“என் கண்முன்னே நிகழ்ந்த கொடூரம் அது. நேற்று இரவு 8 மணிக்கு அந்த மனிதர் உயிரோடு இருந்தார். அவர் துடிக்கத் துடிக்கக் கொல்லப்படுவதை நான் பார்த்தேன். அந்த வீடியோவை எடுத்துப் பதிவிட்டது நான்தான். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். என்ன நினைப்பது? இது மிக மோசமானது ப்ரோ…” என்று கண்ணீர் மல்கச் சொல்கிறார் 17 வயது பெண் டார்னெல்லா ஃப்ரேஸியர்.
அமெரிக்காவின் மின்னசொட்டா மாநிலத்தின் மின்னியாபோலிஸ் நகரில், போலீஸ்காரர் ஒருவரால் குரல்வளை நசுக்கப்பட்டு, “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்று கதறிக் கதறி உயிர்விட்ட கறுப்பின மனிதர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம், அமெரிக்காவை உலுக்கியிருக்கிறது. கடந்த 4 நாட்களாக மின்னியாபோலிஸ் நகரில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. கறுப்பின மக்களின் கோபம் பல இடங்களில் வன்முறையாக வடிவமெடுத்திருக்கிறது.
காவு வாங்கிய கள்ளநோட்டுப் புகார்
அமெரிக்காவில் ‘கோவிட்-19’ பெருந்தொற்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகிக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. நடந்தது இதுதான்: மே 25 இரவு 8 மணி அளவில், மின்னியாபோலிஸ் நகரில் உள்ள ’கப் ஃபுட்ஸ்’ எனும் பல்பொருள் அங்காடிக்குச் சென்றிருந்த ஃப்ளாய்டு, ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கியிருக்கிறார். அதற்காக அவர் கொடுத்த 20 டாலர் நோட்டு கள்ளநோட்டு என்று அந்த அங்காடியின் சிப்பந்திகள் கருதியிருக்கிறார்கள். அது குறித்து உடனே போலீஸுக்குத் தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்துக்குப் போலீஸ் வந்தபோது, ஃப்ளாய்டு அந்த அங்காடிக்கு வெளியில்தான் இருந்திருக்கிறார்.
ஆனால், அவர் தனது காரில் அமர்ந்திருந்ததாகவும், காரைவிட்டு வெளியே வருமாறு உத்தரவிட்டபோது அதை ஏற்க மறுத்துவிட்டார் என்றும் காரணம் சொல்கிறார்கள் போலீஸ்காரர்கள். ஆனால், அருகில் இருந்தவர்கள் எடுத்த வீடியோ ஆதாரங்கள் உண்மையைப் பட்டவர்த்தனமாக்கிவிட்டன.
பட்டப் பகலில் நடந்த படுகொலை
கைவிலங்கு மாட்டப்படுவதற்குக்கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக நின்றிருந்தவரைக் கீழே தள்ளி, அவரது கழுத்தின் மீது தனது முழங்காலை அழுத்தியபடி நின்றிருக்கிறார் டெரெக் சாவின் எனும் காவலர். அருகில் இருந்தவர்கள் அதை வேடிக்கை பார்ப்பதையும், படமெடுப்பதையும் தடுக்கும் வகையில் அந்தக் காட்சியை மறைத்தவாறு டோ தாவோ, தாமஸ் லேன், அலெக்ஸாண்டர் குயெங் ஆகிய மூன்று காவலர்கள் நின்றிருந்தனர். நால்வரும் வெள்ளையினத்தவர்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
உடல்ரீதியாக முற்றிலும் முடக்கப்பட்டிருந்த ஃப்ளாய்டு, “என்னால் சுவாசிக்க முடியவில்லை. என் வயிறு எரிகிறது. கழுத்து வலிக்கிறது. எல்லாமே வலிக்கிறது. அம்மா” என்று கதறியிருக்கிறார். “என்னைக் கொன்றுவிடாதீர்கள்” என்று மன்றாடியிருக்கிறார். அருகில் இருந்தவர்களும் அவரை விடுவித்து காரில் ஏற்றுமாறு கேட்டிருக்கிறார்கள். “அவர் அசைவற்றுக் கிடக்கிறார். அவரது நாடித் துடிப்பைப் பரிசோதனை செய்யுங்கள்” என்றும் கெஞ்சியிருக்கிறார்கள். ஆனால், காவலர்கள் நால்வரும் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை.
ஆம்புலன்ஸ் வந்து ஃப்ளாய்டை ஏற்றிச்செல்லும் நிமிடம் வரை, அவர் கழுத்தில் மீது முழங்காலை வைத்து அழுத்திக்கொண்டே இருந்தார் காவலர் சாவின். மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்ட ஃப்ளாய்டு ஏற்கெனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் அறிவித்துவிட்டனர். ஒரு கறுப்பின மனிதரின் வாழ்க்கை வெள்ளையினக் காவலர்களின் நிறவெறியால் இப்படியாக முடிவுக்கு வந்துவிட்டது.
இந்தச் சம்பவத்தால் ஃப்ளாய்டின் குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கறுப்பினச் சமூகமும் நொறுங்கிப்போயிருக்கிறது. “பட்டப்பகலில் என் அண்ணனைக் கொலை செய்துவிட்டார்கள்” என்று குமுறியிருக்கிறார் அவரது சகோதரர் ஃபிலினாய்ஸ் ஃப்ளாய்டு. “கறுப்பின மக்கள் கொல்லப்படுவதைப் பார்த்துப் பார்த்துக் களைப்படைந்துவிட்டேன்” என்று சொல்லியிருக்கும் ஃபிலினாய்ஸ், வன்முறைப் போராட்டங்களைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
முற்றுப்பெறாத தொடர்கதை
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனவெறிக் குற்றங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை என்பதற்கு இன்னொரு உதாரணமாகி யிருக்கிறது ஃப்ளாய்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.
காந்தியைப் போற்றிய மார்ட்டின் லூதர் கிங் முதல், அதிரடியான பேச்சுகளுக்குச் சொந்தக்காரரான மால்கம் எக்ஸ் வரை எத்தனையோ கறுப்பினத் தலைவர்கள் போராடிப் பல உரிமைகளைப் பெற்றுத் தந்திருந்தாலும், அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் மீதான வெறுப்புணர்வு இன்னமும் முற்றிலும் மறைந்துவிடவில்லை. வசிப்பிடங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள் என்று எல்லா இடங்களிலும் கறுப்பினத்தவர்கள் ஏதேனும் ஒருவகையில் பாரபட்சமாக நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன.
இனம், மதம், பாலினம் என்று பல்வேறு வகைகளில் நடக்கும் வெறுப்புக் குற்றங்களை ஆராயும்போது, கறுப்பினத்தவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர முடியும். 2018-ல் மொத்தம் 5,155 வெறுப்புக் குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றில், 2,426 குற்றங்கள் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டவை.
கறுப்பினத்தவர்களின் அவல வாழ்க்கை
2012-ல் ட்ரெய்வான் மார்ட்டின் எனும் கறுப்பின இளைஞரைச் சுட்டுக்கொன்ற ஜார்ஜ் ஸிம்மர்மேன் எனும் வெள்ளையின மனிதர் (இவர் போலீஸ்காரர் அல்ல!), அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து #BlackLivesMatter எனும் ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. பின்னர் அது ஓர் இயக்கமாகவும் உருவெடுத்தது. 2014-ல் ஃபெர்குஸன் நகரில், 18 வயதே ஆன மைக்கேல் பிரவுன் எனும் கறுப்பின இளைஞர் ஒரு போலீஸ்காரரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதையடுத்து, காவலர்களால் கறுப்பினத்தவர்கள் கொல்லப்படும் சம்பவம் குறித்துப் பெரிய அளவில் விவாதங்கள் எழுந்தன. காவலர்கள் தங்கள் உடலில், கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 2015-ம் ஆண்டுவாக்கிலேயே 95 சதவீதக் காவலர்கள், தங்கள் உடல்களில் கேமராவைப் பொருத்திக்கொண்டனர். எனினும், அதனால் பெரிய மாற்றம் வந்துவிடவில்லை.
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 900 முதல் 1,000 பேர் வரை, போலீஸ்காரர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இப்படிப் போலீஸாரால் கொல்லப்படுபவர்களில், வெள்ளையினத்தவர்களை ஒப்பிட கறுப்பினத்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதுபோன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் வெள்ளையினக் காவலர்களில் பெரும்பாலானோர் குற்றமற்றவர்களாக வழக்கிலிருந்து வெளிவந்துவிடுகிறார்கள். அதேசமயம், இதுபோன்ற வழக்குகளில் தொடர்புடைய கறுப்பினக் காவலர்களுக்குத் தண்டனை கிடைத்துவிடுகிறது.
2017-ல், இதே மின்னியாபோலிஸ் நகரில் ஆஸ்திரேலியப் பெண்மணியைச் சுட்டுக்கொன்றதாக முகமது நூர் எனும் கறுப்பின போலீஸ்காரருக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஆனால், அது வேண்டுமென்றே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அல்ல; தற்காப்புக்காகச் சுட வேண்டிவந்தது என்று முகமது முன்வைத்த வாதங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவே இல்லை.
காலம் காலமாகத் தொடரும் வெறுப்பு
நியூஜெர்ஸியின் கேய்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, குற்றவியல் நீதித் துறைப் பேராசிரியர் ‘தி கான்வெர்சேஷன்’ இதழில் எழுதியிருக்கும் கட்டுரையில், ‘அமெரிக்காவின் காவல் துறையினரின் வரலாறு என்பது அடிமைகளைக் கண்காணிக்கும் பணியில் இருந்தவர்களிலிருந்து தொடங்குகிறது. அடிமை முறை தொடர வேண்டும் என்று விரும்பிய தென் மாநிலங்களில் கறுப்பின அடிமைகள் தப்பிச்செல்லாமல் தடுக்க வெள்ளையினக் குழுக்கள் செயல்பட்டன. வட மாநிலங்களிலும், அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஆபத்தான மனிதர்களைக் கண்காணிக்கும் பணியில் பல குழுக்கள் செயல்பட்டன. அந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்களில் பலர் கறுப்பினத்தவர்கள்தான்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆக, அமெரிக்காவில் கண்காணிப்பு, காவல் அமைப்பு என்பதன் அடிநாதமாக இன்னமும் இனவெறி இருக்கிறது என்பது அவரது வாதம். அதனால்தான், காவல் துறையினரிடமிருந்து இனவெறி உணர்வை அவ்வளவு எளிதில் அகற்ற முடியவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பின்குறிப்பு
1. ஃப்ளாய்டின் மரணத்துக்குக் காரணமான காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
2. ஃப்ளாய்டு கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தை வீடியோவாக வெளியிட்ட டார்னெல்லா ஃப்ரேஸியர் மீது இணையத்தில் வெறுப்புத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
3. எந்த ஒரு பிரச்சினையையும் தனது ‘பாணி’யில் அணுகும் அதிபர் ட்ரம்ப், மின்னியாபோலிஸ் நகரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, ‘லூட்டிங் (கொள்ளை) நடக்கும்போது ஷூட்டிங் (துப்பாக்கிச் சூடு) தொடங்கும்’ என்று ட்வீட் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ட்வீட்டை ட்விட்டர் நிறுவனம் நீக்கிவிட்டது அந்தப் பரபரப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.
ட்ரம்ப்பின் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர் இனவெறி கொண்ட வெள்ளையர்கள் என்பது இந்தச் செய்திகளின் பின்னணியுடன் பொருத்திப் பார்க்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago