கரோனா தொற்று உலகெங்கிலும் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உண்மை என்னவென்றால் இப்போதோ, பிறகோ நம்மில் பெரும்பாலானோருக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலான மக்களுக்கு மெலிதான அறிகுறிகளே ஏற்படும். அவர்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை தரத் தேவையில்லை.
அப்படி இருந்தும், நம்மில் பலர் கரோனா தொற்று தமக்கு ஏற்படுமோ என்ற நிச்சயமின்மையாலும் எப்போது, எப்படி மருத்துவ உதவியை நாட வேண்டும் என்ற குழப்பத்தாலும் அச்சமடைந்துள்ளனர். நமக்கோ, நமது குடும்பத்தில் ஒருவருக்கோ கரோனா தொற்று இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கான பதில்களை இங்கே காணலாம்.
நானோ, என் குடும்ப உறுப்பினர்களோ எப்படிப் பரிசோதனைக்கு உள்ளாக்குவது?
உங்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருந்தாலும் உங்களுக்கு சோதனை செய்யப்படாமலே போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நோய் அறிகுறிகளைக் கொண்டவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வது குறித்தும் தங்களால் நண்பர்களுக்குப் பரவும் வாய்ப்பு குறித்தும் மிகவும் கலங்கிப்போய் இருப்பார்கள். ஃப்ளூ காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவசியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவ உதவியை நாட வேண்டும்.
மருத்துவத் துறைக்குத் தெரிவியுங்கள். நேரில் செல்ல வேண்டாம்!
உங்களுக்கு அறிகுறிகள் இருப்பதாகத் தெரிந்தால் மருத்துவத் துறையினரை தொலைபேசியில் அழையுங்கள். நேரில் மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டாம். அப்படிச் செல்வதன் மூலம் மருத்துவமனையில் உள்ளவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அரசு மருத்துவமனைக்கு நீங்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தால் உங்களைப் பாதுகாப்பாகத் தனி வார்டுக்கு அழைத்துச்செல்வார்கள்.
அவசர சிகிச்சை அறைக்கு ஓட வேண்டாம்
அவசர சிகிச்சை அறையில் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அதீத வேலைப் பளுவால் களைத்துப்போன மருத்துவர்களும் இருப்பார்கள். ஆகவே, அவசர சிகிச்சை அறைக்குப் போவதற்கு முன் உங்களை நீங்களே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும். ‘மற்ற தருணங்களில் காய்ச்சல், இருமல் இருந்தால் நான் அவசர சிகிச்சை அறைக்குப் போவேனா?’ என்பதுதான் அந்தக் கேள்வி. இந்த அறிகுறிகள் கரோனாவின் தொற்றால் ஏற்பட்டதாக இருந்தாலும் முதலில் மருத்துவத் துறையினரை அழைத்துத் தெரிவித்துவிட்டு அவர்களின் ஆலோசனைப்படி நடந்துகொள்ளுங்கள்.
எந்த அறிகுறிகளைக் கண்டு நாம் எச்சரிக்கை பெற வேண்டும்?
1. மூச்சு விடுவதில் சிரமம்
2. நெஞ்சில் நீடித்த வலி, அல்லது அழுத்தம்
3. குழப்பமான மனநிலை
4. உதடுகளிலோ, முகத்திலோ நீலம் பாரித்தல்
5. மிகத் தீவிரமான பிற அறிகுறிகள்
கரோனா வைரஸ் தொற்று கொண்ட, வீட்டுத் தனிமையில் வைக்கப்படும் நம் குடும்ப உறுப்பினர்களை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும்?
கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பலரும் மருத்துமனையிலேயே இருப்பதில்லை. அவர்கள் வீட்டில் வைக்கப்படுவார்கள். கரோனா தொற்றின் எல்லா அறிகுறிகளும் உங்களுக்கு இருந்து ஆனால் இன்னமும் நீங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றாலும் அந்தத் தொற்று உங்களுக்கு இருப்பதாகக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கரோனா தொற்றின் மெலிதான அறிகுறிகள் முதல் மிதமான அறிகுறிகள் வரை கொண்டவர்களைப் பார்த்துக்கொள்வது ஃப்ளூ காய்ச்சல் வந்தவர்களைப் பார்த்துக்கொள்வது போன்றதுதான்.
அவர்களிடம் உரிய அக்கறை செலுத்த வேண்டும். போதுமான அளவில் தண்ணீர், பானங்கள், சூப்புகள் கொடுக்கவேண்டும். மருத்துவரின் பரிந்துரையின்படி பாராசிட்டமால் தர வேண்டும். அடிக்கடி தங்கள் உடல் வெப்பநிலையை அவர்களைப் பரிசோதிக்கச் செய்ய வேண்டும். எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ, கழிப்பறைக்குச் செல்லவோ முடியாத அளவுக்கு நோயாளி மிகவும் பலவீனமாக இருந்தால் மருத்துவத் துறையின் உதவியை நாட வேண்டும். கரோனா தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட அல்லது உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை வீட்டில் வைத்து எப்படிப் பார்த்துக்கொள்வது என்பதற்கான வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அவற்றைப் படித்துப் பார்க்கலாம்.
நான் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா?
ஆமாம்! நோயாளியைத் தனி அறையில் வைத்துப் பராமரிக்க வேண்டும். வீட்டில் உள்ள ஏனையோரிடம், செல்லப்பிராணிகள் உட்பட, அவருக்கு எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது. கூடியவரை தனிக் கழிப்பறை, குளியலறையை நோயாளி பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான நேரத்தில் நோயாளி மிகவும் துயருற்றுக் காணப்படுவார். அவர் இருக்கும் அறையின் கதவுக்கு அடியிலோ அருகிலோ உணவுத் தட்டை வைத்தால் அவர் எடுத்துக்கொள்வார். தனிக் கழிப்பறையோ குளியலறையோ இல்லையென்றால் நோயாளியின் பயன்பாட்டுக்குப் பிறகு அவற்றைக் கிருமிநாசினிகள் கொண்டு நன்கு தூய்மைப்படுத்த வேண்டும். நோயாளியும் அவரைப் பார்த்துக்கொள்பவரும் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். வீட்டில் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். உணவுத் தட்டுகளையோ, துண்டுகளையோ, படுக்கையையோ நோயாளியுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
என் குடும்ப உறுப்பினருக்கு கரோனா தொற்று இருந்து வீட்டுத் தனிமையில் இருந்தால் நான் எப்படிச் சுத்தம் செய்வது?
கரோனா நோயாளியை வீட்டுத் தனிமையில் வைக்கும்போது அவர் இருக்கும் அறையைச் சுத்தம் செய்வதைக் கூடிய வரையில் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நமக்கும் கரோனா தொற்றிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. நோயாளிக்குத் துடைப்புக் காகிதங்கள், காகிதத் தூவாலைகள், தொற்றுநீக்கிகள் போன்றவற்றைக் கொடுக்க வேண்டும். ஒரே குளியலறையை நோயாளியும் குடும்பத்தினரும் பயன்படுத்திக்கொள்ள நேரிட்டால் அந்த அறையை முடிந்தவரை நோயாளியையே சுத்தம் செய்யப் பழக்க வேண்டும். பராமரிப்பாளர்தான் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் நோயாளி பயன்படுத்தியதற்கு வெகுநேரம் கழித்தே குளியலறையில் நுழைந்து சுத்தம்செய்ய வேண்டும்.
சுத்தம் செய்த பிறகு கைகளை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கரோனா நோயாளியுடன் இடங்களைப் பகிர்ந்துகொள்ள நேரிட்டால் நீங்கள் கையுறை அணிய வேண்டும்; தாழ்ப்பாள்கள், கைப்பிடிகள், மின்விளக்குப் பொத்தான்கள், குழாய்கள், கழிப்பறை உள்ளிட்ட நோயாளி அதிகம் தொட்டிருக்க வாய்ப்புடைய இடங்களை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் சகஜமாகத் தங்கள் வேலைகளைத் தொடரலாமா?
கூடாது. குடும்பத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பதாகத் தெரிந்தால் அவரைத் தனிமைப்படுத்திவைக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் 14 நாட்களுக்கு வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினருக்கு கரோனா தொற்றின் அறிகுறிகள் இருந்து, ஆனால் இன்னும் பரிசோதனைக்கு உட்படவில்லையென்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுத் தனிமையில் இருப்பது நல்லது.
நோயாளி குணமாவதற்கு எவ்வளவு நாட்களாகும்?
பெரும்பாலானோர் இரண்டு வாரத்தில் குணமடைந்துவிடுவார்கள்.
வீட்டுத்தனிமையை எப்போது முடித்துக்கொள்ளலாம்?
மருத்துவமனையில் இருக்கும் நோயாளி வழக்கமாக இரண்டு நெகட்டிவ் பரிசோதனைகளுக்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பப்படுவார். வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்குப் பெரும்பாலும் ஒரு நெகட்டிவ் பரிசோதனையே செய்யப்படுகிறது.
காய்ச்சலுக்கான மருந்தை எடுத்துக்கொள்ளாமல் மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லாமல் இருந்தாலும் மற்ற அறிகுறிகள் இருமல், மூச்சுப் பிரச்சினை போன்றவை இல்லாமல் இருந்தாலும் மருத்துவமனையிலிருந்து நோயாளிகள் அனுப்பப்படுவார்கள்.
-நியூயார்க் டைம்ஸ், தாரா பார்க்கர்-போப்
சுருக்கமாகத் தமிழில்: ஆசை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago