கரோனா மருத்துவத்தில் பாரம்பரிய அறிவின் அவசியம்!

By கு.சிவராமன்

இக்கட்டான காலகட்டத்தில் நுழைந்திருக்கிறோம். இன்னும் கரோனாவின் சமூகப் பரவல் மூன்றாம் கட்டத்துக்கு நுழையவில்லை என்று அரசும் அதிகாரமும் சொல்கின்றன. ஆய்வாளர்களோ ஏற்கெனவே “சமூகப் பரவல் தொடங்கியாயிற்று” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றனர். இந்திய மக்கள்தொகையில் சுமார் 50-55% பேர் இந்தத் தொற்றுக்கு உள்ளாவார்கள் என்பது மருத்துவப் புள்ளியியலாளர்கள் மற்றும் நோய்ப் பரவலைக் கணிக்கும் மருத்துவர்களின் அனுமானம். மிகக் குறைந்த அளவு நபர்களுக்கே மருத்துவ உதவி தேவைப்படும் என்றாலும், நம் நாட்டு மக்கள்தொகையில் அந்தக் குறைந்த சதவீதமும்கூட திக்குமுக்காட வைக்கும் எண்ணாக இருக்கும் என்பதுதான் நம்மை உறைய வைக்கும் செய்தியாக இருக்கிறது. நம் போன்ற மருத்துவ வசதி குறைந்த நாடுகளுக்குப் பிற நாடுகளைவிடச் சிக்கல்கள் அதிகம்.

பொதுவாக, மருத்துவத் துறையில் தவிர்க்கக்கூடிய மரணங்கள், தவிர்க்க இயலாத மரணங்கள் என்று மரணங்களை இரு வகைகளாகப் பிரிப்பதுண்டு. தவிர்க்கக்கூடிய மரணங்கள் என்பது வென்டிலேட்டர், மருந்துகள், மருத்துவர்கள் போன்ற உரிய மருத்துவக் கட்டமைப்பு இல்லாமையால் ஏற்படுவது; தவிர்க்க முடியாத மரணங்கள் என்பது உரிய மருத்துவக் கட்டமைப்பு இருந்தும் உயிர்களைக் காப்பாற்ற முடியாமல்போவது. கரோனாவில் நாம் எதிர்கொள்ளும் பெரும் அபாயம் என்னவென்றால், போதிய மருத்துவக் கட்டமைப்பு இல்லாததால் தவிர்க்கக்கூடிய மரணங்களையும் தவிர்க்க முடியாத மரணங்களாக மாற்றிடுமோ என்பதாகும். உதாரணத்துக்கு, கரோனா தொற்றுக்குள்ளாகும் ஒருவர் மூச்சுத்திணறலால் பத்து நாட்கள் பாதிக்கப்படுகிறார் என்றால், அந்த நாட்களில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் கூடிய மருத்துவ வசதி கிடைத்தால் பத்து நாட்களுக்குப் பின் அவர் உடல்நலம் தேறிவிடலாம். ஆனால், ஆயிரக்கணக்கனோர் ஒரேசமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது போதிய வென்டிலேட்டர்கள் நம்மிடம் இல்லாமல் பற்றாக்குறை ஏற்படும் சூழலில் நாம் அந்த நோயாளியைக் காப்பாற்ற முடியாமல்போகும்.

ஆக, மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துதல் என்பது முக்கியம். மருத்துவக் கட்டமைப்பை மேம் படுத்துதல் என்பது வென்டிலேட்டர்களை அதிக அளவில் கொள்முதல் செய்வது மட்டும் அல்ல; தற்காலிக மருத்துவமனைகளைக் கட்டியெழுப்புதல், கூடுதலான மருத்துவப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், மிக முக்கியமாக கரோனாவை எதிர்கொள்வதற்கான மருந்து களுக்கான ஆய்வுகளையும் முடுக்கிவிடுதல். அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் கரோனாவுக்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் மிகுந்த ஈடுபாட்டோடு செயலாற்றிவரும் நிலையில், இந்தியாவின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக நம்முடைய பாரம்பரிய மருத்துவ அறிவை ஏன் இத்தகு சூழ்நிலையில் பயன்படுத்துவது குறித்து நாம் யோசிக்கக் கூடாது?

ஆய்வுகளை முடுக்கிவிட வேண்டும்

ஐசிஎம்ஆர், மலேரியா, ஆட்டோ இம்யூன் நோய் களுக்காகப் பரிந்துரைக்கப்படும் ‘ஹைட்ராக்ஸி குளோரோக்யூன்’ மற்றும் ‘அசிற்றோமைஸின்’ மருந்துகளை, கரோனா தொற்று ஏற்பட்ட குறிப்பிட்ட நபர்களுக்குப் பரிந்துரைத்த சில மணி நேரங்களில் அந்த மருந்துகளெல்லாம் விற்றுத் தீர்ந்தன; வீடுகளில் அவை முடக்கப்பட்டன. இவ்விரு மருந்துகளும் எளிய ஆய்வுகளின் அடிப்படையில், முன்பு வந்த இதன் மூத்த தொற்றான ‘சார்ஸ்’, ‘மெர்ஸ்’ஸில் பயன்படுத்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு இப்போது கரோனாவுக்கும் பயன்படுவதைக் கண்டறியத் தொடங்கியுள்ளதன் விளைவு இது. இந்த இரு தொகுப்பு மருந்துகளுமே சில ஆய்வுகளின் அடிப்படையில் முன்மொழிகிற ஒன்றுதான். ஏராளமாகப் பாதிப்பு ஏற்படவிருக்கும் காலத்தில் மிக அவசரமாகச் செய்ய வேண்டியவை இப்படியான துணை ஆய்வுகளே! அந்த ஆய்வுகளுக்கான ஆயத்தங்கள் இந்நேரமே இந்தியாவிலும் முடுக்கிவிடப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பாக, பாரம்பரிய மருந்துகள் மீதான ஆய்வுகளில் இப்படியான ஆராய்ச்சி அத்தியாவசியமானதாகும். வூஹானின் தீவிரத் தொற்று நிலையில் அதைத் தடுப்பதற்காக நவீன மருந்துகளை, வேகமாகவும் ஆழமாகவும் நோயைத் தாக்கும் விதமாகக் கடுமையாகவும் பிரயோகித்துக் காப்பாற்ற முனைந்தனர். இன்னொரு பக்கம் ‘அசிம்டோமேடிக் ஹெல்தி பாஸிட்டிவ் பீப்பிள்’ எனும் நோய்த்தொற்று உள்ள ஆரோக்கியமான மனிதர்களிடம் ‘க்யூபிடி’ எனும் சீனக் கசாயத்தைப் பயன்படுத்திப் பார்த்தார்கள்; சீனப் பாரம்பரிய மருந்தான அது வேலை செய்வதை அறிவியல் அரங்கில் அறிவித்தார்கள்.

இங்கே நிலை என்ன?

இங்கும் சித்த மருந்தில் கபசுரக் குடிநீர், ஆயுர்வேதம், ஹோமியோபதியில் வேறுசில மருந்துகள் ஆயுஷ் துறையால் முன்மொழியப்பட்டுள்ளன. இப்போது வருத்தமான நிலை என்னவென்றால், ‘பாரம்பரியம்’ என்பதாலேயே ஒருபக்கம் பகடி பேசிப் புறந்தள்ளப்படுவதும், ‘பாரம்பரியம்’ என்பதாலேயே தலையில் தூக்கிவைத்து “அன்றைக்கே சொன்னது; இது எல்லாவற்றையும் போக்கும்” எனக் கூச்சலிடுவதும் நடைபெறுவதுதான். இந்தக் கூச்சலை, புறக்கணித்தலை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு மானுட அவசரத் தேவையை உணர்ந்து, பாரபட்சமில்லாத அணுகு முறையில் அதிவேகமாக இதை ஆய்ந்தறிய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

பொதுவாக நான் என்ன சொல்வேன் என்றால், நோயாளிகளிடம் சோதிப்பதற்கு அடிப்படை அறிவியல் தரவுகள் இல்லை என இம்மருந்துகள் மீதான ஆய்வைப் புறக்கணிப்பது கூடாது. சமீபத்திய சீன அரசின் ‘க்யூபிடி’ ஆய்வுப்போக்கானது நமக்கெல்லாம் மிகச் சிறந்த வழிகாட்டுதலாக இருக்கிறது. பாரம்பரிய மருந்துகள் மீதான ஆய்வு வழிகாட்டுதலில் முக்கியமானவர் நம் நாட்டின் மூத்த மருத்துவப் பேராசிரியர் அஷோக் வைத்யா. அவருடைய ‘ரிவெர்ஸ் பார்மகோலாஜிகல் அப்ரோச்’ (reverse pharmacological approach) முறையை நாம் இப்போது பின்பற்ற வேண்டும்.

இத்தொற்றைப் பெற்றும் பாதிப்படையாத ஆரோக்கியமான நபர்கள் ஏராளமானோர் இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் இருப்பார்கள். அவர்களில் மரபு மருந்தை ஒரு குழுவினருக்கும், நவீன அறிவியல் பரிந்துரைக்கும் மருந்துத் தொகுப்பை இன்னொரு குழுவினருக்கும், தற்போது பரிந்துரைக்கும் ஆன்ட்டி மலேரியல் தொகுப்பை வேறு குழுவினருக்கும் 15 நாட்கள் பயன்படுத்தியும், மருந்து ஏதும் இல்லாமல் மற்றொரு குழுவினரை 15 நாட்கள் கண்காணித்தும் பார்த்தால் பல விஷயங்கள் வெளிவரக்கூடும். அதில் கிடைக்கப்போகும் ரத்தத் தரவுகளானது உள் உறுப்புகளில், நோய் எதிர்ப்பாற்றல் நிலையில் நடக்கும் பல மாற்றங்களைத் தெள்ளத்தெளிவாக அறிவிக்கக்கூடும். அந்தத் தரவுகள், தவிர்க்கக்கூடிய மரணங்கள் எனும் நிலையில் இருப்போருக்குப் பெரிதும் உதவலாம். ஒருவேளை இது உதவாது என ஆய்வுகள் உறுதிப்படுத்தும்பட்சத்தில் அதனால் பாதகம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை.

பல ஆண்டு அனுபவத் தொகுப்பின் கோவையாக இருக்கும் ஆயுர்வேத, சித்த மருந்துகள் வெறும் வெற்றுக்கூச்சலோடு நின்றுவிடாமல் முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது இந்தச் சூழ்நிலையில் மிகவும் அவசியம். நோபல் பரிசு பெற்ற சீனப் பேராசிரியை யுயுதூ மலேரியாவுக்கு அர்ட்டிமிசினை உரக்கப் பரிந்துரைத்தது சீன மரபு மருத்துவத்திலிருந்துதான். அதைப் போல நாம் ஏன் முயன்றுபார்க்கக் கூடாது? இப்போதைய நிலையில், இது வெறும் ஆய்வு முயற்சி மட்டுமல்ல; ஆயிரமாயிரம் உயிர்களை உடனடியாகக் காப்பாற்ற எடுக்கும் கடமையும்கூட.

மரபு மருத்துவர்கள் கைகோக்க வேண்டும்

கரோனா வைரஸில் இம்மூலிகை மருந்துகள் சுவாச மண்டலப் பாதையின் ‘பிஹெச்’சை மாற்றுகின்றனவா? வைரஸ் நுழையும் பகுதியில் ‘சைட்டோகின்’ஸை (cytokines) அளவுக்கு அதிகமாகக் குவித்து ‘சைட்டோகின்ஸ் ஸ்டோர்ம்’ (cytokines storm) நிலையை ஏற்படுத்தாது இதயத்தை, பிற உறுப்புகளைக் காக்கின்றனவா? இப்படியான கேள்விகளுக்கான விடைகள் முதல் கட்ட எளிய ஆய்விலேயே கிடைத்துவிடும். இங்கே இப்போது தேவையெல்லாம், அனுபவம் வாய்ந்த நவீன ஆய்வாளர் களும், உள்ளது உள்ளபடி, காய்தல் உவத்தல் இன்றி அணுகும் சித்த மற்றும் பிற மரபு மருத்துவர்களின் கை கோப்பு மட்டும்தான்.

இந்த ஆய்வுகளையெல்லாம் சோதனைக் குழாயில், எலியில் செய்துவிட்டு நடைமுறைக்குக் கொண்டுவர 2-3 ஆண்டுகள் ஆகும். அதற்கு இப்போது அவகாசமில்லை. அவசியமுமில்லை. மருந்தின் நச்சுத்தன்மை மற்றும் பாதுகாப்பை (toxicity and biosafety) மட்டும் தெளிவாக ஆய்ந்தறிந்துவிட்டு நோயாளிகளிடம் எடுத்துச்செல்லலாம். ‘ரிவர்ஸ் பார்மகோலாஜிகல் அப்ரோச்’ இதைத்தான் வலியுறுத்துகிறது. ஆயுஷ் துறை நச்சுத்தன்மை உள்ள மூலிகைகளைத் தனி அட்டவணையில் பட்டியலிட்டிருக்கிறது. அந்த மூலிகைகள் ஏதும் நிலவேம்பிலோ, இப்போது முன்நிறுத்தப்படும் கபசுரக் குடிநீரிலோ இல்லை. இம்மருந்துகள் போக பாரம்பரிய மருத்துவ ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் ஆய்ந்தறிந்து முந்தைய அறிவியல் தரவுகளின் அடிப்படையில் சொன்னாலும் அவற்றையும் பரிசீலித்து முடிவுசெய்ய இயலும். தேவை இப்போது கூட்டு முயற்சிதான். கூட்டு ஆய்வுதான்.

- கு.சிவராமன், மருத்துவர், ‘ஆறாம் திணை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: herbsiddha@icloud.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்