தாமிரபரணி: நெல்லை, தூத்துக்குடியின் உயிர்நாடி

By டி.எல்.சஞ்சீவி குமார்

நதிமூலம், ரிஷிமூலம் கேட்கக் கூடாது என்பார்கள். ஆறுகள் மற்றும் ரிஷிகளின் ‘மூலம்’ காண்பது சிரமம் என்பதே அதன் அர்த்தம். அதேசமயம் நதிகளின் வரலாற்றை ஓரளவு அறிய முடியும். வரலாறு, இலக்கியம் மற்றும் புராணங்கள் இவை எல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நதி எப்படி இருந்தது என்பதை அறிந்துக் கொள்ள உதவுகின்றன.

பெயர் காரணம்

தாமிரபரணி ஆற்றை ‘தாமிரவருணி’ என்றும் அழைக்கிறார்கள். தாராளமாக அழைக்கலாம். தவறில்லை. வருண பகவானைபோல பொழிவதால் ‘வருணி’ என்று வர்ணிக்கிறார்கள். இதுவே ‘தாமிரவருணி’க்கான பெயர்க் காரணம். ஆனால், வியாசரின் மகாபாரதத்திலும், வால்மீகியின் ராமாயணத்திலும், காளி தாசரின் ரகுவம்சத்திலும் இந்த நதி ‘தாம்பிரபரணி’, ‘தாமிரபருணி’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்று ஆய்வாளர் பிஷப் கால்டுவெல், “கி.மு. மூன்றாம் நூற் றாண்டுக்கு முன் இலங்கை தீவு ‘தம்பர பன்னி’, ‘தாப்ர பன்னெ’, ‘தாம்ப பன்னி’ என்றெல்லாம் அழைக்கப்பட்டது. இது அசோகரின் கல்வெட்டிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. இலங்கையிலிருந்து இங்கு புலம் பெயர்ந்தவர்கள் அந்தப் பெயரி லேயே ஆற்றையும் அழைத்திருக்கலாம். அதுவே பிற்காலத்தில் தாமிரபரணி ஆகியிருக்கலாம்” என்கிறார்.

வரலாற்று ஆய்வாளர் ஸ்டீபன் தொகுத்த ‘பண்பாடு வேர்களைத் தேடி’ வரலாற்றுப் புத்தகத்தில், “குமரியைக் கடல் கொள்ளும் முன்பு மேற்குத் தொடர்ச்சி மலை இலங்கை வரை நீண்டிருந்தது. அதிலிருந்த பொதிகை மலைதான் உலகில் முதலில் தோன்றிய மலை. முதல் உயிர் தோன்றியதும் பொதிகையில்தான். தற்போதும் இலங்கையில் உள்ள ஆதாம் மலையில் முதல் மனிதனின் பாதம் இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.” என்று தாமிரபரணிக்கும் இலங்கைக்குமான தொடர்புகளை குறிப்பிட்டுள்ளார்.

இலக்கியங்களில் தாமிரபரணி

சங்க இலக்கியங்கள் தாமிரபரணியை ‘தன் பொருநை’, ‘பொருநை’ என்கின்றன. தாமிரபரணி நதிக்கரையில் பிறந்த நம்மாழ்வார் தனது திருவாய்மொழியில் தாமிரபரணியை ‘தன்பொருநல்’, ‘வண்பொருநல்’ என்கிறார். சிலப்பதி காரம் சேரனை,‘பொருநை பொறையன்’ என்று போற்றுகிறது. பெரிய புராணத்தில் சேக்கிழார் பாண்டிய நாட்டை ‘தன்பொருநைப்புனல் நாடு’ என்கிறார்.

‘பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திருநதி’ என்கிறார் கம்பர். ‘அழகர் கருணைப்போல பொருநை பெருகிவரும் அழகைப் பாரும் பள்ளீரே’ என்கிறது முக்கூடற்பள்ளு. ‘தமிழ் கண்டது வைகையும் பொருநையும்’ என்கிறார் பாரதியார். முதல் ராஜராஜன் காலமான 1013-ம் வருடம் வெட்டப்பட்ட கல்வெட்டு, தாமிரபரணியில் சிற்றாறு (சித்ரா நதி) கலக்கும் இடத்தில் தாமிர பரணியை ‘தன் பொருந்தம்’ என்று குறிப் பிடுகிறது. தாமிரம் என்றால் செம்பு. தாமி ரக் கனிமம் கலந்த தண்ணீர் என்பதால் தாமிரபரணி பெயர் வந்திருக்கலாம்.

நெல்லை, தூத்துகுடியில் தாமிரபரணி

தாமிரபரணி நதியில் எட்டு நீர்த்தேக் கங்கள், அவற்றில் 11 கால்வாய்கள் இருக்கின்றன. மலையில் ஏழு துணை ஆறுகளும், சமவெளியில் ஐந்து துணை ஆறுகளும் மொத்தம் 12 துணை ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன. தோன்றுமிடம் தொடங்கி தூத்துகுடி மாவட்டம், புன்னைக்காயல் வரை 120 கி.மீ. பயணித்து மன்னார் வளகுடாவில் கலக்கிறது.

தாமிரபரணி நதியின் வடிநிலத்தில் சராசரி ஆண்டு மழையளவு 1082 மி.மீ. நதியின் மொத்த வடிநிலப்பரப்பு 5,969 சதுர கி.மீ. இதில் 5,317 கி.மீ. (89%) திருநெல்வேலி மாவட்டத்திலும் 652 சதுர கி.மீ. (11%) தூத்துக்குடி மாவட்டத்திலும் இருக்கிறது. திருநெல் வேலி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப் பான 6,780 சதுர கி.மீட்டரில் தாமிரபரணி யின் வடிநிலப்பரப்பு மட்டும் 78 %. தூத் துக்குடி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பான 4,649 சதுர கி.மீட்டரில் நதியின் வடிநிலப்பரப்பு 14 %. இந்த வடிநிலப்பகுதிகளில் இருக்கும் கிணறு களின் எண்ணிக்கை 71,064. குளங்களின் எண்ணிக்கை 1,300. குளங்களின் நீர் கொள்ளளவு 196 மில்லியன் கன மீட்டர்.

தாமிரபரணி நதியால் திருநெல்வேலி யில் 40,000 ஏக்கர், தூத்துக்குடியில் 46,107 ஏக்கர் என 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அக்டோபர் 15-ம் தேதி முதல் மார்ச் இறுதி வரை வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் பயிரிடும் முறையை பிசான சாகுபடி என்கிறார்கள். ஜூன் 15-ம் தேதி முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரை தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் பயிரிடும் முறையை கார் சாகுபடி என்கிறார்கள். கார் சாகுபடியில் 86 % நெல் பயிரிடுகிறார்கள். தவிர, நதியின் கடைப் பகுதியான மருதூர் மற்றும் வைகுண்டம் அணைக்கட்டுகளின் கீழ் பகுதிகளில் இரு போக பாசனப் பகுதியில் பழந்தொழி என்கிற சிறப்பு சாகுபடி தண்ணீர் இருப்பைப் பொறுத்து ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும்.

நதியின் மொத்த நீர் எவ்வளவு?

நதியின் வடிநிலப்பகுதியின் மொத்த நிலத்தடி நீர் இருப்பு 744.19 மில்லியன் கன மீட்டர். நீர்ப் பிடிப்பு பகுதியில் மழை மூலம் கிடைக்கும் தண்ணீர் அளவு 1,375.36 மில்லியன் கன மீட்டர். ஆக, மொத்த நீர் ஆதாரம் 2119.55 மில்லியன் கன மீட்டர். இதில் விவசாயத்துக்கு 2,645.00 மில்லியன் கன மீட்டர்; வீட்டு உபயோகத்துக்கு 48.72 மில்லியன் கன மீட்டர்; தொழிற்சாலை உபயோகத்துக்கு 32.98 மில்லியன் கன மீட்டர்; கால்நடை, மீன் வளர்ப்பு மற்றும் இதர உபயோகங்களுக்கு 21.32 மில்லியன் கன மீட்டர் என மொத்தம் 2,748.02 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

ஆக, மொத்த நீர் பற்றாக்குறை 628.47 மில்லியன் கன மீட்டர். இந்தப் பற்றாக்குறையை நதியை மேலும் சிறப்பாக பாதுகாப்பது, அணைகளை தூர் வாருவது, போன்ற நீர் மேலாண்மைத் திட்டங்கள் மூலம் சரி செய்து, உபரி நீரையும் பெற முடியும்.

அருமருந்தான ஆற்று நீர்

பனித்துளி தொடங்கி மழை நீர், கிணற்று நீர், ஆற்று நீர்,கடல் நீர் என ஒவ்வொரு நீருக்கும் பிரத்தியேக குணம் இருக்கிறது என்கிறது சித்த மருத்துவ நூலான ‘நோயில்லா நெறி மற்றும் பதார்த்த குண சிந்தாமணி’. அது தாமிரவருணியின் நீரை,

“தாம்பிரவாற் றுப்புனலால் சுரமும் பித்துவிழித்

தும்பிரமுட் காய்ச்சல் சுவாச நோய் - சோம்பிமிகக்

கக்குகய மென்புருக்கி கைகா லெரிவடனே

மிக்குறுதா கங்களும்போம் விள்”

- என்று குறிப்பிடுகிறது.

தாமிரவருணியின் நீர், எல்லாவகைக் காய்ச்சல், பித்ததோஷம், கண் புகைச்சல், உள்சுரம், சுவாச ரோகம், கக்குவான், என்புருக்கி, கை, கால் எரிச்சல், மிகுந்த நீர் வேட்கை இவைகளை தீர்க்கும் என்பது அதன் பொருள்.

(தவழ்வாள் தாமிரபரணி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்