எப்போது, எப்படி முடிவுக்கு வரும் இந்தப் பெருந்தொற்று?- வரலாற்று ரீதியில் ஓர் அலசல்

By செய்திப்பிரிவு

பெருந்தொற்றுகள் வழக்கமாக இரு வகைகளில் முடிவுக்கு வரும் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். ஒன்று, மருத்துவ ரீதியிலான முடிவு. தொற்று விகிதமும் இறப்பு விகிதமும் குறையும்போது மருத்துவ ரீதியில் பெருந்தொற்று முடிவுக்கு வரும். இரண்டாவது, சமூக ரீதியிலான முடிவு. தொற்றுநோய் தொடர்பான பயம் முடிவுக்கு வரும்போது சமூக ரீதியில் பெருந்தொற்று முடிவுக்கு வரும்.

“கரோனா பெருந்தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்பவர்கள், சமூக ரீதியிலான முடிவு எப்போது என்பதைத்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்” என்கிறார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மருத்துவ வரலாற்றாசிரியரான டாக்டர் ஜெரிமி க்ரீனி.

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு நோயின் முடிவு என்பது அந்நோய் முறியடிக்கப்படுவதன் மூலம் அல்ல; பீதி நிறைந்த சூழலால் சோர்வடையும் மக்கள், அந்த நோய்க்கு மத்தியில் வாழப் பழகிக்கொள்வதில்தான் இருக்கிறது.

கோவிட்-19 தொடர்பாக, ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றாசியர் ஆலன் பிராண்ட் சொல்வது இதைத்தான்:
“பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பான விவாதங்களில் நாம் ஒரு விஷயத்தைக் கவனித்திருப்போம். இந்தப் பெருந்தொற்றின் முடிவு தீர்மானிக்கப்படுவது தொடர்பான கேள்விகள், மருத்துவம், பொது சுகாதாரம் தொடர்பானவையாக அல்லாமல், சமூகப் பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பானவையாகவே இருக்கின்றன.”

பயத்தால் விளையும் பாதகம்
நோய்த் தொற்றே இல்லாமல்கூட பயம் எனும் தொற்று உருவாவதுண்டு. அயர்லாந்தின் டப்ளின் நகரில் உள்ள ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸில் பணிபுரியும் டாக்டர் சூஸன் முர்ரே, 2014-ல் அந்நாட்டின் கிராமப்புற மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்தபோது அதை நேரடியாக உணர்ந்திருக்கிறார்.

அதற்கு முந்தைய மாதங்களில், மேற்கு ஆப்பிரிக்காவில் 11,000க்கும் மேற்பட்டோர் எபோலா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர். பயங்கரமான அந்த வைரஸ் எளிதில் தொற்றக்கூடியது மட்டுமல்ல, அதிக உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தக்கூடியதும் ஆகும். அந்தச் சமயத்தில் எபோலா தொற்றுநோய் பாதிப்பு குறைந்துகொண்டு வந்தது. அதுமட்டுமல்ல, அயர்லாந்தில் ஒருவருக்குக்கூட எபோலா தொற்று ஏற்படவில்லை. எனினும், மக்களிடம் அச்சம் உருவாகியிருந்தது தெளிவாகத் தெரிந்தது.

“மருத்துவமனை வார்டுகளிலும் தெருக்களிலும் மக்கள் பதற்றத்துடன் இருந்தார்கள். நிறத்தின் அடிப்படையிலான சமூக விலகலைப் பேருந்துகளிலும், ரயில்களிலும் பார்க்க முடிந்தது. ஒருவர் இருமிவிட்டால், மற்றவர்கள் அவரிடமிருந்து சிதறி ஓடிவிடுவார்கள்” என்று ‘தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின்’ இதழில் சமீபத்தில் எழுதியிருக்கும் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் டாக்டர் சூஸன் முர்ரே.

மிக மோசமான சூழலுக்குத் தயாராக இருக்குமாறு டப்ளின் நகர மருத்துவமனை ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டார்கள். போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், அவர்கள் பயமும் கவலையும் அடைந்தார்கள். எபோலா தொற்றுநோயாளிகளைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து வந்திருந்த ஓர் இளைஞர், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வந்தபோது அவர் அருகில் செல்லக்கூட யாரும் விரும்பவில்லை. செவிலியர்கள் பயந்து பதுங்கிக்கொண்டனர். மருத்துவர்களோ, மருத்துவமனையைவிட்டு வெளியேறப்போவதாக மிரட்டல் விடுத்தனர்.

அவருக்குச் சிகிச்சையளிக்க டாக்டர் முர்ரே மட்டும் துணிச்சலுடன் முன்வந்தார். ஆனால், 'அந்த இளைஞருக்குப் புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்ததால், ஆறுதலுடன் கூடிய மருத்துவப் பராமரிப்பை மட்டுமே அவருக்குத் என்னால் வழங்க முடிந்தது' என்று எழுதியிருக்கிறார் டாக்டர் முர்ரே. அந்த இளைஞருக்கு எபோலா தொற்று இல்லை என்பது சில நாட்களில் கண்டறியப்பட்டது. எனினும், பரிசோதனை முடிவு வெளியான ஒரு மணிநேரத்தில் அவர் மரணமடைந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, எபோலா தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனமே அறிவித்துவிட்டது.

“பயத்தையும் அறியாமையையும் எதிர்த்துத் தெளிவான சிந்தனையுடன் தீவிரமாகப் போரிட நாம் தயாராக இல்லை என்றால், அந்தப் பயத்தின் காரணமாக விளிம்புநிலை மக்களுக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். ஒருவருக்குக்கூட தொற்று ஏற்படாத இடங்களில்கூட அப்படியான சூழல் உருவாகும். இனம், பொருளாதார நிலை, மொழி போன்ற பிரச்சினைகள் ஒரு பயத்தின் தொற்றுடன் சேர்ந்துவிட்டால், அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்” என்று எச்சரிக்கிறார் டாக்டர் முர்ரே.

உலகை உலுக்கிய ப்ளேக்
கடந்த 2,000 ஆண்டுகளில் பல முறை பாதிப்பை ஏற்படுத்திய பூபோனிக் ப்ளேக் நோய் பல லட்சக்கணக்கானோரைக் கொன்றதுடன், வரலாற்றின் போக்கையே திசைமாற்றியிருக்கிறது. ஒவ்வொரு முறை அந்தத் தொற்றுநோய் ஏற்படும்போதும் அதன் தீவிரத்தை, பயம்தான் பன்மடங்கு பெருக்கியது.

எலிகளின் உடலில் இருக்கும் உண்ணிகளில் வாழும் யெர்ஸினியா பெஸ்டிஸ் எனும் பாக்டீரியாவின் துணைப் பிரிவின் மூலம் ஏற்படுவது பூபோனிக் ப்ளேக் நோய். எனினும், அது ‘கறுப்பு மரணம்’ என்று அழைக்கப்பட காரணம், தொற்றுக்குள்ளானவரின் சுவாசத் துளிகள் (தும்மல், இருமலின்போது வெளிப்படும் திரவம்) மூலம் அடுத்தவருக்கும் நோய் பரவிவிடும் என்பதால்தான். எனவே, எலிகளைக் கொல்வதன் மூலம் மட்டுமே, அந்த நோயை ஒழித்துவிட முடியாது.

மூன்று முறை ப்ளேக்கின் பேரலைகள் ஏற்பட்டன என வரலாற்றாசிரியர்கள் கூறியிருப்பதாகச் சொல்கிறார் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் மேரி ஃபிஸல். அவை கி.பி 6-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட ப்ளேக் ஆஃப் ஜஸ்டீனியன்; 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட இடைக்காலத்திய பெருந்தொற்று; 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஏற்பட்ட பெருந்தொற்று.

கற்பனைக்கு எட்டாத கொடூரம்
இடைக்காலத்தியப் பெருந்தொற்று என்பது, 1331-ல் சீனாவில் தொடங்கியது. சீனாவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் பரவிய அந்த நோய், அந்நாட்டின் மக்கள்தொகையில் பாதி பேரைக் கொன்றது. சீனாவிலிருந்து வர்த்தகத் தடங்கள் மூலம் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு என்று அது பரவியது.

1347-ம் ஆண்டுக்கும் 1351-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில், ஐரோப்பிய மக்கள்தொகையில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பகுதியினரை அந்த நோய் கொன்றது. இத்தாலியின் சியெனா நகரில் பாதிப் பேர் உயிரிழந்தனர். இதை, “மிக மோசமான அந்த உண்மையை நினைவுகூர, மனித நாவுகளுக்குச் சாத்தியமே இல்லை” என்று எழுதியிருக்கிறார் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுப் பதிவாளரான அன்கோலோ டி டூரா. “உண்மையில், அந்தக் கொடூரத்தைப் பார்த்திராதவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். தொற்றுக்குள்ளானவர்களின் அக்குளிலும், இடுப்புப் பகுதியிலும் வீக்கம் ஏற்படும். பேசிக்கொண்டிருக்கும் போதே செத்து விழுவார்கள். அவர்களின் உடல்கள் குழிகளில் மொத்தமாக அடுக்கப்பட்டு அடக்கம் செய்யப்படும்” என்று அவர் எழுதியிருக்கிறார்.

“இறந்த ஆடுகளுக்கு இன்றைக்குக் கிடைக்கும் மரியாதைகூட, ஃப்ளோரன்ஸ் நகரில் அப்போது ப்ளேக்கால் மரணமடைந்தவர்களுக்குக் கிடைக்கவில்லை” என்று எழுதியிருக்கிறார் இத்தாலிய எழுத்தாளர் ஜுவானி பொக்காச்சியோ.

மர்மமான முடிவு
ப்ளேக் பெருந்தொற்று ஒருகட்டத்தில் முடிவடைந்தது. எனினும், மீண்டும் அது ஏற்படவே செய்தது. 1855-ல் சீனாவில் மிக மோசமான பெருந்தொற்று ஏற்பட்டது. அது உலக அளவில் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவில் மட்டும் 1.2 கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மும்பையைச் சேர்ந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், ப்ளேக் பரவலைத் தடுக்க மக்களை வெளியேற்றிவிட்டு கிராமத்தையே எரிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ஒரு கட்டத்தில் பூபோனிக் ப்ளேக் பரவல் முடிவுக்கு வந்தது. ஆனால், அது எப்படி நடந்தது என்று தெளிவாகச் சொல்ல முடியாது என்று யேல் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர் ஃப்ராங்க் ஸ்னோடன் கூறியிருக்கிறார். குளிர்காலத்தின்போது, எலிகளின் உடலில் இருந்த உண்ணிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், சுவாசத் துளிகள் மூலம் பரவுவது தடைப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று டாக்டர் ஸ்னோடன் கூறியிருக்கிறார்.

இன்னொரு அம்சமும் காரணமாக இருக்கலாம். “19-ம் நூற்றாண்டில் கறுப்பு நிற எலிகள் மூலமாக அல்லாமல், பழுப்பு நிற எலிகள் மூலம் ப்ளேக் பரவியது. கறுப்பு நிற எலிகளைவிட வலிமையானவையான பழுப்பு நிற எலிகள், மனிதர்களைவிட்டு அதிகத் தொலைவில் வசிக்கக்கூடியவை” என்று ஸ்னோடன் கூறியிருக்கிறார். அப்போது பரவிய பாக்டீரியா அதிக ஆபத்தில்லாததாக இருக்கலாம் என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அல்லது, கிராமங்களை எரிப்பது போன்ற நடவடிக்கைகள், தொற்றுநோயைத் தணிக்க உதவியிருக்கலாம்.

எனினும், ப்ளேக் இன்னமும் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை. அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதிகளில் வசிக்கும் தரை நாய்கள் (பிரேரி டாக்ஸ் –புல்வெளிப் பகுதியில் வசிக்கும் எலியினம்) மூலம் மனிதர்களுக்கு ப்ளேக் பரவுகிறது. நியூ மெக்ஸிகோ நகரின் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த தனது நண்பருக்கு ப்ளேக் தொற்று ஏற்பட்டதாக டாக்டர் ஸ்னோடன் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அறையில் அவருக்கு முன்னர் தங்கியிருந்தவர்கள், தரை நாய் ஒன்றை வைத்திருந்ததாகவும், அந்தப் பிராணியின் உடலிலிருந்த உண்ணிகளிடம் நுண்ணுயிரிகள் இருந்தன என்றும் பின்னர் தெரியவந்தன. ஆனால், மிக அரிதாகத்தான் இதுபோன்ற தொற்றுகள் ஏற்படுகின்றன. ஆன்டிபயாட்டிக்ஸ் மருந்துகள் மூலம் அவற்றையும் வெற்றிகரமாகக் குணப்படுத்த முடியும்.

இன்னும் சில பெருந்தொற்றுகள்
மருத்துவரீதியாக வெற்றிகரமாக முடிவு கட்டப்பட்ட நோய்களில் ஒன்று பெரியம்மை. எனினும், பல வகைகளில் அது விதிவிலக்கானது. அதற்கென சிறப்பான தடுப்பூசி உண்டு. அது வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கிறது. பெரியம்மை உருவாகக் காரணமான வேரியோலா மைனர் எனும் வைரஸ் எந்த விலங்கின் உடலிலும் இருக்காது. எனவே, மனிதர்களிடமிருந்து பெரியம்மையை ஒழிப்பது என்பது அந்நோயை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதுதான்.

பெரியம்மையால் பாதிக்கப்பட்ட கடைசி நபர் சோமாலியாவைச் சேர்ந்த அலி மாவ் மாலின். மருத்துவமனையில் சமையல் கலைஞராகப் பணிபுரிந்த அவர், 1977-ல் பெரியம்மையால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த அவர், 2013-ல் மலேரியாவால் உயிரிழந்தார்.

‘1918 ஃப்ளூ’ பாதிப்பை, (இது ‘ஸ்பானிஷ் ஃப்ளூ’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறது) ஒரு பெருந்தொற்று எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கும், இன்றைக்கு நாம் பின்பற்றும் தனிமைப்படுத்துதல், தனிமனித இடைவெளி போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்துவதற்கும் உதாரணமாகச் சொல்லலாம். முதலாம் உலகப் போர் காலத்தில் ஏற்பட்ட அந்தப் பெருந்தொற்றின் காரணமாக உலகம் முழுவதும் 5 கோடி முதல் 10 வரையிலான மக்கள் உயிரிழந்தார்கள்.

உலகம் முழுவதும் பரவியிருந்த அந்த நோய், ஒருவழியாக மெல்ல மறைந்தது. “தீயைப் போல் பரவிய அந்த நோய், எளிதாகத் தனக்குக் கிடைத்த மரங்களை எரித்து முடித்த பின்னர் அணைந்து விட்டதைப் போல் மறைந்தது” என்று டாக்டர் ஸ்னோடன் கூறுகிறார். அந்த நோய், சமூக ரீதியாகவும் முடிவுக்கு வந்தது. முதலாம் உலகப் போர் முடிந்த பின்னர், மக்கள் ஒரு புதிய தொடக்கத்துக்கு, ஒரு புதிய யுகத்துக்குத் தயாராக இருந்தனர். நோய் மற்றும் போரின் கொடுங்கனவுகளை மறக்க ஆவல் கொண்டிருந்தனர். 1918 இறுதியில் அந்த நோய் பெருமளவுக்கு மறக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகும் பெருந்தொற்றுகள் வந்திருக்கின்றன. அவற்றில் எதையுமே மிக மோசமானது என்றோ, மிகச் சாதாரணமானது என்றோ சொல்லிவிட முடியாது. 1968-ல், ‘ஹாங்காங் ஃப்ளூ’ நோயால், உலகம் முழுவதும் 10 லட்சம் பேர் உயிரிழந்தார்கள். அமெரிக்காவில் 1 லட்சம் பேர் அந்நோயால் மரணமடைந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் 65 வயதைக் கடந்தவர்கள். அந்த வைரஸ் இன்னமும் ஒரு பருவகாலக் காய்ச்சலாக வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. எனினும், ஆரம்பத்தில் அது ஏற்படுத்திய பாதிப்புகளும் அது தொடர்பான பயமும் இப்போது இல்லை.

கோவிட்-19 எப்படி முடிவுக்கு வரும்?
கரோனா வைரஸ் மருத்துவ ரீதியாக முடிவுக்கு வருவதற்கு முன்னர், சமூக ரீதியாக முடிவுக்கு வரலாம் என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். தற்போதைய கட்டுப்பாடுகளால் களைப்புறும் மக்கள், வைரஸ் தொற்று பலரிடம் தொடரும் நிலையிலும், இன்னும் தடுப்பூசியோ, தகுந்த சிகிச்சை முறையோ கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் இந்தப் பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கலாம்.

“இது சோர்வு மற்றும் விரக்தியின் காரணமாக ஏற்பட்டிருக்கும் சமூக உளவியல் பிரச்சினை என்று நினைக்கிறேன். ‘போதும். இனி நான் எனது இயல்பு வாழ்க்கைத் திரும்ப விரும்புகிறேன்’ என்று மக்கள் சொல்லக்கூடிய தருணத்தை நாம் நெருங்கிவிட்டோம் என்று தோன்றுகிறது” என்கிறார் யேல் பல்கலைக்கழக வரலாற்றாசிரியரான நவோமி ரோஜர்ஸ்.

ஏற்கெனவே அது ஆரம்பித்துவிட்டது. அமெரிக்காவின் சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுவிட்டன. சலூன் கடைகள், உடற்பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுவிட்டன. இவை அவசரகதியில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்று பொது சுகாதார அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையிலும் இந்நடவடிக்கைகள் தொடர்கின்றன. பொதுமுடக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பேரழிவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் பலர் ‘போதும்’ என்று சொல்லும் நிலைக்கு வரலாம்.

“கரோனா வைரஸ் மருத்துவ ரீதியாக முடிவுக்கு வர வேண்டும் என்று பொதுச் சுகாதார அதிகாரிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், சமூக ரீதியிலேயே அது முடிவுக்கு வரும் என்று மக்களில் ஒரு பிரிவினர் கருதுகிறார்கள்.

எனினும், “உடனடியான வெற்றி கிடைக்கப் போவதில்லை. இந்தப் பெருந்தொற்றின் முடிவை வரையறுப்பது என்பது மிக நீண்ட, கடினமான விஷயமாக இருக்கும்” என்கிறார் டாக்டர் பிராண்ட்.

- ஜீனா கொலாட்டா, நன்றி: தி நியூயார்க் டைம்ஸ்
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்