மொழித் திணிப்பை எதிர்த்துப் பலியான ஆன்மாக்கள் இன்னும் அலைகின்றன!

By செல்வ புவியரசன்

அரசியல் சாசனத்தின் 343-ம் பிரிவு நீடிக்கும் வரை ஆட்சிமொழிச் சிக்கலும் நீடிக்கும்.

நெருப்பு, கடன், பகை இம்மூன்றிலும் மிச்சம் வைக்கக் கூடாது என்பது பழமொழி. இந்தப் பட்டியலில் அரசியல் உரிமைகள் என்பதையும் தயக்கமின்றிச் சேர்த்துக்கொள்ளலாம். அரசியல் சிக்கல்களை ஆறப்போட்டு அணைத்துவிட முடியாது. ஆனால், இந்தியை ஆட்சிமொழியாக்குவதில் நடுவண் அரசு கடைப்பிடித்துவரும் கொள்கை இதுதான்.

ஆட்சிமொழி பற்றிய விவாதங்கள் எழும்போதெல்லாம், இந்தி ஆதரவாளர்கள் ஒருமித்த குரலில் தெரிவிப்பது அந்தச் சிக்கலுக்கு அரசியல் சாசன அவையிலேயே முடிவு காணப்பட்டு உறுதி செய்யப்பட்டுவிட்டது என்பதைத்தான். ஆனால், அரசியல் சாசன அவையில் ஆட்சிமொழி பற்றி விவாதிக்கப்படவே இல்லை. பல மொழிகள் பேசப்படுகிற ஒரு நாட்டில், எந்த மொழி ஆட்சிமொழியாக அமைய வேண்டும் என்று கூடி விவாதித்துத்தானே ஒரு முடிவு எட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக இந்தியே ஆட்சிமொழி என்று விவாதங்கள் இல்லாமலேயே முடிவுசெய்யப்பட்டது. இது எப்படிச் சாத்தியமானது? காங்கிரஸ் கட்சி அரசியல் சாசன அவையில் தனக்கிருந்த பெரும்பான்மையைப் பயன்படுத்தி, இந்தி பேசாத பெரும்பான்மை மக்களுக்குத் துரோகம் இழைத்தது.

ஆட்சிமொழி பற்றிய விவாதம்

அரசியல் சாசன அவையில் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது, அதற்கு இணையாக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தனியாகக் கூடி விவாதங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள். கட்சி உறுப்பினர்கள் கூடி எடுத்த முடிவுகளை நிறைவேற்றிக்கொள்கிற இடமாக அரசியல் சாசன அவையைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அரசியல் சாசன அவையில் விவாதிக்கப்பட்டவை அனைத்தும் எழுத்து வடிவத்தில் இருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் உறுப்பினர்களின் தனி விவாதங்கள் எதுவும் அந்தக் கட்சியால் பதிவு செய்யப்படவில்லை.

ஆட்சிமொழி பற்றி விவாதிக்கப்படவில்லையென்றால், அரசியல் சாசன அவையில் என்னதான் நடந்தது? எண்கள் தேவநாகரி வடிவத்தில் இருக்க வேண்டுமா, இல்லை ரோமன் வடிவத்திலேயே தொடர வேண்டுமா என்பதைப் பற்றி மிக நீண்ட விவாதம் நடந்தது. முடிவில் ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் ரோமானிய வடிவத்திலேயே எண்களை எழுதுவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஆட்சிமொழி என்ற வார்த்தை அரசியல் சாசனத்தில் பயன்படுத்தப்படவில்லை. அரசியல் சாசனத்தின் 17-வது அத்தியாயம் அலுவல்மொழி என்ற தலைப்பிலேயே அமைந்திருக்கிறது. தேவநாகரி வரிவடிவத்தில் அமைந்த இந்தியே அதிகாரபூர்வமான மொழி என்கிறது, இந்திய அரசியல் சாசனத்தின் 343-வது பிரிவு. அதிகாரங்கள் அனைத்தும் நடுவண் அரசின் கையிலேயே இருக்கும் எனில், அதன் அலுவல்மொழியே ஆட்சிமொழி என்பதைத் தனியே விரித்துரைக்கத் தேவையில்லை. எனவே, இந்தி இந்நாட்டின் ஆட்சிமொழியாக ஏட்டளவில் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது. அதை இந்தி அல்லாத மொழியினரை ஏற்கச் செய்வதே நடுவண் அரசு எதிர்கொண்டிருக்கும் சவால். அதற்காக இந்தி அல்லாத மற்ற மொழியினரை அமைதிப்படுத்தும் நோக்கத்தில் சேர்க்கப்பட்டதுதான் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தபின் 15 ஆண்டுகள் வரையிலும் ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற பிரிவு.

அரசியல் சாசன அவை கூடியபோது, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் தனிப்பட்ட விவாதங்கள் கவனத்துக்கு வராதது போலவே, 1955-ல் ஆட்சிமொழி பற்றி நாடாளுமன்றக் குழுவால் விவாதிக்கப்பட்டபோதும் அது பொதுவெளிக்கு வரவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்டவற்றைப் பத்திரிகைகள் பிரசுரிக்கக் கூடாது என்பது விதி. அந்த விதியைக் காட்டி, நாடாளுமன்றக் குழுவில் ஆட்சிமொழி பற்றி விவாதிக்கப் பட்டதும் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவராமல் தவிர்க்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மட்டுமே அந்த சிறப்புரிமையே அன்றி, அனைத்து நாடாளு மன்றக் குழுக்களுக்கும் அல்ல. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த வல்லப பந்த்தின் செய்தித் துறை அதிகாரி குல்தீப் நய்யார் இந்தப் பிரச்சினையைத் தாம் தவறான வகையில் கையாண்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் நாடாளுமன்ற விதிமுறைகள் பற்றி அறியாமல் இருந்தது தேசத்துக்கே பெருந்தீங்காய் முடிந்தது.

நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில் இன்னொரு முடிவும் எடுக்கப்பட்டது. அரசியல் சாசனத்தின் 344-ம் பிரிவின்படி ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தி மொழியின் பரவல்பற்றி ஆய்வுசெய்ய ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அடுத்து, ஒரு ஆணையம் அமைக்கப்பட்டால் ஆட்சிமொழிச் சிக்கலை அது மேலும் மோசமாக்கும் என்று தெரியவந்தது. எனவே, அமைக்கப்பட வேண்டும் என்று கட்டாயம் தவிர்க்கப்பட்டு அமைக்கப்படலாம் என்று விருப்ப அதிகாரம் கொள்ளப்பட்டது. அப்படியொரு ஆணையம் அதன் பிறகு அமைக்கப்படவில்லை என்பதே இந்தியின் வலுவை உணர்த்துவதற்குப் போதுமானது.

நிரந்தரத் தீர்வில்லை

அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகள் முடிந்த வேளையில், ஆட்சி மொழியாக இந்தி தொடர்வதற்கு எதிர்ப்பு என்பதைக் காட்டிலும் தொடர்புமொழியாக ஆங்கிலம் நீடிப்பதை வலியுறுத்தியே தமிழ்நாட்டில் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போராட்டங்களின் விளைவாக 1968-ல் குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆட்சிமொழி திருத்தச் சட்டமும் இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கவில்லை. அச்சட்டத் திருத்தம் 1965-ம் ஆண்டுக்குப் பின்னும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்று மட்டுமே அனுமதிக்கிறது. ஆனால், ஆங்கிலத்தைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று வகைசெய்யவில்லை. இந்தி பேசாத மக்களுக்கு ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாகப் பயன்படுத்தும் உரிமையைச் சலுகையாக வழங்கிக்கொண்டிருப்பதாலேயே இந்தி தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

1965-ல் நடந்தது உணர்வுபூர்வமான எழுச்சி. அதோடு ஒப்பிடும்போது 1986-ல் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்தி மொழியில் பயிற்றுவிக்கும் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டபோது தமிழகத்தில் அரங்கேறியதெல்லாம் கருணாநிதிக்கும் ராமச்சந்திரனுக்கும் இடையே இருந்த தனிநபர் பகையின் நாடகக் காட்சிகள்.

அண்ணா, கருணாநிதி இருவரின் காலத்திலும் அரசியல் சாசனத்தின் 343-ம் பிரிவை எரிப்பது ஒரு குறியீடாகக் கையாளப்பட்டது. அது அரசியல் சாசன மீறலாக தண்டிக்கவும்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, நடுவண் அரசு செய்தித் தொடர்புகள் என்று இந்தியை ஆட்சிமொழியாக உள்ளே நுழைக்கிறபோதெல்லாம் எதிர்ப்புகள் கிளம்புகின்றன, அடங்குகின்றன. மீண்டும் மீண்டும் நடுவண் அரசின் முயற்சிகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. ஆனால், அரசியல் சாசனத்தின் 343-ம் பிரிவு நீடிக்கும் வரைக்கும் ஆட்சிமொழிச் சிக்கலும் நீடித்துக்கொண்டுதான் இருக்கும்.

348-வது பிரிவின்படி, மாநில ஆட்சி மொழியானது குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்று அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படலாம். இப்பிரிவின் அடிப்படையில் இந்தி பேசப்படும் மாநிலங்களில் அம்மொழி உயர் நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தி அல்லாத மற்ற மொழிகளுக்கு இவ்வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தி நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்தப்படுவது மாநில மொழிகளுக்கான உரிமையின் காரணமாக அல்ல; இந்தியை ஆட்சிமொழியாக நடைமுறைப்படுத்துவதன் ஒரு பகுதியாக. எனவே, சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும் தீர்மானங்களால் எந்தப் பயனும் விளையப்போவதுமில்லை.

பட்டியல் மொழிகளில் இந்தி அல்லாத மொழிகள் இடம்பெற்றிருப்பதால் என்ன பயன்? அம்மொழிகள் பட்டியலிடப்பட்ட மொழிகள் என்ற அடைமொழியை மட்டுமே பெற்றிருக்கின்றன. எட்டாவது பட்டியல் மொழிகளின் பட்டியலே அன்றி ஆட்சி மொழிகளின் பட்டியல் அன்று. இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் மொழிகளில் மாணவர் கள் மிகச் சில அரசுத் தேர்வுகளை எழுதும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். மேலும், இந்தி அல்லாத இதர மொழியின ரின் உரிமைக் கோரிக்கைகளை வேலைவாய்ப்புக்கான ஏக்கமென்று அடையாளப்படுத்துவதும் தொடர்கிறது.

மொத்தத்தில், ஆட்சிமொழி பற்றிய சிக்கல் அரசியல் சாசன அவையிலும் சரி, அதன்பின் நாடாளுமன்றத்திலும் சரி, இதுவரையில் முறையாக அணுகப்படவில்லை. இன்னும் அந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணப்படவும் இல்லை. ஆட்சிமொழிச் சிக்கலை முதன்மைப்படுத்தி அரசியல் செய்தவர்களோ போர்ப்பரணி பாடுவதே போதுமென்று நிறுத்திக்கொண்டுவிட்டார்கள். மொழித் திணிப்புக்கு எதிராகத் தங்களைப் பலி கொடுத்துக்கொண்ட ஆன்மாக்கள் அமைதியடையாமல்தான் அலைந்து கொண்டிருக்கின்றன!

- செல்வ புவியரசன் கட்டுரையாளர், வழக்கறிஞர், தொடர்புக்கு: selvapuviyarasan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்