மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் நதியின் வலி வேதனையானது. தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் காணப்படும் பள்ளங்களால், இயற்கையான ஊற்று நீரின் அளவும் குறைந்துவிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரையோரத்தில் ஐந்தாண் டுகளுக்கு முன்பு 13 குவாரிகள் மூலம் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டது. ராட்சத இயந்திரங்களின் பேராசைக் கரங்கள் தாய் மடியைக் கிழித்தன. ஆயிரமாயிரம் லாரிகளில் தாய் மண்ணை பிற மாநிலங்களில் விற்றார்கள். இதனைத் தடுக்க நதியைப் போலவே திராணியற்று தவித்தார்கள் மக்கள்.
ஆற்று நீரோட்டம் மாறிப்போனது. மணல் அள்ளிய பள்ளங்களில் சீமை கருவேலம் வளர்ந்து மேடாகிப்போனது. மணல் மாஃபியாக்களின் போட்டியில் 25-க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். மணல் கொள்ளை சமூதாய மோதல்களையும் உருவாக்கியது. நூற்றுக்கும் மேற் பட்டோர் இந்த மோதல்களில் உயிரிழந்தனர். காலம் காலமாக கவலை யின்றி குளித்த ஆற்றில் பெரும் செயற்கை பள்ளங்களும் அபாயச் நீர்ச் சுழல்களும் உருவாகின. இதில் சிக்கி சுமார் 30 பேர் இறந்தனர்.
ஐந்தாண்டுகளுக்குத் தடை
ஒருகட்டத்தில் தோழப்பன்பண்ணை பகுதியில் ஆற்றுமணல் அள்ள அனு மதிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப் பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்ல கண்ணு நீதிமன்றத்தில் ஆஜராகி, “ஆற்றில் மணலை அள்ளுவதற்கான நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குள் 54,417 யூனிட் மணல் மட்டுமே எடுக்க வேண்டும். ஆனால், 65,000 யூனிட் மணல் எடுக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டார். இதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி நீதிமன்றம், தாமிரபரணியில் மணல் அள்ள ஐந்தாண்டுகளுக்கு தடை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த தடை வரும் டிசம்பர் 2-ம் தேதியுடன் காலாவதியாகிறது. இப்போது மீண்டும் மணலை அள்ள திட்டமிட்டு வரு கிறார்கள் அதிகார பலமிக்கவர்கள். ஆனால், நீதிமன்றத்தை நாடி தடையை நீட்டிப்போம் என்கிறார்கள் மக்கள்.
தாமிரபரணியும் வெள்ளப் பெருக்கும்
தாமிரபரணி ஆற்றில் பல்வேறு காலகட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.1810-ல் ஏற்பட்ட வெள்ளத் தில் கரையோரத்தில் இருந்த ஆயிரத் துக்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. ஆழ்வார்குறிச்சியில் மட்டும் 500 வீடுகள் சேதம் அடைந்தன. உயிர்சேதமும் ஏற்பட்டது. 1827-ல் ஏற்பட்ட வெள்ளம் திருநெல்வேலி நகரை மூன்று நாட்களுக்கு தன்பிடியில் வைத்திருந்தது. வைகுண்டம் கோயிலையும் வெள்ளம் சூழ்ந்தது. மூன்று நாட்களாக சிலர் கோயில் கோபுரத்தில் ஏறி உயிர் பிழைத்தனர்.
1869-ம் ஆண்டு வெள்ளத்தில் பாலங்கள் சேதமடைந்தன. வைகுண் டம் பாலத்துக்குமேல் 5 அடி உயரத் துக்கு தண்ணீர் ஓடியது. 1874-ல் பயிர்கள் சேதமாகின. 1877-ல் டிசம்பர் 6-ம் தேதி நள்ளிரவில் திருநெல் வேலி கொக்கிரகுளம் ஆட்சியர் அலுவல கத்தை வெள்ளம் சூழ்ந்தது. அதே ஆண்டு, டிசம்பர் 17-ல் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது. 1895 வெள்ளத்தில் தைப்பூச மண்டபத்தில் இருந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டார்கள். அவர் களில் ஒரு சிறுவன் மட்டும் உயிர் தப்பினான். கடைசியாக 1992-ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சேர்வலாறு பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
4 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம்
திருநெல்வேலி, தூத்துக்குடி, விருது நகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 75 லட்சம் பேருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது தாமிரபரணி. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர், குழாய்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் மட்டும் சுமார் ஐந்து லட்சம் மக்களின் தாகம் தீர்க்கிறது நதி. நகரில் மொத்தம் 12 தலைமை நீரேற்று நிலையங்களில் 46 நீர் உறிஞ்சு கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
வண்ணாரப்பேட்டை வந்த கதை
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையின் முந்தைய பெயர் குஷ்டந்தீர்ந்ததுறை என்பதாகும். இதுகுறித்து ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர் முனைவர் வே. மாணிக்கம் கூறும்போது, “புதுமைப்பித்தன் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று ஒரு கதை எழுதினார். அதில், தான் பிறந்த ஊருக்கு வண்ணாரப்பேட்டை என்று பெயர் வந்த காரணத்தை எழுதியிருப்பார். “...கும்பனிக்காரன் வந்த புதுசு, அந்தக் காலத்திலே சுலோசன முதலியார் பாலம் கட்டலே, நம் சாலை தெருதான் செப்பரை வரைக்கும் செல்லும். அங்கேதான் ஆற்றை கடக்க வேண்டும்.
கொக்கிரகுளத்தில் இப்போது கச்சேரி இருக்கே அங்கேதான் கும்பினியார் சரக்குகளை பிடித்துப் போடுமிடம். அந்த வட்டாரத்திலே நெசவும் பாய் முடைகிறதும் ரொம்பப் பிரபலம். அப்பொழுது இருநூறு வண்ணார்களை குடியேற்றி வைத்தான் கும்பனிக்காரன். அதன்பிறகு குஷ்டந்தீர்ந்ததுறை வண்ணாரப்பேட்டை என்று ஆயிற்று” என்று எழுதியிருப்பார்.
திருநெல்வேலியில் தாமிரபரணியின் நீராடும் துறைகளின் அடிப்படையில் கருப்பந்துறை, குறுக்குத்துறை, சிந்துபூந்துறை என்று பல ஊர்கள் அமைந்துள்ளன. புதுமைப்பித்தன் குறிப்பிடும் குஷ்டந்தீர்ந்த துறை ஆற்றங்கரையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலின் பின்பக்கம் அமைந்துள்ளது. அந்தக் கோயிலில் குட்டத்துறை சுப்பிரமணியசாமி திருக்கோயில் என்று எழுதியிருப்பதை காணலாம்.
குஷ்டந்தீர்ந்த துறை என்பதன் திரிபு இது. குட்டம் என்பது ஒருவகை தோல் நோய். தாமிரபரணி ஆற்றில் உள்ள மீன்கள் தோல் நோயைப் போக்குபவை. அக்காலத்தில் சிரங்கு நோய்க்கு தீர்வு ஆற்றுநீரில் சிறிதுநேரம் நிறுத்தி வைப்பதுதான்” என்றார்.
(தவழ்வாள் தாமிரபரணி)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago