தங்கள் சொந்த ஊரை நோக்கிச் செல்லும் தண்டவாளத்தின் மீதே சிதறிக்கிடக்கின்றன தொழிலாளர்களின் உடல்கள். ஊருக்குச் சென்றாவது ஏதேனும் செய்து பிழைத்துக்கொள்ளலாம் எனும் எதிர்பார்ப்புடன் தண்டவாளத்தின் மீது தூங்கிக்கொண்டிருந்தவர்களின் கனவுகள் முற்றுப்பெறாமலேயே சிதைந்துவிட்டன.
பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து மகாராஷ்டிரத்திலிருந்து, மத்தியப் பிரதேசம் நோக்கி நடந்துசென்ற 16 தொழிலாளர்களின் வாழ்க்கை இப்படியாக முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியாவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அடைந்துவரும் வேதனையின் உச்சம் இதுதானா, இன்னும் தொடருமா எனும் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
ஆரம்பம் முதலே அலட்சியம்
தொழிலாளர்களின் மரணம் தனக்கு மிகுந்த வேதனையைத் தந்திருப்பதாகப் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஆனால், இந்த விஷயத்தில் ஆரம்பம் முதலே அரசு அலட்சியம் காட்டுகிறது என்பதே உண்மை. 40 நாட்களுக்கும் அதிகமான நாட்கள் அவகாசம் இருந்தும், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை பரிவுடன் அணுக மத்திய அரசு தயாராக இல்லை என்பதைத்தான் இதுவரையிலான நிகழ்வுகள் காட்டுகின்றன.
முதல் கட்டமாகப் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் ஊர்களை நோக்கி ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே சென்ற அவலத்தை யாராலும் மறக்க முடியாது. அப்போது பல தொழிலாளர்கள், தாங்கள் பார்த்துவந்த நிறுவனங்களிடமிருந்து சம்பளத்தைக்கூட பெற முடியவில்லை. பல சூப்பர்வைஸர்கள் தங்கள் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டதால் தவித்துப்போய் குடும்பத்துடன் சாலையில் நடக்கத் தொடங்கிய தொழிலாளர்களின் கண்ணீர்க் கதைகள் ஏராளம்.
சிக்கிக்கொண்டவர்களின் துயரக் கதைகள்
வேறு வழியின்றி நகரங்களிலேயே தங்கிவிட்டவர்களின் கதி இன்னும் கொடுமையானது. உறைவிடம், உணவு, பணம் என்று எதுவும் இல்லாமல் அவர்கள் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாதவை. டெல்லி போன்ற நகரங்களில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் ஏழைக் குடும்பங்கள் அவதிப்பட்ட செய்திகளும் வெளியாகின. சாலையிலேயே தங்கி, ஒருவேளை உணவுக்காக மைல் கணக்கில் நடந்தவர்கள், வழியில் போலீஸாரின் தடியடிக்கு ஆளானவர்கள் ஏராளம்.
துயரத்தில் ஆழ்ந்திருக்கும் தொழிலாளர்களையே குறை சொல்லும் போக்கு, அரசிடமும் ஆதரவு ஊடகங்களிடமும் இருப்பது இன்னொரு பிரச்சினை. வேலை செய்ய வந்த இடத்தில் உணவு, உறைவிடம் இல்லாமல் மாட்டிக்கொண்டிருக்கும் தொழிலாளர்கள், சொந்த ஊருக்குத் தங்களை அனுப்ப வேண்டும் என்று ஒன்றுகூடினால் போலீஸாரால் அடித்து விரட்டப்படுகிறார்கள். மும்பையின் பாந்த்ரா ரயில் நிலையத்தின் முன்னால் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி ஓர் உதாரணம்.
கொஞ்சம்கூட பரிவு இல்லை
சமீபத்தில் குஜராத் மாநிலம் சூரத்தில், சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்திய புலம்பெயர் தொழிலாளர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அதுதொடர்பான செய்தியை ஒளிபரப்பிய இந்தி செய்தி சேனலின் தொகுப்பாளர், “இவர்களுக்கு என்னதான் பிரச்சினை? அரசு இவர்களுக்கு ரயில் வசதி, பேருந்து வசதிகளைச் செய்துதரத்தானே செய்கிறது? தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமல் சாலையில் கூடி இப்படியெல்லாம் போராட்டம் நடத்தினால் கரோனா பரவிவிடாதா?” என்று அக்கறையுடனான அறச்சீற்றத்தை(!) வெளிப்படுத்தினார்.
ஊடகங்களே இப்படி இருந்தால் அரசு என்ன நிலைப்பாட்டில் இருக்கும் என்று கணிப்பது கடினமல்ல. “கிராமத்துக்குச் சென்றுவிட்டால், சாப்பாட்டுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்? தொழிலாளர்கள், தாங்கள் வேலை பார்க்கும் நகரங்களிலிலேயே தங்கியிருந்து வேலை பார்ப்பதுதான் நல்லது” என்று நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரியே பேசுகிறார்.
அதுமட்டுமல்ல. “ஏழை மக்களுக்கான நிவாரணத் தொகையாக 1.70 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அறிவித்திருக்கிறதே, அது என்ன சிறிய தொகையா?” என்று நிதின் கட்கரி கேட்கிறார். ஆனால், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளை ஒப்பிட இது மிக மிகச் சிறிய தொகை என்பதைப் பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவருகிறார்கள். ஆனால், அரசு அதற்குச் செவிமடுப்பதாகத் தெரியவில்லை.
