ஆதியில் வானம் நீலமாகத்தான் இருந்தது. அண்மையில், வாகனங்களின் புகையும் தொழிற்சாலைகளின் புகையும் இந்த நிறத்தைத் திரித்துவிட்டதால் வானத்துக்கு ஒரு புரிபடாத நிறம். கரோனா காலத்து ஊரடங்கில் வானம் நீல வானமாக மீண்டுகொண்டது. உதயத்துக்குப் பிறகு மேலை வானத்தில் பார்க்காத நீலம் ஒன்று படர்ந்துகொண்டே மெல்ல அடர்வதையும் பார்க்கலாம்.
இன்ன நிறம் என்று சொல்ல இயலாத பின்புல வெளி ஒன்றில் நேற்றுவரை கட்டிடங்கள் அமுங்கிக் கிடந்தன. இந்தக் கட்டிடக் கலைப் பரிதாபங்களும் இன்று அடர் மஞ்சள், கருஞ்சிவப்பு, வெளிர் பச்சை என்ற வண்ணங்கள் மினுக்க வானத்தின் நீலத்திரையில் எடுப்போடு நிற்கின்றன. மேகங்களின் வெண்மை கூடியிருக்கிறது. உயிர்ப்பைப் பச்சை நிறத்தோடு சேர்த்துப் பார்ப்பது நமக்குப் பழக்கம். மண்ணுலகின் இன்றைய உயிர்ப்புக்கு விண்வெளியின் நீலம் அடையாளமாயிற்று. உயிர்ப்புக்கும் நீலத்துக்குமான உறவு விசித்திரம் நம் மனப் பரப்பில் சிலிர்ப்பாக ஊரும்.
கங்கை எங்கே குளித்தது?
கோடி கோடியாகச் செலவழித்தும் தூய்மை அடையாத கங்கை இருபது நாட்களில் பாதிக்குப் பாதி தெளிந்துவிட்டது என்கிறார்கள். யமுனையும் எப்போதும்போல் நுரைத்து ஓடாமல் தன் பழைய நீலத்தில் பொலிகிறதாம். கபினி, ஹேமாவதி, ஹரங்கி போன்ற காவிரியின் துணை நதிகளிலும் இதுவரை காணாத தெளிவு. டெல்லி நகரின் காற்று கடந்த ஐந்து ஆண்டுகளில் காண முடியாத தூய்மையை மூன்றே வாரங்களில் எட்டியிருக்கிறது. நகரங்களிலும் குருவிகளின் கீசு கீசு என்ற ஓசைப் பெருக்கு. ஆதியில் வானமும் பூமியும் ஆறுகளும் இப்படித்தான் அழகாகப் படைக்கப்பட்டிருக்கும்.
திருவிழாவில் இறைவனின் வீதிவலம் இல்லை. பல்லக்கு, வாகன சேவையெல்லாம் கோயில் பிரகாரத்திலேயேதான். விடையாற்றி என்ற ஆரவாரக் கோலாகலங்கள் இல்லை. புனித வெள்ளியிலும், ஈஸ்டர் திருநாளிலும், பராத் இரவிலும் அவரவர் வீட்டிலேயே வழிபாடு. சென்ற மாசி மாதம் தீர்த்தவாரி நடந்தது. எரிந்த காமதேவன் இளவேனிலில் உயிர் பெறும் காமண்டி நடந்தது. அத்தோடு கிராமங்களிலும் திருவிழாக்கள் நின்றுபோயின. ஊரடங்கில் இறைவனும் வீடடங்கி இருந்துவிட்டார். பத்தே விருந்தினர்களுடன் வீட்டுக்கு மட்டாகத் திருமணங்கள். பூமியின் மீது நமக்கு இருந்த ஆதிக்கத்தை இந்தச் சுயவிலகலில் துறந்தோம்.
வசத்துக்கு வராத முரண்
உலகத்துக்கு சோதனையாக வந்த கரோனா காலத்தில் பூமி தனக்கு சம்பாதித்துக்கொள்ளும் புது சோபையை விபரீத வரவு என்று சொல்ல முடியுமா? மொழி நடையில் ரசனைக் குறையில்லை என்றால் இப்படியும் சொல்லலாம்: மனிதர்களுக்கு நோய்த் தொற்று வந்தபோது பூமி தன்னைக் குணப்படுத்திக்கொண்டது. சிக்கறுத்து, சொல்லில் வைத்து அடுத்தவருக்குக் கடத்த முடியாத முரண் உணர்வு. வாய்ச் சொல்லாக வராது. எழுத்துக்குள் நுழையாது. சுற்றுச்சூழல் நெருக்கடியிலிருந்து பூமிக்கு ஒரு தற்காலிக மீட்சி. தன் பங்களிப்பாக மனிதன் துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. மனிதச் செயல்பாட்டின் ஒடுக்கமே பூமிக்குப் போதுமானதாயிற்று.
ஆலைகள், உற்பத்தி, வணிகம், போக்குவரத்து போன்ற மனித நடவடிக்கைகளைக் குறிக்க ‘கலாச்சாரச் சந்தடி’ என்ற விமர்சனத் தொடர் உண்டு. இந்தக் கலாச்சாரச் சந்தடி குறையக் குறைய பூமியின் மீட்சிக்கான அடையாளங்கள் கூடின. ஆனால், ஊரடங்கு முடிந்த பின் நாம் பழைய உலகத்துக்கே திரும்பியிருப்போம். கலாச்சாரச் சந்தடி பெரும் ஆரவாரத்தோடு மீண்டும் வந்துவிடும்.
சாயப் பட்டறைகளையும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளையும் மூடி ஆற்றை தூய்மையாக வைத்துவிட்டால் நம் காலுக்குச் செருப்பும், மேலுக்குத் துணியும் வந்துவிடுமா என்று கேட்பார்கள். பொருளாதாரச் சிந்தனை ஆற்று நீரின் தூய்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாது. வளர்ச்சியே நோக்கம், வானமே அதன் எல்லை என்ற சிந்தனையில் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை இருக்க முடியுமா? பொருள் நுகர்வு பெருகிக்கொண்டே இருப்பதில்தான் இன்றைய பொருளாதாரத்தின் நகர்வே இருக்கிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு இந்தச் சிந்தனைக்கு உள்ளேயே தீர்வு வராது.
உணர்வுத் துரும்பு
மாற்றுப் பொருளாதாரச் சிந்தனை இருக்கும். ஆனால், அதை நம்ப மாட்டோம். நம்பிக்கைக்கு ஒப்புக்கொடுக்க நமக்கு ஆன்ம பலம் போதாது. பெரும் மூலதனம், ஆலைகள், அசுரத் தொழில் நுட்பம் வேண்டாம்; மனித உழைப்பும், அவரவர் வீடும், கைத்திறனும் போதும் என்றால் உலக நாடுகளோடு எப்படிப் போட்டியிடுவது என்று கேட்போம். ஆனால், அகிலத் தொற்றால் வந்த ஊரடங்கில் மனித உழைப்பைச் சார்ந்த விவசாயமும், கைத்திறனை நம்பும் குடிசைத் தொழில்களும் முடங்கவில்லை. ஆலையிலிருந்து நூல் வந்தால் இப்போதும் கைத்தறி இயங்கும். கையில் திறன் இருக்கும் வரை கைத்தொழில்கள் அதாகவே முடங்காது.
எப்படியோ வானத்தின் நீலத்துக்கு இப்படியும் ஒரு அழகு இருந்திருக்கிறதே என்று கண்களால் கண்டுவிட்டோம். அந்த அழகு மறைவதற்கு முன், பூமிக்குக் கனக்காமல் மென்மையாக வாழ்வது எப்படி என்று அது நமக்குக் காட்டித் தந்திருக்கும். நம் இருப்பு, நம் கலாச்சாரச் சந்தடி, பூமிக்குக் கனக்கும்போது நமக்கும் அது உள்ளுணர்வாக உறுத்தும்.
ஊரடங்கில் ஓசை அடங்கிய காலைப் பொழுது. அமைதியைத் துலக்கிக்கொண்டு அவ்வப்போது வரும் குருவிகளின் பேச்சரவம். வாசல் கோலங்களை உழுதால் எப்படி இருக்குமோ அப்படி இருசக்கர வண்டி ஒன்று அமைதியைக் கீறிக்கொண்டு விரைந்தது. ஊரடங்கில் நாம் அமைதியின் அழகைப் பார்த்துவிட்டோம். வாகன ஒலி நமக்கு இனிமேல் இந்த வகை அனுபவமாகத்தான் வலிக்கும். அமைதியின் உடம்பை ஏன் இப்படி இரக்கமில்லாமல் கீறுகிறார்கள்? வானத்தின் நீல மேனியைக் கரும்புகையால் மெழுகவும் மனம் வந்ததே! இப்படி நமக்கு ஆதங்கம் வந்தால் அதுவே ஆறுதல்தான். இது துரும்பு. ஊரடங்கு மனிதனைக் கட்டும். இந்த உணர்வுத் துரும்பாலும் மனிதன் கட்டுண்டுபோவான்.
- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: profjayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago