குஜராத் முன்மாதிரியும் தமிழக முன்மாதிரியும்!

By சமஸ்

யார் இந்த ஹர்திக் படேல்?

ஒரு மாநிலமே முடங்கியிருக்கிறது. தலைநகர் அகமதாபாத் கலவர நகரமாகியிருக்கிறது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டும் அகமதாபாத்தில் மட்டும் 50 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. பஸ்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் என்று 140 வாகனங்கள் தீக்கிரையாகியிருக்கின்றன. இதுவரை 9 உயிர்கள் கலவரங்களில் பறிபோயிருக்கின்றன. மேசானா, ராஜ்கோட், சூரத் என சௌராஷ்டிரம் வரை வன்முறைத் தீ தொடர்ந்து பரவுகிறது. கடி நகரில் சுகாதார அமைச்சர் நிதின் படேலின் வீடு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. மேசானாவில் உள்துறை இணையமைச்சர் ரஜனிகாந்த் படேல், மோர்பியில் வேளாண் இணையமைச்சர் ஜெயந்தி கவாடியா, சமூகநீதித் துறை அமைச்சர் ரமண்லால் வோராவின் அலுவலகம் ஆகியவை எரித்தழிக்கப்பட்டிருக்கின்றன. மோர்பியில் மத்திய வேளாண் இணையமைச்சர் மோகன் கவுன்டரியாவின் கார் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் வடோதராவில், பலிதானாவில் என்று ஆளும் பாஜகவின் பிரதிநிதிகளே அடிபடும் கதைகள் ஒவ்வொன்றாய் வந்துகொண்டேயிருக்கின்றன. முதல்வரும் பிரதமரும் அமைதிக்காக வேண்டுகோள் விடுத்தும் பலனில்லாமல், விரைவு அதிரடிப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை என மத்தியப் படைகளின் பல பிரிவுகள் அழைக்கப்பட்டிருக்கின்றன.

யார் இந்த ஹர்திக் படேல்?

சின்னச் சின்ன ஊர்களில்கூட அவர் கூட்டிய கூட்டங்களுக்கு 5,000 பேருக்குக் குறையாமல் கூடுகிறார்கள். வடோதராவில் 50,000 பேர், சூரத்தில் 2 லட்சம் பேர், அகமதாபாத்தில் 5 லட்சம் பேர் என அவர் கூட்டும் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் திரளும் மக்களின் எண்ணிக்கை மிரளவைக்கிறது. அவருடைய ‘பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி’ அழைப்பு விடுத்த மாநிலம் தழுவிய ஒரு நாள் முழு அடைப்பு அன்று அகமதாபாத்தில் மட்டும் 10 லட்சம் பேர் திரண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த குஜராத்தும் ஸ்தம்பித்திருக்கிறது.

யார் இந்த ஹர்திக் படேல்?

ஹர்திக் படேலின் கதையை எழுத ஒரு பெரும் ஊடகக் கூட்டம் அலைகிறது. அவரது சொந்தப் பகுதியான விரம்கம்மில் உள்ள தெரு, அவர் படித்த பள்ளிக்கூடம், அவருடன் ஓடி விளையாடிய நண்பர்கள், படித்த கல்லூரி என்று தொடங்கி இரு மாதங்களுக்கு முன் அவர் தொடங்கிய ‘பாடிதார் அனாமத் ஆந்தோலன் சமிதி’யின் விஸ்வரூபத்தின் பின்னுள்ள அரசியல்வாதிகள் யார் என்பது வரை அந்தக் கூட்டம் தேடியலைகிறது.

ஹர்திக் படேலின் அரசியல் பின்னணியைத் தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்த அலைச்சல் தேவைப்படலாம். ஹர்திக் படேலின் அரசியல் பின்னணியைப் புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இந்த அலைச்சல் தேவையில்லை. வரலாற்றின் பக்கங்களைக் கொஞ்சம் புரட்டினால் போதும்.

யார் இந்த ஹர்திக் படேல்?

காலங்காலமாக இந்தியாவைச் செல்லரித்துக் கொண்டிருக்கும், விருட்டென்று பாய்வதற்கான தருணம் பார்த்து நம் உடலின் ஒவ்வொரு அணுவிலும் பதுங்கிக் காத்திருக்கும் சாதிய அரசியல் ஆதிக்கத்தின் தெறிப்புப் புள்ளிகளில் ஒன்று, இந்த ஹர்திக் படேல். குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவத்துக்காக, அவர்களுடைய சமவாய்ப்புக்காக இடஒதுக்கீடு கேட்டுத்தான் ஹர்திக் படேல் போராட்டம் நடத்துகிறார் என்று சொன்னால், குஜராத் நிலவரம் தெரிந்த சின்னக் குழந்தைகூடச் சிரித்துவிடும். ஏனென்றால், இன்றைய குஜராத்தின் அரசியல் - அதிகாரவர்க்கத்தைச் சாதிரீதியாக உடைத்துப்போட்டால், எங்கும் எதிலும் படேல்களே முன்னணியில் இருப்பார்கள். மாநிலத்தின் மக்கள்தொகையில் 15% படேல்கள். ஆளும் பாஜகவின் மாநிலத் தலைவர் ஆர்.சி.ஃபைடு ஒரு படேல். குஜராத் முதல்வர் ஆனந்திபென் ஒரு படேல். பாஜகவின் 120 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 40 பேர் படேல்கள். இன்னும் ஏனைய கட்சிகளில், ஏனைய துறைகளில், பொருளாதாரத்தில் என்று பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.

குஜராத்தில் சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை மாதவ் சிங் சோலங்கி தலைமையிலான காங்கிரஸ் அரசு 30 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவந்தபோது, இதே படேல் சாதிய அமைப்புகள் அன்றைக்குச் சமூகரீதியான இடஒதுக்கீட்டுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தன. பொருளாதாரரீதியிலான இடஒதுக்கீட்டை முன்னிறுத்தின. இப்போதும், ஹர்திக் படேல் இயக்கத்தின் இறுதி இலக்கு அதை நோக்கிதான் நகர்கிறது என்கிறார்கள், குஜராத்தின் சமூகவியல் இயக்கத்தை முழுமையாக அறிந்தவர்கள். ஏனென்றால், முன்னேறிய சமூகமான படேல் சமூகத்தினருக்குச் சமூகரீதியான இடஒதுக்கீடு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அரிது. ஏற்கெனவே ஜாட்டுகளுக்கான இடஒதுக்கீடு சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தச் சூழலில் ஜாட்டுகள், படேல்களைத் தொடர்ந்து ஏனைய முன்னேறிய சமூகங்களும் இடஒதுக்கீடு வலியுறுத்தல்களுடன் களத்தில் இறங்கினால், இந்தியச் சூழலில், நாட்டின் இயக்கமே ஸ்தம்பிக்கும். அப்போது இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான / பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கான குரல்கள் மேலே வரும்.

இடஒதுக்கீடு தொடர்பான சங்கப் பரிவாரங்களின் நிலைப்பாடு நாம் அறியாதது அல்ல. கலவரப் புகைமூட்டம் அடங்குவதற்குள்ளேயே விஷ்வ இந்து பரிஷத்தின் இணைப் பொதுச்செயலர் சுரேந்திர ஜெயின், “சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று முழங்கியிருப்பதும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.ரவி, “சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்ய வேண்டும்” என்று ட்விட் செய்திருப்பதும் இந்த நேரத்தில் நிறைய அர்த்தங்களை உள்ளடக்கியவை. எல்லாவற்றையும்விட முக்கியமானது, இந்தக் கலவரத்தின் பின்னே குஜராத் அரசின் கைகள் இருப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஹர்திக் படேல் கூட்டங்களுக்காக வந்தவர்களின் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டன; கூட்டம் நடத்தப்பட்ட இடங்கள் கட்டணமின்றி ஒதுக்கப்பட்டன என்கிற புகார்களில் தொடங்கி குஜராத் போலீஸாரே ஓரிடத்தில் வாகனங்களை அடித்து நொறுக்குவதாக ‘என்டிடிவி’ வெளியிட்ட காட்சிப் பதிவுகள் வரை எதுவும் புறந்தள்ளிவிட முடியாதவை.

இன்றைக்கு ஹர்திக் படேல் தன் மேடைகளில் யாருடைய சிலையைத் தன்னுடைய எழுச்சியின் மைய அடையாளச் சின்னமாக நிறுத்தியிருக்கிறாரோ, அதே சர்தார் வல்லபபாய் படேலுக்குத்தான் உலகிலேயே மிகப் பெரிய சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் மோடி. அன்றைக்கு மோடி முன்னிறுத்திய படேல், அவர் பேசிய வளமான - வலிமையான அரசியலின் முன்மாதிரிக் குறியீடு என்று புரிந்துகொண்டது இந்த தேசம். ஆனால், குஜராத்தின் இளைய சமூகத்தினர் மத்தியில் சர்தார் வல்லபபாய் படேல் எப்படியான குறியீடாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை ஹர்திக் படேலின் மேடையை அலங்கரிக்கும் வல்லபபாய் படேலின் சிலை நமக்குச் சொல்கிறது. தன்னுடைய மரண நாட்களில்கூட, “பாபுஜியின் படையின் விசுவாசமிக்க சிப்பாய்” என்று தன்னைக் கூறிக்கொண்ட காந்தியர் வல்லபபாய் படேல் இன்றைக்கு உயிரோடு இருந்தால், இதையெல்லாம் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிப்பார்.

இந்தப் பின்கதைகள் எல்லாம் ஓரிடத்தில் இருக்கட்டும். இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒரு செய்தியைத் திரும்பவும் கவனப்படுத்தியிருக்கின்றன இந்தக் கலவரங்கள். மக்களிடையே பிளவும் பிரிவினைவாதமும் இனவுணர்வும் அரசியலாதிக்கம் செலுத்துமிடங்களில் சிறுபான்மைச் சமூகங்கள் மட்டும் அல்ல; பெரும்பான்மைச் சமூகமும் நிம்மதியாக வாழ முடியாது என்பதுதான் குஜராத் இந்தியாவுக்கு நினைவூட்டும் மிக முக்கியமான அந்தச் செய்தி. பிரிவினை அரசியலின் தொடக்கக் குறி சிறுபான்மையினரில் தொடங்கலாம்; அதன் முழு வீச்சு எல்லோரையும் சுற்றிவளைத்து, அதன் இறுதி இலக்கு கடைசி மனிதனின் உயிரையும் விலை கேட்பதாகவே அமையும்.

நாம் ஹர்திக் படேலுக்கும் இந்தக் கலவரங்களுக்கும் சங்கப் பரிவாரங்களுக்கும் தொடர்பில்லை என்றே நம்புவோம். நாடு முழுவதும் குஜராத் பெருமை பேசிய நரேந்திர மோடியும் அவரை முன்னிறுத்தியவர்களும் இங்கே ஒரு நியாயமான கேள்விக்கு முகங்கொடுக்க வேண்டும். “நான் ஒட்டுமொத்த தேசத்துக்காகவும் சிந்திக்கிறேன். சாதி, மத அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட வளர்ச்சி அரசியல் என்னுடையது” என்று தன்னுடைய 56 அங்குல மார்பை விரித்துக்காட்டி முழங்கிய மோடியின் வலிமை இப்போது எங்கே போனது? ஒரு 22 வயது சின்னப் பையன்(ர்) சாதியின் பெயரால் ஒரு மாநிலத்தையே முடக்கிவைத்திருக்க முடியும் என்றால், அங்கே அரசாங்கம் என்ன செய்கிறது? மத்திய, மாநில அரசுகளைத் தன் கையில் வைத்திருக்கும் மோடி என்ன செய்கிறார்? எது குஜராத் அரசையும் மத்திய அரசையும் கலங்க வைக்கிறது? எது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிடாமல் அவர்களைத் தடுக்கிறது?

இந்தக் கேள்விகளின் பதில்களுக்கான விதைகள் சங்கப் பரிவாரங்களின் வரலாற்றில் புதைந்திருக்கின்றன. விஸ்வநாத் பிரதாப் சிங்கின் ஆட்சி வெறும் 11 மாதங்களில் வீழ்ந்த சரித்திரத்தை இன்றைக்கு கூகுளில் வாசிக்கும் தலைமுறைக்குத் தெரியாது, பாஜக பின்னின்று நிகழ்த்திய அந்த ஆட்சிக்கவிழ்ப்பு எதற்கான விலை என்று. மதவாத அரசியல் - ஆதிக்க சாதிய அரசியல் இரண்டையும் எதிர்கொள்ள வி.பி.சிங் கொடுத்த விலை அது. அயோத்தியில் ராமர் கோயில் எனும் முழக்கத்தை வெளிப்படையாக முன்வைத்த சங்கப்பரிவாரங்கள் மண்டல் ஆணையப் பரிந்துரையின்படி, வி.பி.சிங் அமலாக்கிய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் இரட்டை ஆட்டம் ஆடின. வெளியே பாஜக அதை ஆதரித்தது; ஆனால், உள்ளே முன்னேறிய சாதிய அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டு நாடே பற்றியெறிந்தது. குஜராத்தில் இன்றைக்கு பாஜக அமர்ந்திருக்கும் சிம்மாசனத்துக்கும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கும் நெருக்கமான தொடர்புகள் உண்டு. ஆக, குஜராத்தில் இன்றைக்கு நடக்கும் எதுவும் குஜராத்தோடு மட்டுமே முடிந்துவிடுபவை அல்ல; குஜராத் முன்மாதிரிகளாக நாடு முழுவதும் பரவக்கூடிய சாத்தியம் கொண்டவை.

ஒருவிதத்தில் இதுபோன்ற குஜராத் முன்மாதி ரிகள்தான் தமிழர்களாகத் தலைநிமிரும் தருணத்தை உருவாக்குகின்றன. படேல்கள், தாக்கர்கள், யாதவ்கள், ஜாட்டுகள், ரெட்டிகள், நாயுடுகள், சௌத்ரிகள், கௌடாக்கள், லிங்காயத்துகள் சாதிய அரசியலாதிக்க உலகுக்கும் தமிழ்நாட்டின் முதல்வர்கள் - ஒட்டுமொத்தத் தமிழர்களும் கொண்டாடும் தலைவர்கள் பட்டியலுக்கும் இடையில் இன்றைக்கெல்லாம் எவ்வளவு தூரம் இருக்கிறது!

தமிழினத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் பெரியார், தமிழகத்தின் பொற்கால முதல்வர் என்று கொண்டாடப்படும் காமராஜர், தன் வசீகரப் பேச்சால் ஒரு தலைமுறையையே மயக்கிவைத்திருந்த அண்ணா, தமிழ்நாட்டின் நீண்ட கால முதல்வரான கருணாநிதி, தமிழர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட எம்ஜிஆர், திராவிட இயக்க நீட்சியின் இன்றைய பிரதிநிதியான ஜெயலலிதா... இவர்களில் ஒருவரும் எண்ணிக்கை அடிப்படையிலான பெரும்பான்மையையும் சமூகப் பொருளாதாரச் செல்வாக்கையும் ஒருசேரப் பெற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர். மேலும், நாட்டிலேயே சமூகநீதியில் - இடஒதுக்கீட்டில் தமிழகம் தனித்துவமான இடத்தில் நிற்க எல்லோருமே ஒருவகையில் பங்களித்தவர்கள். பரமக்குடிகள், தருமபுரிகள், சேஷசமுத்திரங்கள் தொடர்ந்து நம்மை வேட்டையாடத் துரத்துகின்றன. என்றாலும், குஜராத் முன்மாதிரிகளுக்கான மாற்று தமிழக முன்மாதிரிகளிலிருந்தே உருவாக முடியும்!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்