தொடரும் நிர்வாகக் குழப்பம்
புலம்பெயர் தொழிலாளர்களை ரயில் மூலம் திருப்பி அனுப்பும் விஷயத்தில், கட்டணச் செலவை யார் ஏற்பது என்று சர்ச்சை எழுந்தது, மத்திய அரசின் நிர்வாகக் குழப்பத்தைக் காட்டியது. அதேசமயம் மாநில அரசுகளுக்கு இடையிலும் குழப்பம் நீடித்தது. சில மாநில அரசுகள் தங்கள் மாநிலத்திலிருந்து செல்பவர்களுக்கான டிக்கெட் தொகையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தன. சில மாநில அரசுகளோ, தங்கள் மாநிலத்துக்கு வந்து சேரும் தொழிலாளர்களுக்கான கட்டணத்தை மட்டுமே செலுத்துவோம் என்று சொல்லிவிட்டன.
கரோனா தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டவர்களை மட்டும்தான் அனுமதிக்க வேண்டும் என்று ஒடிசா அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது இந்தப் பிரச்சினையின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது. பேருந்துகள் மூலம் தங்கள் சொந்த மாநிலத்துக்குத் திரும்பும் தொழிலாளர்களுக்கு எவ்விதம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பதிலும் தெளிவில்லை. சில மாநிலங்களில், தொழிலாளர்களிடம் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகில் இருக்கும் கட்டுப்பாட்டு முகாம்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஆனால், இது எல்லா இடங்களிலும் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. டெல்லி போன்ற மாநிலங்களில், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் கரோனா பரிசோதனை செய்து மருத்துவச் சான்றிதழை எடுத்துவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பது இன்னொரு குழப்பம்.
கட்டுமானத் தொழிலதிபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, புலம்பெயர் தொழிலாளர்களை ரயில்கள் மூலம் திருப்பியனுப்பும் நடவடிக்கையை கர்நாடக பாஜக அரசு ரத்து செய்ததும் சர்ச்சையானது. “ஊருக்குச் செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களைத் திருப்பி அனுப்புவதற்கும், பணிபுரியும் இடங்களிலேயே தங்கியிருக்கும் தொழிலாளர்கள் சாதாரணமான முறையில் ஊருக்குச் செல்ல விரும்புவதற்கும் வித்தியாசம் இருக்கிறது” என்று அதற்கு விநோத விளக்கம் தந்தார் பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா.
இந்தியாவில் கொத்தடிமை முறை இன்னமும் தொடர்கிறதா என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்த பின்னர்தான் தன் தவறைத் திருத்திக்கொண்டு மீண்டும் சிறப்பு ரயில்களை இயக்கியது கர்நாடக அரசு. இதற்கிடையே, வெளிமாநிலத் தொழிலாளர்கள் கால்நடையாகவே சொந்த ஊருக்குப் புறப்பட்டுவிட்டனர்.
நகரத்துக்குத் திரும்பவே மாட்டோம்
மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து பிஹார் போன்ற மாநிலங்களுக்குப் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளர்கள், தலா 800 ரூபாய் வரை செலவழிக்க நேர்ந்தது. இதனால், கையிருப்பில் இருந்த பணத்தையும் பேருந்துக் கட்டணத்துக்காகக் கொடுத்துவிட்டவர்கள் ஏராளம். புலம்பெயர் தொழிலாளர்களின் பயணச் செலவை ஏற்றுக்கொள்வதாக அரசுகள் அறிவித்திருந்தாலும், பெரும்பாலான இடங்களில் இதுதான் நிதர்சனம்.
சாலையில் நடந்தே சென்ற தொழிலாளர்கள், லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் லிஃப்ட் கேட்டும் ஏறிச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்களிடம் பணம் இல்லாததால் வாகனத்தில் ஏற்றிக்கொள்ள பலரும் மறுத்துவிட்டார்கள். அப்படியே ஏற்றிச் சென்றாலும், வழியில் போலீஸார் மடக்கி கீழே இறக்கி நடக்கவிட்ட கதைகளும் தொழிலாளர்களிடம் ஏராளமாக உண்டு. தங்கள் சொந்த மாநில எல்லையை அடைந்த பின்னர், கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் ‘வரவேற்பு’ சமகாலத்தில் நாம் கண்டிராத பேரவலம்.
“அரசுகள் எங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. நகரத்தில் மிகுந்த துன்பங்களை அனுபவித்து விட்டோம். இனி மீண்டும் நகரத்துக்குத் திரும்பவே மாட்டோம். ஊரிலேயே விவசாயம், சிறு தொழில் என்று ஏதாவது செய்து பிழைத்துக்கொள்வோம்” என்று வேதனையும் விரக்தியுமாகப் பேசுகிறார்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்.
அதிகரிக்கப்படும் பணி நேரம்
இத்தனைக்கும் இடையில், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்புவதால், தொழிலாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையைக் காரணம் காட்டி இன்னொரு சிக்கலைச் சில மாநிலங்கள் ஏற்படுத்துகின்றன. பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அதிகரித்திருக்கின்றன. மத்திய அரசும் அந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. ஆக, பெருந்தொற்றால் தேசத்துக்கு ஏற்பட்டிருக்கும் பெருஞ்சுமை, கடைசியில் தொழிலாளர்களின் தலையில் ஏற்றப்படுகிறது.
“பணக்காரர்கள் போரைத் தொடங்கும்போது, இறந்துபோவது ஏழைகள்தான்” என்பது பிரெஞ்சு எழுத்தாளர் ழான் பால் சார்த்தரின் கூற்று. இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான போரில் அது பட்டவர்த்தனமாகியிருக்கிறது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago