வரலாற்று முக்கியத்துவம் மிகுந்த மாநாடு ஒன்று மதுரையில் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்ல; இந்தியச் சமூக நீதி வரலாற்றிலும்கூடக் குறிப்பிடத் தக்க நிகழ்வுகளில் ஒன்றாக அது இருக்கலாம். 1800-களில் ஜோதிராவ் புலே கூட்டிய கூட்டங்களுக்கு இன்றைக்கும் முக்கியத்துவம் உண்டு என்றால், தங்கராஜ் இன்றைக்குக் கூட்டிய கூட்டத்துக்கும் பின்னாளில் ஒரு முக்கியத்துவம் இருக்கும்.
யார் இந்த தங்கராஜ்?
அவருடைய பேச்சுகள் தமிழகத்தின் ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர்களின் ஏகோபித்த பிரதிநிதி / தலைவரைப் போல அவரைக் காட்டுகின்றன. இன்னும் அறிமுகம் வேண்டும் என்றால், நாடறிந்த எழுத்தாளர் - தணிக்கையாளர் - ஆர்எஸ்எஸ் அமைப்பின் தமிழக முகம்
- குருமூர்த்தியின் ஆசான்.
யார் அப்படிச் சொன்னது?
குருமூர்த்தியே சொல்கிறார்.
சரி, இந்த மாநாட்டின் நோக்கம் என்ன?
தேவேந்திரகுல வேளாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை; இனி இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் அவர்களுக்கு வேண்டாம்.
என்னது, இடஒதுக்கீடு வேண்டாமா?
ஆமாம். வேண்டாம்.
ஏன் வேண்டாம்?
அது அவமானம் தருகிறது. அதனால் வேண்டாம்.
யார் சொல்வது?
தங்கராஜே சொல்லிவிட்டார். அப்புறம் இதற்கு குருமூர்த்தியின் ஆசி இருக்கிறது, அப்புறம் பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் ஆசி இருக்கிறது, அமித் ஷா சொல்லியிருக்கிறார்,
'பிரதமர் மோடியிடம் பேசுகிறேன்' என்று. ஆக, மோடியின் ஆசியும் கிடைக்கலாம்!
மதுரை மாநாட்டின் மூன்று உரைகள் அதன் முழுப் பரிமாணத்தையும் காட்டக்கூடும்.
தங்கராஜ் பேச்சின் சாரம் இது: “எங்கள் சமூகத்துக்கு பொக்கிஷமாகக் கிடைத்தவர் அமித் ஷா. மத்தியப் பிரதேத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘தேவேந்திரகுலச் சமூகத்தவர்கள் பசுவைத் தெய்வமாக வணங்குபவர்கள். மாட்டிறைச்சியை உண்ணாதவர்கள். இந்திரனை வழிபடு பவர்கள். தென் தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழ்கிறவர்கள்’ என்று அவர் பேசினார். இந்த நாட்டிலேயே முதல் முறையாக அப்படிச் சொன்ன அரசியல் தலைவர் அமித் ஷா. எங்கள் இனம் பட்டியலினங்களில் சேர்க்கப்பட்டபோது, ஒரு வரலாறு சொல்லப்பட்டது. இவன் தீண்டத்தகாதவன் என்று சொன்னார்கள். மனு என்ன சொல்கிறார்? கோயிலுக்குள் போக முடியாதவர், பசுவைத் தெய்வமாக வணங்காதவர், மாட்டிறைச்சி உண்பவர், தன் இனத்தில் இறப்பவரின் உடலைத் தாமே அடக்கம் செய்பவர், ஒருவரைப் பார்த்தாலோ தொட்டாலோ தீட்டு என்று கருதப்படுபவர் ஆகியோரே தீண்டத்தகாத சாதியினர் என்கிறார். ஆனால், எங்கள் சமூகம் இவற்றில் எந்தக் கூறுகளிலும் இடம்பெறாத சமூகம். அன்று இவன் வேதனையின் உச்சத்துக்குப் போனான். அப்போதுதான் அமித் ஷா, ‘இவர்கள் பசுவைத் தெய்வமாக வணங்குபவர்கள்’ என்று பேசியதை இவன் பிடித்துக்கொண்டான். அதனால்தான் அவரை அழைத்து வந்தான். இந்தியாவிலேயே இன்றைக்கு ஒரே ஒரு சாதி, ‘எங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை’ என்று கேட்கிறது. யாரால் இதைக் கேட்க முடியும்?”
குருமூர்த்தி பேச்சின் சாரம்சம் இது: “6.88 லட்சம் கிராமங்கள் இருக்கிற இந்த நாட்டில், வெறும் 12,800 காவல் நிலையங்களே இருக்கின்றன. அவற்றின் மூலம் இந்த நாட்டில் அமைதியையும் இணக்கத்தையும் கொண்டுவர முடியாது. குடும்ப அமைப்பும், கலாச்சார முறையும் அவற்றைக் கண்காணிக்கிற சமூகங்களும் வேண்டும். நம் நாட்டில் அதை அழித்துவிட வேண்டும் என்று அரை நூற்றாண்டுக்கும் மேலாக முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன; சட்டத்தின் மூலமாக, சிந்தனைகள் மூலமாக, கட்சிகள் மூலமாக, கல்வி மூலமாக இதையெல்லாம் நிர்மூலம் ஆக்கிவிட வேண்டும் என்கிற அளவுக்கு நம் நாட்டில் சிந்தனைகள் வளர்ந்துவிட்டன. ஆனால், இதன் மூலமாகத்தான் இந்த நாடு முன்னேறும். அதனால்தான் நண்பர் அமித் ஷாவிடம் சொன்னேன்; ‘ஒரு புதிய கருத்தாக்கம் உருவாகிக்கொண்டிருக்கிறது மதுரையில். இதன் மூலம் நாட்டின் பிரச்சினையையே தீர்க்கலாம்’ என்று. இது சாதாரண கருத்தாக்கம் இல்லை; பெரும் தவம். நாட்டுக்கே வழிகாட்டும் தவம்.”
அமித் ஷா பேச்சின் சாரம்சம் இது: “எங்களை இடஒதுக்கீட்டுக்குள் சேருங்கள் என்று வலியுறுத்தும் சாதிகள் நிறைய இருக்கின்றன. ஆனால் இங்குதான், ‘நாங்கள் தாழ்த்தப்பட்டோர் அல்ல’ என்ற கவுரவம் பெறுவதற்காக மாநாடு நடத்தப்படுகிறது. இப்படி ஒரு மாநாடு நடப்பது இதுவே முதல் முறை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குஜராத் முதல் அசாம் வரை எல்லாச் சமூகங்களுக்கும் இது ஒரு வழிகாட்டுதல்.”
இந்தியச் சாதி அமைப்பின் பழைய கட்டுமானத்தை மூவரும் எப்படித் தாங்கிப் பிடிக்கிறார்கள் என்பதைத் தாண்டி, இந்த மாநாடும் மூன்று உரைகளும் இரு முக்கியமான விவாதங்களுக்கு வித்திடுகின்றன.
1. நம்முடைய சமூகநீதி வழங்கல் முறை எந்த அளவுக்குச் சாதிய அடையாளத்தை அழிப்பதையும் சாதி ஒழிப்பையும் கவனத்தில் கொண்டிருக்கிறது?
2. நவீன இந்தியாவைக் கையாள சாதிய அரசியல் எடுக்கும் புதுப்புது வடிவங்களை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?
ஒருபுறம், `எங்கள் சாதி ஆண்ட பரம்பரை' என்று பேசுபவர்கள் மறுபுறம், 'எங்கள் சாதி ஒடுக்கப்பட்டது; எங்களுக்குச் சலுகை வேண்டும்' என்றும் கேட்பது நம்மூரில் காணக் கிடைக்கும் காட்சிகளில் ஒன்று. இரண்டிலும் உண்மை இருக்கலாம். வரலாற்றின் அடிப்படை விதியே சுழற்சிதானே?
இந்தியாவில் இடஒதுக்கீட்டுக்கான நியாயம் தெளிவாகவே வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வரியில் சொல்வதென்றால், சமூகவியலாளர் ஆந்த்ரே பெடைல் சொல்வதுபோல, “சமூகநீதியை நிலைநாட்டும் முனைப்பின் விளைவே இடஒதுக்கீடு.” கொஞ்சம் விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால், பல்வேறு பிரிவினரையும் கொண்ட ஒரு சமூகத்தின் இன்றைய அதிகாரம் யாருடைய கைகளில் இருக்கிறது என்று பார்க்கிறோம். அதில் சில சமூகங்களின் கை ஓங்கியிருக்கிறது; சில சமூகங்களின் கைகளோ அதிகாரத்தின் நிழலைக்கூடத் தொட முடியாத தூரத்தில் இருக்கின்றன. அவர்களுடைய மொத்த எண்ணிக்கையையும் பிரதிநிதித்துவத்தையும் கணக்கிட்டால், மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. இதற்கான முக்கியமான காரணம் சாதிய அடிப்படையிலான நம்முடைய சமூக அமைப்பு சமீப காலம் வரை அவர்களுக்கு இழைத்த அநீதி என்பதை உணர்கிறோம். இதன் அடிப்படையில், அதற்கான பரிகாரத்தைத் தேடிக்கொள்ளும் முயற்சிகளில் இடஒதுக்கீடு முறையைக் கையாள்கிறோம்.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம், சமகாலமும் சமீபத்திய வரலாறும். அதாவது, இடஒதுக்கீடு அமலாக்கப்பட்ட காலகட்டத்தில் ஒரு சாதியினரின் சமூகப் பொருளாதார நிலை எப்படி இருந்தது; சமீபத்திய காலம் வரையிலான வரலாற்றில் அவர்களுக்கான கல்வி / அதிகார வாய்ப்புகள் எப்படிக் கிடைத்திருக்கின்றன என்பது. 1,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதியினர் எப்படி இருந்தனர் என்பதோ, 2,000 ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் கிடைத்தன என்பதோ அல்ல.
இப்போதேகூட பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நோக்கி இந்தியா நகர வேண்டும் என்ற குரல்கள் கேட்கின்றன. அடுத்த நூறாண்டுகளில் அதுவும்கூடச் சாத்தியம் ஆகலாம். அன்றைக்கு பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிராமணர்களும்கூட இடஒதுக்கீடு வட்டத்துக்குள் வரலாம் (சென்னை மாகாணத்தில் முக்கால் நூற்றாண்டுக்கு முன் பிராமணர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட வரலாறு உண்டு). எப்படிப் பார்த்தாலும், இடஒதுக்கீடு என்பது வரலாற்றின் சுழற்சியில் சமூகத்தில் பின்தங்கும் மக்களைத் தூக்கிவிடும் / மக்களிடையே சமமான பிரதிநிதித்துவத்தைக் கொண்டுவரும் கருவிதானே தவிர, நிச்சயம் அது இழிவுக்குரிய முத்திரை அல்ல. உண்மையில், மதுரை மாநாடு அந்தச் சமூகத்தினரை மட்டும் அல்லாமல், இடஒதுக்கீட்டு வரையறைக்குட்பட்ட எல்லாச் சமூகத்தினரையும் கீழே வைக்கிறது. மாறாக, இடஒதுக்கீட்டுக்கு வெளியே இருக்கும் சாதிகளை உயர் பீடத்தில் வைத்து அங்கீகரிக்கிறது. சுருக்கமாக, இடஒதுக்கீட்டுக்கும் சமூகநீதிக்கும் எதிரானவர்களின் கைப்பாவையாகிவிட்டது.
ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி பொதுச் சமூகத்தின் மீது அது வீசியெறியும் முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது.
எந்த இடஒதுக்கீட்டின் பெயரால், சமூகநீதியை நிலைநாட்ட முயல்கிறோமோ, அதே இடஒதுக்கீடு அவர்களைக் காயப்படுத்தவும் செய்கிறது. சாதி ஒழிப்பைப் பற்றி வாய் கிழியப் பேசும் நம்முடைய அரசமைப்புதான் மறுபுறம் ஆரம்பப் பள்ளிகளிலேயே ‘உன் சாதி என்ன?’ என்று பகிரங்கமாகக் கேட்டு, வடுவை மேலும் கிளறிக் காயத்துக்குப் புத்துயிர் கொடுக்கிறது. எனக்குச் சாதி அடையாளமே வேண்டாம் என்று முடிவெடுக்கும் ஒரு குடிமகனுக்கு நம்முடைய அமைப்பு கொடுக்கும் சமூகநீதி என்ன? இதற்கான மாற்று வழிமுறைகளே இல்லையா? ஏன் நாம் யோசிக்கக் கூடாது?
எந்த ஒரு ஜனநாயக நாடும் எதிர்கொள்ளும் பெரும் அச்சுறுத்தல் வணிக அடிப்படைவாதம். இந்தியாவில் வணிக அடிப்படைவாத அரசியலின் வெற்றிக் குறியீடாகப் பார்க்கப்படுபவர் பிரதமர் நரேந்திர மோடி. ஓராண்டுக்கு முன்பு வரை அவருடைய தேர்தல் வெற்றிகளுக்கான காரணமாகவும்கூட வளர்ச்சி கோஷமே பார்க்கப்பட்டது. ஆனால், மோடியின் தேர்தல் வியூகங்கள் எப்படியான வழிகளிலெல்லாம் பயணிக்கக்கூடியவை என்பதற்கு இப்போது அப்பட்டமான தமிழக உதாரணம் ஆகியிருக்கிறது அமித் ஷாவின் மதுரை விஜயம்.
மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் வகுப்புவாதத்தைத் துருப்புச் சீட்டாக்கிய மோடியின் வலது கரம் அமித் ஷா, இப்போது பிஹார் தேர்தலில் சாதியத்தைக் கையில் எடுத்திருக்கிறார். பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரைச் சாய்க்க, இதுநாள் வரை அவருக்கு ஆதரவாக இருந்த மஹாதலித்துகள் சமூகத்தை அந்தச் சமூகத்தினருக்கு நிறையச் செய்தவரும்கூட நிதிஷ் குறிவைத்திருக்கிறார் அமித் ஷா. முன்னாள் முதல்வர் ஜீதன் ராம் மாஞ்சி முதல், இரு நாட்களுக்கு முன்பு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ராம் நாத் கோவிந்த் வரை அமித் ஷாவின் வியூகங்களில் அடக்கம். “பிஹாரின் ஒவ்வொரு தொகுதியின் குக்கிராமங்கள் வரை எந்தெந்தச் சாதிகளுக்கு எவ்வளவு ஓட்டுகள் உண்டு என்கிற விவரங்கள் அமித் ஷாவின் கைக்கணினியில் உண்டு” என்கிறார்கள் பிஹார் பத்திரிகையாளர்கள். சாதியம் எந்த அளவுக்குக் காலத்துக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது எனும் உதாரணங்களில் ஒன்றாக இதைப் பார்க்கலாம். பொதுவெளியில் வேறெந்த இடத்தையும்விட அச்சமோ, வெட்கமோ இன்றி இன்றைக்குச் சாதிப் பிரச்சாரங்கள் / சண்டைகள் நடக்கும் இடம் சமூக வலைதளங்கள்தானே?
தமிழகத்துக்கும் இதேபோன்ற ஒரு சமன்பாடு அவரிடம் இருப்பதை உணர முடிகிறது. மதுரையில் இந்த மாநாட்டோடு இன்னொரு சந்திப்பையும் நிகழ்த்தியிருக்கிறார் அமித் ஷா. அது, தமிழகத்தின் பல்வேறு சாதித் தலைவர்களுடனான கூட்டம். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை ஆளும் கட்சியின் தேசியத் தலைவரை எது சாதாரண உள்ளூர் சாதித் தலைவர்களைச் சந்திக்கவைக்கிறது? உண்மையான வளர்ச்சியைக் கொண்டுவர முனைபவர்கள் உண்மையில் சாதியத்தோடு நெருக்கமாக இருக்க முடியுமா? அடிப்படையில் இரண்டும் எதிரெதிர் துருவங்கள் அல்லவா? மோடி-அமித் ஷா எல்லாம்கூட இங்கே ஒரு உதாரணக் குறியீடுதான். சந்தையும் மூலதனமுமே நம் அரசியலைப் பின்னின்று இயக்குகின்றன என்றால், இந்தியச் சூழலில் சந்தை மூலதனத்தைவிடவும் சக்தியுடையதாக இருப்பது எது?
இன்னொரு வண்டியும் இங்கே குறுக்கே வந்து சிக்கிக்கொண்டிருக்கிறது. இன்றைக்குத் தன்னை ஒட்டுமொத்த இந்து சமூகத்துக்குமான - அனைத்துச் சாதியினருக்குமான பாதுகாவலனாகக் காட்டிக்கொள்ளும் சங்கப்பரிவாரம்தான் அது. இந்து மதத்தின் மிகப் பெரிய சாபக்கேடு அதைப் பீடித்திருக்கும் சாதியம். சாதிய அடுக்குமுறை இழைக்கும் அநீதி. இடஒதுக்கீடு ஒருவகையில் அந்தப் பாவத்துக்கான பிராயச்சித்தம். “எனக்குக் கல்வி - வேலைவாய்ப்பு - அரசியல் அதிகாரங்கள் மூலம் கிடைக்கும் நல்ல எதிர்காலத்தை எளிதாக்கும் சலுகைகள்கூட வேண்டாம்; தயவுசெய்து எனக்கு இந்த முத்திரை வேண்டாம்” என்று ஒருவர் கதறுகிறார் என்றால், அந்தக் கதறல் அவருக்குச் சாதி மீது இருக்கும் பிடிமானமாக அல்ல; அவமானங்களினூடே இன்னமும்கூட அவரைத் துரத்திக்கொண்டிருக்கும் சாதியம் உருவாக்கிய அவலமாகவும் பார்க்க முடியும். அப்படிப்பட்டவர்களின் கதறல்களைக்கூடப் பகடைக் காயாக்கும் முயற்சிகளின் பின்னணியில் சங்கப்பரிவாரம் இருக்கிறது என்றால், உண்மையில் அது யாருடைய பிரதிநிதி? இந்த சாதிய அமைப்பு சிதைய வேண்டும் என்று அது நினைக்கிறதா அல்லது மேலும் இறுக வேண்டும் என்று நினைக்கிறதா?
இந்த இடத்தில் நம் கவனம் கோரும் இன்னொரு மையம், சாதிய அடிப்படையில் தமக்கான அங்கீகாரங்களைப் பெற விரும்புவோர் எங்கே கடைசியில் போய் நிற்கின்றனர் என்பதும் யார் அவர்களை முதலில் சுவீகரித்துக் கொள்கிறனர் என்பதும். ஆக, சாதியப் பீடங்கள் அப்படியே நிற்கின்றன. தம் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ள காலத்துக் கேற்பப் புதுப்புது பூசாரிகளை அவை உருவாக்கு கின்றன. ஆக, நம் ஒவ்வொருவருக்குள்ளும் சாதி உறைந்திருக்கும் வரை இந்த அமைப்பில் படிநிலைகள் மாறுமே தவிர, சாதியக் கட்டுமானம் அழியப்போவதில்லை. அது நவீன காலத்துக்கேற்ப, நவீன இந்தியாவைக் கையாள மேலும் புதுப்புது உத்திகளுடன் புதுப்புது வடிவங்களை எடுத்துக்கொண்டே இருக்கப்போகிறது.
எதிர்கொள்ள நம்மிடம் என்ன வழி இருக்கிறது?
-சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago