பேய்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளும் இடமாக மனநலத் துறை இருக்கிறது.
ஔவையார் சம்பந்தமான தனிப்பாடல் ஒன்றில், அவர் பேயுடன் பேசியதாக ஒரு செய்தி உண்டு. நாடோடியாகப் பல ஊர்கள் சுற்றிக் களைப் படைந்த ஔவை, இரவு தங்கி அசதியைப் போக்கிக் கொள்ளலாம் என்று ஒரு பாழும் மண்டபத்தில் படுத்துறங்கச் செல்கிறார். அதைக் கண்ட அவ்வூர்க்காரர்கள், அம்மண்டபத் தில் பேய் ஒன்று யாரையும் தங்கவிடாமல் துரத்தியடிக்கிறது என்று அவரை எச்சரிக்க… ‘‘நானே ஒரு பேய், ஒரு பேயை இன்னொரு பேய் அடிப்பதா?’’ என்று ஊர்க்காரர்களின் வார்த்தையை அலட்சியம் செய்துவிடுவார் ஔவை.
முதல் சாமத்தில் பேய் வந்து அவரை மிரட்ட ஆரம்பிக்கிறது. பேயைப் பார்த்தவுடன் அதன் பூர்வ ஜென்மத்தை யூகித்துணர்ந்த ஔவை அந்தப் பேயிடம், ‘‘படிக்கத் தெரியாத அறிவிலியைப் பெற்றாளே அவளைப் போய்த் தாக்கு’’ என்று முற்பிறவியில் பேயின் காதலனைப் பெற்ற தாயைக் குறித்து மறைவாகச் சுற்றி வளைத்துப் பழித்துப் பேசுகிறார். பல முறை மிரட்டிப் பார்த்தும் ஔவையிடம் தன்னுடைய ஜம்பம் பலிக்காததை அறிந்த பேய், தனது கதையை அவரிடம் சொல்கிறது.
‘போன ஜென்மத்தில் ஒரு தேசத்து இளவரசியாய் இருந்த நான், உப்பரிகையில் பந்தாடிக்கொண்டிருந்த போது, கீழே சாலையில் போய்க்கொண்டிருந்த வாலிபனின் மேல் இச்சைகொண்டு, என்னை வந்து சந்திக்கும்படி ஓலை எழுதி அனுப்பினேன். எழுதப் படிக்கத் தெரியாத அவனோ, எனது ஓலையை எவனோ கிழவன் ஒருவனிடம் காட்டி, கடிதத்தில் உள்ளது என்னவென்று கேட்க, வஞ்சக எண்ணம் கொண்ட அக்கிழவனோ என் மேல் இச்சை கொண்டு, வாலிபனைத் திசைதிருப்ப எண்ணி, நான் வாலிபனை வெறுக்கிறேன் என்று கடிதத்தில் இருப்பதாகப் பொய் சொல்லி அவனை அனுப்பிவிடுகிறான்.
வாலிபன் போனபின்பு, அக்கிழ வஞ்சகன் அவனது இச்சைக்கு என்னை வற்புறுத்த, நான் மறுத்து என் உயிரை மாய்த்துக்கொண்டேன். நிறைவேறாத ஆசையால் குற்றுயிராக, ஆவியாக அலைகிறேன்’ என்று பேய் தன் கதையைச் சொல்லி முடிக்கிறது. பேயின் கதைகேட்டு மனம் இரங்கி, அப்பேயை அடுத்த ஜென்மத்தில் தமிழாய்ந்து வளம் சேர்க்கும் தமிழறியும் பெருமாளாகப் பிறக்கக் கடவது என்று வாழ்த்தி வரம் கொடுத்து ஆசிர்வதிக்கிறார் ஔவையார்.
புராணங்கள், சமயக்குரவர்கள் வரலாறு, மதுரைவீரன் , காத்தவராயன், தேசிங்கு ராஜா, நல்லதங்காள் போன்ற நாட்டார் பாடல்கள் என்று ஒன்றையும் விட்டுவைக்காமல் சினிமாவாக்கிய தமிழ் சினிமா மரபு, ஔவையாரின் கதையையும் படமாக்கியிருக்கிறது. 1953-ல் ஜெமினி புரொடக் ஷனில் எஸ்.எஸ். வாசன் தயாரிப்பில் ஔவை யாரின் வாழ்க்கை சினிமாவாக வந்திருக்கிறது. அதில் ஓரமாகக் கிடந்த பேய்ச் சம்பவம் தொடர்பான இந்தத் தனிப்பாடலும் படமாக்கப்பட்டிருக்கிறது.
சந்திரமுகி - இரட்டை வேடம்
பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டாலும் ஔவையாரின் பேய்க் கதைக்கும் சந்திரமுகி படக் கதைக்கும் நாம் முடிச்சுப்போட்டு யோசிக்க முடியும். இரண்டுக்கும் மையமான பொதுக் கரு இருக்கிறது. கதாநாயகன், இடைஞ்சலாக காமுகனான வில்லன், காமுகனின் இச்சைக்கு ஆட்படாமல் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளும் கதாநாயகி, மாண்ட பிறகு ஆவியாய் அலைதல் என்று இரண்டுக்கும் பொது அம்சங்கள் உண்டு. குற்றுயிராய்த் திரியும் ஆவி புது உடம்புக்குள் புனர் ஜென்மம் எடுப்பதுபோல, ஔவையாரின் கதைதான் மலையாளத்தில் மணிச்சித்திர தாழ் படமாகவும், பிறகு தமிழில் சந்திரமுகியாகவும் நவீன காலத்துக்குத் தகுந்த மாதிரி மறுஜென்மம் எடுத்துள்ளது. சாந்தியடையாத ஆவி பற்றிய சமய நம்பிக்கை இன்னும் மறுஜென்மம் எடுத்தபடியே இருக்கிறது.
பேய்களின் குரல்கள்
இலக்கியம், சினிமா தாண்டி நிஜத்தில் இன்னும் பேய்கள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளும் இடமாக மனநலத் துறை இருக்கிறது. மனநோயாளிகளை விதவித மான பேய்கள் பிடித்திருப்பதாக அவர்களைக் கூட்டிக் கொண்டு வரும் உறவினர்கள் சொல்வார்கள். காணிக்கை களை வாங்கிக்கொண்டு நல்லவிதமாகப் போய்விடும் பேய்கள். பிடிவாதமாக விட்டுவிலக மறுப்பவை, ஒருவரை விட்டுவிட்டு இன்னொருவரை பிடித்துக்கொள்பவை என்று பல ரகங்களில் பேய்களைப் பார்க்கலாம்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பேய்கள் பகுத் தறிவுக்கு ஒவ்வாத விஷயம் என்று ஒதுக்காமல் அதன் பேச்சைக் கேட்டிருக்கிறார் ஃப்ராய்ட். காமம், வன்மம், பொறாமை, குற்றவுணர்ச்சி போன்ற தீவிர உணர்ச்சிகள் கலாச்சாரத்தின் தணிக்கைக்கு உட்பட்டு, சமூக நிபந்தனை களின் இறுக்கத்தால் திரிபடைந்து, உருமாற்றமாகி பேயின் குரலில் பேசுகின்றன. அதன் மொழியை அமானுஷ்ய சக்தியாக இல்லாமல் மனிதத் தளத்தில் புரிந்துகொள்ள முடியும் என்றார் அவர்.
ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனைகள் அவர் வாழும் காலத்திலேயே மற்ற நாடுகளில் பரவியதைவிட, இந்தியாவில் கல்கத்தாவுக்குச் சீக்கிரம் வந்துவிட்டது. சுதிர்காகர் என்ற உளப்பகுப்பாய்வாளர் இந்தியாவில் பேய் பிடித்தவர்களுக்கு என்ன மாதிரி சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது என்பதை ஆராய்ந்து ‘ஷாமன்ஸ் மிஸ்டிக்ஸ் அன்ட் டாக்டர்ஸ்’ என்ற நூலை 1982-ல் வெளியிட்டார்.
ஒருவனைத் தோண்டி சகல அம்சங்களையும் அவனுக்கு அறிமுகப்படுத்துவது உளப்பகுப்பாய்வு முறை. அது சமூக மனிதனைக் காட்டிலும் தனிமனிதனுக்கு அனுகூலமாக நிற்கும். கேன்வாஸில் பல நிறங்களைச் சேர்த்துக் கூட்டுக் கலைவையால் சித்திரம் உருவாக்குவது போல் வெளியிலிருந்து ஊக்கமும் பாதுகாப்பு உணர்வையும் கொடுத்துச் சரிப்படுத்துவது இன்னொரு வகை. இந்திய அமைப்பின் சிகிச்சை முறையில் குடும்ப உறுப்பினர்கள் கூட்டாகப் பங்கேற்று, நோயாளியை ஆற்றுப்படுத்துகிறார்கள் என்று சுதிர்காகர் சொல்கிறார்.
தமிழின் நெடிய வரலாற்றில் பேய்களின் அணிவகுப்பு கொண்ட கலிங்கத்துப்பரணி, சதுக்கபூதம் கொண்ட சிலப்பதிகாரம், பழையனூர் நீலிக் கதை, வேலன்வெறியாட்டு போன்ற நாட்டார் மரபுகள் சகஜமாக உள்ளன. பாரதி, புதுமைப்பித்தன், பிரமிள் போன்றோர் பயங்காட்டவென்று பேய்க் கதைகளை எழுதியிருக்கிறார்கள். பள்ளி நாட்களில் எனக்கெல்லாம் மதிய உணவுக்குக் கறிகொடுத்துவிடும்போது அதனுடன் சின்ன கரிக்கட்டையைப் போட்டு நடுவுச்சி பேயின் கவனத்தை மாமிசத்திலிருந்து சுளுவாகத் திருப்பிவிட்டுவிடுவார்கள் எனது வீட்டார்.
சரி, ஒரு முக்கியமான கேள்விக்கு வருவோம். ‘சந்திரமுகி’யில் துர்காவுக்கு, சந்திரமுகி தன்னுடன் இருப்பது ஏன் தெரியவில்லை? இன்னொருவரின் மனம் தனக்குள் செயல்படுவதை ஒருவர் அறியாதிருக்கும் நிலையை எப்படிப் புரிந்துகொள்வது? அந்த மறதி நிலை உளவியல் சிந்தனைகளால் பிரகாசப்படுத்தப்பட வேண்டிய கரும்புள்ளியாகும்.
ஜெர்மானிய கலாச்சாரத்தில் மத்திய தரவர்க்கத்தைச் சேர்ந்த பல பெண் மனநோயாளிகளிடம் அந்த மறதி செயல்படுவதைக் கண்டார் ஃப்ராய்ட். அந்த மறதிக்கு அப்பால் செல்ல முடியாமல் முட்டிக்கொண்டு நின்றார் அவர். விரிவாக அப்பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்தபோதுதான் பகுத்தறிவின் தர்க்கத்துக்கு ஆட்படாமல் இயங்கும் நனவிலி மனவோட்டங்களின்(Unconscious) குறுக்கீட்டால் அந்த மறதி ஏற்படுகிறது எனக் கண்டறிந்தார். தனது ஆய்வை ‘ஸ்டடிஸ் ஆன் ஹிஸ்டீரியா’ (1895) என்ற நூலாக வெளியிட்டார். உளப்பாகுப்பாய்வின் தொடக்கப்புள்ளி அது. ப்ராய்டின் சிந்தனைகளைப் பரிச்சயப்படுத்திக்கொள்வது பேயின் பாஷை குறித்தும் நம் சுயத்தைப் பற்றிக் கூடுதலான புரிதலையும் உருவாக்கிக்கொள்ள உதவி செய்யும்!
- சஃபி, மருத்துவ உளவியலாளர்,
தொடர்புக்கு: wordmohamedsafi@yahoo.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago