ஊரடங்கு: ஸ்வீடனிலிருந்து ஒரு செய்தி!

By வ.ரங்காசாரி

ஒருங்கிணைந்த திட்டமிடலுக்காக ஸ்வீடனை மேற்கோள் காட்டி விவாதித்த காலம் மாறி, இப்போது அந்த நாடு கரோனாவை எப்படி அணுகுகிறது என்ற விவாதம் தொடங்கியிருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம், கிருமியுடன் வாழ்தல் எனும் நிலைப்பாட்டை ஸ்வீடனே அறிமுகப்படுத்தியது. விளைவாக, அச்சத்திலிருந்து உலகம் வெளியே வர வழிவகுத்தது. அந்த அணுகுமுறை ஸ்வீடனுக்கு முழுமையான பலனை அளித்திருக்கிறதா?

ஸ்வீடனின் தொற்றுநோயியல் நிபுணர் ஆண்டர்ஸ் டெக்நெல் கரோனாவுக்கு முன்னால் எந்தெந்தத் தொற்றுநோய்கள் கொள்ளைநோய்களாக மாறின, தடுப்பூசிகளோ சரியான மருந்து மாத்திரைகளோ இல்லாதபோது அவையெல்லாம் எப்படிக் குறைந்தன என்ற பழைய வரலாறுகளை ஆழ்ந்து கவனித்து ஒரு முடிவுக்கு வந்தார். முழு ஊரடங்கு அவசியமில்லை, மக்களை வழக்கம்போல இருக்க அனுமதிப்போம் என்று முடிவெடுத்தார். அரசும் அதை அப்படியே ஏற்றுச் செயல்படுத்தியது.

‘இந்நோய்க்கு மருந்து மாத்திரைகளோ தடுப்பூசிகளோ இல்லை என்பதால், இதைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களுடைய முழு ஒத்துழைப்பு அவசியம். அதே சமயம், பீதியடையக் கூடாது. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வர வேண்டாம். முதியோர் இல்லங்களில் கூடுதல் சுகாதார ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மக்கள் தாங்களாகவே தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஐம்பது பேர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூட வேண்டாம். அதே சமயம் அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், சந்தைகள், கடைகள், பேரங்காடிகளை மூட வேண்டிய அவசியம் இல்லை. அச்சப்படுகிறவர்கள் வீடுகளிலிருந்தே வேலை செய்யட்டும். நாட்டில் எல்லாவிதமான போக்குவரத்தும் தொடரட்டும். பொதுப் போக்குவரத்தின்போது ரயில் - பேருந்துகளில் தனிநபர் இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். இளைஞர்கள் விருப்பம்போல வெளியே போய்விட்டு வரட்டும். அவர்களிடம் நோய்க்கிருமிகள் தொற்றினாலும் அது சமூகப் பரவலாகி அனைவருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகிவிடும்’ என்றார் டெக்நெல்.

ஆண்டர்ஸ் டெக்நெல் அளித்த பரிந்துரைகளை அரசு அப்படியே ஏற்றது. அந்நாட்டின் மக்கள்தொகை ஒரு கோடிக்குள்தான். அதிலும் நெரிசல், நெருக்கடி கிடையாது. எனவே, மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் மாறுதல் ஏற்படவில்லை. பொருளாதார நடவடிக்கைகளும் தொடர்ந்தன. கரோனாவின் அறிகுறிகள் தமக்கு இருப்பதாக உணர்பவர்கள் மருத்துவச் சான்றிதழ்கள் பெறாமலே மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டனர். ஸ்வீடனின் பொது சுகாதாரத் துறை ஒவ்வொரு நாளும் கரோனா பரிசோதனை செய்துகொண்டவர்கள், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள், சிகிச்சை பெற்றுவருபவர்கள், கரோனாவுக்குப் பலியானவர்கள் பற்றிய விவரங்களை அளித்தது.

பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கிக்கொண்டிருந்தார். செய்தித்தாள்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் பேட்டிகளை அளித்துவந்தார். ஒப்பீட்டளவில் அதன் பக்கத்து நாடுகளைக் காட்டிலும் ஸ்வீடனில் குறைவாகவே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. நிலைமை தீவிரமாக இல்லை என்றால் கரோனாவுக்கு ஆளானவர்கள் வீட்டிலிருந்தே சிகிச்சைபெற அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால், இந்த அணுகுமுறை பலனளிக்கவில்லை. ஏப்ரலில் பக்கத்து நாடுகளான நார்வே, டென்மார்க், பின்லாந்தைவிட ஸ்வீடனின் உயிரிழப்பு விகிதம் மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது. ஜூன் 15 நிலவரப்படி 51,614 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறது. உயிரிழந்தவர்கள் 4,874. முழு ஊரடங்கு தேவைப்படாது என்று தான் எடுத்த முடிவு தவறுதான் என்று டெக்நெல் ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்போதும் முழு ஊரடங்கு இல்லாவிட்டாலும் ஓரளவு கட்டுப்பாடுகளை ஸ்வீடன் அமல்படுத்தத் தொடங்கிவிட்டது. இது நல்ல பலன் அளிக்கிறது.

ஸ்வீடனிடமிருந்து கற்க இரு வகைகளிலும் விஷயங்கள் உள்ளன. முழு ஊரடங்கைத் தவிர்த்தாலும், முதியோர் உள்ளிட்ட பாதிப்புக்குள்ளாகும் சாத்தியம் கொண்டவர்களைத் தொடர்ந்து கவனத்துடன் பராமரிக்கவும் செய்தது. ஏனைய தரப்பினரை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பழைய வாழ்விலேயே அனுமதித்தது. விளைவாக, ஊரடங்கால் மற்ற நாடுகளைப் போல பொருளாதாரம் மோசமான அளவுக்குப் பாதிக்கப்படவில்லை. ஆனால், அச்சத்தோடு எச்சரிக்கையையும் மக்கள் கைவிட்டதன் விளைவு, பாதிப்பு எண்ணிக்கையை அதிகமாக்கியிருக்கிறது. மாறாக, கொஞ்சம் கட்டுப்பாடுகளுடன் கூடிய, முன்னெச்சரிக்கையுடனான இயல்பு வாழ்க்கையே சரியானது என்பதையே ஸ்வீடன் நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

ஸ்வீடனிலிருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய பாடங்கள் இருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்து குடியேறி யவர்களால்தான் அங்கு நோய்ப்பரவல் அதிகரித்தது. அதற்காக ஸ்வீடனில் யாரும் அவர்கள் மீது குற்றஞ்சாட்டவில்லை. அதுபோலவே தலைநகர் ஸ்டாக்ஹோம், நோய்ப்பரவலின் குவிமையமாக இருந்தது. அதற்காகத் தலைநகரில் வசிப்பவர்களை அந்நாட்டினர் தள்ளிவைத்துவிடவில்லை. முக்கியமாக, அரசின் அறிவுறுத்தலை மக்கள் முழுமையாகப் பின்பற்றுவார்கள் என்ற முழு நம்பிக்கை அரசுக்கு இருக்கிறது. முகக்கவசம் அணிகிறார்களா இல்லையா என்று காவல் துறையினர் சோதனை நடத்துவதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, மருத்துவக் கட்டமைப்பு அங்கு வலுவாக இருக்கிறது. இத்தாலியைப் போல மருத்துவக் கட்டமைப்புகள் அங்கு வீழ்ச்சியடையவும் இல்லை, சீனாவைப் போல அவசரகதியில் மருத்துவமனைகளைக் கட்ட வேண்டிய தேவையும் எழவில்லை. இயல்புக்குத் திரும்புதல் என்ற முடிவு ஸ்வீடனின் அசட்டுத் துணிச்சலிலிருந்து அல்ல; ஓர் இடரை எதிர்கொள்ள எப்போதும் அந்நாடு தயாராக இருப்பதாலும்தான் எடுக்கப்பட்டது.

- வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர்.

தொடர்புக்கு: vrangachari57@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்