கிழக்குத் தொடர்ச்சி மலைகளைப் பற்றி ஏன் நாம் அக்கறை காட்டுவதே இல்லை?

By செல்வ புவியரசன்

குஜராத்தின் தபதி ஆற்றங்கரையிலிருந்து தொடங்கி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் வரைக்கும் அரபிக் கடலையொட்டி 1,600 கிமீக்கு நீண்டுகிடக்கிறது மேற்குத் தொடர்ச்சி மலைகள். மாதவ் காட்கில், கஸ்தூரிரங்கன் குழுக்களின் அறிக்கைகளால் மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றித் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால், ஒடிஷா தொடங்கி ஆந்திரம் வழியாகத் தமிழகத்தில் முடியும், ஏறக்குறைய அதே தொலைவுகொண்ட கிழக்குத் தொடர்ச்சி மலைகள் இன்னமும்கூட உரிய கவனம் பெறவில்லை.

கர்நாடகத்தின் சில பகுதிகளில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்திருந்தாலும் மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைகள் இரண்டுமே பெருமளவில் சங்கமிக்கும் மாநிலம் தமிழ்நாடு ஒன்றுதான். தமிழகத்தில் வடக்கில் ஜவ்வாது மலை தொடங்கி ஏலகிரி, சேர்வராயன் மலை, சித்தேரி, கல்வராயன் மலை, போத மலை, கொல்லி மலை, பச்சை மலை, செம்மலை, சிறு மலை என்று நீண்டு அழகர் மலையில் முடியும் இம்மலைத் தொடர் தமிழகத்தில் மட்டும் 6,024 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. பாலாறு, பொன்னையாறு ஆகியவையும், காவிரியின் உபநதிகளும் இந்த மலைத்தொடரில் உற்பத்தியாகின்றன. எனவே, மேற்குத் தொடர்ச்சி மலையைப் போலவே கிழக்குத் தொடர்ச்சி மலையையும் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாட்டுக்கு நிறையவே உண்டு.

காலனியச் சுரண்டல்

காலனியக் காலகட்டம் தொடங்கியதிலிருந்தே கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அழிவும் தொடங்கிவிட்டது. அதற்கு முன்பு மன்னர்கள், சிற்றரசர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்தபோது பழங்குடியினரும் அல்லாதோரும் காடுகளில் விளையும் பொருட்களைப் பயன்படுத்தினாலும், அவற்றை அழிவுநிலைக்கு இட்டுச்செல்லவில்லை. மலைப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் அவற்றைத் தங்களது சொந்தப் பயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தினார்கள். வணிகத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அடிக்கடி இடம்மாற்றி விவசாயம் மேற்கொண்டபோதும்கூட, அவர்களின் விவசாயப் பரப்பு குறைவானதாக இருந்ததால் மலைகளை ஒட்டிய காடுகளின் வளம் நிலையானதாகப் பராமரிக்கப்பட்டுவந்தது.

பிரிட்டிஷ் காலனியாதிக்கக் காலகட்டங்களில் காட்டு மரங்களின் தேவை அதிகரித்துக்கொண்டே இருந்தது. 18-ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தில் கப்பல் கட்டுவதற்காக மதராஸ் மாகாணத்திலிருந்து மரங்கள் அனுப்பிவைக்கப்ட்டன. 19-ம் நூற்றாண்டில் ரயில் தண்டவாளங்களின் அடிக்கட்டைகளுக்காகவும் விறகு, கரிக்கட்டைகளுக்காகவும் மரங்கள் கணக்கின்றி வெட்டி அழிக்கப்பட்டன. தவிர தேயிலை, காபி தோட்டங்களுக்காகவும் காடுகளும் மரங்களும் அழித்தொழிக்கப்பட்டன. குறிப்பாக, சந்தன மரங்கள் மிகப் பெரிய அளவில் அழிவுக்கு உள்ளாயின.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. கட்டுமானத் தேவைகள், விறகுத் தேவைகள், விவசாய நிலம் ஆகியவற்றுக்காக வனங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளைக் குறிப்பிட்ட கால அளவுக்குத் தொழில் வட்டாரங்களாக அனுமதிக்க வேண்டிய நிலை இருந்தது. 1980-களுக்குப் பிறகே அரசின் இந்த அணுகுமுறையில் மாற்றங்கள் தொடங்கின. 1988-ல் திருத்தியமைக்கப்பட்ட வனக் கொள்கையின்படி காடுகளிலிருந்து பயன்களைப் பெறுவதைக்காட்டிலும் அவற்றைப் பாதுகாப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதன்படி, வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் மரம் நடும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தினாலும்கூட, அவை தோல்வியில் தான் முடிகின்றன. காரணம், மண் வளத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற மர வகைகளைத் தேர்வுசெய்யாததும்தான்.

பலனளிக்காத திட்டங்கள்

தமிழ்நாடு வனத் துறையால் 1997 தொடங்கி 2005 வரைக்கும் கூட்டு வன மேலாண்மைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. உள்ளூர்த் தேவைகளை நிறைவேற்றும் வகையிலும், அதேநேரத்தில் காட்டுவளங்களை நிலையாகப் பாதுகாக்கும் நோக்கத்திலும் இந்தத் திட்டம் அமைந்திருந்தது. வழக்கம்போலவே இந்தத் திட்டமும் வெற்றிபெறவில்லை. வனப் பாதுகாப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா முழுவதுமே சுணக்கம்தான் நிலவுகிறது. என்றாலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளைப் பொறுத்தவரை இன்னும் அது சிக்கலாகிறது. காரணம், இமயமலைத் தொடர்களைப் போலவோ அல்லது மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போலவே கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியாக அமைந்திருக்கவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும்போது அவற்றின் உயரமும் குறைவு. எனினும், புவியியல் அடிப்படையில் அவற்றைக்காட்டிலும் பழமையானவை.

கிழக்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள காடுகளும் ஒரே மாதிரியாக இல்லை. பசுமை மாறாக் காடுகள் தொடங்கி புதர்க்காடுகள் வரையில் ஒன்பது வகைகளாக அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. மழையளவுகளும் தட்பவெப்ப நிலைகளும் மலைக்கு மலை அவற்றின் உயரத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகின்றன. தனித்தனியாக அமைந்திருக்கும் இந்த மலைகள் குடியிருப்புகளாலும் விவசாய நிலங்களாலும் சூழப்பட்டிருக்கின்றன என்பதால், மலையையும் காடுகளையும் பாதுகாப்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. 1920 தொடங்கி கடந்த நூறு ஆண்டுகளில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் வனப்பரப்பு குறைந்துகொண்டே இருக்கிறது. இது அரசு, மக்கள் என எல்லோரது பொறுப்பின்மைக்கும் எடுத்துக்காட்டு. உலக அளவில் ஆசிய யானைகள் அதிகம் வாழும் பகுதி நம் கண் முன்னாலேயே பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது.

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளிலிருந்து உலகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் வனப்பரப்பைப் பாதுகாக்கவும் அதிகரிக்கவும் வேண்டியது அவசியம். மலைத்தொடர்களைப் பாதுகாப்பதன் வாயிலாக அந்த நோக்கத்தை இன்னும் எளிதாக்க முடியும். தென் அமெரிக்க நாடுகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க மச்சுபிச்சு மலைத்தொடரைப் பாதுகாக்க பெரு நாடு தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. நிலச்சரிவிலிருந்தும் மண் அரிப்பிலிருந்தும் பாதுகாக்கும் வகையில் மச்சுபிச்சு மலைத்தொடரைச் சுற்றி பத்து லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுவருகின்றன. உலகத்தின் முன்னணி சுற்றுலா மையமான மச்சுபிச்சுவுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டுவருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் செனகல் தொடங்கி ஜிபெட்டி வரைக்கும் 8,000 கிமீ தொலைவுக்கு மரங்களை நட்டு பசுமைச் சுவரை எழுப்பியிருக்கிறார்கள். அயர்லாந்தில், அடுத்த இருபது ஆண்டுகளுக்குள் 40 கோடி மரங்களை நடுவதற்குத் திட்டமிட்டு செயல்பட்டுவருகிறார்கள்.

மாதவ் காட்கிலின் பரிந்துரை

மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க வேண்டும் என்றால் கனிமச் சுரங்கங்களையும் நீர் மின் சக்தித் திட்டங்களையும் அனுமதிக்கக் கூடாது, காடுகளைப் பாதுகாக்கும் பொறுப்பை உள்ளாட்சி அமைப்புகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற முக்கியமான வழிகாட்டுதல்களை மாதவ் காட்கில் வழங்கினார். அவரைத் தொடர்ந்து கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு நிபந்தனைகளின் அடிப்படையில் நீர் மின் சக்தித் திட்டங்களைத் தொடரப் பரிந்துரைத்தாலும் கனிமச் சுரங்கங்களை அனுமதிக்கக் கூடாது என்றது. இரண்டு குழுக்களின் பரிந்துரைகளுமே இன்னும் நடைமுறைக்கு வந்தபாடில்லை.

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளையும் பாதுகாக்கும் வகையில் மாதவ் காட்கில், கஸ்தூரிரங்கன் குழுக்களைச் செயல்படுத்துவதற்காக நிரந்தர அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடுத்திருக்கிறார் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். நீர்நிலைகள் ஆக்ரமிப்பாலும், வன வளங்கள் அழிக்கப்படுவதாலும் உயிரினப் பன்மை அச்சுறுத்தலாவதை அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறார். மாதவ் காட்கிலின் அர்ப்பணிப்பாலும் தொடர் ஆய்வுகளாலுமே மேற்குத் தொடர்ச்சி மலைக்குத் தேசிய கவனம் கிடைத்திருக்கிறது. அவரது பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் அவை நீட்டிக்கப்படும் என்றால், தமிழகத்துக்கு மட்டுமல்ல; உலகுக்கும் அது நல்லது.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்