புகள் எல்லை தாண்டி வந்து கட்டுமானங்களை அமைத்திருக்கிறார்கள் என்று சொன்னால், அதுவரை மத்திய அரசு என்ன செய்துகொண்டிருந்தது எனும் கேள்வி எழுந்தது. “இல்லை நாம்தான் சீனர்கள் முகாமிட்டிருக்கும் பகுதியில் படைகளை நிலைகொள்ளச் செய்திருக்கிறோம்” என்று சொன்னால், “பாருங்கள் இந்தியாதான் எல்லை தாண்டி அத்துமீறுகிறது” என்று சர்வதேசச் சமூகத்திடம் சீனா பாசாங்குடன் முறையிட்டது. ஆக, மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய இந்த விவகாரத்தைப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்தியா முன்னெடுத்தது.
ஒருகட்டத்தில், சீனாவின் கை ஓங்கியது. அப்போது அமெரிக்கா முதல் இஸ்ரேல் வரை பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு ஆயுத உதவிகள் வழங்க முன்வந்தன. எனினும், தாக்-லா பகுதியில் இந்தியத் தரப்பு கடும் சேதத்தைச் சந்தித்தது. இந்திய ராணுவம் 3,000-க்கும் அதிகமான வீரர்களை இழந்திருந்த நிலையில், 1962 நவம்பர் 21-ல் சீனா போர் நிறுத்தத்தை அறிவித்தது. ஆம், அந்தப் போரில் நமக்குத் தோல்விதான் கிடைத்தது.
எல்லையும் அத்துமீறலும்
போரின் முடிவில் ‘உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு’ (Line of Actual Control) குறித்து இந்தியாவிடம் வலியுறுத்தியது சீனா. 1959 முதலே இது தொடர்பாக இந்தியாவிடம் பேசிவந்த சீனா, போர் நிறுத்தம் செய்த கையோடு அதிகாரபூர்வமாக அதை அறிவித்தது. அதேசமயம், அது தொடர்பாக இந்தியா தரப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அந்த எல்லைக் கோடு எங்கு அமைந்திருக்கிறது என்பதில் இந்தியா – சீனா இடையே நீண்டகாலமாக முரண்பாடுகள் இருந்தன.
அதன் பிறகு, பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியாவைச் சீண்டியிருக்கிறது சீனா. 1967-ல் இந்திய – சீன எல்லையில் சிக்கிமில் அமைந்துள்ள நாது லா கணவாய் பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் நடந்த சண்டையில் இந்தியத் தரப்பில் 88 பேர் கொல்லப்பட்டனர். 1975-ல் பும் லா அருகில், வழக்கமான ரோந்துப் பணியில் இருந்த இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 4 பேரைச் சீன ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.
இப்படி, எல்லையில் கட்டுமானப் பணிகள் என்று சீனத் தரப்பு இறங்குவதும் அதைத் தடுக்கும் வகையில் அதன் அருகில் இந்தியப் படைகள் முகாமிடுவதும் அவ்வப்போது நடந்துவரும் விஷயங்கள். திபெத்தின் மேற்குப் பகுதிக்குச் செல்வதற்கான வழியாக அக்சாய் சின்னைக் கருதும் சீனா அங்கு தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி செய்கிறது.
2017 நவம்பரில், பூடானின் கட்டுப்பாட்டில் உள்ள டோக்லாம் பீடபூமி பகுதியில் சாலை அமைக்கும் பணியில் சீனா ஈடுபட்டபோது இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பிரச்சினைக்குரிய பகுதிகளின் அருகில் டோக்லாம் இருப்பது ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. பூடானுடன் இந்தியா கொண்டிருக்கும் உறவில் சிக்கல்களை ஏற்படுத்த சீனா மேற்கொண்ட முயற்சியாகவும் அது பார்க்கப்படுகிறது. அந்தப் பகுதியில் நீடித்த பதற்றம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அந்த மோதலின்போதும் இரு தரப்பும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டன. சிலருக்குக் காயம் ஏற்பட்டது.
என்னதான் தீர்வு?
சீனாவைப் பொறுத்தவரை, அவ்வப்போது இந்தியாவைச் சீண்டுவது; எதிர்ப்பு வந்ததும் பின்வாங்குவது எனும் வழிமுறையைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இந்த முறையும் அதைத்தான் செய்திருக்கிறது. லடாக், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் சீன ராணுவம் மீண்டும் எல்லை மீறலாம் என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் கணித்திருக்கிறார்கள்.
1960-களில் நேருவுடன் ஒப்பிட சூ என்லாய், உலக அளவில் பிரபலான ஆளுமை அல்ல. எனவே, இயல்பாகவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்குத் தார்மிக ஆதரவளித்தன. இன்றைக்கு மோடி சர்வதேச அளவில் புகழ்பெற்ற தலைவராக இருந்தாலும், மறுமுனையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மிக உறுதியான தலைவராக அறியப்படுகிறார். கடந்த காலத்தில் சீனா இழந்ததாகக் கருதப்படும் இடங்களை மீட்க வேண்டும் என்று ஜின்பிங் விரும்புவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்சீனக் கடலில் சீனாவின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்கக் கூடாது; சீன நிறுவனங்களின் முதலீடுகளுக்குக் கட்டுப்பாடுகள் கூடாது; சீனாவிலிருந்து இடம்பெயரும் தொழில்களை ஈர்க்கக் கூடாது என்றெல்லாம் இந்தியாவுக்குச் சீனா உணர்த்த முயல்கிறது.
இப்படியான சூழலில், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் தீர்வுக்கு ஒரே வழி என்றும் முன்னாள் ராணுவத்தினர் குறிப்பிடுகிறார்கள். தற்போது மேஜர் ஜெனரல்கள் அளவில் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன. மறுபுறம், முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்கெனவே, போராடிக்கொண்டிருக்கும் இந்தியா, ’போர் வேண்டும்!’ என்று முழக்கமிடுபவர்களுக்குச் செவிசாய்க்காமல், நிதானமாக, அதேசமயம் இன்றைக்கு இந்தியா அடைந்திருக்கும் ராணுவ பலத்தைச் சீனாவுக்கு நினைவுறுத்தும் வகையில் உறுதியாகச் செயல்பட வேண்டும்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago