ஊரடங்குக் காலமும் விவசாயமும்

By செல்வ புவியரசன்

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகையில் பேருந்துகள் ஓடாமல் பிரதான சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தாலும், கிராமங்களின் உள்ளடங்கிய சாலைகள் வழக்கம்போல உயிர்ப்போடுதான் இருக்கின்றன. வயற்காட்டு மண் ஒழுங்கைகளில் உர மூட்டையைச் சுமந்தபடி டிவிஎஸ் சூப்பர் எக்ஸ்எல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நெல் அறுவடை முடிந்துவிட்டாலும் ஆழ்துளைக் கிணறுகளை நம்பி ஆங்காங்கே அடுத்த நடவுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. வெயில் எரிக்கும் மதிய வேளைகளில் டிராக்டர்கள் உழுதுகொண்டிருக்கின்றன. காலையிலும் மாலையிலும் விவசாயத் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று திரும்புவதையும் பார்க்க முடிகிறது. கால்நடைகள் வாகனங்களைப் பற்றிய பயமில்லாமல் சாலையோரங்களில் மேய்ந்து திரிகின்றன. ஆனால், இந்த உயிர்ப்பு வழக்கமானதில்லை. உள்ளுக்குள் பெருஞ்சோகம் உறைந்துகிடக்கிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு நடை முறைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலும், விவசாயம் அத்தியாவசியப் பணிகளில் ஒன்றாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அப்படியும்கூட விவசாயப் பணிகளின் பல்வேறு கட்டங்களில் தேக்கங்கள் நிலவவே செய்கின்றன. நெல் அறுவடை முடிந்துவிட்டாலும் அதை விற்பனை செய்யும் வாய்ப்புகள் திருப்தியான வகையில் இல்லை. தமிழகத்தின் பல மாவட்டங்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்யாமல் அவர்களின் கையில் டோக்கனைக் கொடுத்து நெல்லைக் குவித்துப்போட்டுப் போகச் சொல்லியிருக்கின்றன. அவசரத்துக்குத் தனியார் வியாபாரிகளிடம் விற்க வேண்டும் என்றால் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்குத்தான் விற்க வேண்டியிருக்கிறது.

காத்திருக்கும் அறுவடை

தமிழகத்தில் ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே நெல் அறுவடை ஏறக்குறைய முடிந்துவிட்டது என்பது ஆறுதலான விஷயம். ஆனால், இந்தியா என்பது வெவ்வேறு வகையான நிலப்பரப்புகளையும் மண் வகைகளையும் கொண்ட நாடு. ஏப்ரல் மாதம் என்பது வட மாநிலங்களில் ராபி பருவ அறுவடைக்காலம். குறிப்பாக, வடமேற்கு மாநிலங்களில் கோதுமை மற்றும் பருப்புவகைப் பயிர்களின் அறுவடையானது போதுமான விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காததால் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறது. இந்தப் பகுதிகளில் பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கொண்டுதான் அறுவடை வேலைகள் நடக்கின்றன. இப்போது பக்கத்து மாவட்டங்களிலிருந்தும்கூட தொழிலாளர்களை அழைத்து வர முடியவில்லை.

உணவுத் தானியங்கள், காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஊரடங்கை ஒருவாறு சமாளித்துக்கொள்கிறார்கள். பூ, வாழை சாகுபடி செய்பவர்கள்தான் முற்றிலுமாக நிலைகுலைந்திருக்கிறார்கள். கோயில்கள் மூடப் பட்டிருக்கின்றன, திருமணம் போன்ற விழாக்களும் எளிமையாக நடத்தப்படுகின்றன என்பதால் பூக்களின் தேவை இல்லாமல் போய்விட்டது. பண்ணைகளில் பூச்செடிகள் வாங்கி நட்டு வளர்த்து நம்பிக்கையோடு காத்திருந்தவர்கள், வருமானத்தை இழந்ததோடு கடனாளிகளாகவும் மாறப்போகிறார்கள். உணவகங்கள் மூடப்பட்டதால் வாழையிலை விற்பனையும் முற்றிலுமாக நின்றுபோய்விட்டது. வாழையிலையோடு வெற்றிலைக்கும் ஏறக்குறைய அதுதான் நிலை.

வீணாகும் பால்

விவசாயிகள் உடனடி வருமானத்துக்கு நம்பியிருப்பது கால்நடை வளர்ப்பைத்தான். ஆனால், உணவகங்களும் தேநீர்க் கடைகளும் மூடப்பட்டிருப்பதால் பாலின் தேவையும் வெகுவாகக் குறைந்துள்ளது. கிராமங்களில் பால்காரர்களிடம் பால் விற்றவர்கள் அதைத் தொடர்கிறார்கள். தேநீர்க் கடைகளில் நேரடியாகக் கொண்டுபோய் பால் விநியோகம் கொடுத்தவர்கள் இப்போது பீய்ச்சிய பாலைக் குளங்களில் ஊற்றுகிறார்கள் - தரையில் ஊற்றக் கூடாது என்பது இங்குள்ள நம்பிக்கை. பால் பீய்ச்சாவிட்டால் மாடுகளுக்கு பால் கட்டிக்கொள்ளும், கன்றுகளை வழக்கத்துக்கும் அதிகமாகக் குடிக்கவிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதால் பாலைப் பீய்ச்சி அதைக் கொட்டுவது தொடர்கிறது. அகில இந்திய அளவில்கூட இதுதான் நிலை. ஊரடங்கு தொடங்கிய முதல் மூன்று நாட்களில் பால் விற்பனை அதிகமாக இருந்தது என்றும் உணவகங்கள், தேநீர்க் கடைகள் மூடப்பட்டதால் வழக்கத்தைக் காட்டிலும் 30% விற்பனை குறைந்திருக்கிறது என்றும் அமுல் நிறுவனம் கூறுகிறது.

கோழி வளர்ப்பும் விவசாயிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதாரப் பயனை அளித்துவந்தது. கோழிகள் மூலமாக கரோனா வைரஸ் பரவுவதாக வதந்திகள் பரவியதால் கோழி வளர்ப்பை நம்பியிருந்த விவசாயிகளும் தற்போது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்த்தவர்களும் ஆடுகள் வளர்த்தவர்களும் மட்டும் கொஞ்சம் தப்புகிறார்கள். கோழி மற்றும் கால்நடை வளர்ப்பை நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை அளிக்காவிட்டால் அவர்களால் கடன்களிலிருந்து மீளவே முடியாத நிலை ஏற்பட்டுவிடும். விவசாயம் தொடர்பான கடைகள் திறந்துவைக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும் கால்நடை வளர்ப்புக்குத் தேவையான தீவனங்களை வாங்குவதில் சிரமங்கள் நீடிக்கவே செய்கின்றன.

கொள்ளைநோயும் பஞ்சமும்

கடைகளில் அரிசி, கோதுமை, பருப்பு, காய்கறி போன்ற உணவுப்பொருட்களின் தேவை அதிகரிப்பதன் காரணமாக அவற்றின் விலை அதிகரித்துவருகிறது. அதனால், விவசாயிகளுக்கு எந்தப் பலனும் இல்லை. போக்குவரத்துக்குத் தடை நீடிப்பதால் குறைந்த விலைக்கே அவர்கள் வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்க வேண்டியிருக்கிறது. வேளாண் உற்பத்தியும் விற்பனையும் நாட்டின் உணவுப் பாதுகாப்போடு நேரடித் தொடர்புள்ளவை. கொள்ளைநோய்களை அடுத்து கடும் பஞ்சங்களை எதிர்கொண்ட வரலாறு நமக்கு நிறையவே உண்டு. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ‘எபோலா’ நோய் பரவிய ஆப்பிரிக்கப் பகுதிகளில் அதையடுத்து உணவுப் பஞ்சம் ஏற்பட்டதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். ஆறுதல் அளிக்கும் நல்ல செய்தி. ஆனால், அவ்வாறு அறிவுறுத்தப்பட்ட அதே நாளில் சென்னையைச் சுற்றிய பகுதிகளில் எதிர்பாராத கோடை மழை. காஞ்சிபுரத்தில் உள்ள நேரடிக் கொள்முதல் நிலையத்தில் பத்தாயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்திருக்கின்றன. நெல்லை மூடப்போன விவசாயி மின்னல் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். நெல் விற்பனைக்காக வார, மாதக் கணக்கில் காத்திருந்த விவசாயிகள் சேதமடைந்த தங்களது நெல் மூட்டைகளுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். இதுதான் நமது கொள்முதல் நடைமுறை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்