“பொதுமக்கள் ஒத்துழைத்தால் நியூசிலாந்து போல சென்னையையும் கரோனா தொற்று இல்லாத பகுதியாக்க முடியும்” என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருக்கிறார்.
மூன்று நாட்களில் கரோனா தொற்றை பூஜ்ஜிய நிலைக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று முதல்வரின் வாயிலிருந்தே நம்பிக்கை வார்த்தைகளை முன்பு கேட்டிருக்கிறோம் என்பதால், இதையும் நம்பிக்கையூட்டும் ஒரு கூற்றாகவே கருதிக்கொள்ளலாம். நம்பிக்கைதானே எல்லாமே. அதே சமயம், இந்த நிலையை எட்ட நியூசிலாந்து அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்தது என்பதையும் தெரிந்துகொள்வது நலம் பயக்கும் அல்லவா?
ஒரு சின்ன ஒப்பீடு
2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னையின் மக்கள்தொகை 46 லட்சம். இன்றைய தேதிக்கு அது கணிசமாக அதிகரித்திருக்கும். சென்னையில் மட்டும் இதுவரை 23,000-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர். 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக, கரோனா தொற்றுக்குள்ளானோரின் தினசரி சராசரி 1,000-க்கும் அதிகமாகவே இருக்கிறது. நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ள 3,47,380 பேர் கண்காணிப்பில் இருக்கிறார்கள். சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நியூசிலாந்தின் நிலை என்ன?
அந்நாட்டின் மக்கள்தொகை சுமார் 50 லட்சம். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கரோனா வைரஸ் ஆய்வு மையத்தின் புள்ளிவிவரத்தின்படி, நியூசிலாந்தில் கரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையே 1,504 தான். இதுவரை ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 22. தொடர்ச்சியாக 17 நாட்களுக்குப் புதிதாக ஒருவர்கூட தொற்றுக்குள்ளாகவில்லை. ‘கோவிட்-19’ சிகிச்சையில் இருந்த கடைசி நோயாளியும் குணமடைந்துவிட்டதால், நியூசிலாந்தில் கரோனா வைரஸ் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மகிழ்ச்சியில் ஓர் ஆனந்த நடனமே ஆடிவிட்டார் நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன். தற்போது, சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக விதிக்கப்பட்ட எல்லாக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டன. நாட்டின் எல்லைகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன.
» புலம்பெயர் தொழிலாளர்களின் துயரம் போக்க நான்கு திட்டங்கள்
» வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் ஊர் திரும்ப நடவடிக்கை வேண்டும்
புவியியல் ரீதியாக மற்ற நாடுகளிடமிருந்து தனித்திருப்பதும் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு உதவியிருக்கிறது. மக்கள் நெருக்கம் குறைவு என்பது இன்னொரு சாதகம். இதுபோன்ற சாதகமான அம்சங்கள் எல்லா நாடுகளிலும் சாத்தியமில்லை. இவ்விஷயத்தில் நம் தமிழகத்தையோ, சென்னையையோ நியூசிலாந்துடன் ஒப்பிடுவது தர்க்க அடிப்படையில் நியாயமே அல்ல என்பதும் உண்மைதான். ஆனால், சென்னை மட்டுமல்ல, உலகமே கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை நியூசிலாந்து தனது செயல்கள் மூலம் காட்டியிருக்கிறது.
விழித்துக்கொண்ட தீவு தேசம்
கரோனா விஷயத்தில் ஆரம்பத்தில் ஜெஸிந்தாவும் அத்தனை ஜாக்கிரதையாக இருந்தார் என்று சொல்லிவிட முடியாது. மார்ச் 13-ல், கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் நினைவு தினத்தை அனுசரிக்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘கோவிட்-19’ நோய் ஒரு பெருந்தொற்று என்று மார்ச் 11-ல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்துவது அவசியமா எனும் விமர்சனங்கள் அப்போது எழுந்தன. முக்கியமாக, ஊடகங்களும், சுகாதார நிபுணர்களும் அதைச் சுட்டிக்காட்டினர்.
இதை ஏற்றுக்கொண்ட ஜெஸிந்தா, அந்நிகழ்ச்சியை ரத்து செய்ததுடன், நியூசிலாந்துக்கு வரும் அனைவரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் அறிவிப்பை மறுநாளே வெளியிட்டார். ‘கோவிட்-19 நோய்க்கு எதிராக ஒன்றிணைவோம்’ என்று மக்களைக் கேட்டுக்கொண்ட நியூசிலாந்து அரசு, ‘5 மில்லியன் பேர் அடங்கிய அணி’ என்று ஒட்டுமொத்த தேசத்தையும் ஒன்றிணைத்து செயல்படத் தொடங்கியது.
மார்ச் 15-ம் தேதி வாக்கில் அந்நாட்டில், 100 பேருக்குத்தான் கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அந்த நாள் வரை ஒரு மரணம்கூட நேரவில்லை. ஆனால், அப்போது முதலே தனது துரித நடவடிக்கைகளை நியூசிலாந்து அரசு ஆரம்பித்துவிட்டது. முதல் வேலையாக நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன. மார்ச் 25 முதல், பொதுமுடக்க நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், கேஸ் ஸ்டேஷன்கள் மட்டும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. தனிமனித இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மக்களிடம் அறிவுறுத்தப்பட்டது.
ஆக்கபூர்வ அணுகுமுறை
இவ்விஷயத்தில், பிற நாடுகளின் அணுகுமுறைகளை உன்னிப்பாகக் கவனித்தது நியூசிலாந்து. தெளிவற்ற அணுகுமுறைகளின் காரணமாகக் கடும் பாதிப்பைச் சந்தித்த மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றாமல், தொடர்ச்சியான நடவடிக்கைகளால் மீண்டுவந்த சீனா, தைவான் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் அணுகுமுறையைப் பின்பற்றியது. அதனால்தான், மிக ஆரம்பத்திலேயே பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் முடிவுக்கு ஜெஸிந்தா வந்தார். மிக முக்கியமாக, நியூசிலாந்தில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டது என்பதை மார்ச் மாதத்திலேயே அறிவித்துவிட்டது அரசு. இன்றுவரை சமூகப் பரவல் எனும் பேச்சையே நம்மவர்கள் எடுக்க மறுப்பதை இத்துடன் பொருத்திப் பார்ப்பது அவசியம்.
பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்போது மக்களிடம் இயல்பாகத் தோன்றும் பதற்றத்தைத் தணிப்பதிலும் ஜெஸிந்தா உறுதியுடன் செயல்பட்டார். அரசின் அறிவிப்புகளில் குழப்பங்கள் இருக்கவில்லை. ‘அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை மக்கள் முறையாகப் பின்பற்றினால், பொதுமுடக்கம் குறைந்த நாட்களுக்குத்தான் (தோராயமாக 4 வாரங்கள்) நீடிக்கும். தவறினால் பொதுமுடக்கத்தை மேலும் நீட்டிக்க வேண்டிவரும்’ எனும் தகவலை மக்கள் மத்தியில் முறையாகச் சேர்ப்பித்தார். “வேறு எந்த நாடும் சாதிக்க முடியாத ஒரு விஷயத்தைச் செய்ய நமக்குச் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. கரோனா வைரஸை முற்றிலுமாக ஒழிப்பதுதான் அது” என்று ஏப்ரல் 16-லேயே துணிச்சலுடன் சொன்னார்.
தினமும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, தொற்றுக்குள்ளானோர் குறித்த தரவுகளைப் பகிர்ந்துகொண்டார். ஃபேஸ்புக் லைவில் அடிக்கடி தோன்றி, மக்களுடன் உரையாடினார். கரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அறிவார்த்தமான முறையில், தெளிவான பதில்களைத் தந்தார். மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகளின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்தார். அந்நாட்டில் பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது மக்களின் நடமாட்டம், 91 சதவீதம் குறைந்திருந்ததாக கூகுள் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மட்டுமன்றி, அரசின் தெளிவான வழிகாட்டுதல்களும் காரணம் என்று பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டன
மிக முக்கியமாக, பொதுமுடக்கத்தை அறிவித்ததுடன் நியூசிலாந்து அரசு நின்றுவிடவில்லை. ஆரம்பத்தில் கரோனா பரிசோதனைக்கான வசதிகள் அந்நாட்டில் அதிகம் இருக்கவில்லை. எனினும், பொதுமுடக்கம் அமலில் இருந்த நாட்களில் பரிசோதனைக்கான கட்டமைப்பை வலுப்படுத்தியது நியூசிலாந்து அரசு. இதற்காக, அரசு நிறுவனங்கள்- தனியார் நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பை ஏற்படுத்தியது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றிய நியூசிலாந்து அரசு, தினமும் 8,000 பரிசோதனைகளை நடத்தியது. மே மாத மத்தியில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகளை அந்நாடு நடத்தியிருந்தது. தொற்றுக்குள்ளானோரைத் தனிமைப்படுத்துவது, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் தடமறிவது போன்ற நடவடிக்கைகளிலும் தீவிர கவனம் செலுத்தியது.
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான தனிநபர் பாதுகாப்பு சாதனங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொண்டது. இதற்காகத் தேசிய அளவிலான பதிவேட்டை உருவாக்கி, அதைத் தினமும் பராமரித்து வந்தது. எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தயாரிப்புக்குப் புகழ்பெற்ற ‘கிவி’ நிறுவனம், ஏப்ரல் மத்தியிலேயே முகக்கவசம் உள்ளிட்ட தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் தயாரிப்பில் இறங்கியது. பிற நிறுவனங்களும் இந்தச் சாதனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கின. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் ஒரு பெரும் சோதனையை நியூசிலாந்து வெற்றிகரமாகக் கடந்துவந்திருக்கிறது.
தொடரும் விழிப்புணர்வு
அதேசமயம், ஜெஸிந்தா இந்த வெற்றியால் அதீத மகிழ்ச்சியில் ஆழ்ந்திவிடவில்லை. “நியூசிலாந்தில் நிச்சயம் மீண்டும் தொற்று ஏற்படலாம். அதை நமது தோல்வியாக எண்ண வேண்டியதில்லை. இந்த வைரஸின் இயல்பு அதுதான். அதேசமயம், அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், அதை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பேசியிருக்கிறார்.
நியூசிலாந்தில், செப்டம்பர் மாதம் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டு மக்களிடையே ஜெஸிந்தாவின் செல்வாக்கு 65 சதவீதம் அதிகரித்திருப்பதாகச் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவரான டாட் முல்லர், கடுமையான பொதுமுடக்க நடவடிக்கைகளால் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சரிவை விமர்சித்தாலும், ஜெஸிந்தாவின் அணுகுமுறையால் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதை வெளிப்படையாகப் பாராட்டியிருக்கிறார்.
இந்தத் தருணத்தில், அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் பிரதானமானவரான பெர்னி சாண்டர்ஸின் சமீபத்திய ட்வீட், மிக முக்கியமான படிப்பினையைச் சுட்டிக்காட்டுகிறது.
“நியூசிலாந்து அரசு அறிவியலுக்குச் செவிமடுத்தது. துணிச்சலுடன் செயல்பட்டது. நம்பகமான தலைமையை அந்நாடு கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலோ, கரோனா நெருக்கடியை ட்ரம்ப் குறைத்து மதிப்பிட்டார். அறிவியல் மீது தாக்குதல் நடத்தினார். தொடர்ந்து பொய் சொல்கிறார். நியூசிலாந்து பல உயிர்களைக் காப்பாற்றிவிட்டது. நாம் பலரை இழந்துவிட்டோம்.”
‘கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசுகளே தடுமாறிக்கொண்டிருக்கின்றன. நாம் சிறப்பாகவே செயல்படுகிறோம்’ என்று தற்காப்பு வாதங்களையே முன்வைத்துக்கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு இந்த ட்வீட்டே போதுமானது!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago