உலகம் தன்னை எப்படித் தற்காத்துக்கொள்கிறது?

By புவி

கரோனா வைரஸ் தாக்குதலின் புதிய மையமாக ஐரோப்பிய நாடுகளை அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். கரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களிலும் அதற்குப் பலியானவர்களிலும் மூன்றில் ஒரு பங்கினர், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. 25,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1,800 பேர் பலியாகியிருக்கிறார்கள். இத்தாலியில் ஏற்பட்டிருக்கும் நோய்த் தாக்குதலை அடுத்து மற்ற ஐரோப்பிய நாடுகள் தங்களைக் காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கிவிட்டன.

கரோனா தாக்குதலுக்கு முன்பு, ஐரோப்பிய நாடுகளுக்குள் எல்லைகளைக் கடப்பதற்குத் தங்கு தடையற்ற நிலை இருந்தது. இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றும் எல்லைக் கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்திருக்கின்றன. மிக முக்கியமாக, எந்தெந்த வகைகளில் எல்லாம் மக்கள் ஒன்றுகூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதோ அவை அனைத்துக்கும் தடைவிதித்துவருகின்றன.

ஆஸ்திரியாவில் 100 பேருக்கும் மேல் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், கலையரங்குகள் என மக்கள் ஒன்றுகூட வாய்ப்புள்ள இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெல்ஜியத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட், மருந்துக் கடைகள் மட்டுமே திறந்துள்ளன. மதுபான விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதோடு அது சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்று காவலர்கள் தொடர்ந்து கண்காணித்தும் வருகிறார்கள்.

செக் குடியரசில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன. உடற்பயிற்சி நிலையங்கள், நூலகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உணவு விற்பனை நிலையங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்துக் கடைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. டென்மார்க்கிலும் அனைத்து விதமான பொழுதுபோக்கு மையங்களுக்கும் நூலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே இருக்கும்படியும் பொதுப் போக்குவரத்தைத் தவிர்க்கும்படியும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

பிரான்ஸில் வெர்செயில்ஸ் அரண்மனை, ஈபிள் கோபுரம், டிஸ்னிலேண்ட் பாரிஸ் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன. நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், கலையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன அல்லது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுவிட்டன. பயணங்களைக் குறைத்துக்கொள்ளுமாறும், வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளைச் செய்யுமாறும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரான் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெர்மனியில் பெரும்பாலான பள்ளிகளுக்கு ஏப்ரல் 20 வரையிலும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. முக்கியமான கால்பந்துப் போட்டிகள் ஆளில்லாத மைதானங்களில் நடத்தப்படுகின்றன. கிரீஸில் திரையரங்குகள், கலையரங்குகள், விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. ஹங்கேரியில் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதோடு நாடு முழுவதும் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் அனைத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டிலும் 100 பேருக்கும் மேல் ஒன்றுகூடுவதற்குத் தடை நிலவுகிறது. பள்ளி, கல்லூரிகள் திறந்திருக்கின்றன என்றாலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு ஊக்குவிக்கப்படுகிறது. நார்வே நாட்டில் அனைத்துப் பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதோடு விளையாட்டு மைதானங்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கான அரங்கங்களும் மூடப்பட்டுள்ளன.

போலந்தில் அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. திரையரங்குகள், கலையரங்குகள் மூடப்பட்டுள்ளன. எனினும், மக்களின் வேண்டுகோளை ஏற்று தேவாலயங்கள் மட்டும் திறந்துவைக்கப்பட்டுள்ளன. நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகப் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போர்ச்சுகல் நாட்டில் கடைகள் அனைத்தும் திறந்துள்ளன. ஆனால், பேரங்காடிகள் மற்றும் உணவகங்களில் குறைந்தபட்ச நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள். ஸ்லோவேகியாவில் மளிகைக் கடைகள், உணவகங்கள் திறந்துள்ளன. பேருந்து, ரயில் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் பேரங்காடிகள் திறந்திருந்தாலும், வார இறுதி நாட்களில் உணவு, மருந்துக் கடைகள் மட்டுமே திறக்கப்படுகின்றன.

ஐரோப்பாவில் இத்தாலியை அடுத்து மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு ஸ்பெயின். 5,700 பேர் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். 136 பேர் பலியாகியிருக்கிறார்கள். 517 பேர் குணமாகி வீடுதிரும்பியிருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டில் தேசிய நெருக்கடி அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை, உணவு, மருந்துக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த மாட்ரிட் நகரில் அனைத்து கடைகளுமே மூடப்பட்டுள்ளன.

ஸ்விட்சர்லாந்திலும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதி வரையிலும் 100 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் 50 பேருக்கு மேல் அனுமதி இல்லை. பிரிட்டனில் மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடைவிதிப்பதற்கான சட்ட வரைவுகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களாக 2,482 பேர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். 65 பேர் வைரஸ் தாக்குதலுக்குப் பலியாகியிருக்கிறார்கள். மேற்கு வெர்ஜினியா தவிர மற்ற 49 மாகாணங்களிலும் நோய்த்தொற்று பரவியுள்ளது. தேசிய நெருக்கடியை அறிவித்திருக்கிறார் அதிபர் ட்ரம்ப். அமெரிக்கா முழுவதும் அதிவேகத்தில் ஆய்வுகள் செய்யும் வகையில் 2,000 ஆய்வகங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், அடுத்த எட்டு வாரங்களுக்கு ஐம்பது பேருக்கும் மேற்பட்டவர்கள் கூடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. நியூயார்க் நகரப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 20 வரை விடுமுறை அறிவித்துள்ளார் மேயர் பில் டி பிளாஸியோ. அரிசோனா உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் வகுப்புகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதோடு ஆன்லைன் வகுப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட மாகாணங்களில் மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஒஹையோ, கலிபோர்னியா, பென்சில்வேனியா, இல்லினாய்ஸ் மாகாணங்களில் மது அருந்தும் விடுதிகளும் உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. மற்ற மாகாணங்களில் உணவருந்தும் மேஜைகள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன அல்லது உணவு வாங்கிச்செல்ல மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

உலக நாடுகள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மையாகக் கருதுவது, பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்ப்பதுதான். அத்தியாவசியமான காரணம் எதுவுமின்றி யாரும் வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது என்பதில் இந்த நாடுகள் அனைத்துமே உறுதியாக இருக்கின்றன. இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், அரசும் சமூகமும் முன்கூட்டி யோசிப்பதும் திட்டமிடுவதும் மிகவும் அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

26 days ago

மேலும்