உள்ளாட்சி அமைப்புகள் முக்கியத்துவம் பெறும் காலம் இது!

By செய்திப்பிரிவு

உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியத்துவத்தை நாம் எல்லோரும் உணரும்படி கரோனா செய்திருக்கிறது. கரோனா போன்ற எந்தப் பேரிடரையும் திறம்பட எதிர்கொள்வதில் உள்ளாட்சி அமைப்புகளே கூடுதல் பலம் கொண்டவையாக இருக்கின்றன. 2020-2021 கால அளவுக்கு மாநிலங்கள் கடன் வாங்கும் வரம்புகளுக்கு நிபந்தனைகள் விதித்தது (மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.5%-லிருந்து 5% வரை) நியாயமற்றது. என்றாலும், பொருளாதாரத்தைப் பொறுத்தவரை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற அங்கீகாரம் உள்ளாட்சி அமைப்பின் எதிர்காலத்துக்கான ஆரோக்கிய சமிக்ஞையாகும்.

உள்ளாட்சி அமைப்புகளைப் பீடித்திருக்கும் பல்வேறு குறைபாடுகள் களையப்பட வேண்டும். ஒன்று, மருத்துவ சேவையில் அதிநவீன மாற்றங்கள் செய்ய வேண்டும். இரண்டு, 73-வது சட்டத் திருத்தத்தாலும், 74-வது சட்டத் திருத்தத்தாலும் உள்ளாட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளும் நிதிவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டன. மூன்று, உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகள், அதன் அலுவலர்கள், நிதிப் பொறுப்புகள் போன்றவற்றில் இன்னும் தெளிவில்லை. நான்காவதாக, உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியப் பங்கு அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

உள்ளாட்சி நிதி

தேவையான விதிவிலக்குகளுடன் சொத்து வரி வசூலிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்; இது நிலத்தையும் உள்ளடக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் வருமானத்தில் 44% தங்கள் சொந்த வழிவகைகளிலிருந்தே பெறுகின்றன என்றும், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் 5% மட்டுமே பெறுகின்றன என்றும் 2017-18-க்கான ‘பொருளாதார ஆய்வு’ சொல்கிறது. இதனால்தான், உள்ளாட்சி நிர்வாகங்கள் மிக மோசமாகச் செயல்படுகின்றன. உலகெங்கும் சொத்து வரிதான் உள்ளாட்சி வருவாய்க்குப் பெருமளவில் பங்களிக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சொத்துவரியின் பங்கு குறைந்துவருவது தவறான சமிக்ஞையை வெளிப்படுத்துகிறது. 2017-18-ல் இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பில், சொத்து வரியின் பங்கு 0.14% மட்டுமே. ஆனால், ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு’ (ஓஈசிடி) நாடுகளில் இது 2.1%-ஆக இருப்பதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். சொத்து வரியானது நிலத்தையும் உள்ளடக்கும் என்றால், வரியை உயர்த்தாமலேயே இதன் மூலம் அதிக வருவாய் கிடைக்கும். இந்தியாவில் தற்போது கரோனா பரவிவரும் சூழலில் நில விற்பனை மற்றும் மேம்பாட்டு வரியை முயன்றுபார்க்கலாம். நகராட்சிகளும் ஏன் புறநகர் உள்ளாட்சி அமைப்புகளும்கூட 10 ஆண்டு காலத்துக்கான கரோனா கட்டுப்படுத்தல் பத்திரங்களை வெளியிடலாம். சந்தையில் உள்ள கடன் விகிதத்தைவிடக் குறைவாகவும், வங்கிகளைக் கவர்வதற்காக ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தைவிடக் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாகவும் கடன்விகிதத்தை நிர்ணயிக்கலாம். அயல்நாடு வாழ் இந்தியர்கள், பணக்காரக் குடிமக்களின் தேசப்பற்றை இதன் மூலம் பயன்படுத்திக்கொள்ளலாம். 1998-ன் ‘இந்திய புத்துயிர்ப்புக்கான பத்திரம்’ (Resurgent India Bond) ஒருசில நாட்களுக்குள் ரூ.16 ஆயிரம் கோடிக்கும் மேல் திரட்டியது இந்த வழிமுறையைக் கையாள்வதற்குத் தூண்டுதலாக நமக்கு இருக்கும்.

எம்.பி. நிதித் திட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சிக்கான நிதியை ஒன்றிய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு ரத்துசெய்திருக்கிறது. இதற்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு சுமார் ரூ.4,000 கோடி. இந்த ஒட்டுமொத்த நிதியையும், கூடவே உறுப்பினர்களால் செலவிடப்படாமல் தனிநிதியமாகத் தொடரும் பெரும் தொகையையும் மத்திய அரசு இப்போது தன்வசப்படுத்தியிருக்கிறது. உள்ளூர் வளர்ச்சிக்கென்றே வெளிப்படையாக வகுக்கப்பட்டிருக்கும் ‘நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சித் திட்ட’த்தை உள்ளாட்சி அமைப்புக்காக, குறிப்பாக கிராமப் பஞ்சாயத்துகளுக்காக அர்ப்பணிக்கலாம்.

16-வது நிதிக் குழுவின் வரையறையின் படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கரோனா தடுப்பு சிறப்பு நிதியம் வழங்கப்பட வேண்டியது இந்த இக்கட்டான நேரத்தின் கட்டாயம்.

2020-21 ஆண்டுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.90,000 கோடி ஒதுக்கீட்டை 15-வது நிதிக் குழு செய்திருக்கிறது. இது 14-வது நிதிக் குழுவின் பரிந்துரையைவிட 3%-தான் அதிகம். பஞ்சாயத்துகளுக்கான தொகையில் வெறும் ரூ.63 கோடி மட்டுமே அதிகரித்திருக்கிறது. நிதியமைச்சர் அறிவித்த ஐந்து நிதித் தொகுப்புகளில் உள்ளாட்சி அளவில் சுகாதாரக் கட்டமைப்புகளை உருவாக்குவது, நோய்க் கட்டுப்பாடு உத்திகள் போன்றவற்றைப் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. நிபந்தனைகளுக்கு உட்பட்ட நிதியத்தின் அடிப்படை விகிதம் 50:50 என்று நிதிக் குழு தீர்மானித்திருக்கிறது. தற்போதைய நெருக்கடியான சூழலில் எல்லா நிதியங்களின் நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டு, உள்ளூர் அளவில் சுதந்திரமான கரோனா தடுப்பு உத்திகள் உருவாக அனுமதிக்கப்பட வேண்டும்.

வெள்ளம், பஞ்சம், நிலநடுக்கங்கள் எல்லாம் ‘பேரிடர் மேலாண்மைச் சட்டம்-2005’ன் கீழ் வரும். இந்தச் சட்டம் கொள்ளைநோய்களை உள்ளடக்காது. இந்தப் புதிய கொள்ளைநோய் முன்னுதாரணம் இல்லாத அளவில் பொதுச் சுகாதாரத்துக்குப் பெரும் சவால். உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்தித்தந்து, அவற்றுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

© ‘தி இந்து’, தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்