சுனில்குமார் இந்த மாதச் சம்பளத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். பிறந்த குழந்தைக்குப் புதுத் துணிகளும் தொட்டிலும் விளையாட்டுப் பொருட்களும் வாங்குவதுதான் அவருடைய இப்போதைய இலக்கு. காசர்கோடு அரசு மருத்துவமனையின் கரோனா வார்டில், தனியார் காவலாளியாக சுனில்குமார் சேர்த்துக்கொள்ளப்பட்டபோது, அவரது மனைவி நிறைமாதக் கர்ப்பிணி. குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், பணியிலிருந்து விலகிக்கொள்ளும் சூழல் இருந்தும் தொடர்கிறார். அவரிடம் பேசினேன்.
கரோனா வார்டில் உங்களுடைய பணி என்ன?
நோயாளிகள் இருக்கும் அறைக்குள் மருத்துவர்கள், செவிலியர்கள் போகும்போது கதவைத் திறந்துவிட வேண்டும். மற்றவர்கள் உள்ளே போய்விடாமலும், கரோனா நோயாளிகள் வெளியே வந்துவிடாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். கூடவே, மருத்துவக் கழிவுகளையும் பயன்படுத்திய பொருட்களையும் அறையை விட்டு வெளியே கொண்டுசெல்லும் வேலையும் என்னுடையதுதான்.
இந்தப் பணிக்குள் எப்படி வந்தீர்கள்? கரோனா வார்டுக்குள் இருப்பது அச்சமூட்டுவதாக இருக்கிறதா?
கரோனாவைவிடக் கொடுமையான ஒரு விஷயம் சொல்லட்டுமா? வேலையில்லாத் திண்டாட்டம்! நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் எனக்கு இந்த வேலை கிடைத்தது. இதற்கு முன் சின்னச் சின்னதாகப் பல வேலைகளையும் செய்துதான் குடும்பத்தை நகர்த்திக்கொண்டிருந்தேன். அதிலெல்லாம் போதிய வருமானம் இல்லாத சூழலில்தான், தனியார் நிறுவன செக்யூரிட்டியாக வேலைக்குச் சேர்ந்தேன். இது ஒப்பந்த அடிப்படையிலான தற்காலப் பணி. ஏதாவது ஒரு கடைக்கோ கம்பெனிக்கோ அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்திருந்தபோது, காசர்கோடு கரோனா வார்டில் வேலைக்குக் கேட்டார்கள். பலரும் சம்மதிக்கவில்லை. அதனால்தான், எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. மார்ச் 31 அன்று பணிக்கு வந்தேன். அப்போது என் மனைவி நிறைமாதக் கர்ப்பிணி. என் வீடு மருத்துவமனைக்குப் பக்கத்திலேயே இருந்தாலும் இதுவரை வீட்டுக்குப் போகவில்லை. பெண் குழந்தை பிறந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. நான் வேலைசெய்யும் வார்டில் இன்னும் நான்கு நோயாளிகள் இருக்கிறார்கள். குழந்தையை அள்ளித் தூக்கும் ஆசையைச் சுமந்துகொண்டுதான் வேலை பார்க்கிறேன்.
வீடியோ கால் வழியாகவாவது குழந்தையைப் பார்த்தீர்களா?
இல்லை. எனக்கு அதில் விருப்பம் இல்லை. முதலில் வயிற்றுப் பிழைப்பு என்றுதான் இந்தப் பணியை அணுகினேன். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு இயந்திரம் என ஒவ்வொருவரும் பம்பரமாய்ச் சுழன்று வேலைசெய்வதைப் பார்த்ததும், எனக்குள்ளும் ஒரு பொறுப்புணர்வு வந்தது. சமூகத்துக்காகப் பங்களிக்க வேண்டும் எனும் உணர்வை இப்படிக் கடைநிலையில் இருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் விதைத்திருப்பதுதான் கரோனாவைக் கேரளம் வீழ்த்தியதற்கு முக்கியக் காரணம். அதேநேரம், தனிப்பட்ட வகையில் நான் நிறைய இழந்திருக்கிறேன். மனைவிக்குப் பிரசவ வலி வந்தபோது, தாங்கிப்பிடிக்க நான் இல்லை. தலைப்பிரசவக் காத்திருப்பாக மருத்துவமனையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க வாய்க்கவில்லை. பிரசவத்துக்குப் பின் குழந்தையைக் கைகளில் ஏந்திய தருணங்கள் என்னிடம் இல்லை. நான்கு நோயாளிகளும் குணமடைந்து, முன்னெச்சரிக்கையாக என்னுடைய சுயதனிமைப்படுத்துதல் முடிந்த பின் குழந்தையைப் பார்க்கும்போது, இரண்டு மாதங்கள் தாண்டியிருக்கும். என் கைகளில் குழந்தை இருக்கும்போது கழிக்கும் சிறுநீரில் என் நினைவுகளின் தேக்கங்கள் கரைந்துபோகும். அந்தத் தருணத்தை செல்பேசியின் வீடியோ கேமராவுக்குக் காவுகொடுக்க விரும்பவில்லை.
பணிக் காலத்தில் நடந்த நெகிழ்ச்சியான தருணம் பற்றிச் சொல்லுங்களேன்?
கேரளத்திலேயே காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு பகுதிகளில்தான் கரோனா நோயாளிகள் அதிகம். 50 பேருக்கும் மேல் இந்த வார்டில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். நோயாளிகளுக்கு வெளியுலகத் தொடர்பே தங்களுக்கு கையில் இருக்கும் செல்பேசி என்பதாகத்தான் இருந்தது. நான் அவர்களுடைய குடும்பத்துக்கும் அவர்களுக்குமான இணைப்புப் பாலமாக இருந்தேன். உங்களுக்காகத் தினமும் எத்தனை பேர் வந்து நலம் விசாரித்துச் செல்கிறார்கள் தெரியுமா என்ற அந்த ஒற்றை வாக்கியத்தை நோயாளிகளிடம் சொல்லும்போது, அவ்வளவு உற்சாகமடைவார்கள்! மேலும், ஒரு துயர்மிகு காலகட்டமான இன்று, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் நானும் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் களத்தில் இருப்பதே நெகிழ்ச்சியானதுதானே!
- என்.சுவாமிநாதன், தொடர்புக்கு: swaminathan.n@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago