கரோனா வைரஸ் பொது முடக்கத்தின் விளைவாகச் சிதைந்துபோன பொருளாதாரங்களும், நொறுங்கிப்போன வாழ்க்கையும் ஏற்படுத்தியிருக்கும் வலி மறுக்கவே முடியாதது. தற்போது அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் தடை விலக்கிக்கொள்ளப்பட்டு வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதில் இருக்கும் ஆபத்துகளைப் பற்றி ஆளுநர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, வணிக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படுவதன் மூலம் கரோனா தொற்றுகளும் மரணங்களும் அதிகரித்துவிடுமோ என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
“இது மிக முக்கியமான தருணம்; மிக ஆபத்தான தருணமும்கூட” என்று சி.என்.என் நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியிருக்கும் ஒஹையோ மாநில ஆளுநர் மைக் டெ வைன் (குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்), “மாநிலங்களை மீண்டும் திறக்காமல் இருப்பது பெரிய ஆபத்து என்றே நாம் நினைத்திருந்தோம். ஆனால், மீண்டும் திறப்பதும் ஆபத்தானது என்பதை இப்போது உணர்ந்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தீவிரமடையும் அழுத்தம்
வர்த்தகத்தைப் புதுப்பிப்பது, இயல்புநிலைக்குத் திரும்புவதற்கான வழிவகைகளை அமைப்பது போன்றவை தொடர்பான அழுத்தம் உருவாகி இருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இலையுதிர் காலத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஏற்கெனவே சிலர் ஆலோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, திவாலாகிவிட்டதாகப் பல நிறுவனங்கள் அறிவித்திருப்பது, பொதுமுடக்கத்தைச் சமாளிக்க முடியாது என்று நிறுவனங்கள் கூறியிருப்பது, பொருளாதாரப் பேரழிவு நீடிக்கலாம் எனும் அச்சம் ஆகியவற்றின் காரணமாக மீண்டும் திறப்பது குறித்த அழுத்தம் தீவிரமடைந்திருக்கிறது. அரசின் உத்தரவுகளை மீறி சில நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றன.
கலிபோர்னியா ஆளுநரான கேவின் நியூஸம் (ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்) சி.என்.என் சேனலுக்கு அளித்த பேட்டியில், “மக்கள் எதிர்கொண்டிருக்கும் அழுத்தத்தையும், கவலையையும் என்னால் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. பொதுமுடக்கத்தின் காரணமாக, அவர்களின் ஒட்டுமொத்தக் கனவும் சுக்குநூறாக உடைந்திருப்பதையும், அவர்களின் சேமிப்பு குறைந்திருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது” என்று தெரிவித்திருக்கிறார். “இதிலிருந்து மீண்டு வரவும், பொதுமுடக்க உத்தரவில் அர்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டுவரவும் என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் எனது கேள்வி” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அச்சுறுத்தும் உண்மைகள்
ஆனால், கரோனா வைரஸ் புதிய எழுச்சியை அடையலாம் என்றும் கவலை தெரிவிக்கிறார்கள் சில ஆளுநர்கள். உணவகங்களிலும், அங்காடிகளிலும் முகக்கவசம் அணியாமல் வாடிக்கையாளர்கள் கூடியிருப்பதைக் காட்டும் புகைப்படங்கள் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன.
“இந்த வைரஸ் தொடர்பாக நாம் இன்னமும் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறோம். இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு நாம் அறிந்ததைவிட இன்றைக்கு நாம் நிறைய தெரிந்துவைத்திருக்கிறோம். அதேசமயம், இதுதான் தீர்வு என்று நமக்கு இன்னமும் தெரியவில்லை” என்கிறார் மைக் டெ வைன்.
கரோனா வைரஸுக்கான எதிர்வினை என்பது, இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதற்கும், பொருளாதாரத் தீங்குகளைக் குறைக்க முயற்சி செய்வதற்கும் இடையிலான சமநிலையைப் பேணுவதன் அடிப்படையிலேயே வரையறுக்கப்படுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, பெரும்பாலும் பொருளாதாரத்துக்கு ஆதரவான முனையை நோக்கித்தான் பெண்டுலம் நகர்கிறது.
மாற்றத்துக்கு என்ன காரணம்?
கடந்த சில வாரங்களாக, தேசிய அளவில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துவருவது, விரிவான வணிகச் செயல்பாடுகளுக்குப் பல மாநிலங்கள் அனுமதியளித்திருப்பது ஆகியவற்றின் பின்னணியிலேயே இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்கள் குறிப்பிடத்தக்க அளவில் தடைகளைத் தளர்த்தியிருக்கின்றன. கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன் போன்ற மாநிலங்கள் பிராந்திய அடிப்படையில் பகுதி அளவிலான தளர்வுகளை மேற்கொண்டிருக்கின்றன. இல்லினாய்ஸ், மிச்சிகன், நியூஜெர்ஸி ஆகிய மாநிலங்கள் இன்னமும் முழுமையாக மூடப்பட்டிருக்கின்றன.
மே 15 நிலவரப்படி, 19 மாநிலங்களில் புதிய தொற்றுகளின் தினசரி எண்ணிக்கை குறைந்திருக்கிறது. மூன்று மாநிலங்களில் அந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எஞ்சிய மாநிலங்களில் அந்த எண்ணிக்கை சமமாகவே தொடர்கிறது என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழின் புள்ளிவிவரம் சொல்கிறது. சிபிஎஸ் சேனலின் ‘ஃபேஸ் தி நேஷன்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க சுகாதாரத் துறைச் செயலர் அலெக்ஸ் எம்.அஸார், இந்த விஷயத்தைச் சுகாதாரம் மற்றும் பொருளாதாரக் கவலைகளுக்கு இடையிலான விவாதமாகக் கட்டமைப்பதை விமர்சித்தார்.
“உண்மையில் இது சுகாதாரத்துக்கும் சுகாதாரத்துக்கும் இடையிலான விவாதம்தான்” என்று கூறியிருக்கும் அவர், இந்தப் பெருந்தொற்று வந்த பின்னர், மனநல ஆரோக்கியம் வீழ்ந்திருக்கிறது. இதய சிகிச்சை நடைமுறைகள், புற்றுநோய் பரிசோதனை, குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது போன்றவை குறைந்திருக்கின்றன என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
“பொதுமுடக்கத்தின் காரணமாக நிஜமான சுகாதார விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதைப் போல இவற்றுக்குத் தீர்வு காண்பதிலும் போதிய கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் அவர்.
எனினும், மீண்டும் திறக்கும் நடவடிக்கைகளால் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் என்றே சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். மே 16-ல், டெக்சாஸ் மாநிலத்தில் ஒரே நாளில் 1,815 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் குழப்பங்கள்
அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வசதிகள், பாதுகாப்பு சாதனங்களின் இருப்பு அதிகரிக்கப்பட்டிருப்பது ஆகியவற்றின் அடிப்படையில், தற்போது அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பதாக ஆளுநர்கள் கூறுகிறார்கள். மோசமான பாதிப்புக்குள்ளாகியிருக்கும் பகுதிகளில், தொற்றுகளின் எண்ணிக்கையைப் பூஜ்ஜியமாக்கும் நடவடிக்கைகளில் அதிகக் கவனம் செலுத்துவதாக அதிகாரிகளும் கூறியிருக்கிறார்கள்.
மிசிஸிப்பி மாநில ஆளுநர் டேட் ரீவ்ஸ், டாட்டூ பார்லர்கள் இயங்க அனுமதியளித்திருப்பதுடன், மீன்பிடிக்கும் போட்டிகளுக்கான தடையையும் விலக்கியிருக்கிறார். மறுபுறம், அதிகத் தொற்றுக்களைக் கொண்ட ஏழு கவுன்டிகளில் மேலும் கட்டுப்பாடுகளை அதிகரித்திருக்கிறார்.
“சுத்தியல் வைத்துத் தாக்குவதைப் போல இந்த நோயை அணுகாமல், அறுவை சிகிச்சை ரீதியிலான அணுகுமுறையை மேற்கொள்வதுதான் இதன் அடுத்தகட்டமாக இருக்கும்” என்று சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்திருக்கிறார்.
அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும், பொருளாதாரம் மீண்டும் திறக்கப்படுமா என்று காத்திருக்கும் நிறுவனங்களின் உரிமையாளர்களின் மீதே அதிகம் கவனம் செலுத்தும் நிலையில், ‘நாம் வீட்டைவிட்டு வெளியில் செல்ல முடியுமா?’ என்பதில் இன்னமும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள் மக்கள். புதிய தொற்றுகள், மரணங்கள் தொடர்பாக அரசு அதிகாரிகள் அறிவிக்கும் எண்ணிக்கையை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துவருகிறார்கள்.
மரண எண்ணிக்கையில் மாற்றம்
கொலராடோ மாநிலத்தில், கரோனா மரணங்களின் எண்ணிக்கையை அறிவிக்கும் முறையில் அதிகாரிகள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தைப் பற்றி சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். மே 15-ல், ‘கோவிட்-19 நோயாளிகளுக்கு மத்தியில் ஏற்பட்டிருக்கும் மரணங்கள்’ மற்றும் ‘கோவிட்-19 நோயால் ஏற்பட்டிருக்கும் மரணங்கள்’ என்று அதிகாரிகள் வித்தியாசம் காட்டியிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இதற்கு முன்னர், மரணமடையும் சமயத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்தவர்களையும் அரசின் அதிகாரபூர்வப் பட்டியலில் கொலராடோ பொது சுகாதாரத் துறை சேர்த்துவந்தது. அதுதான் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அங்கீகரித்த நடைமுறையும்கூட. அந்த அடிப்படையில், மே 15-ம் தேதி கணக்கில் கொலராடோவில் 1,192 பேர் உயிரிழந்திருந்தார்கள்.
ஆனால், இனி இரண்டாவது பட்டியலையும் வழங்கப்போவதாகக் கொலராடோ அரசு அறிவித்தது. ‘மரணம் ஏற்படுவதற்குக் கோவிட்-19 நோய் மட்டுமே காரணம்; வேறு எந்தச் சிக்கலான காரணிகளும் இல்லை’ எனும் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன்படி, கொலராடோவில் மே 15-ல் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 892 என்று அறிவிக்கப்பட்டது.
கொலராடோ ஆளுநரான ஜாரேட் போலிஸ் (ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்), அந்த மாற்றத்தை ஆதரித்திருக்கிறார். “கோவிட்-19 தொற்றுள்ள யார் இறந்தாலும், கோவிட்-19 நோய்க்குப் பலியானோர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் வரையறை சொல்கிறது. எனினும், கோவிட்-19 நோயால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவே கொலராடோ மக்களும், ஒட்டுமொத்த தேசத்தின் மக்களும் விரும்புகிறார்கள்” என்று ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஜாரேட் போலிஸ் தெரிவித்திருக்கிறார்.
கரோனா வைரஸ் பரவல் தொடர்பான ஒழுங்கற்ற அறிக்கை நடைமுறைகளாலும், போதுமான எண்ணிக்கையில் பரிசோதனைகள் நடத்தப்படாததாலும் தேசிய அளவில் கரோனா மரணங்களின் எண்ணிக்கை, குறைத்துக்காட்டப் பட்டதாகச் சுகாதார நிபுணர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.
மீள்வது எப்படி?
சில மாநிலங்கள் மீண்டும் திறக்கும் நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கின்றன. சில இடங்களில் வணிக நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், பிற நிறுவனங்கள் போன்றவை மீண்டும் திறக்க விருப்பம் இல்லை என்று கூறியிருக்கின்றன.
ஆளுநர்கள் எதிர்கொள்ளும் அதே பிரச்சினையைத் தாங்களும் எதிர்கொள்வதாக வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களும் சொல்கிறார்கள் – தங்களுக்கும் தங்கள் பணியாளர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்படலாம் எனும் அச்சுறுத்தலுக்கு நடுவே, தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய கடினமான சூழல்தான் அது!
- ரிக் ரோஜாஸ், மெலினா டெல்கிக், நன்றி: தி நியூயார்க் டைம்ஸ்
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago