கரோனா இன்று உலகமெங்கும் அனைவரையும் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. எந்நேரமும் கரோனா குறித்த செய்திகள்தாம். ‘கரோனா’ வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் கண்களைப் பாதுகாப்பாக வைப்பது குறித்த தகவல்களை உலகெங்கும் உள்ள கண் மருத்துவச் சங்கங்கள் வெளியிட்டு வருகின்றன.
கண்ணில் சிவப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டுமா ?
‘மெட்ராஸ் ஐ’ என்று சொல்லப்படும் கண்வலி ‘அடினோ’ வைரஸால் ஏற்படக்கூடியது. இதுபோன்ற கண்சிவப்பு ‘கரோனா’ வைரஸ் தொற்றின் அறிகுறியாக இருக்குமா என்பது சிலரது சந்தேகம். ஒரு வேளை சிவப்பு ஏற்பட்டால் பயப்பட வேண்டுமா என்றும் கேட்கிறார்கள்.
இதுவரையிலும் ‘கரோனா’ வைரஸ் தொற்றின் அறிகுறியாகக் கண் சிவப்பு வரையறை செய்யப்படவில்லை. பொதுவாகக் கண்ணில் சிவப்பு, கண் இமை வீக்கம், கண்ணில் பீளை தள்ளுதல், கண் இமை ஒட்டிக்கொள்ளுதல், நீர் வடிதல் போன்ற பிரச்சினை ஏற்பட்டால் கண் மருத்துவரின் அறிவுரையைப் பெறுவது நல்லது.
அதே நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான ஒருவர் தும்மும்போதோ இருமும்போதோ வெளிப்படும் நீர்த்திவலைகள் எதிரில் இருப்பவர்களின் கண்ணில் விழும்போது அவர்களுக்குக் கண்வலியுடன் கரோனா தொற்று ஏற்படும் ஆபத்தும் மிக அதிகமாக இருக்கிறது. எனவேதான் அரசு அனைவரையும் முகக்கவசம் அணியும்படி அறிவுறுத்துகிறது. இதன் மூலம் நோய்த் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது.
ஒருவருக்குக் கண்சிவப்புடன் காய்ச்சலோ, சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகளோ இருந்தால் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு உடனே மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.
மேலும், வீட்டில் உள்ள மேல்நிலை நீர்த் தொட்டி நீண்ட நாட்களாகச் சுத்தம் செய்யாமல் இருக்கும்போது நீர் அசுத்தமாகி அதில் தொற்று ஏற்படலாம். வீட்டில் உள்ளவர்கள் இந்த அசுத்த நீரால் கண்களைக் கழுவும்போது கண்ணில் தொற்று ஏற்பட்டு கண்ணில் சிவப்பு உருவாகும் ஆபத்து இருக்கிறது. எனவே, நீர்த்தொட்டிகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்வது நல்லது. வீட்டில் இருக்கும் இந்தக் காலத்தில் அதைச் செய்யலாம்.
அமெரிக்கக் கண்மருத்துவ அகாடமி சொல்லும் அறிவுரை
பலருக்கு அடிக்கடி கண்களைத் தேய்க்கும் பழக்கம் இருக்கும், சிலர் கண்களைத் தேய்த்துக் கண்ணின் ஓரத்தில் இருக்கும் அழுக்கு, பீளையினை எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் கைகளை நன்றாகக் கழுவாமல் முகத்தைத் தொடக் கூடாது.
கண்ணாடி அணிந்திருப்பவர்கள் கண்ணாடியையும் அடிக்கடி வெறும் கையால் தொடக்கூடாது. கண்ணாடியை சோப்பால் கழுவிவிட்டு உலர வைத்து பின்னர் போட்டுக் கொள்ளலாம்.
கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்கள், கரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் இந்தக் காலத்தில் லென்ஸை எடுத்துவிட்டுப் பதிலாகக் கண்ணாடியைப் போட்டுக் கொள்வது நல்லது.
கண்ணுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுப்பது எப்படி?
அரசின் அறிவுரைப்படி நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டி ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே அனைவரும் முடங்கிக் கிடக்கிறோம். பொழுதைக் கழிக்க அலைபேசியை அடிக்கடி பார்க்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
இவ்வாறு கண்ணுக்கு அருகிலேயே மிகச் சிறிய திரை கொண்ட அலைபேசியைத் தொடர்ந்து பல மணிநேரம் பார்ப்பதன் மூலம் கண்கள் விரைவில் களைப்படையலாம். இதனால் பார்வை மங்கல், தலைவலி, கண்ணில் வலி, கண்ணில் எரிச்சல்-சிவப்பு, போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட முடிந்தவரை அலைபேசிக்குப் பதிலாக மேஜைக் கணினி, மடிக்கணினி அல்லது ‘ஐ’ பாடைப் பயன்படுத்தலாம்.
மேலும், இவ்வாறு பார்க்கும்போது 20:20 என்ற பார்முலாவை நினைவில் கொள்வது நல்லது. அதாவது ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் கண்களைக் கணினி/அலைபேசியிலிருந்து விலக்கி 20 அடி தொலைவில் உள்ள பொருளைப் பார்த்துவிட்டுக் கண்களை நான்கைந்து முறை சிமிட்டிவிட்டு மீண்டும் பார்க்கலாம். இதன் மூலம் கண்ணுக்கு ஏற்படும் அனைத்து அசௌகரியங்களையும் தவிர்க்கலாம்.
குழந்தைகளுக்குச் சிறப்புக் கவனம் தேவையா?
ஆமாம், கண்டிப்பாகத் தேவை. குழந்தைகளுக்கு அண்மைக்காலமாகக் கிட்டப்பார்வைக் குறைபாடு கணிசமான அளவில் விரைவாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இது உலகளாவிய பிரச்சினை. குழந்தைகள் செல்போன், கணினி போன்ற மின்னணு சாதனங்களை அதிக நேரம் தொடர்ந்து பயன்படுத்துவதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். விழிக்கோளத்தின் இயல்பான வளர்ச்சிக்கும் வடிவத்துக்கும் சூரிய ஒளி அவசியம். ஆனால், பிள்ளைகள் வீட்டுக்கு வெளியில் சென்று விளையாடாததால் (Myopia ) கிட்டப்பார்வைக் குறைபாடு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே இந்தப் பிரச்சினை இப்படி இருக்கையில் தற்போதைய ஊரடங்கு காலத்தில் இந்த மின்னணு சாதனங்களின் பயன்பாடு மேலும் அதிகரித்து வருவது கண்கூடு. பிறகு இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு? இருக்கிறது. 5 வயது முதல் 15 வயதுள்ள பிள்ளைகளைத் தினமும் காலையில் சூரிய ஒளியில் நிற்கச் சொல்லலாம். மொட்டை மாடியிலோ பால்கனியிலோ அல்லது வீட்டுக்கு வெளியிலோ அரை மணிநேரம் உடலில் சூரிய ஒளி படும்படி நிற்கச் செய்யலாம். இதன் மூலம் கிட்டப்பார்வை ஏற்படுவதை ஓரளவு தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அப்படி நிற்கும்போது கண்ணில் சூரிய ஒளி நேரடியாகப் படாதவாறு நிற்க வேண்டும்.
யாரும் எதிர்பாராமல் விரும்பத்தகாத விருந்தாளியாக கரோனா வந்துவிட்டது. இந்த ஊரடங்கு காலத்தில் சமூக விலகலை முறையாகக் கடைப்பிடித்து கரோனா வைரஸ் நோயை விரட்டி அடிப்போம்.
கட்டுரையாளர், மதுரை அரசு கண் மருத்துவ உதவியாளர்
தொடர்புக்கு: veera.opt@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago