ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிற நாள்தான் என்றாலும், உலக செவிலியர் நாளான மே 12 இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக முக்கியத்துவத்துடன் கொண்டாடப்பட்டது. நவீன செவிலிப் பணியின் முன்னோடியான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளாக மட்டுமே பெரும்பாலும் நினைவுகூரப்பட்டுவந்த இந்நாள், கரோனாவின் கோரத்தாண்டவத்தால் நிகழ்காலச் செவிலியரின் பணியைப் பற்றியும் மக்களுக்கு நினைவூட்டியது. செவிலியரின் சேவையைப் பாராட்டும்விதமாக இந்த ஆண்டைச் செவிலியர் ஆண்டாக அனுசரிக்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
கரோனாவுக்கு எதிரான களப்பணிகளில் முழு வீச்சுடன் செயல்பட்டுவரும் மருத்துவப் பணியாளர்களையும் தூய்மைப் பணியாளர்களையும் கவுரவிக்கும் விதமாகக் கரவொலி எழுப்புமாறு பிரதமரும் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக விமானங்களின் மூலம் மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் துப்புரவுத் தொழிலாளர்களுக்குப் பாதபூஜை செய்வதும் அரங்கேறியது.
உணர்வுவயப்பட்ட இந்தச் செயல்கள் அனைத்தும் தங்களின் துயரைச் சிறிதும் போக்கவில்லை என்கின்றனர் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றிவரும் செவிலியர். கோடிகளில் செலவழித்து மலர் தூவுவதைவிடவும் தங்கள் அடிப்படை உரிமையான நியாயமான ஊதியத்தை வழங்கினாலே போதும் என்பதே அவர்களது கோரிக்கை.
நிறைவேறாத வாக்குறுதி
தமிழகத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுப் பணியில் இருக்கும் செவிலியருக்குத் தொகுப்பூதிய அடிப்படையில்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இரண்டாண்டுகளுக்குப் பிறகு பணி நியமனம் வழங்கப்படும்; நிரந்தர ஊழியர்களுக்கு நிகரான ஊதியமும் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும் தங்களுக்குக் குறைந்தபட்ச ஊதியமே வழங்கப்படுகிறது என அவர்கள் வேதனைப்படுகின்றனர். இடையில் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி 2017-ல் அவர்கள் முன்னெடுத்த உள்ளிருப்புப் போராட்டத்துக்கும் எந்தப் பலனும் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் தங்கள் கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்துவருகின்றனர். தமிழ்நாடு எம்.ஆர்.பி.செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் மாநிலச் செயற்குழு எடுத்திருக்கும் முடிவின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் பணிபுரியும் எம்.ஆர்.பி. ஒப்பந்தச் செவிலியர் மே 25 முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிகின்றனர். இது மே 30 வரை நீடிக்கும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வேதனை தரும் ஊதியப் பாகுபாடு
“எம்.ஆர்.பி. மூலம் ஒப்பந்த ஊதிய அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் 10,000 செவிலியரில் இதுவரை இரண்டாயிரத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே நிரந்தர ஊழியர்கள் பெறுகிற ஊதியத்தைப் பெறுகிறார்கள். ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் 14,000 ரூபாயைத்தான் ஊதியமாகப் பெறுகிறோம். ஆனால், நிரந்தர ஊழியர்களுக்கு நிகரான பணிகளைத்தான் நாங்களும் செய்கிறோம். சம வேலை, சம ஊதியம் என்கிற கொள்கைக்கு முரணாக நடக்கும் பாகுபாட்டைக் களைய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட அரசு எங்கள் பணியை நிரந்தரப்படுத்தவில்லை; நிரந்தர ஊழியர்களுக்கு நிகரான ஊதியத்தையும் வழங்கவில்லை. இந்தக் கரோனா காலத்தில் எங்களின் வேலை எவ்வளவு நெருக்கடியானது எனத் தெரிந்தும் ஊதியத்தில் எந்த மாற்றமும் இல்லாதது வேதனையாக இருக்கிறது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒப்பந்தச் செவிலி ஒருவர்.
அரசு செவிசாய்க்க வேண்டும்
கரோனா சிகிச்சையில் களம் காணும் மருத்துவர்களும் செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களும் அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகிவரும் நிலையில் மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியரின் பணி நெருக்கடி குறித்தும் அவர் தன் வேதனையைப் பதிவுசெய்கிறார்.
“கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கான தனி வார்டுகளில் பணிபுரிகிற செவிலியர் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தற்காப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க முடியும். மகப்பேறு மருத்துவமனைகளில் அப்படிச் செயல்பட முடியாது. வெளி நோயாளிப் பிரிவு, உள் நோயாளிப் பிரிவு, பிரசவம், பிரசவத்துக்குப் பிந்தைய பொதுவான வார்டு எனப் பல நிலைகளிலும் கர்ப்பிணிகளோடு நேரடித் தொடர்பில் இருக்க வேண்டிய கட்டாயம் செவிலியருக்கு உண்டு. மருத்துவமனைக்கு வருகிற கர்ப்பிணியின் கரோனா பரிசோதனை முடிவு தெரியும்வரைக்கும் அவருக்குச் சிகிச்சை அளிக்காமல் தனிமைப்படுத்திவைக்க முடியாதல்லவா? இப்படியொரு நெருக்கடியான பணிச்சூழலின்போதுகூட எங்கள் ஊதியக் குறைபாட்டுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் எங்களுக்கு எப்போது விடியும்?” என்கிறார் அவர்.
பாதிக்கப்படும் பணிச்சூழல்
ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியரும் நிரந்தர ஊழியர்களைப் போலவே ஐந்து நாள் வேலை பிறகு ஏழு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் என்று கரோனா சிகிச்சையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த நிலையிலும் ஊதியப் பாகுபாடு தொடர்வது சரியல்ல என்கிறார் மருத்துவப் பணியாளருக்கான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருத்துவர் சாந்தி.
“ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர், இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளிக்கப்பட்டது. பணி நிரந்தரமும் செய்யப்படவில்லை, ஊதிய உயர்வும் இல்லை. ஏழாம் ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி எந்த வேலையாக இருந்தாலும் குறைந்தபட்சம் 18 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட வேண்டும். அதுகூட இந்தச் செவிலியர் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருக்கும் ஊதிய அடிப்படையில்கூட இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. நம் அண்டை மாநிலமான கேரளத்தில் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியருக்குக்கூடக் குறைந்தபட்ச ஊதியமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இங்கே அதற்குக்கூட வழியில்லை” என்று சுட்டிக்காட்டும் சாந்தி, ஒரே விதமான வேலையைச் செய்கிறவர்களுக்கு ஊதியத்தில் காட்டப்படும் பாகுபாடு தொழிற்சங்க விதிகளுக்கு எதிரானது என்கிறார்.
துயர் துடைப்பதே முக்கியம்
“நிரந்தரப் பணியில் இருக்கிறவர்களுக்கு கரோனா காலத்தில் அளிக்கப்படும் சிறப்பு ஊதியம்கூட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியருக்கு இல்லை. விடுப்பில்கூடப் பாகுபாடுதான். இது பணிச்சூழலைக் கெடுப்பதுடன் செவிலியருக்கு மனரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும். இப்படியொரு சூழலில்தான் அரசின் கவனத்துக்குத் தங்கள் கோரிக்கையை எடுத்துச் செல்லும்விதமாக கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்துவருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் இருக்கும் செவிலியரைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் காப்பீடு உள்ளிட்ட சலுகைகள் அனைத்தும் இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். விமானத்தில் இருந்து பூமாரி பொழிவதும் பாதபூஜை செய்வதும் இவர்களுக்குத் தேவையில்லை. அதற்குச் செய்த செலவில் போதுமான பாதுகாப்புக் கவசங்களை வாங்கியிருக்கலாம். அதனால், திசை திருப்பும் வேலைகளைவிட செவிலியரின் துயர் துடைக்கும் பணியே இப்போதைய தேவை” என்கிறார் மருத்துவர் சாந்தி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago