உலகின் முன்னணி சிற்பக் கலைஞர்களில் ஒருவரும் சுயம்பாகத் தன் கலையைப் பயின்றவருமான நேக் சந்த், சமீபத்தில் காலமானார். ஒரு காலகட்டமே அவரோடு மறைந்துவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. பெரும்பாலான வாசகர்கள், குறிப்பாக இளம்தலைமுறையினர், அவர் யார் என்று கேட்கக்கூடும். அவர் மக்பூல் ஃபிடா ஹூசைனோ, ஹமிதூர் ரஹ்மானோ அல்லது எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியோ அல்ல. ஆனால் படைப்பு சார்ந்த உலகில் இதற்குப் பதில் தேடினால் மேற்சொன்ன கலைஞர்களுக்கு அவரும் இணையானவர் தாம்; நாட்டார் மரபிலிருந்து தோன்றி, கலை குறித்த தனது கருத்தாக்கத்தைச் சார்ந்து இன்னொரு நாட்டார் மரபை உருவாக்கிய மகத்தான ஆளுமைதான் நேக் சந்த்.
அந்த மகத்தான மனிதரையும் அவரது பணிகளையும் புரிந்துகொள்ள ஒருவர் பிரிவினைக் காலகட்டத்துக்கும், லு கார்புசியேவிடமும் (Le Corbusier), அந்தக் கால சண்டிகருக்கும் திரும்பிச் செல்ல வேண்டும். பிரிவினைக் கால வன்முறையால் களைத்துப்போயிருந்த நேரு, புதிய நினைவுடன் கூடிய புதிய இந்திய உணர்வை உருவாக்க விரும்பினார். அந்தக் கனவை நனவாக்குவதற்கு அவர் சண்டிகரைத் தேர்ந்தெடுத்தார். அந்தக் கனவைச் செயல்படுத்த உலகின் மகத்தான கட்டிடக் கலைஞர்களுள் ஒருவரான லு கார்புசியேவை சண்டிகர் என்னும் புதிய நகரை நிர்மாணிப்பதற்காக அழைத்தார். கார்புசியே உருவாக்கிய சண்டிகர்தான், இந்தியாவின் மகத்தான திட்டமிட்ட நகரமாகும்.
கார்புசியே, சுவிட்சர்லாந்தில் பிறந்த பிரெஞ்சுக் கட்டிடக் கலைஞர். ‘இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்ச’ரின் முதல் தலைமுறை மாணவர்களில் ஒருவர். திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சண்டிகர் நகரத்துக்கான முழு வடிவமைப்புத் திட்டத்தைத் தீட்டியவர் அவர்தான். அத்துடன் அங்குள்ள பல கட்டிடங்களுக்கும் குறிப்பிட்ட வடிவமைப்புகளைப் பங்களித்தவர்.
கழிவே நினைவாக
இன்று புகழப்படும் கார்புசியேவின் கதையில் நேக் சந்தும் ஒரு அடிக்குறிப்பாக வருகிறார். நேக் சந்த், பிரிவினையின் குழந்தை. பிரிவினையின்போது குடும்பத்தோடு இந்தியாவுக்கு வந்தவர் நேக் சந்த். பின்னர் சண்டிகரில் வேலை தேடி, பொதுப் பணித்துறையில் வேலைக்குச் சேர்ந்தார். சண்டிகர் நகரம் திட்டமிடப்பட்ட விதம் குறித்து அவருக்கு ஈர்ப்பு அதிகம். அத்துடன் ஏரிக்கு அருகே ஒருமுறை கார்புசியேவைப் பார்த்ததையும் வியப்போடு சொல்லிச் சொல்லி மாய்வார்.
ஆனால் நேக் சந்தை சங்கடப்படுத்தியது எதுவென்றால், கார்புசியேவின் சண்டிகரிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு 16 கிராமங்களில் கொட்டப்பட்ட கட்டிடக் கழிவுகள்தான். அந்தக் குப்பையின் வடிவங்களால் அவர் கவரப்பட்டார். உண்மையில், ‘அரித்தல்’ எனும் கலையை அவர் விரும்பினார். ‘இயற்கையைச் செதுக்குவதற்குக் கடவுள் மேற்கொண்ட வழி’ அரிப்பு என்று விரைவிலேயே சொல்லத் தொடங்கினார். இயற்கை தன்னளவிலேயே பெரும் சிற்பியாக இருப்பதை உணர்ந்ததால் தன்னை வெறும் சேகரிப்பாளர் என்று அழைத்துக்கொண்டார்.
மலைபோல குவிக்கப்பட்டிருந்த கட்டிடக் கழிவுகளில் இருந்தும் குப்பைகளின் எச்சங்களிலிருந்தும் அந்த எளிய பொதுப்பணித் துறை ஊழியர், அட்டகாசமான கலைச் சின்னமொன்றை உருவாக்கினார்; முதலில் ரகசியமாக, சண்டிகரைச் சுற்றியிருந்த காடுகளில் உருவாக்கினார். நகரம் தொடர்பான கார்புசியேவின் அறிக்கைக்கு பதில் அறிக்கை யாகவே கிராமங்களிலிருந்து அவர் தேர்ந்தெடுத்த கட்டிடக் கழிவுகள் இருந்தன.
இப்படித்தான் நினைவின் ஒரு பதிவாக இருக்கும் குப்பை, இந்தியாவின் மிகப்பெரிய திட்டமிட்ட நகரத்துக்குக் கொடுக்கப்பட்ட பதிலாக விரைவில் ஆனது. நேக் சந்தின் அருந்திறன் குறித்த செய்திகள் பரவத் தொடங்கிய பின்னர், தனது வினோதக் கற்பனை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்குச் சில ஏக்கர் நிலம் சண்டிகரில் கிடைத்தது. இப்படித்தான் அவரது புகழ்பெற்ற பாறைத் தோட்டத்துக்கு அடித்தளம் இடப்பட்டது. அதைச் சுற்றுலாப் பகுதி என்று அழைப்பது குறைத்து மதிப்பிடுவது ஆகும்.
தொழில்மயவாதம் மற்றும் நகர்ப் புறவாதத்தின் விழுமியங்களை மீண்டும் எடுத்துக்காட்டும் தலைசிறந்த குறியீட்டுரீதியான படைப்பாகும். இருப்பினும் அவரது விமர்சனம் என்பது சமூகவியல் ரீதியானதல்ல. நகரியவாதத்துக்கு ஒரு நாட்டாரியலாளரின் எதிர்வினை. திட்டமிடுதல் என்பது பஞ்சதந்திரக் கதைகள் வழியாக மறுமுறை சொல்லப்பட்டதைப் போன்றது அது.
பாறைத் தோட்டத்தைப் பற்றி கதைகளும், தொன்மங்களும், ஒரு தேவதைக் கதையும்கூட, நிலவுகின்றன. இதை பிரெஞ்சுக்காரர்கள் ‘ப்ரிகொலாஜ்’ என்று அழைக்கக்கூடும். அதாவது விதவிதமான பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்ட அல்லது கட்டப்பட்ட ஒன்றாகவும், ஒரு அறிக்கையாகவும் அதுவே இருப்பது. நேக் சந்தின் தோட்டம் மூன்று மட்டங்களில் அமைக்கப்பட்டது. முதல் மட்டத்தில், சிறுதோட்டங்களால் சூழ்ந்த அரிக்கப்பட்ட பாறைகள் இயற்கையையே ஒரு காட்சிப்பொருளாகச் சித்தரிக்கின்றன.
இரண்டாவது மட்டம் ‘குப்பைகளின் திருவிழா’. அங்கே கண்ணாடிச் சில்லுகள், பளிங்குத் துண்டுகள் மற்றும் நகரத்தின் கட்டிடக் கழிவுகள் எல்லாம் விலங்குகளின் பெருந்தொகுப்பாக வடிவமைக்கப்பட்டன. பறவைகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் சேர்ந்து திருவிழா நடத்தும் கண்ணுக்கு இனிய மிருகக்காட்சி சாலையாகும். அந்தத் தோட்டத்துக்குச் சுவர் உண்டு. அதன் மாடங்களில் நேக் சந்த் தினசரி ஒரு பிரபுவைப் போல நடந்து எல்லாவற்றையும் பார்வையிடுவார். அதையெல்லாம்விட அந்தத் தோட்டம் ஒரு குழந்தையின் எக்களிப்பாகவும், பெரியவரின் விந்தையாகவும் இருந்தது.
கழிவுக்குப் புது வாழ்வு
‘கழிவு’ என்று மக்கள் பார்த்த, புறக்கணிக்க வேண்டிய ஒன்றுக்குப் பொழுதுபோக்கு வடிவமாக அபரிமிதமான மதிப்பு இருந்ததை நேக் சந்த் உணர்ந்தார். பொதுமக்கள் தாங்கள் ‘கழித்துக்கட்டும் பொருட்கள்’ அனைத்தையும் ஒரு தத்துவம் மற்றும் ஒரு வாழ்க்கை முறையாக மெதுவாகப் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டியது குறித்த யோசனை அவருக்கு எழுந்தது. ‘குப்பை’ என்பது தூக்கி எறிந்துவிடக்கூடியதும், புறக்கணிக்கக்கூடியதும் அல்ல, அவற்றைக் கலைப் படைப்புகளாக மறுநிர்மாணமும் மறுசுழற்சியும் செய்ய முடியும்.
அவரைப் பொறுத்தவரை, குப்பைத்தொட்டியில் ஒரு பொருள் எறியப்படும்போது அது இறந்துவிடுவதில்லை. அதற்கு மறுபடியும் உயிர்கொடுக்க முடியும், புதிய கதையொன்றாகத் தொடரும்படி அதற்கு மறுபிறப்பளிக்க முடியும். ‘மறுபிறவியெடுக்கும் குப்பை’ என்னும் கருத்தாக்கம் மக்களைக் கவர்ந்தது. சண்டிகரைச் சுற்றி அலைந்து மக்களிடம் சிரித்துக்கொண்டே அவர்கள் கழித்துக் கட்டும் குப்பைகளைக் கேட்பார் நேக் சந்த். குப்பை, கழிவு போன்ற வார்த்தைகளே பொருளியத்தின் மொழியாடலிலிருந்து வருபவை என்று நேக் சந்த் உணர்ந்தார். ஒரு சமூத்தின் இயங்குமுறையைப் புரிந்துகொள்வதற்கு அந்த சமூகம் ஒரு கலாச்சாரமாகவே குப்பை உருவாக்கத்தை மேற்கொண்டிருப்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது என்று கூறினார்.
அவருடன் நான் நடத்திய நேர்காணல்களில் ஒன்றில், அவர் தன்னுடைய அயல்நாட்டுப் பயணங்கள் பற்றியும் அங்கே குப்பைகளிலிருந்து படைப்புகளை உருவாக்கக் கிடைத்த வாய்ப்புகள் பற்றியும் பேசினார். அந்த முயற்சி பலன்களை அளித்ததா என்று கேட்டேன். அவர் ஏக்கத்துடன் பதில் அளித்தார். “அவர்களது குப்பைகள் நம்முடைய குப்பைகள் போன்றில்லை. அவை வித்தியாசமான மொழியில் பேசுகின்றன”.
அவர் ‘குப்பை’யிலிருந்து உருவாக்கிய கோட்டைகளைச்சுற்றிப் பார்க்கப் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் போது அவரிடம் பயங்கர குசும்புத்தனம் இருக்கும். அந்த இடங்களுக்கு அவர் உயிர் கொடுத்திருப் பதை உணர முடியும். நாட்டுப்புறக் கதைகளில் வரும் கதாபாத்திரங்களும் கற்பனாதீதமும் சேர்ந்த நாடகம் போல இருக்கும்.
அவர் உருவாக்கிய விலங்குகள் அனைத்தும் அவரிடம் பேசுவது போன்ற உணர்வை அடைய முடியும். ஒருமுறை நான் அவரைச் சென்று பார்த்தபோது, லாலு பிரசாத் யாதவுக்கு வரைந்த பெரிய கார்ட்டூன் படத்தை என்னிடம் பெருமையாகக் காண்பித்தார்.
அவரது தோட்டத்தைச் சுற்றி நடந்து கொண்டிருந்த போது, அத்தோட்டத்தில் விடப்பட்டிருந்த பெரிய வெற்றிடம்குறித்து அவர் வாயையே திறக்கவில்லை, அந்த வெற்றிடம் குறித்து அவரிடம் ஒரு புதிர்த்தன்மை நிலவியதாக உணர்ந்தேன். அந்த இடத்தில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறார் என்று கேட்டபோது மவுனம் சாதித்தார். என்னால் பதிலைப் பெற முடியவில்லை.
நகரியவாதத்துக்கு விடை
பாகிஸ்தானில் நடந்த பஞ்சாபியர் மாநாட்டுக்கு நேக் சந்த் அழைக்கப்பட்டதாக ஒரு நாள் கேள்விப்பட்டேன். அவர் தனது சொந்த கிராமத்தைச் சென்று பார்க்கத் தீர்மானித்தார். இந்திய ராணுவத்தின் கடுமையான வெடிகுண்டுத் தாக்குதலால் முழுமையாக அழிக்கப்பட்ட கிராமம் அது. அவரது பூர்வீக கிராமம் குறித்த நினைவுகளை அவர் பகிர்ந்துகொண்ட போது நேக் சந்த் மிகவும் கிளர்ச்சியடைந்தார்.
அந்தக் கிராமத்தின் அழிவு அவரைத் துயரத்துக்குள்ளாக்கி யிருந்தாலும், அவர் அதிலிருந்து தூண்டுதலைப் பெற்று, படைப்பூக்கத்துக்கான தருணத்தையும் கண்டடைந்தார். அவரது பாறைத் தோட்டத்தில் கட்டிடக் கழிவுகள் மற்றும் குப்பைகளிலிருந்து ‘ஞாபகத்திலுள்ள கிராமத்தை’ உருவாக்கத் தீர்மானித்தார். மக்கள் பயன்படுத்தித்தூக்கி எறிந்த, மறந்துபோன குப்பைதான் அதற்கு ஆதாரமானது- பழையதாகிப் போன பொருட்களைக் கொண்டு அல்ல- நினைவால் ஆன குப்பை அது.
இதற்காக, கந்தல்கள், பழைய துணிகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களிலிருந்து அவரது கிராமம் உருப்பெற்று எழ வேண்டியிருந்தது. கழிவுகள் இப்போது நினைவை மறுசுழற்சி செய்யுமே தவிர அதை அழித்துவிடாது. அந்த ‘நினைவுகூரும் கிராமம்’தான் லு கார்புசியேவின் புதிய நகரியத்துக்குத் தத்துவ ரீதியான பதிலாக இருக்கும். மறுசுழற்சி என்பது வடிவமைப்பை எதிர்கொள்ளும். நினைவு என்பது திட்டமிடலுக்கு முரணாக வைக்கப்படும். அத்துடன் குப்பை என்பது ஒரு கதையை மறுமுறையும் கூறுவதாக இருக்கும், அதாவது தொலைந்த நினைவு, ஒரு நகரம் மற்றும் அதனால் நீண்டகாலமாக மறக்கப்பட்ட அகதிகளை இணைக்கும் பாலமாக.
மேதையைக் குறைவாக எடைபோடுவது
ஒரு வகையில் இந்த விஷயத்தை நினைவுகூர்வது துயரகரமானது. துடுக்குத்தனம் மற்றும் விளையாட்டுத்தனமான மேதமை கொண்ட நேக் சந்த், இன்று இரண்டாந்தரக் கலைஞரின் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதுதான் துரதிர்ஷ்டவசமானது. ஒரு குழந்தையின் படைப்பை எப்படிப்பட்ட பரவசத்துடன் எல்லோரும் அணுகுவார்களோ அதே போன்ற பரவசத்துடனே அவரது புகழ்பெற்ற படைப்பான பாறைத் தோட்டத்தையும் அணுகினார்கள். கண்காட்சியில் இடம்பெறும் அரிய சேகரிப்புப் பொருள் போன்றதுதான் அந்தத் தோட்டம்.
இந்தப் பாறைத் தோட்டம் ஒருமுறை ரவுடிகளின் தாக்குதலுக்கும் உள்ளானது. அவரது செவ்வியல் கலையுணர்வு, பெரும் மரபுகளில் வேர்கொண்டதல்ல, நாட்டார் மரபின் எளிய அன்றாடத்தன்மையிலிருந்து கிளைத்தது. கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட அவரது மாய வனத்தில் நாட்டார் மரபும் தொன்மமும் விலங்குகளாகவும் பிற உயிர்களாகவும் உயிர்பெற்ற கதை அது.
இருப்பினும், அவரது படைப்பாற்றல் மற்றும் சித்தரிப்பின் பின்னணியில் இருப்பது வெறுமனே நாட்டார் ஞானம் மட்டும் அல்ல, நிறைய பேர் தவறவிடக்கூடிய ஆழமான தத்துவமும்கூட; நகரியம், தொழில்வாதம் மற்றும் வடிவமைப்பு போன்றவற்றால் உருக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கு அறிவார்த்த சவாலை அவருடைய தத்துவம் விடுத்தது. உலகம் எதைக் குப்பையென்று ஒதுக்குகிறதோ, அதைப் புதுப்பிப்பதன் ஆற்றல் மற்றும் மந்திர சக்தியை வலியுறுத்தியதன் மூலம், மக்களுக்கும் பொருட்களுக்கும் மாற்று உண்டு என்று நினைத்துக் குப்பைகளை உருவாக்கும் தற்காலப் பண்பாட்டுக்கு அவர் சவால் விடுத்தார்.
சென்னையின் சேரிப்பகுதி அருகே ஒரு சிறிய ஆய்வகத்தில் இருந்துகொண்டு, பெரும் பங்களிப்புகளைச் செய்த வேதியியல் விஞ்ஞானி சி.வி.சேஷாத்ரியின் தத்துவத்தை உணர்ந்து பிரதிபலித்தவர் நேக் சந்த். “ஒதுக்கப்பட்ட மக்களின் ஒரே வளம் குப்பைதான்” என்று அவர் கூறினார். சேரிகளைப் பற்றிய மேற்சொன்னது போன்ற சிந்தனை, படைப்பாற்றலுக் கான ஏக்கத்தை முன்னிறுத்துவதாக அவர் உணர்ந்தார்.
நோய்க்கூறியல் பரிசோதனைக்கூடப் பொருட்களாக மட்டும் சேரிகள் அணுகப்படக் கூடாதென்றும், படைப்பாற்றலுக்கான புதிய குடியுரிமையின் பிரதிநிதியாக நடத்தப்பட வேண்டுமென்று அவர் உணர்ந்தார். நேக் சந்த் மற்றும் சேஷாத்ரி இருவருக்குமே கதைசொல்லலின் புதிய வடிவமாக மறுசுழற்சி இருந்தது. இங்கே ஒரு பொருள் தனது முடிவைச் சந்திப்பதற்குப் பதிலாக, உருமாற்றமடைந்து, மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டு பின்னர் வேறு கதை ஒன்றைச் சொல்கிறது. கைவினைக் கலை மூலம், ஒரு தயாரிப்பின் ஆயுட்காலத்தை அதன் தொழில்பூர்வமான திறனையும் தாண்டி நீட்டிக்கச் செய்வதன் மூலம் தொழில்மயவாதத்தின் மோசமான விளைவுகளுக்குப் பதிலீடு செய்ய முடியுமென்று நேக் சந்த் நிரூபித்துக் காட்டினார்.
குப்பைகளையும் கழிவுகளையும் ஒதுக்கும் நகரியம் மீதும், அதன் மரபுசாரா பொருளாதாரம் குறித்த அறிவின்மையுடன், விளிம்புநிலையில் வாழ்பவர்களின் குடியுரிமையை அங்கீகரிக்கத் தவறும் நகரியத்தின் மீதும், இன்றைய நகரம் குறித்து நிலவும் கருத்துகள் மீதும் அவருக்கு ஆழமான விமர்சனம் இருந்தது. குப்பைகளையும் உள்ளடக்கிய உணர்வு மற்றும் நினைவுகளுடன், நேக் சந்தின் தோட்டம் மேலதிக உயிர்ப்புடைய நகரம் ஒன்றைப் பரிந்துரைக்கிறது, அங்கே நகரம் என்பது வெறும் கலைப்பொருளாக இல்லாமல் வளர்ச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
நேக் சந்த் கனவுகண்ட நகரம், அகதிகளுக்கு, நினைவு களுக்கு, குப்பைகளுக்கு, வேறுவிதமான வாழ்க்கையை வாழ விரும்பும் தோல்வியடைந்த மக்களுக்கு இடமில்லாத இன்றைய நகரங்களுக்கான கூடுதல் மனிதாபிமான பதிலைக் கொண்டது. அப்படியான நிலையில் நேக் சந்த், ஒரு கலைஞனை விடவும் மேலானவர். தொழில்நுட்ப தத்துவவியலாளராக சோகம், முரண்பாடு மற்றும் சிரிப்பைத் தொழில்நுட்பத்துக்கு திரும்பியளித்தவர் நேக் சந்த்.
அவர் தொழில்நுட்பத்துக்கு ஒரு ஆடியை வழங்கியவர். அந்த ஆடியின் மூலம் அது தன்னைப் பார்த்து சிரித்துக்கொள்ள அதனால் முடியும். அத்துடன் தனது கண்டுபிடிப்புகளின் பெருமிதங்களைத் தாண்டி, தன்னால் ஏற்பட்ட துயரமான- நகைப்புக்குரிய விளைவுகளை ஏறெடுத்துப் பார்க்க முடியும்.
தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago