காந்தி மற்றும் லீயிடம் கற்க வேண்டிய பாடம்

By செய்திப்பிரிவு

சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குச் சொந்த மாநிலத்திலேயே வேலைகளை உண்டாக்க விரும்புகிறார் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். அப்படியானால், அவருக்குச் சிறந்ததொரு திட்டம் தேவை. நவீன சிங்கப்பூரின் நிறுவனத் தந்தையான லீ குவான் யூ, இந்திய தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி இரண்டு பேரிடமிருந்தும் சில பாடங்களை அவர் கற்பது அப்படியொரு திட்டத்தை உருவாக்க உதவும்.

ஆசியாவின் முதல் முன்னேறிய நாடாக சிங்கப்பூர் ஆகும் என்று லீ, 1965-ல் அந்நாடு உருவானபோது அறிவித்தார். மிக மேம்பட்ட பொருளாதார வல்லரசு நாடுகளினுடைய குடிமக்களின் தனிநபர் வருவாய்க்கு ஈடாக சிங்கப்பூர் குடிமக்களின் தனிநபர் வருவாயைப் பெருக்குவதுதான் அவரது மேம்பாட்டு நடவடிக்கை. மேற்கு நாடுகளுக்கு விற்று, தனது குடிமக்களுக்கான பணத்தை ஈட்ட சிங்கப்பூரிடம் எண்ணெயோ தாதுவளங்களோ கிடையாது. கிழக்குக்கும் மேற்குக்கும் இடையிலான கப்பல் வழித்தடங்களுக்கு நடுவே மேற்கத்திய பெருநிறுவனங்களுக்கு ராஜதந்திர முக்கியத்துவம் கொண்ட இடம் என்கிற அனுகூலத்தை சிங்கப்பூர் வைத்திருந்தது. அத்துடன் சிங்கப்பூரிடம் இருந்த மனித வளமும் அதன் கூடுதல் அம்சம். அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற இடங்களிலுள்ள நிறுவனங்களை லீ அழைத்து, சிங்கப்பூரில் உற்பத்தி வசதிகளை உருவாக்கி சிங்கப்பூர் தொழிலாளர்களையும் பயன்படுத்திக்கொள்ளச் சொன்னார். லீயின் அழைப்பை அந்த நிறுவனங்கள் வரவேற்றன. ஆனால், லீ குவான் யூ விதித்த ஒரு நிபந்தனைக்கு அந்த நிறுவனங்கள் தயாராக இல்லை.

தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் தொழிற்சாலைகளை சிங்கப்பூரில் உருவாக்குவது மட்டுமே லீயின் நோக்கம் அல்ல; சிங்கப்பூரில் கூலி, சம்பளத் தொகைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்பினார். அப்போதுதான் தனிமனிதர்களின் வருவாய் அதிகரிக்கும். அதற்காக, கூடுதல் மதிப்பு கொண்ட பணிகளுக்கு அந்த நிறுவனங்கள் சிங்கப்பூர்வாசிகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் விரும்பினார். உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் உருவாகத் தொடங்கியிருந்த காலகட்டம் அது. பன்னாட்டு நிறுவனங்கள், குறைந்த செலவில் உற்பத்திசெய்வதற்கான இட, ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருந்தன. அத்தகைய சூழ்நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூருக்கு வந்த பிறகு, கூலிகளை உயர்த்தினால், அவர்கள் குறைவான கூலிக்குத் தொழிலாளர்களைத் தரும் வேறு நாடுகளுக்கு நகர்ந்துவிடுவார்கள் என்று லீ அச்சப்பட்டார். அதனால், சிங்கப்பூரில் தொழிற்சாலைகளை அமைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு உலகத் தரத்தில் உள்கட்டமைப்பை வழங்குவதற்கும், குறைந்த வரிகளுக்கும் சிறந்த நிர்வாகத்துக்கும் உறுதிமொழி அளித்தார். அதற்குப் பதிலாக, தன் நாட்டின் தொழிலாளர்கள் தங்கள் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்வதற்காக அரசு செய்யும் முதலீட்டுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போதுதான் சிங்கப்பூர் தொழிலாளர்கள் கூடுதலாகச் சம்பாதிக்க முடியும்; அப்போதுதான் சிங்கப்பூர் சீக்கிரம் முன்னேறிய நாடாகும்.

ஆனால், சிங்கப்பூர் மக்கள் சார்ந்து நீண்டகால அடிப்படையிலான முதலீடுகளைச் செய்வதற்குப் பல நாட்டு நிறுவனங்களும் விரும்பவில்லை. ஜே.ஆர்.டி.டாடாவைச் சந்தித்தபோது, சிங்கப்பூரில் ஒரு பயிற்சி மையத்தை ஆரம்பிக்க உதவி கேட்டதோடு சிங்கப்பூரின் தொழில் துறை வளர்ச்சிக்கான அடித்தளத்தை இடுவதற்கும் கோரினார் லீ. இப்படித்தான் சிங்கப்பூரில் 1970-களில் டாடா நிறுவனம் முன்னோடி நிறுவனமாக மாறியது. அடுத்தடுத்து மிகப் பெரிய நிறுவனங்கள் சிங்கப்பூருக்குள் நுழைந்தன.

உலகமயமாதலின் விதிகள் புலம்பெயர் மூலதனம் பெருகுவதற்கு எளிமையான வழிகளை வகுத்ததே தவிர, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. ஒரு நாட்டுக்குள் நுழைந்து, லாபத்தை ஈட்டி, அவர்கள் நினைக்கும்போது போகுமளவுக்குப் புலம்பெயர் மூலதனம் என்பது நிறுவனங்களுக்கு வசதிகளைக் கொடுத்துள்ளது. ஆனால், அந்த உலகளாவிய விருந்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பங்குபெறுவது கடினமாகவே இருந்திருக்கிறது. ஐரோப்பாவுக்குச் செல்லும் கடல்வழிகளில் நூற்றுக்கணக்கான பேர் உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. அமெரிக்க எல்லைகள் மூடப்படுகின்றன. இந்தியாவின் உலகமயமான நகரங்களை விட்டு, அவர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும்போதுகூட பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்பட்டு, வழியிலேயே அவர்கள் இறக்கிறார்கள். அரசுகள் முதலீட்டாளர்களைவிட அதிகமாகத் தங்கள் குடிமக்கள், தொழிலாளிகளின் கவலைகளுக்குச் செவிகொடுத்துக் கேட்பதும் அவர்களது நலன்களைக் கவனிப்பதும் அவசியமானது. மனிதர்களுக்குப் பயன்களைத் தரும் கருவிதான் பணம் என்ற பார்வை முக்கியமானது.

உத்தர பிரதேசத்தின் நிலை சிங்கப்பூரைவிடச் சிக்கலானது. சிங்கப்பூர் 60 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட நகர நாடாகும். உத்தர பிரதேசமோ 20 கோடி மக்கள்தொகை கொண்டது; டஜன் கணக்கில் சிறு நகரங்களையும் ஆயிரக்கணக்கான சிறு கிராமங்களையும் கொண்டது. காந்தி நன்கு அறிந்த உலகம் அது. இந்தியாவின் கிராமங்கள் பொருளாதாரம் மற்றும் சமூகரீதியாக விடுதலையை அடையாவிட்டால், இந்தியா சுதந்திரமான நாடாக இருக்க முடியாது என்று காந்தி கூறினார். அவரது பூரண சுயராஜ்ஜியத்தின் அடிப்படைப் பார்வை அதுவே. அவரைப் பொறுத்தவரை பிரிட்டிஷாரிடமிருந்தான அரசியல் சுதந்திரம் என்பது அதற்கான ஒரு வழியே. காந்தி, நடைமுறைக்கு ஒவ்வாத கனவு காண்பவர் என்று தொடர்ந்து புறந்தள்ளப்படுகிறார். இருப்பினும், காந்தியும் அவரது பொருளாதார ஆலோசகர்களும் இந்தியத் திட்ட கமிஷன் பொருளாதார வல்லுநர்களைவிடக் கூடுதலாக இந்தியாவின் பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைப் புரிந்துவைத்திருந்தனர். இந்தியாவின் கடைக்கோடி ஏழைகளிடம் இருந்த ஆற்றலை காந்தியே தெரிந்துவைத்திருந்தார். பொருளாதார வல்லுநர்களுக்கு அவர்கள் வெறும் எண்களே. அவற்றையெல்லாம்விட, மனித தேவைகளுக்குப் பொருளாதாரம் சேவையாற்ற வேண்டும் என்பதை அவர் நம்பினார். ஜிடிபி எண்களுக்கு மனிதர்கள் தீனியாக முடியாது. லீயின் பார்வையும் அதுதான். சிங்கப்பூர் மேம்பட்ட நாடாக ஆவதென்பது அதன் குடிமக்களின் வருவாய் அதிகரிப்பதோடு தொடர்புடையது என்று அவர் நம்பினார்.

உத்தர பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை இல்லை. அங்கே குடிமக்கள் பிரச்சினையே உள்ளது. அவர்கள் புலம்பெயர்பவர்களோ இல்லையோ, எல்லாக் குடிமக்களுக்கும் வேலை, வாழ்வாதாரம், கண்ணியமான நல்ல வாழ்க்கை தேவை. முதலீட்டாளர்களுக்காகவோ, ஜிடிபி காண்பிப்பதற்காகவோ அரசுக் கொள்கைகள் வகுக்கப்படாமல் மக்களுக்கு, குறிப்பாக அதிகாரமற்ற மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் அரசுக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். லீ, டாடா, காந்தியின் கொள்கைகளைப் பொறுத்தவரை தொழிலாளர்களின் உரிமைகளை நீர்க்கச்செய்து முதலீட்டாளர்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் தத்துவங்கள் ஏதும் இல்லை.

2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்தே உலகம், உலகமயமாதலிலிருந்து விடுபட்டுவருகிறது. பிற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வருபவர்களுக்குப் பல நாடுகள் தடை விதிக்கின்றன. உலகப் பொருளாதார நிறுவனம் பலவீனமாக உள்ளது. கரோனா உள்ளூரியத்தை மேலும் முடுக்கிவிட்டுள்ளது. விநியோகச் சங்கிலிகள் அறுந்துவிட்டன. மக்கள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்வதற்கு எதிரான தடைகள் எல்லா இடங்களிலும் அதிகரித்துள்ளன. ஜே.சி. குமரப்பாவும், ‘சிறியதே அழகு’ என்ற நூலை எழுதிய இ.எஃப். ஷூமாக்கரும் ‘காந்தியப் பொருளாதாரம்’ குறித்து அழகான வரையறைகளைத் தந்திருக்கிறார்கள். ‘காந்தியப் பொருளாதாரம்’ என்பது எளிமையான கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. மனித முன்னேற்றத்துக்கு மனிதர்களும் உள்ளூர் சமூகங்களுமே காரணமாக இருக்க வேண்டும். அவர்களது நல்வாழ்வே மேம்பாட்டுக்கான இலக்காக இருத்தல் வேண்டும். நிர்வாகம் என்பது உள்ளூர் அளவில், கிராமங்களிலும் நகரங்களிலும் வலுப்படுத்தப்பட வேண்டும். மூன்றாவது, செல்வம் என்பது நல்லதாகக் கருதப்பட்டாலும், செல்வந்தர்கள் சமூகத்தின் செல்வத்துக்குப் பாதுகாவலர்களாகச் செயல்பட வேண்டுமே தவிர, அதன் உரிமையாளர்களாக அல்ல. தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்குமான இடைவெளி குறைக்கப்படும் விதத்தில் கூட்டுறவு முதலீட்டு நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவற்றுக்கு, எங்கோ உள்ள முதலாளிகளோ அரசோ அல்லாமல், தொழிலாளர்களே உரிமையாளர்களாக இருக்க வேண்டும்.

சாலை இரண்டாகப் பிரியுமிடத்துக்கு 1947-ல் இந்தியா வந்து நின்றது. மேற்கு நாடுகளைத் துரத்திப் பிடிப்பதற்காக அவற்றின் பின்னால் ஓடுவது; அல்லது அதிகம் பயணிக்கப்படாத பாதையான காந்திய அணுகுமுறையை மனித மேம்பாட்டுக்குப் பயன்படுத்துவது என இரண்டு வழிகள் அதற்கு இருந்தன. மற்ற நாடுகளின் வழியைப் பின்பற்ற இந்தியா முடிவெடுத்தது. இப்போது, நாம் மீண்டும் ஒரு முக்கியமான கட்டத்துக்கு வந்துள்ளோம். நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆரோக்கிய நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் எந்தப் பாதையை எடுக்கலாமென்று அனைவரையும் யோசிக்க வைத்துள்ளன. ஜிடிபி சார்ந்த பொதுவான பொருளாதாரப் பாதையா அல்லது கூடுதல் மனித அம்சமும் உள்ளூர் தன்மையும் கொண்ட பொருளாதாரப் பாதையா?

-அருண் மைரா, திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினர்.

© ‘தி இந்து’, தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்