பண்பாட்டு வடிவங்களின் உச்சமாக இருப்பது ஆடிப்பூரமும் ஆடிமாத அம்மன் விழாக்களும்.
விதைக்கும் மாதம் ஆடி என்பார்கள். காவிரிப்படுகைக்கு இது கச்சிதமாகப் பொருந்தும். ஆடி பிறந்துவிட்டால் மேடையில் ஒரு காட்சி முடிந்ததுபோல் காவிரிக்கரையில் மற்றொரு காட்சி விரியும். ஆனியில் திறந்துவரும் தண்ணீர் ஆறெல்லாம் கரை புரளும். வெறும் தண்ணீராக வெளுத்து வராது. வண்டலை வாரி வருமோ, வளத்தை வாரி வருமோ என்று வரும். காவிரியின் முகக்களையே இந்த வண்டல்தான். பொன் துகள்களாக நீரோடு புரண்டுவரும். அணை கட்டினால் இந்த வண்டல் அங்கேயே இறங்கித் தங்கிவிடும்; நீரோடு புரண்டு வராது என்று மேட்டூர் அணைக்கு ஒரு எதிர்ப்பு இருந்தது. அணை வருவதற்கு முன்பு வண்டல் பொலியப் பொலிய வந்த காவிரி நீரைப் பிறகு வந்த தலைமுறைகள் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை. தண்ணீர் திறந்துவிட்டால் காவிரியின் போக்கில் இருக்கும் மதகுப் பலகைகளைத் தண்ணீர் தண்டாமல் தூக்கிவிடுவார்கள். மதகுக் கண்களில் புகுந்து, கிடைவாட்டில் வெளியேறும் நீர்த் தம்பங்களாகத் தண்ணீர் தாவி விழுந்து, சிதறி, வேகம் தணிந்து தவழும். சீறிப் பாய்ந்துவரும் நீரின் இரைச்சல் தைமாதம்வரை ஓயாது.
தேடி மேய்ந்து மாளாத புல்வெளி
அப்போது இருபத்து நான்காயிரம் கன அடி தண்ணீர் திறப்பார்கள். ஆறு நிறைந்து, பார் பொழிந்து, வெட்டுக்குழிகளில் (மண் சாலையை வலுப்படுத்த படுகையில் மண் வெட்டிய குழிகள்) விழுந்து, படுகையிலும் ஏறுவதும் இறங்குவதுமாகச் சிலிர்த்து ஓடும். மாடுகளுக்குக் கட்டுக் கொடுக்காத கொண்டாட்டம். அடிவைக்கும் இடமெல்லாம் ‘சலேர்’ என்று தண்ணீர் தெறிக்கும். வெட்டுக்குழியில் விழுந்து விழுந்து நீந்தும். வேரிலும், தூரிலுமாக உயிர்வைத்துக்கொண்டிருந்த அருகும், கோரையும், பொடுதலையும் அமுதம் பருகியதாகத் தழைத்துவிடும். மேய்ந்து மாளாது. சருகாக இலைகளை உதிர்த்து நின்ற மூங்கில்குத்து ஆயிரமாயிரம் மரகதத் திவலைகளை அவசரமாக அள்ளிப் போர்த்திக்கொள்ளும். தண்ணீர் குதிபோட்டு ஓடி குளத்தையும், குட்டையையும் குரல்வளைபிடிக்க நிரப்பிக்கொண்டிருக்கும். தண்ணீரைக் கண்ட தவளைகள் இரவெல்லாம் கத்தித் தீர்த்துக்கொண்டிருக்கும். பொழுது இறங்கும் நேரத்தில் வரப்பில் பட்டுப்போன நாணலையும், நெரிச்சியையும், விழலையும் கொளுத்திக் காடு அழிப்பார்கள். பரந்த தரிசுப் பரப்பில் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் செந்தீயும், வெண்புகையுமாக இருக்கும். நீரோடும் நெருப்போடும் மாலையில் வரும் மேலைக் காற்றும் சேர்ந்துகொள்ளும். ஐம்பூதங்களும் பூமியை அன்றைக்குத்தான் கண்டு அப்படியே பற்றிக்கொண்டதாகத் தெரியும். நீர்ப் பரப்பில் மேலைக் காற்று மிதந்து வந்தால், உடம்பை நெளித்துச் சிலிர்த்துகொள்வாள் காவிரி. இந்த நீர்ச் சூழலும் காற்றும் சேர்ந்து அந்திக் குளியலில் உடம்பை நடுங்கவைக்கும்.
பச்சைக் கம்பளமாக நாற்றங்கால்
முந்திக்கொண்டு சிலர் நாற்றுவிடுவார்கள். தரிசு வெளியில் அந்த நாற்றங்கால் பச்சைக் கம்பளமாக மின்னும். ஆடி மாதம் முடிய முடிய பாலையாகக் கிடந்த பட்டக்கால் முடிவில்லாத மரகதப் பட்டாக விரிந்துவிடும். அவசரம் அவசரமாகச் சிலர் வண்டிச்சோட்டுக்கு உடைத்துவிட்ட வரப்பை எடுத்துக் கட்டுவார்கள். சிலர் வெங்கார் பாய்ச்சி நாற்றங்காலுக்குச் சேறு குழப்புவார்கள். தன்ணீர் கட்டி விதை தெளிக்கும்போது அவை மழைத்தூறலின் இசையோடு விழுந்து இறங்கும். காத்துக்கொண்டிருந்ததுபோல் அப்போது இடியும் மின்னலுமாக மழையும் வந்துவிடும். “விதையை எடுத்துக்கொண்டு வயலுக்குப் போனால், இந்த மழையும் கூடவே வந்துவிடும்” என்று நொந்துகொள்வார்கள். விதைத்த வயலில் மழை பெய்தால் விதையை முட்டு முட்டாகக் குவித்துவிடும். விரிந்து கிடக்கும் தரிசில் தடுக்குத் தடுக்காகத் தண்ணீர்ப் பரப்பு. பொழுது குந்திய நேரத்தில் ஒளிச்சாட்டையாக வரும் மின்னல், இந்த நீர்த்தட்டுக்களைக் காட்டிக் காட்டி இருளில் பொத்திக்கொள்ளும். வீட்டுக் கொல்லையில் தை மாதத்துக்கு ஆகுமென்று மஞ்சளும், கருணையும் நடுவார்கள். குழிவாங்கிக் கொடியில் விளையும் பீர்க்கும் புடலும் ஊன்றிவைப்பார்கள்.
பருவங்களின் செல்லப் பிள்ளை
எங்கோ தூர தேசத்தில் பொழியும் தென் மேற்குப் பருவ மழையை இங்கே வாரி வருவாள் காவிரி. அதைக்கொண்டு நாற்றுவிட்டுப் பயிர் வளர்த்துவிடுவார்கள். அந்தப் பருவம் ஓயும்போது வடகிழக்குப் பருவ மழை இங்கேயே வந்துவிடும். அந்த மழையில் பயிர் தழைத்து, கதிர்வாங்கி முதிர்ந்துவிடும். அப்போது மண் நோகாத வெள்ளாமை. இயற்கையின் போக்கிலேயே சென்று, பூமி நலியாமல், இரண்டு பருவங்களின் செல்லப் பிள்ளையாகச் சீராட்டி வளர்ந்தது காவிரிப் படுகை. அதே காவிரிப் படுகை இப்போது ஒரே பருவத்தின் சவலைப் பிள்ளை.
அததற்குப் பிடிபட்ட வழியில் கலாச்சாரங்கள் வளத்தையும் விளைச்சலையும் வணங்கும். இங்குள்ள பண்பாட்டு அச்சு இந்த வளத்தை வார்த்து எடுத்த வடிவம் என்ன? ஆடி மாத கோயில் விழாக்களில் இந்த வடிவம் துலக்கமாகத் தெரியும். ஆடிப்பெருக்கு நாளில் புது மணத்தம்பதிகளும், சுமங்கலிகளும் காவிரிக்குச் சென்று அந்தப் பெருவளப் பெண்ணைக் கும்பிட்டு வருகிறார்கள். அவள் பெற்ற பேறு தங்களுக்கும் கிட்டவேண்டு மென்று வேண்டிக்கொள்வார்கள். ஆங்காங்கே இருக்கும் பெருமாளும், சிவனும் அன்று காவிரிக்குச் செல்வார்கள். பெருமாளுக்கு ஆடி மாத கேட்டைத் திருநாளின் திருமுழுக்குக்கு காவிரியிலிருந்தோ, அதன் கிளைகளிலிருந்தோ நீர் வரும்.
பெண்ணியத்தின் அன்றைய வடிவம்
எதையும் தெய்வமாகவே உருவகப்படுத்தும் பண்பாடு மண் வளத்தையும் பெண்ணாகவே கொண்டாடும். பெருமாளுக்கு நடப்பதற்கு இணயாகத் தாயாருக்கு ஆடி மாதத்தில் பெருந்திருவிழாவே நடக்கிறது. கொடியேற்றத்தோடு நாள்தோறும் வாகனங்களில் புறப்பாடும், ஆடிப்பூரத்தில் தேரோட்டமும் உண்டு. திருவிழா என்ற தளத்தில் பெண்ணுக்கும் இடம் பிடித்துக்கொண்டதுபோல் இருக்கும். சிவன் கோயில்களில் இதை இன்னும் அழுத்தமாகவே காணலாம். கோயிலுக்குள்ளேயே தனிக் கோயில், தனித் திருவிழா, பரிவாரங்கள் எல்லாம் பெண் தெய்வங்கள் என்று அம்பாளை ஒரு போட்டித் தெய்வமாகவே வைத்திருக்கிறார்கள். பிற்காலத்துப் பெண்ணியம் அன்றைக்கு இருந்த வகை. ஆடிப்பூரத்தில் நாகப்பட்டினம் நீலாயதாட்சிக்கு நடக்கும் விழாதான் அந்தக் கோயிலின் பெருந்திருவிழா. அன்று வயதுக்கு வந்த பெண்ணாக அம்மனைக் கருதி, பெண்ணுக்கு அப்போது செய்யும் சடங்குகளைச் செய்வார்கள். பூரங்கழித்தல் என்று தலைக்கு ஊற்றும் சடங்கைச் செய்து, வெள்ளை உடுத்தி, பயத்தம் பயறு கஞ்சியும், புட்டும் படைப்பார்கள். ஒரு பென்ணுக்கு நடப்பதைப் போன்றே நிறை நாழி, நீர்ச் சொம்பு முதலியவற்றை ஏற்றி இறக்குவார்கள். முதல் நாளே ஊறவைத்து முளைகட்டிய பயத்தம் பயற்றைத் துணியில் முடிந்து அம்மனின் இடுப்பில் கட்டுவார்கள். மொசு மொசுவென்று முளைத்திருக்கும் பயத்தம் பயறு வளத்துக்கும், விளைச்சலுக்கும், உயிர்ப்புக்கும் உருவகம். இதனோடு சுமங்கலிகளுக்கு உரிய பொருட்களான மஞ்சள், கண்ணாடி, வளையல் முதலியவையும் பெண்களுக்கு அன்று வழங்கும் பொருட்கள். பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கும், இன்னும் பருவமடையாத பெண்களுக்கும் மடிகட்டிய பயறு அம்மனின் ஆசியாகச் செல்கிறது.
விதை முளைத்துவிட்டால் அதனைப் ‘பருவம் கண்டது’ என்று சொல்வதுண்டு. முளைக்கவில்லையானால் ‘பருவம் காணவில்லை’ என்பார்கள். தெய்வத்தை மனிதனாகப் பாவித்துக்கொள்வதும், பூமியை, வளத்தை, விளைச்சலைத் தெய்வமாகப் பாவிப்பதும் பழைய மரபு. இந்தப் பாவனையின் விவரங்களை இணுக்கு இணுக்காகக் கோத்து, அதை விரித்துக் கட்டமைத்திருக்கும் விழாவாக இருப்பது ஆடிப்பூரம். மறு விதைப்புக்கு, மறு விளைச்சலுக்கு, மறு ஈட்டுக் காய்ப்புக்கு மண்ணைப் புதுப்பித்துக்கொள்ளும் சடங்கு. திருவாடிப்பூரத்தில் பிறந்த ஆண்டாளை மண்ணில் பிறந்த மண்மகளாகத்தான் போற்றுகிறது வைணவம்.
பொன்னித்தாயாகி பெண்ணாகவே காவிரி வருகிறாள். மண்ணின் வளத்தையும், பருவங்களின் உயிர்ப்பையும் பெண்ணாகவே போற்றுகிறது பண்பாடு. இந்தப் பண்பாட்டு வடிவங்களின் உச்சமாக இருப்பது ஆடிப்பூரமும், ஆடிமாதத்தின் அம்மன் விழாக்களும்.
- தங்க. ஜெயராமன்,
ஆங்கிலப் பேராசிரியர், ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago