கதம்பம்: பொய்ச் சிறை, நிஜ நாடகம்!

By வெ.சந்திரமோகன்

உலகமெங்கும் சிறைக் கைதிகள் நடத்தப்படும் விதம்குறித்த விமர்சனங்களும், ஆய்வுகளும் முடிவின்றி நீள்கின்றன. குறிப்பாக, போரில் வெற்றிபெறும் நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் போர்க் கைதிகளை நடத்தும் விதம் குறித்து உளவியல் ரீதியான ஆய்வுகளும் நடத்தப்படுகின்றன. 1971-ல் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற பரிசோதனை ஒன்று நடத்தப்பட்டது. அமெரிக்கக் கப்பற்படை ஆய்வகத்தின் ஆதரவுடன் உளவியல் துறைப் பேராசிரியர் பிலிப் ஜிம்பார்டோ நடத்திய இந்த ஆய்வுக்காக, 24 மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்களில் 12 பேர் சிறைக் கைதிகளாகவும் மற்றவர்கள் சிறைக் காவலர்களாகவும் நடந்துகொள்வது என்றும் அவர்களது நடவடிக்கைகளைத் தொலைக்காட்சி கேமராக்கள் மூலம் கண்காணிப்பது என்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை கட்டிடத்தின் பாதாள அறை சிறை வளாகம் போல் மாற்றப்பட்டது.

பரிசோதனை இரண்டு வாரங்கள் நடத்தப்படும் என்றும் முடிவுசெய்யப்பட்டிருந்தது. உளவியல் பிரச்சினைகளோ உடல் ரீதியான பிரச்சினைகளோ, குற்றப் பின்னணியோ இல்லாத மாணவர்கள்தான் தேர்வுசெய்யப்பட்டிருந்தனர். அசல் காவலர்கள்போல் சீருடை, லத்தி வழங்கப்பட்டிருந்தாலும் ‘கைதி’களை உடல் ரீதியாகத் துன்புறுத்தக் கூடாது என்றும் ‘காவலர்’களிடம் அறிவுறுத்தியிருந்தார் பிலிப் ஜிம்பார்டோ. உண்மையான சிறையின் உணர்வு வர வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு கைதியின் ‘குற்றம்’ பற்றிய ஆவணங்கள், அவர்களுக்கான சீருடைகள் என்று நிஜமான அனுபவத்தைத் தரும் பரிசோதனையாகவே அந்நிகழ்வு நடத்தப்பட்டது.

தொடக்கத்தில் எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தன. ஆனால், இரண்டாவது நாளிலிருந்தே கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கின. காவலர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படாதவர்களுக்குத் தண்டனைகள் அளிக்கப்பட்டன. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கைதிகள் துன்புறுத்தப்பட்டனர்.

கைதிகளாகச் சிறையில் இருந்தவர்கள் 24 மணி நேரமும் கைதிகளாகவே இருந்தனர். ஆனால், காவலர்களாக இருந்தவர்களுக்கு 8 மணி நேரம்தான் பணி நேரம். மற்ற நேரங்களில் கல்லூரி வகுப்புகளில் நல்லதனமான மாணவர்களாகவே இருந்தனர் என்பதுதான் இதில் முக்கியமான விஷயம். பணிக்குச் சென்றவுடன் அவர்களிடம் கடுமையான தோரணை ஏற்பட்டது.

பேராசிரியர் பிலிப் ஜிம்பார்டோவே கடுமையான ஆள்தான். அசம்பாவிதங்கள் நிகழலாம் என்று தெரிந்திருந்தும், துணிச்சலாகவே இந்த ஆய்வை நடத்த முடிவுசெய்திருந்தார். ஆனால், காவலர்களின் குரூரமான நடவடிக்கைகள் அவருக்கே அதிர்ச்சியளித்தன. துன்புறுத்தல்களைத் தாங்க முடியாமல் கைதிகளில் இருவர் ஆய்விலிருந்து வெளியேறிவிட்டனர். எனினும், மனித மனதின் விசித்திரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கம் கொண்டவரான ஜிம்பார்டோ இதற்கெல்லாம் அசையவில்லை. கடைசியில், அவரது காதலியும் உளவியல் துறை மாணவியுமான கிறிஸ்டினா மாஸ்லாஷ் உடனடியாக இதை நிறுத்த வேண்டும் என்று எதிர்ப்புக்காட்டத் தொடங்கினார்.

ஒருவழியாக, ஆறு நாட்களிலேயே இந்த ஆய்வு முடிவுக்கு வந்தது. உளவியல் பரிசோதனைகளில் மிகவும் புகழ்பெற்ற இந்த பரிசோதனை குறித்துப் பல புத்தகங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த வரிசையில் ஜூலை 15-ல் ‘தி ஸ்டான்ஃபோர்டு பிரிஸன் எக்ஸ்பெரிமெண்ட்’ எனும் திரைப்படம் அமெரிக்காவில் வெளியாகியிருக்கிறது. நிஜ சம்பவத்தைப் பார்ப்பதுபோன்ற உணர்வைத் தரும் படம் என்று விமர்சகர்களால் கொண்டாடப்படும் இப்படம், அமெரிக்காவின் சன்டான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்