இந்தியா - சீனா மோதல்: ஒரு வரலாற்றுப் பார்வை!

By வ.ரங்காசாரி

இந்தியா தன்னுடைய வடக்கு எல்லையில் சீனாவுடன் மூன்று பெரிய பகுதிகளில் நில எல்லைகளைப் பகிர்ந்துகொள்கிறது. நேபாளம், சிக்கிம், பூடான் ஆகிய பகுதிகளை ஒட்டிய எல்லைப் பகுதிகள்தான் எப்போதும் பூசலுக்கும் மோதல்களுக்கும் காரணங்களாக இருக்கின்றன. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்டபோது, இயற்கை வளங்களைச் சுரண்டி தங்களுடைய நாட்டுக்குக் கொண்டுசெல்ல கடல், நில மார்க்கங்களைப் பயன்படுத்தினர். மேலும் மேலும் நிலப்பரப்புகளைப் போரில் கைப்பற்றினர். அவர்களால் உருவானதுதான் இந்திய-சீன எல்லைப் பிரச்சினையும்.

பூசல்கள் தொடங்கிய இடம்

1834-ல் டோக்ரா இனத்தைச் சேர்ந்த குலாப் சிங் என்ற சீக்கிய மன்னர் ஜம்மு-காஷ்மீருடன் லடாக்கையும் கைப்பற்றினார். திபெத்தைக் கைப்பற்ற அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. பிறகு, பிரிட்டிஷ் படைகளுடன் நடந்த சண்டையில் அவர் தோற்றார். அவருடைய பிரதேசத்தைத் தங்களுடைய ஆட்சிப் பகுதியில் இணைத்துக்கொண்ட பிரிட்டிஷார், அவரையே தொடர்ந்து அந்தப் பகுதியை ஆண்டுவர அனுமதித்தனர். அப்போதுதான் பிரிட்டிஷ் இந்திய வடக்கு எல்லையை வகுத்தனர். பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு உட்பட்ட காஷ்மீரின் தெற்கு எல்லையாக பாங்காங் ஏரியை அடையாளமிட்டனர். அதற்கும் வடக்கில் காரகோரம் மலைப்பகுதி வரை தங்களுடைய எல்லை என்றனர். அதற்கும் அப்பால் உள்ள பகுதியை, ‘தங்களால் அறியப்படாத – அளக்கப்படாத பகுதி’ என்று குறிப்பிட்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை எது என்ற பூசலுக்கு இதுவே முதல் புள்ளி.

ஆளரவமே இல்லாத, வெறும் மேய்ச்சல் பகுதியான மலைப்பகுதிக்கு சீனர்களும் செல்வதில்லை, இந்தியர்களும் செல்வதில்லை. காரணம் அது கடும் குளிர்ப்பிரதேசம். வாழ்வதற்கான வசதிகள் ஏதுமற்ற அந்தப் பிரதேசங்கள் ஆளற்ற பகுதிகளாகவே நீண்ட காலம் தொடர்ந்தன. டபிள்யு.எச்.ஜான்சனை வரைபடம் தயாரிக்க பிரிட்டிஷ் அரசு பணித்தது. அவர் காராகாஷ் பள்ளத்தாக்கு முழுவதும் காஷ்மீர் பிரதேசத்துடன் இணைந்தது என்று வரைபடம் தயாரித்தார். காஷ்மீருக்கும் வடக்கில் உள்ள பகுதி அப்போது துர்கிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. 1878-ல் சீனர்கள் அதைக் கைப்பற்றி அதற்கு ஜின்ஜியாங் என்று சீன மொழியில் பெயரிட்டனர். இப்படித்தான் இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை பற்றிய தவறான புரிதல்களும் உரிமை கோரல்களும் மோதல்களும் தொடங்கின. பிறகு, மெக்கார்டின்-மெக்டொனால்ட் இருவரும் தேச எல்லைகளை வரையறுக்கும்படி பணிக்கப்பட்டனர். இன்றளவும் அவர்கள் நிர்ணயித்த எல்லைகளை இருதரப்பும் கேள்விக்குள்ளாக்குவது தொடர்கிறது. ஜின்ஜியாங் பகுதியை ஒட்டித்தான் ரஷ்யாவின் மத்திய ஆசியப் பகுதியும் இருக்கிறது. எனவே, அங்கே நில எல்லைப் பூசலுக்கு மூன்றாவது நாடும் முளைத்தது. சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நில எல்லை தொடர்பாகப் போரே நடந்திருக்கிறது.

ஒருகாலத்தில் தாங்கள் நடந்துசென்ற பகுதிகள் அனைத்தும் தங்களுக்குச் சொந்தம் என்று சீனா கருதுவதும் பிரச்சினைக்கு முக்கியக் காரணம். ஆனால், அப்படி நடந்து சென்ற தடத்தைக்கூட சில பகுதிகளில் நினைவுகூர முடியாமல் இந்தியா இருப்பதும் பிரச்சினையைப் பெரிதாக்குகிறது. இந்த எல்லைப் பூசல்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முக்கியத்துவம் பெற்றன. சுதந்திரம் பெற்ற உடனேயே இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றும் நோக்கில், திடீரென ஆக்கிரமித்த பாகிஸ்தானிய ராணுவம், தாங்கள் கைப்பற்றிய பகுதியில் பெரும் பகுதியை சீனாவிடம் ஒப்படைத்து, இந்தியாவுக்கு எதிராகத் தங்களுக்கு எப்போதும் ஆதரவாகச் செயல்படும் பெரிய துணையைச் சம்பாதித்துக்கொண்டது. அந்த ஆக்கிரமிப்பை ராணுவத்தின் மூலம் தகர்க்கலாம் என்ற யோசனையை நிராகரித்த பிரதமர் நேரு, ஐக்கிய நாடுகள் சபைக்கு அதைக் கொண்டுசென்றார். ஐக்கிய நாடுகள் சபையால் இன்றுவரை அதற்குத் தீர்வுகாண முடியவில்லை.

ஆயுதங்கள் இல்லாத குத்துச்சண்டை

16,000 அடி உயரத்தில் இருக்கும் அக்சாய் சின், சீனாவிடம் அடைக்கலமாகிவிட்டது. அதன் பரப்பளவு 37,244 சதுர கிமீ. கிட்டத்தட்ட சுவிட்சர்லாந்துக்குச் சமம். அக்சாய் சின் பிரதேசம் சீனாவின் ஜின்ஜியாங்குக்கும் திபெத்துக்கும் இடையில் இருக்கிறது. திபெத்தையும் சீனா கைப்பற்றி, ‘தன்னாட்சிப் பகுதி’ என்று 1965-ல் அறிவித்தது. திபெத்தின் தலாய் லாமா சீனப் படைகளிடமிருந்து தப்பி, இந்தியாவிடம் அப்போது தஞ்சம் புகுந்தார். மியான்மருக்கும் (பர்மா) பூடானுக்கும் இடைப்பட்ட பகுதிதான் அருணாசல பிரதேசம். அதையும் சீனா இப்போதும் தன்னுடைய பகுதி என்றே கூறிவருகிறது. அருணாசல பிரதேசமும் மலைப்பாங்கான பகுதி. சில சிகரங்கள் 23,000 அடிக்கும் அதிக உயரமுள்ளவை. அந்தப் பகுதிகளில் மக்களுடைய நல்வாழ்வுக்காக மத்திய அரசுதான் அதிக முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கிறது. விவசாயம், வாணிபம், தொழில் வளத்துக்கு அங்கு வாய்ப்புகள் குறைவு.

திபெத்தையும் ஜின்ஜியாங்கையும் இணைக்கும் அக்சாய் சின் பகுதியில், சீனா ராணுவ நோக்கில் பல அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்கி முடித்துவிட்டது. அங்கு பெரும் போருக்குத் தேவைப்படும் தளவாடங்களையும் பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது. இந்தியா தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்று உறுதியாக நம்பும் இடங்களில் சாலைகளை அமைப்பது, மின்சார இணைப்புகளைக் கொடுப்பது, பாலங்கள் கட்டுவது என்று கடந்த 20ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. இந்தப் பணி தீவிரமடைந்து முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதால், சீனா தன்னுடைய அதிருப்தியைக் காட்டும் முகமாக இந்திய ராணுவத்துடன் தள்ளுமுள்ளுகளில் ஈடுபடுகிறது. துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இல்லாமல், இருநாட்டு வீரர்களும் முஷ்டிகளால் தாக்கியும் கட்டிப்பிடித்து, மூச்சுமுட்ட வைத்தும் குத்துச்சண்டைகள் போட்டும் எதிர்ப்பைக் காட்டுகின்றனர்.

தாப்ரூக்-ஷையோக்-தௌலத் பெக்-ஓல்டி ரோடு ஆகியவற்றை இணைக்கும் சாலையை இந்தியா அமைத்து முடித்துள்ளது. இது கனரக ராணுவ வாகனங்களும் டாங்கிகளும் பீரங்கிகளும் செல்ல ஏற்றது. இதனால், போர் ஏற்பட்டால் வெகு விரைவில் ஏராளமான துருப்புகளையும் ஆயுதங்களையும் போர் வீரர்களுக்குத் தேவைப்படும் உணவு, உடை உள்ளிட்ட சாதனங்களையும் எளிதில் எடுத்துச்செல்ல முடியும். அக்சாய் சின் பகுதியை இந்திய ராணுவம் அடைய வேண்டும் என்றால், செங்குத்தான பாறைகளில் துருப்புகள் ஏற வேண்டும். சீனாவோ தன்னுடைய நாட்டிலிருந்து சமவெளி மூலமாகவே எளிதில் வந்துவிடலாம். ராணுவரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால்தான் இந்தியா அதை மீட்க முயல்கிறது. அதே காரணத்துக்காக சீனாவும் விட்டுத்தர மறுக்கிறது.

அரசியல் காரணங்கள்

உலக அரங்கில் சமீபத்தில் அரங்கேறியுள்ள அரசியல் நிகழ்வுகளும் இரு நாடுகளுக்கும் இடையிலான பூசல் வலுப்பட முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. அமெரிக்காவுக்குச் சவாலாக உருவெடுத்துள்ள சீனாவைக் கட்டுப்படுத்த விரும்பும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை அதற்கு எதிரான ஒரு சக்தியாக வளர்வதை விரும்புகின்றன. பொருளாதாரக் கூட்டமைப்புகளில் இந்தியாவுக்குச் சிறப்பு விருந்தினர் அந்தஸ்தை அவை வழங்குவது பின்னாளில் ராணுவக் கூட்டாக மாறலாம் என்று சீனா சந்தேகிக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இஸ்ரேல், ஜப்பான், வியட்நாம், கம்போடியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுடனான இந்திய நெருக்கம் தன்னுடைய ராணுவ வளைய வியூகத்துக்கு எதிரானது என்ற எண்ணமும் சீனாவிடம் இருக்கிறது. ஆக, இந்தியாவை அச்சுறுத்துவதன் வழியாக, எந்தெந்த நாடுகள் உதவத் தயாராக இருக்கின்றன என்று நோட்டம் பார்க்கும் வழக்கம் சீனாவுக்கு உண்டு.

சீனா எல்லாப் பொருட்களையும் விலை குறைத்து விற்க முற்படுகிறது, எதையும் வாங்குவதில்லை. எனவே, வெளிவர்த்தகப் பற்றுவரவில் ஏற்படும் இடைவெளியைக் குறைக்க சீனாவும் தங்களிடம் கட்டாயம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்துகிறார். சீனப் பொருட்கள் மீது பொருள்குவிப்புத் தடுப்பு வரியை விதித்துள்ளார். சீனாவில் முதலீடுசெய்து உற்பத்திசெய்யும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள், அந்த முதலீடுகளை விலக்கிக்கொண்டு அமெரிக்காவுக்கே வர வேண்டும் அல்லது வேறு நடுநிலை அல்லது நட்பு நாடுகளில் முதலீடுசெய்யலாம் என்கிறார். அதற்கு உகந்த நாடாக இந்தியா திகழ்வதால், நம் மீது பாய்கிறது சீனா. நாளை சீனாவுடன் இந்தியா போரிட நேர்ந்தால், உற்பத்தி சீராக நடக்குமா என்ற ஐயம் தொழிலதிபர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் இந்தியாவுக்கு வர மாட்டார்கள். அது மட்டுமல்ல, சீனா அறிவித்த பட்டுப் பாதைத் திட்டத்தில் சேர இந்தியா மறுத்துவிட்டது. இது பல கீழை நாடுகளுக்கு இந்தியா மீதான மதிப்பை உயர்த்தியிருக்கிறது. அதேபோல, தென் சீனக் கடல் முழுக்கத் தனக்கே பாத்தியப்பட்டது என்று சீனா கொக்கரிப்பதை ஏற்காத ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை நாடத் தொடங்கியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாவதை எதிர்த்து சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவந்தாலும் இந்தியாவுக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது. சின்னஞ்சிறு நாடுகளுக்குப் பொருளாதார வளர்ச்சிக்குக் கடன் உதவிசெய்து, அவற்றிடம் ராணுவ நோக்கத்துக்காகப் பிரதிபலனைக் கேட்டுப் பெற்றுவருகிறது சீனா. அத்தகைய நாடுகளில் சில இந்தியாவை அணுகுகின்றன. மாலத்தீவு சமீபத்திய உதாரணம். இதனாலும், சீனாவுக்கு இந்தியா மீது ஆத்திரம் ஏற்பட்டுவருகிறது.

இப்போதைய பதற்றத்துக்குக் கூடுதலான ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. உள்நாட்டு நெருக்கடிகள் அதிகமாகும் அண்டை நாட்டுடனான உறவைப் பதற்றத்துக்குள்ளாக்குவதன் மூலம், மக்களுடைய கவனத்தைத் திசைதிருப்ப, தேசியத்தை ஒரு வியூகமாக ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் அணுகுமுறையே அது. கரோனாவுக்குப் பிறகு சீனப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஹாங்காங்கில் சீன அரசு எடுக்கும் ஆதிக்க நடவடிக்கைகள், சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு எதிரான மனநிலையை அங்கு கடுமையாக உருவாக்கியிருக்கிறது. முடிவெடுக்கும் அதிகாரங்களை ஒற்றைத் தலைமையின் கீழ் குவித்ததும் ஏற்கெனவே அவர் மீது விமர்சனங்களைக் குவித்திருக்கிறது. உள்நாட்டில் இப்படியான விவகாரங்கள் யாவும் ஜி ஜின்பிங்குக்கு அரசியல் அழுத்தங்களாக உருவெடுத்திருக்கின்றன. இதனிடையே கரோனாவைக் காரணம் காட்டி, சீனாவைக் கட்டம் கட்டும் அமெரிக்க – ஐரோப்பியத் திட்டத்தில் இந்தியாவும் ஓர் அங்கமாகிவிடக் கூடாது என்று சீனா நினைக்கிறது. அதன் விளைவாகவே சீன – இந்திய பழைய தகராறுகளுக்கு உயிர் கொடுக்கிறது என்ற பார்வையும் இருக்கிறது.

எப்படியாயினும் இது பெரிய ராணுவ மோதலாக உருவாகிவிடாது. ஏனெனில், உலகளாவிய ஒரு கொள்ளைநோய் காலகட்டம் எல்லா நாடுகளின் இணைவையும் வலியுறுத்துவதாகும். மேலும், பொருளாதாரச் சரிவு உள்ளிட்ட பெரும் சிக்கல்கள் எல்லா நாடுகளையும் சூழ்ந்திருக்கையில், இவை தற்காலிகப் பூச்சாண்டித்தனமாகவே கடந்துபோகும். ஆயினும், தன்னுடைய அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவருவதில், சாதாரண நாட்களில் இந்தியா முழுக் கவனம் செலுத்த வேண்டும்.

- வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர்.

தொடர்புக்கு: vrangachari57@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்