இந்தியாவில் சமூக இடைவெளி சாத்தியமா?

By ஆசை

சீனாவை மையமாகக் கொண்டிருந்த கரோனா தற்போது ஐரோப்பாவைத் தனது கேந்திரமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் கரோனா பாதிப்பு இதுவரை குறைவாக உள்ள இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் இருப்பதற்கு தனிமனித இடைவெளி பரிந்துரைக்கப்பட்டது. இதுகுறித்த விவாதங்களில் பலரும் ஒரு பிழையான ஒப்பீட்டைச் செய்துவிடுகிறார்கள். அது சீன மக்கள்தொகையுடன் இந்திய மக்கள்தொகையை ஒப்பிடுவது.

143 கோடியுடன் உலகிலேயே மக்கள்தொகை அதிகமாகக் கொண்ட நாடு சீனா. அதன் பரப்பளவு 95,96,961. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 145 பேர் வசிக்கிறார்கள். இந்தியாவின் பரப்பளவோ சீனாவுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. 2018-ன் கணிப்பின்படி இந்தியாவின் மக்கள்தொகை 135 கோடி. பரப்பளவு சீனாவைவிட மூன்று மடங்கு குறைவு: 32,87,263. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு இந்தியாவில் சராசரியாக 405.5 பேர் வசிக்கிறார்கள். இது இந்தியாவின் ஒட்டுமொத்த சராசரி. இந்திய மாநகரங்களின் மக்கள்தொகையையும் ஒரு சதுர கி.மீ.க்கு எவ்வளவு பேர் சராசரியாக வசிக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் இந்திய சராசரியைவிட மிக அதிகமாக இருக்கும்.

உதாரணத்துக்கு, இந்தியாவில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட மும்பையை எடுத்துக்கொள்வோம். இதன் மக்கள்தொகை 1.95 கோடி. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 32,303 பேர் வசிக்கிறார்கள். இது தேசிய சராசரியை விட கிட்டத்தட்ட 80 மடங்கு அதிகம். கரோனா புறப்பட்ட வூஹானை எடுத்துக்கொள்வோம். அதன் மக்கள்தொகை 1.1 கோடி. மக்கள்தொகை அடர்த்தி 1,152. இதனுடன் ஒப்பிட்டால் மும்பையின் மக்கள்தொகை அடர்த்தி வூஹானின் அடர்த்தியைவிட 28 மடங்கு அதிகம். சென்னையின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 90 லட்சம். ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சென்னையில் 17 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். இது தேசிய சராசரியைவிட 42 மடங்கு அதிகம். வூஹானைவிட சுமார் 15 மடங்கு அதிகம்.

இந்தியாவைப் பொறுத்தவரை கரோனாவை மிகவும் ஆபத்தானதாக மாற்றுவது எதுவென்றால் அதன் மாநகரங்களின் மக்கள்தொகை அடர்த்திதான். இவ்வளவு பெரிய மக்கள்தொகையிடம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு சொல்வது மிகவும் கடினம். ஏனெனில் குறைந்த மக்கள்தொகை அடர்த்தி கொண்ட இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளே தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாமல் திணறிப்போக இப்போது நிலைமை கைமீறிப் போய்விட்டிருக்கிறது.

தனிமனித இடைவெளிக்கு மிகப் பெரிய எதிரிகளுள் ஒன்றாகப் பயணத்தைக் கூறலாம். ஊரடங்குக்கு முன்பு இந்தியாவில் ஒரு நாளைக்கு 11 ஆயிரம் ரயில்கள் ஓடிக்கொண்டிருந்தன. இவற்றில் 2.3 கோடி பயணிகள் பயணித்தனர். இந்தத் தகவலே ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் கரோனோ பரவலை எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. வரும் 17-ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் பேருந்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் குறைந்த அளவு ரயில்களும் பேருந்துகளும் மட்டுமே இயக்கப்படும் என்று தெரிகிறது. கூட்டத்தை அரசு எப்படி சமாளிக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஆம், கூட்டம்தான் கரோனா தன் கச்சேரியை நடத்துமிடம். எனவேதான், போக்குவரத்து சார்ந்து எடுக்கும் முடிவுகளை ஒருங்கிணைந்த பார்வையில் எடுக்க வேண்டியது முக்கியம்.

இவ்வளவு பெரிய மக்கள்தொகையை வைத்துக்கொண்டு எந்த அளவுக்கு தனிமனித இடைவெளியை நாம் கடைப்பிடிக்கிறோமோ அந்த அளவுக்கு கரோனாவை நாம் வெற்றிகொள்ளலாம். அசாத்தியமான மனவுறுதியுடன் அரசும் மக்களும் செயல்பட்டால் இது சாத்தியமாகலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்