மும்பை மத்திய சிறையின் கண்காணிப்பாளர், கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி, சிறையில் கோவிட் - 19 தொற்று ஏற்பட்டால் அங்கு நிலவும் இடநெருக்கடியில் அதைச் சமாளிக்கவே முடியாது என்று எச்சரித்தார். அவரது பயம் உண்மையாகிவிட்டது. மும்பை மத்திய சிறை வளாகத்துக்குள் கோவிட் தொற்று நுழைந்துவிட்டது.
25 அடி உயரம் கொண்ட உயரமான சுவர்களுக்குள் இப்போது 2 ஆயிரத்து ஐநூறு கைதிகள் உள்ளனர். அவர்களில் 184 பேரை கோவிட் - 19 இதுவரை தொற்றியுள்ளது. நோயாளிகளைத் தனிமைப்படுத்துவது, உடல் ரீதியான இடைவெளியைப் பேணுவது போன்ற விஷயங்களெல்லாம் இந்த இடத்தில் சாத்தியமே இல்லை. 1926-ம் ஆண்டில் கட்டப்பட்ட மும்பை மத்திய சிறை, 800 கைதிகளை மட்டுமே அடைத்து வைப்பதற்கான கொள்ளளவைக் கொண்டது.
50 ஆயிரம் பேரை கரோனா தொற்று பாதித்திருக்கும் மாநிலமொன்றின் சிறையில் இந்த எண்ணிக்கை சிறியதாகத் தெரியலாம். ஆனால் நெடுங்காலமாகத் தள்ளிப்போடப்பட்டுக் கொண்டிருக்கும் சிறை, நீதித்துறை சீர்திருத்தங்களை இந்தச் சூழநிலை மிகக் கூர்மையாகக் கவனப்படுத்துகிறது.
நீதித்துறை, சட்டமியற்றுதல் சார்ந்த விருப்புகள் சிறை சீர்திருத்தம் சார்ந்து மிகவும் குறைவாக உள்ளதே காரணம். விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களுக்கு இன்னமும் பிணை வழங்கப்படுவதில் தயக்கம் நீடிப்பதாலேயே சிறைகள் கூடுதலான ஆள்நெருக்கடியுடன் திகழ்கின்றன. இந்தப் பின்னணியில்தான் கரோனோ போன்ற நோய்களுக்குச் சாதகமான இடமாக சிறைகள் மாறிவிடுகின்றன.
சிறை சீர்திருத்தம் சார்ந்த எண்ணங்கள் 1835-ல் வடிவெடுக்கத் தொடங்கின. தாமஸ் பாபிங்க்டன் மெக்காலே என்ற பிரபு, சட்டமியற்றல் குழுவின் பிரதிநிதியாக இருந்து இந்தியச் சிறைகளில் நிலவும் மோசமான மனிதவிரோதச் சூழ்நிலைகளை முதலில் பேசத் தொடங்கினார். அவரது பரிந்துரைகளின் பேரில் வில்லியம் பெண்டிங் பிரபுவால் முதல் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. மெக்காலே பிரபு சொன்ன சீர்திருத்தங்களின் அடிப்படையில் 1894-ம் ஆண்டு சிறைகள் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
சர் அலெக்சாண்ட்ர கார்டியூ தலைமையில் 1919-20-ல் அமைக்கப்பட்ட சிறைகள் கமிட்டிதான், சிறைக்கைதிகளை சீர்திருத்தும் நோக்கத்தை வலியுறுத்தியது. அத்துடன் உடல் ரீதியான தண்டனைகளைத் தவிர்க்க வேண்டுமென்று பேசப்பட்டதும் அப்போதுதான். 1980 முதல் 1983 வரை செயல்பட்ட அனைத்திந்திய சிறை சீர்திருத்த கமிட்டி, சிறைக்கைதிகளின் உரிமைகள் என்னவென்று பரிந்துரைத்தது.
அப்போதிருந்து மாநில ரீதியாகவும் மத்திய அரசு அமைத்த குழுக்களும் தொடர்ந்து சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்து வருகின்றன. கரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்ததும் உச்ச நீதிமன்றம் தலையிட்டு கைதிகளைச் சிறைகளிலிருந்து விடுவிப்பதற்கு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும்.
“உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. உயர் அதிகாரம் கொண்ட கமிட்டிகளை மாநில அரசுகள் அமைத்து எப்படியான கைதிகளை விடுவிக்கலாம் என்ற ஆலோசனையைக் கூறுவதற்கு வழிகாட்டியுள்ளது" என்கிறார் காமன்வெல்த் மனித உரிமைகள் அமைப்பின் சிறை சீர்திருத்தத் திட்டத்தின் தலைவரான மதுரிமா தனுகா. அப்படி அமைக்கப்பட்ட கமிட்டிகளுக்கு கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரமும் கிடையாது. வழக்கு வாரியாக ஆராய்ந்து நீதிமன்றங்கள் தான் அந்த முடிவை எடுக்க வேண்டுமென்கிறார். மகாராஷ்டிரத்தில் அமைக்கப்பட்ட உயர் அதிகாரக் கமிட்டியில் உயர் நீதிமன்ற நீதிபதி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சிறைத்துறை தலைமை இயக்குனர் ஆகியோர் உள்ளனர். இந்தக் கமிட்டியின் மூலம் 8 ஆயிரத்து 381 கைதிகள் விடுதலைக்கு வழி உருவாகியுளது. ஆனால், மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் இந்த எண்ணிக்கையில் மட்டும் கைதிகளை விடுதலை செய்வது போதாது என்கின்றனர்.
இந்திய நீதிமன்றங்களைப் பொறுத்தவரை பிணை கிடைப்பதற்கு நீதிமன்றங்களில் ஏற்கெனவே காலதாமதம் ஆகும். கரோனா காலத்தில் முழுமையாக நீதிமன்றங்கள் செயல்படாத நிலையில் தாமதம் அதிகமாகிறது. அதனால், விசாரணைக் கைதிகளை இடைக்காலப் பிணையில் அனுப்பிவிட்டு, குறிப்பிட்ட பருவம் முடிவடையும்போது, அவர்களை மீண்டும் சிறையில் எடுக்கலாம் என்கிறார் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா.
“பிணையை மறுக்கும்போது நீதிபதிகள் தீர்க்கமாக சிந்தித்துப் பார்ப்பதில்லை. பிணை கொடுப்பதென்பதே முறை. சிறை என்பது விதிவிலக்காகவே இருக்க வேண்டும்" என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணா. கரோனா காலத்திலும் பிணை மனுக்களுக்கான விசாரணை வரும்போது பிணை மறுக்கப்படுவது சங்கடமானதும் தீவிரமான பிரச்சினையும் ஆகும் என்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் தப்பித்துவிடுவார் அல்லது சாட்சியங்களைக் கலைக்க முயல்வார் என்ற சந்தேகம் இருந்தால் மட்டுமே பிணை மறுக்கப்பட வேண்டுமென்கிறார்.
இந்திய சிறைகளில் இருப்பவர்களில் 67 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள் தான். இதுபோன்ற எண்ணிக்கையில் எந்த நாட்டிலும் விசாரணைக் கைதிகள் சிறையில் இல்லை என்கிறார் நீதிபதி பாலகிருஷ்ணன்.
ஒருவரை சிறையில் வைத்திருக்கும்போது உண்டாகும் செலவுகளும் சாதாரணம் அல்ல. இந்தியாவில் உள்ள ஆயிரத்து 339 சிறைகளில் 4 லட்சத்து 916 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நிர்வகிப்பதற்காக 60 ஆயிரம் சிறை ஊழியர்கள் உள்ளனர். சிறை நிர்வாகத்துக்கு ஒரு வருடத்துக்கு ஆகும் செலவு 6 ஆயிரம் கோடி ரூபாயாகும்.
விசாரணைக் கைதிகள் நீண்டகாலமாகச் சிறையில் இருப்பது தொடர்பில், சிறையில் இருக்கும் குற்றவாளிகள் தொடர்பிலான வழக்குகளுக்கு நீதிமன்றங்கள் முதலுரிமை தரவேண்டும். அந்த வழக்குகளை நான்கு மாதங்களில் முடிவு செய்யவேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் இருக்கும் நிலையில் வழக்குகளைத் தள்ளிப் போட்டுக் கொண்டே செல்வதையும் அவசியமான காரணமின்றி அனுமதிக்கவே கூடாது.
குற்றம், தண்டனை மற்றும் குற்றவாளியை நீதிமன்றம் எப்படிப் பார்க்கிறது என்ற பார்வையின் அடிப்படையிலேயே பிணை வழங்கப்படுவது தொடர்பிலான தயக்கங்கள் நீதிபதிகளிடம் செயல்படுகின்றன.
குற்றம் சாட்டப்பட்டவரை தேவையே இல்லாமல் சிறையில் அடைத்து வைத்திருப்பது சமூக ரீதியாக எந்த நன்மையையும் செய்வதில்லை. விசாரணைக்கு முன்பாகவே அந்த நபரைக் குற்றவாளியாக்குவதன் வழியாக, அந்தத் தனிப்பட்ட நபரின் உளவியலையும் அவரது உடனடி குடும்பத்தையும் பாதிக்கிறது என்கிறார் ஓய்வு பெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூர்.
“ஒரு மனிதனாக குற்றவாளியைப் பார்ப்பதைவிட அவன் செய்த குற்றமே பார்க்கப்படுகிறது. அதனாலேயே மரண தண்டனை கொடுக்கப்படுவது சமீபகாலத்தில் அதிகமாகியுள்ளது.” என்கிறார்.
இங்கே கோவிட் -19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டவுடன், பாதிக்கப்பட்ட கைதிகளைத் தனிமைப்படுத்துவதற்கான இடத்தை சிறை நிர்வாகிகள் தேடிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் மாற்றிடம் கண்டறியப்படவில்லை.
தி இந்து,
தமிழில் : ஷங்கர்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 min ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago