தண்டனை ஆகிவிடக் கூடாது தனிமைப்படுத்தல்!

By வ.ரங்காசாரி

கரோனா கொள்ளைநோய் தொடங்கியதி லிருந்து உலகம் அதிகம் பயன்படுத்தும் சொற்களில் ஒன்று தனிமைப்படுத்தல் – குவாரன்டைன். இன்றைய ஊரடங்குகளுக்கு முன்னோடியும்கூட அதுதான். இப்படியான தனிமைப்படுத்தல் எப்போது, எப்படித் தொடங்கியது என்கிற கதை சுவாரஸ்யமானது. அதுகூட இப்போது நமக்குத் தேவையற்றது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவோருக்கும் பல உரிமைகள் இருக்கின்றன. தனிமைப்படுத்தலை மேற்கொள்ளும் அரசு கடைப்பிடிக்க வேண்டிய பல நெறிமுறைகள் இருக்கின்றன. அவற்றை நாம் ஒவ்வொருவருமே தெரிந்துகொள்வது அவசியம்.

நாமோ நம் நண்பர்களோ உறவினர்களோ தனிமைப்படுத்தலுக்கு உட்படும் சாத்தியமுள்ள நாட்கள் இவை என்பதால் மட்டும் அல்ல; இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இந்த உரிமைகள் பேசப்படாவிட்டால் ‘தனிமைப்படுத்தல்’ என்பதே ஒரு தண்டனையாக உருமாறிவிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இப்போதே பலர் அதை அனுபவிக்கின்றனர். தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக மட்டும் அல்ல; தன் வழியே தொற்று ஏனையோருக்குப் பரவிடக் கூடாது என்ற சமூகப் பாதுகாப்பு நோக்கத்துடனும் சேர்ந்துதான் ஒருவர் தனிமைப்படுத்திக்கொள்ளலுக்குள் செல்கிறார். அவர் வெறுக்கத்தக்கவர் அல்ல. இந்த அடிப்படைப் புரிதலிலிருந்து நாம் கதையைத் தொடங்குவோம்.

ஐரோப்பாவின் அறிமுகம்

ஐரோப்பியக் கண்டம் அழகானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. இந்தியா போன்ற வெப்ப நாடுகளைப் போல அல்லாமல், அங்கே எந்த வியாதிக் கிருமிகள் நுழைந்தாலும் மிதமான தட்பவெப்பம் காரணமாக அழிவே இல்லாமல் காற்றின் மூலமே வேகமாகப் பரவிவிடும். ஆக, கிருமிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள உள்நாட்டை சுகாதாரமாகப் பராமரிப்பதோடு, வெளிநாடுகளிலிருந்தும் கிருமிகள் வந்திடாமல் பாதுகாத்திடல் முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்தபோது கண்டறிந்த முறைதான் ‘தனிமைப்படுத்தல்’.

வெளிநாடுகளுக்குக் கப்பல்களில் சென்றுவிட்டுத் திரும்பும் இத்தாலியர்கள் வெனிஸ் நகரக் கடற்கரைக்கு அருகில், கடலிலேயே நங்கூரமிடப்பட்ட கப்பலில் 40 நாட்களுக்குத் தங்கவைக்கப்படுவார்கள். உடல் நலக் கோளாறுகள் ஏதும் இல்லை என்று உறுதிப்பட்ட பிறகே, அவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ‘குவாரன்டா கியோர்னி’ என்றால் நாற்பது நாட்கள் என்று அர்த்தம். பிற்பாடு இந்த நடைமுறைக்கே ‘குவாரன்டைன்’ என்ற பெயர் நிலைத்துவிட்டது. குறைந்தது ஐந்நூறு ஆண்டுகள் வரலாறு இந்த நடைமுறைக்கு இருக்கிறது.

மஞ்சள் கொடி

கப்பல் வாணிபமும் காலனிகளைப் பிடிப்பதற்கான பயணங்களும் பின்னர் அதிகரித்தன. வெளிநாடுகளுக்குச் சென்று திரும்புவோர் விதவிதமான நோய்களுடன் திரும்பியதால், கிழக்கத்திய நாடுகளுக்குச் சென்று திரும்புவோரைத் தனித்துத் தங்கவைக்க பொது நடைமுறை அவசியம் என்று ஐரோப்பிய நாடுகள் பல மாநாடுகளை நடத்தின. 1897-ல் காலராவுக்கு ஏராளமானோரைப் பலிகொடுத்த பிறகு இதற்கான பொது நடைமுறைகள் ஏற்கப்பட்டன. தொற்றுநோயாளிகள் கப்பலில் இருந்தால் கரையில் இருப்பவர்களுக்கு அதை உணர்த்த கப்பலில் தனிக் கொடி ஏற்றப்பட்டது. அந்தக் கொடியில் மஞ்சள், கறுப்பு நிறங்கள் இருக்கும். அந்தக் கொடியையே ‘மஞ்சள் கொடி’ என்பார்கள்.

இதற்கும் முன்னதாகவே கொள்ளைநோய்கள் பரவும்போது தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளும் வழக்கம் ஐரோப்பிய கிராமங்களில் இருந்ததைச் சொல்லும் வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. பிரிட்டனில் உள்ள இயாம் கிராமம் 1665-ல் பிளேக் நோய்க்கு ஆளானபோது, அங்கிருந்து ஏனைய பகுதிகளுக்கு அது பரவிவிடக் கூடாது என்று கிராமத்தாரே கூடி முடிவெடுத்துப் புற உலகத் தொடர்பை நீண்ட நாட்களுக்குத் துண்டித்துக்கொண்டிருக்கின்றனர். பிற்பாடு ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் நோய் பரவும்போது, அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு நோய் பரவிடக் கூடாது என்பதற்காக அந்தப் பகுதியையே தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஆனது.

1918-ல் கிழக்கு சமோவாவில் ‘ஸ்பானிய ஃப்ளூ’ காய்ச்சல் பரவியபோது, அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருந்த அந்தத் தீவுக்கு ஜான் மார்ட்டின் போயர் ஆளுநராக இருந்தார். தனிமைப்படுத்தலை அவர் அமல்படுத்தியதால் அங்கு ஒருவரும் இறக்கவில்லை. அதே சமயம், நியூசிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்கு சமோவா தீவில் நிலைமை தலைகீழாக இருந்தது. இந்த அனுபவம் ஆட்சியாளர்கள் தனிமைப்படுத்தலை ஓர் உத்தியாகக் கையாள வழிவகுத்தது. மிக விரைவிலேயே அது எல்லையற்ற அத்துமீறல்களுக்கும் வழிவகுக்கலானது.

உலகப் போர் சமயத்தில் குருய்னார்ட் தீவையே தனிமைப்படுத்தலுக்குள் தள்ளினர் பிரிட்டிஷார். வெளியுலகுக்கு அப்போது அது ஏன் என்றே தெரியவில்லை. பிற்பாடுதான் மெல்லத் தெரிந்தது, ‘ஆந்த்ராக்ஸ்’ கிருமியை ஒரு உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்த அங்கே சோதனை நடத்திப் பார்த்தார்கள் என்று. நெடுங்காலம் அந்தத் தீவு வெளியுலகுடன் தொடர்பில் இல்லாமலேயே இருந்தது.

தனிமனித அளவிலும் சரி, ஒட்டுமொத்த ஊராகவும் சரி; தனிமைப்படுத்தல் அமலாக்கப்படும்போது, அதிலும் அரசு அதைக் கையாளும்போது அத்துமீறல்கள் நிறைய நடந்தன. ஆகவே, அதை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுமுறைகள் உருவாக்கப்பட்டன. இத்தாலியின் சிராகுசா நகரில் 1984-ல் நடந்த சர்வதேச மாநாட்டில், ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார-சமூக ஆணையத்தால் ஏற்கப்பட்ட இந்தக் கொள்கைகள் ‘சிராகுசா கொள்கைகள்’ என்று அழைக்கப்படுகின்றன. தனிமைப்படுத்தல் என்ற நடவடிக்கையைக் கைக்கொள்ளும் எந்த நாடும் ஆட்சியாளரும் அதிகாரியும் இவற்றைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம் என்று சொல்லலாம்.

என்னென்ன விதிகள்?

பொது நன்மைக்காகவும் சமூகத்தின் நலனுக்காகவும் மட்டுமே ‘தனிமைப்படுத்தல்’ அமல்படுத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்கு நோய் பரவிவிடக் கூடாது என்பது நோக்கமாக இருக்க வேண்டும். கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் யதேச்சதிகாரமாகவோ பாரபட்சமாகவோ அமையக் கூடாது. கொள்ளைநோய் பரவாமலிருக்க மக்களுடைய நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் அது மக்களுடைய குடிமை, அரசியல் உரிமைகள் தொடர்பாக சர்வதேச மாநாடுகளில் ஏற்கப்பட்ட முந்தைய முடிவுகளுக்கு ஒத்திசைவாக இருக்க வேண்டும். அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஏற்பவும், நோய் தொடர்பாகக் கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையிலும், நோய்ப் பரவலின் தீவிரத்துக்கு ஏற்பவும், படிப்படியாகவும் அமல்படுத்தப்பட வேண்டும். நோயோ காயமோ பரவாமல் இருக்கவும், நோயுற்றவர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் கவனிப்பு அளிப்பதற்காகவும் மட்டுமே நடமாட்ட உரிமைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

தனிமைப்படுத்தலை அமல்படுத்தப்படும்போது தார்மீக நெறிகளையும் அரசு பின்பற்ற வேண்டும். மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை உண்மையான தரவுகள், அறிவியல் ஆதாரங்கள் அடிப்படையில் அமைய வேண்டும். தடை தொடர்பான அனைத்துத் தகவல்களும் மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். யாருடைய உரிமைகள் பாதிக்கப்படுகின்றனவோ, அவர்களுக்கு அது ஏன் அவசியப்படுகிறது என்பது அரசால் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அரசின் நடவடிக்கைகள் அடிக்கடி மீள்பார்வைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். நிலைமை மேம்பட்டால் கட்டுப்பாடுகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மிக முக்கியமாக, மக்களுக்குச் சில உறுதிமொழிகளை அளிக்க அரசு தார்மீகரீதியில் கடமைப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் ஏச்சுக்கு ஆளாக மாட்டார்கள், அச்சுறுத்தப்பட மாட்டார்கள் என்று கூற வேண்டும். உணவு, குடிநீர், மருத்துவக் கவனிப்பு, நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளிக்க வேண்டும். குடும்பத்தாருடனும் புரவலர்களுடனும் கடிதம் உள்ளிட்ட தகவல் தொடர்பில் அவர்கள் இருப்பதற்கான வசதிகளை அரசு செய்து தர வேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். நோய்க்கு ஆளானவர்கள் மாதச் சம்பளக்காரர்களாக இருந்தால் அவர்களுடைய வருவாய் இழப்பு ஈடுசெய்யப்பட வேண்டும்.

மேம்பட வேண்டும்

பிற்பாடு ஜனநாயக அரசுகள் நிறையவே மேம்பட்ட உரிமைகளைக் கொண்டுவந்தன. ஆனாலும், இன்னும் நிறைய விஷயங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது. உத்தர பிரதேசத்தில் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மீது கிருமிநாசினியைக் குழாய் கொண்டு பீய்ச்சி அடித்ததோ, ஒடிஷாவில் தனிமைப்படுத்தல் என்ற பெயரில் சாலையின் ஊடே சிறு பாலத்தின் அடியில் புதைக்கப்படும் குழாய்களுக்குள் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டிருந்ததோ, தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து சொந்த மாவட்டம் செல்பவர்கள் எந்த வசதியுமற்ற முகாம்களில் தங்கவைக்கப்படுவதோ எல்லாம் சொல்வது ஒன்றுதான். நாம் இன்னும் மனித உரிமைகளைப் பழகவில்லை – தனிமைப்படுத்தல் தண்டனை இல்லை. இந்தியா போன்ற நாடுகள் தனிமைப்படுத்தலுக்கான விதிகளைக் கூடுதல் அக்கறையோடு மேம்படுத்த வேண்டும்!

- வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர்.

தொடர்புக்கு: vrangachari57@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்