கரோனா தடுப்பு மருந்து எப்போது தயாராகும்?

By ஆர்.பிரசாத்

கரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து வெள்ளோட்டத்தின் முதல் கட்டம் ஏப்ரல் 23 அன்று தொடங்கியது. இந்தத் தடுப்பு மருந்துக்கு ‘சாடோக்ஸ்1 என்கோவ்-19’ (ChAdOx1 nCov-19) என்று பெயர். வெள்ளோட்டத்தின் முதல் கட்டத்தில் தடுப்பு மருந்தானது மனிதர்களுக்குக் கொடுத்துப் பரிசோதிக்கப்படுகிறது. இந்த மருந்தைக் கண்டறிந்திருப்பது, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம். இந்த ஆண்டின் இறுதிக்குள் கோடிக்கணக்கான டோஸ்கள் அளவுக்கு இந்த மருந்தை உற்பத்திசெய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த மருந்து எப்படி உருவாக்கப்பட்டது?

ஜலதோஷத்துக்குக் காரணமாவதும், சிம்பன்சி குரங்குகளுக்குத் தொற்று ஏற்படுத்துவதுமான அடினோ வைரஸைப் பயன்படுத்திக்கொள்கிறது ‘சாடோக்ஸ்1 என்கோவ்-19’. இதை உடலில் செலுத்தியதும் பெருக்கம் அடையாத வகையில், அடினோ வைரஸ் மரபணுரீதியாக மாற்றப்படுகிறது. இது கரோனா வைரஸின் புரதக் குச்சிகளை உருவாக்கும் மரபணுக் கூறுகளைக் கொண்டிருக்கிறது. இந்தப் புரதக் குச்சி கரோனா வைரஸின் மேற்பரப்பில் காணப்படுகிறது. இதுதான் மனித செல்லுக்குள் நுழைவதில் பிரதானப் பங்கு வகிக்கிறது. புரதக் குச்சியின் மரபணுக் கூறுகளை உடலுக்கு இந்தத் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்துகிறது. அதன் மூலம் இந்தத் தடுப்பு மருந்து புரதக் குச்சிக்கு எதிரான எதிர்முறிகளை (Antibodies) உடல் உருவாக்க உதவுகிறது. இந்த எதிர்முறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மனித செல்களில் வைரஸ் நுழையாமல் தடுக்கின்றன. அடினோ வைரஸைக் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளை 320 பேருக்குக் கொடுத்துப் பார்த்ததில், அது பாதுகாப்பானதாகவும் உடலால் ஏற்றுக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தது. தற்காலிகப் பக்கவிளைவுகளான காய்ச்சல், தலைவலி, கையில் புண் போன்றவற்றை ஏற்படுத்தினாலும் மற்றபடி பாதுகாப்பானதாகவே இருக்கிறது.

விலங்குகளில் பரிசோதிக்கப்பட்டிருக்கிறதா?

அடினோ வைரஸைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்து சார்ஸ், மெர்ஸ் ஆகியவற்றுக்கு எதிராகவும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது. மெர்ஸ் தடுப்பு மருந்தின் பாதுகாப்புத்தன்மை பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த டிசம்பரில் சவுதி அரேபியாவில் ஒரு வெள்ளோட்டம் தொடங்கியது. அங்கேதான் மெர்ஸ் தொற்று அடிக்கடி ஏற்படும். இந்தத் தடுப்பு மருந்து பாதுகாப்பானதா என்பதைக் கண்டறிய ஆறு ரீசஸ் குரங்குகளுக்குச் செலுத்திப் பரிசோதிக்கப்பட்டது. ஒரே ஒரு டோஸ் மருந்தானது இந்த ஆறு குரங்குகளையும் அதிகபட்ச வைரஸ் அளவுகளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை காப்பாற்றியது. இதனால், ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை மேலும் உறுதிப்பட்டது.

இந்த வெள்ளோட்டத்துக்கு எவ்வளவு காலம் ஆகும்?

முதல் கட்ட வெள்ளோட்டம் மே இறுதியில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்ட வெள்ளோட்டம் ஆகஸ்ட், செப்டம்பர் வாக்கில் நிறைவடையும். புனேவைச் சேர்ந்த ‘சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா’ நிறுவனத்தைப் பொறுத்தவரை முதல் கட்டப் பரிசோதனையின் முடிவுகள் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தால் இரண்டாம் மூன்றாம் கட்டப் பரிசோதனைகளை ஒன்றாக்கிவிடலாம்.

மருத்துவ வெள்ளோட்டத்தில் நடைமுறை என்ன?

ஆக்ஸ்ஃபோர்டு, சதாம்ப்ட்டன், லண்டன் பிரிஸ்டல் ஆகிய நகரங்களிலிருந்து ஆரோக்கியமான 1,112 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 18-55 வயதுக்கு இடைப்பட்ட இந்தத் தன்னார்வலர்களில் ஆண்கள்-பெண்கள் இருபாலரும் உண்டு. தடுப்பு மருந்து இவர்களுக்கு ஒரு டோஸ் கொடுக்கப்படும். தன்னார்வலர்கள் சிலருக்கு ‘சாடோக்ஸ்1 என்கோவ்-19’ தடுப்பு மருந்தும், சிலருக்கு ‘மெனாக்வி’ தடுப்பு மருந்தும் ஒப்பீட்டுக்காகக் கொடுக்கப்படும். தங்களுக்கு எந்த மருந்து கொடுக்கப்படுகிறது என்பதைப் பற்றித் தன்னார்வலர்களுக்குத் தெரியாது. அது மட்டுமல்லாமல், நான்கு வார இடைவெளியில் 10 தன்னார்வலர்களுக்கு மட்டும் இரண்டு டோஸ்கள் ‘சாடோக்ஸ்1என்கோவ்-19’ மருந்து தரப்படும். மருந்து அளவையும் எதிர்ப்பாற்றலையும் பரிசோதிப்பதற்காகத்தான் இப்படி. அதே நேரத்தில், இரண்டு வகை தடுப்பு மருந்தும் போடப்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட வேண்டியதும் அவசியம். அப்போதுதான் அந்த வைரஸுக்கு எதிரான தடுப்பாற்றல் அவர்களிடம் செயல்படுகிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

புனேவிலுள்ள சீரம் நிறுவனம் இந்தத் தடுப்பு மருந்தை எப்போது தயாரிக்கத் தொடங்கும்?

ஆக்ஸ்ஃபோர்டில் மூன்றாம் கட்ட வெள்ளோட்டம் தொடங்கியதுமே அந்த நிறுவனம் தடுப்பு மருந்தைத் தயாரிக்கத் தொடங்கிவிடும். இறுதி இரண்டு கட்டங்களும் சேர்த்துச் செய்யப்படும் என்றால், ஜூன் இறுதிக்குள் மருந்து தயாரிப்பைத் தொடங்கிவிடும். ஆண்டு இறுதிக்குள் கோடிக்கணக்கான டோஸ்கள் தயாராகிவிடும். இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆறு ஏழு கோடி டோஸ் மருந்து தயாரிக்கும் நம்பிக்கையில் அந்த நிறுவனம் உள்ளது.

மருந்தின் விலை எப்படி இருக்கும்?

இந்த மருந்தைத் தயாரிப்பதற்கும் விநியோகிப்பதற்கும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக ஆக்ஸ்ஃபோர்டு சொல்லியிருக்கிறது. கரோனா கொள்ளைநோய் நீடிக்கும் வரை லாபமற்ற நோக்கத்தில் இந்த மருந்துகள் கிடைக்கும் என்றும் ஆக்ஸ்ஃபோர்டு தெரிவிக்கிறது.

© ‘தி இந்து’, தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

25 days ago

கருத்துப் பேழை

25 days ago

கருத்துப் பேழை

25 days ago

மேலும்