கரோனா தொற்று வேகமாகப் பரவும் நாட்களில் தேர்வுகளின் பெயரால், பள்ளிக்கூடங்களைத் திறப்பது என்கிற தமிழ்நாடு அரசின் முடிவு பெரும் எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது. இது தொடர்பில் உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன. இதுபோன்ற ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் பள்ளிக்கூடங்களை ஓர் அரசு எப்படிக் கையாள்வது? தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், கடந்த காலங்களில் பள்ளிக்கல்வித் துறையின் பெயர் பெற்ற அமைச்சர்களில் ஒருவராகச் செயலாற்றியவருமான தங்கம் தென்னரசுவிடம் பேசினேன்.
கரோனா நிர்வாகத்தில் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
எந்தத் துறையிலும் எல்லோருடனும் அரசு கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. பள்ளிக்கல்வித் துறையிலும் இதை வலியுறுத்தினோம். உடனே ஒரு நிபுணர் குழு போடுகிறோம் என்றது தமிழக அரசு. ஆனால், அந்தக் குழுவில் வெறுமனே கல்வித் துறை அதிகாரிகளும், யுனிசெப், ஐஐடி சார்பில் தலா ஒருவரும் இருந்தார்கள். பள்ளிக்கூடத்தைத் திறந்தால் யார் நேரடியாக அதில் இருப்பார்களோ அந்த மாணவர்கள், அவர்கள் சார்ந்த பெற்றோர்கள், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளையும் கேளுங்கள் என்றோம். எந்தப் பதிலும் இல்லை. இதற்கிடையில், பெற்றோர்களிடமும் கருத்துக் கேட்க வேண்டும் என்று மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கூறின. அதைப் புறந்தள்ள முடியாமல், ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும், ஒரே ஒரு பெற்றோரிடம் மட்டும் கருத்துக் கேட்டுச் சொல்லுமாறு சுற்றறிக்கை விட்டது கல்வித் துறை. ஆயிரம் பேர் படிக்கிற பள்ளியில் ஒரே ஒருவரிடம் கருத்துக் கேட்பதை, எப்படிப் பெற்றோர்களின் பங்களிப்பாகக் கருத முடியும் என்று எதிர்ப்புக் கிளம்பியது. இதன் பின்னர், இந்த நிபுணர் குழுவை விரிவுபடுத்திய தமிழக அரசு, சிபிஎஸ்சி, மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலரையும் அதில் சேர்த்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களைச் சேர்க்கவில்லை. ஒரு சாதாரண கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்துவதில்கூட ஏன் இவ்வளவு சிக்கல்? பள்ளிக்கல்வித் துறை எவ்வளவு மோசமாகச் செயல்படுகிறது என்பதற்கு நேரடி உதாரணம்தான் கரோனாவால் இவ்வளவு மோசமாகத் தமிழ்நாடு பாதிக்கப்பட்டிருக்கும் சூழலிலும் பத்து, பதினோராம் வகுப்புத் தேர்வுகளை நடத்த அது முடிவெடுத்திருப்பது.
தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்று சொல்கிறீர்கள்?
நிச்சயமாக இப்போது இல்லை. இந்த நேரத்தில் தேர்வு வைப்பது அந்த மாணவர்களின் உயிருடன் மட்டுமல்ல; அவர்களது எதிர்காலத்துடன் விளையாடுவதற்குச் சமமானது. அப்புறம் மாணவர்களின் மனநிலை தொடர்பிலும் துளி அக்கறை அற்றது. நம்முடைய பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகளை நடத்துவதற்கு முன்பு ஏன் திரும்பத் திரும்ப திருப்புதல் தேர்வுகளை நடத்துகிறோம்? அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் தெரிந்துகொள்வதற்கும், பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கு ஒரு மாணவர் தன்னைத் தயார்படுத்திக்கொள்வதற்காகவும்தான். நம்முடைய தலைமுறை எல்லாம் சந்திக்காத பேரிடரை அவர்கள் தேர்வுக் காலத்தில் சந்தித்திருக்கிறார்கள். பலர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம். குறிப்பாக, விளிம்புநிலை மாணவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கே போராடும் நிலைக்கு வந்திருப்பார்கள். பலர் வேலைக்குப் போக வேண்டிய நிலைக்கும், சிலர் குடும்பப் பொறுப்பையே சுமக்க வேண்டிய நிலைக்கும் ஆளாகியிருக்கலாம். குறிப்பாக, மலைக் கிராமங்களில் இது அதிகளவில் நடக்கிறது. எப்போதையும்விட இந்தக் காலகட்டத்தில் மிக அதிக இடப்பெயர்வு நடந்திருக்கிறது. பள்ளிகள் ஓரிடத்தில், மாணவர்கள் ஓரிடத்தில், அவர்களது புத்தகங்கள் வேறிடத்தில் என்ற நிலையில் பல ஆயிரம் மாணவர்கள் இருக்கிறார்கள். பள்ளிச் சூழலிலிருந்து சுமார் இரண்டு மாதங்கள் அவர்கள் துண்டிக்கப்பட்டுவிட்டார்கள். எனவே, சகஜநிலை திரும்பி பள்ளிகளில் அவர்களுக்குக் குறைந்தது 15 நாட்களாவது பாடம் நடத்திவிட்டுத் தேர்வு வைப்பதுதான் சரியாக இருக்கும். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஎஸ்சி பள்ளிகளுக்கே ஜூலைதான் தேர்வு; நம்முடைய மாநில வாரியப் பள்ளிகளை ஒப்பிட வசதியான பின்னணியைக் கொண்டவர்கள் அவர்கள். அப்படி இருக்கையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தியே தீர்வது என்று ஏன் இந்த அரசு துடிக்கிறது? கரோனாவும் ஊரடங்கும் சேர்த்து உண்டாக்கியிருப்பது பெரிய மானுட நெருக்கடி. நாம் முதலில் மக்களை இந்த நெருக்கடியிலிருந்து மீட்போம். தொற்றைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்த பிறகு, பள்ளிக்கூடங்களைத் திறப்பது தொடர்பில் யோசிப்போம்.
ஊரடங்கு காரணமாகப் பள்ளி வேலைநாட்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன; திறந்தே ஆக வேண்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்களே?
யார் அப்படிச் சொல்கிறார்கள்? பள்ளிக்கூடங்களைத் திறந்தால்தான் வசூல் வேட்டையை நடத்த முடியும் என்று நினைப்பவர்கள்தான் இப்போது அப்படிச் சொல்பவர்களாக இருக்க முடியும். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு இடர்ப்பாடே ஏற்பட்டதில்லையா? சென்னையில் வெள்ளம் வந்தபோது ஒரு மாதத்துக்கும் மேல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அப்போது மாணவர்கள் பாதிக்கப்படவில்லையா? திமுக அரசு கொண்டுவந்தது என்ற ஒரே காரணத்துக்காக 2011-ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு சமச்சீர் கல்வித்திட்டத்தை முடக்கியதே? நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட அச்சிட்ட புத்தகங்களைக்கூட பிள்ளைகளுக்கு வழங்காமல் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் என்று மூன்று மாதங்கள் பாடத்திட்டம், புத்தகம் எதுவுமே இல்லாமல் பள்ளி நடத்தினார்களே? அப்போது மாணவர்கள் பாதிக்கப்படவில்லையா? அந்தச் சூழல்கள் எல்லாம் தவிர்த்திருக்கப்பட வேண்டியவை – மாணவர்கள் விரும்பியும் படிக்க முடியாமல் அவதிக்குள்ளானவை. இப்போதோ உயிருக்கே ஆபத்தான பேரிடர் காலத்தில் சிக்கியிருக்கிறது மொத்த சமூகமும். ஏன் அவசரம்? ஒரு குழந்தையின் பாதுகாப்பு கருதி முடிவு எடுக்க வேண்டிய உரிமை பெற்றோருக்கு இருக்கிறது; அந்த உரிமையைத் தேர்வின் பெயரால் பறிக்கிறது அரசு. தொற்றுக்குள்ளாகிக் குழந்தைகள் உயிரிழந்தால் யார் பொறுப்பு? இதைத்தான் நீதிபதிகளும் நேற்று கேட்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள் திறப்பை இப்போது பேசுவதே அபத்தம். திரும்பச் சொல்கிறேன், கரோனா தொற்றுப் பரவல் உச்சம் தொட்டு வடியும் சூழல் முதலில் உருவாகட்டும்; பின்னர் பள்ளிக்கூடங்கள் திறப்பதைச் சிந்திப்போம். அப்போதும்கூட இந்தக் கிருமி உருவாக்கியிருக்கும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு ஏற்ப நம்முடைய பள்ளிக்கூட இயக்கத்தையே முதலில் நாம் மாற்றியமைக்கத் திட்டமிட வேண்டும். நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். நம்முடைய சத்துணவுத் திட்டத்திலும்கூட மாற்றங்கள் வேண்டும். அதன் பின்னரே பள்ளிகளைத் திறக்க வேண்டும். அதுவும் படிப்படியாகவே நடக்க வேண்டும்.
இணையவழிக் கல்வியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இணையம் வழியாகப் பெறக்கூடிய கல்வியானது, வகுப்பறையில் கற்கக்கூடிய கல்விக்குப் பெருமளவில் துணையாக நிற்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எங்களுக்கு இல்லை. அதே சமயம், முன்னேற்பாடுகள் அவசியம். இணையக் கல்வியைப் பற்றிப் பேசுகிறீர்கள். அதற்கென பாடத்திட்டம் ஏதும் இறுதிசெய்யப்பட்டிருக்கிறதா? தமிழகப் பள்ளிகளில் படிக்கிற 1.31 கோடி மாணவர்களில் 60% பேர் கிராமப்புறத்தினர். நகர்ப்புற மாணவர்களுக்குக் கிடைக்கிற இணைய வசதியைக் கிராமப்புறங்களில் கொண்டுசேர்த்திருக்கிறோமா? மடிக்கணினி, திறன்பேசி இல்லாத குடும்பங்கள், இணைய வசதி இல்லாத கிராமங்கள், மலைக்கிராமங்களுக்கு என்ன தீர்வு? எல்லா முன்னேற்பாடுகளையும் செய்யுங்கள்; அப்போதுதான் இணையக் கல்வியை ஆக்கபூர்வமானதாக மாற்ற முடியும்; இல்லாவிட்டால் பாரபட்சமானதாகிவிடும். மேலும், இணையக் கல்வி நம்முடைய பள்ளிக்கல்விக்கு உதவியாக, துணையாக இருக்கலாமே தவிர ஒருபோதும் மாற்றாக இருக்க முடியாது. இந்தப் பார்வையும் நமக்கு வேண்டும்.
சரி, பள்ளிக்கல்வித் துறை எப்படிச் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
ஒரு நல்ல நிர்வாகத்துக்கு அழகு, எந்த முடிவை அது எடுத்தாலும், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளுடனும் கலந்தாலோசித்து எடுக்க வேண்டும்; திடமான முடிவாக அது இருக்க வேண்டும். தற்போதுள்ள பள்ளிக்கல்வித் துறையின் மிகப் பெரிய பலவீனம், மேற்கண்ட இரண்டுமே இல்லை. இன்று ஒரு முடிவு, நாளை ஒரு முடிவு; அமைச்சர் ஒரு அறிவிப்பு, அதிகாரிகள் இன்னொரு அறிவிப்பு… யார் கருத்துகளுக்கும் மதிப்பு அளிப்பதில்லை. மக்களுக்கு இது எப்படியான நம்பகத்தன்மையைத் தரும்? முதலில் குழந்தைகள் எவ்வளவு மனவுளைச்சலுக்கு ஆளாவார்கள்? அரசாங்கம் ஒரு முடிவெடுத்துவிட்டது, சரியோ தவறோ அதை நடைமுறைப்படுத்தியே ஆவோம் என்பது இந்தப் பேரிடர்க் காலத்தில் பெரும் சிக்கலில் ஆழ்த்திவிடும். பள்ளிக்கல்வி விஷயத்தில் அரசு எடுக்கக்கூடிய ஒரு முடிவானது, பல லட்சக்கணக்கான மாணவர்களை, அவர்களது பெற்றோர்களை, ஆசிரியர்களை, முக்கியமாகப் பல தலைமுறைகளைப் பாதிக்கக் கூடிய முடிவு. ஆகையால், முடிவுகளை எடுக்கையில் கொஞ்சம் கூடுதல் கவனத்தையும், மக்கள் மீதான கரிசனத்தையும் கொடுங்கள் என்கிறேன்.
- கே.கே.மகேஷ், தொடர்புக்கு: magesh.kk@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago