கரோனாவை எதிர்கொள்ளும் கட்டமைப்பு நமக்குப் போதாது!- ஜி.ஆர்.ரவீந்திரநாத் பேட்டி

By செல்வ புவியரசன்

‘கோவிட்-19’ ஒரு உலகளாவிய கொள்ளைநோயாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இதுவரை 114 நாடுகளில் 1,18,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உயிர்ப்பலி 4,200-ஐக் கடந்துவிட்டது. இந்நிலையில், நோய்த்தொற்றை எதிர்கொள்ள நூறு சதவீதம் தயாராக இருக்கிறோம், அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். தமிழக அரசு எடுத்திருக்கும் தடுப்பு நடவடிக்கைகள் போதுமானவையா? மருத்துவமனைகளில் உள்ள உயிர்காக்கும் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இருக்கின்றனவா? சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்துடன் உரையாடினோம்.

கரோனாவை எதிர்கொள்ளும் அடிப்படைக் கட்டமைப்புகள் நம்மிடம் இருக்கின்றனவா?

கரோனோ வைரஸ் முதல் தடவையாக இப்போதுதான் உலகளாவிய கொள்ளைநோய் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் சீனாவில் நிரூபித்திருக்கிறார்கள். சீனாவிலுமேகூட தங்களது மருத்துவ நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்கு முன்பே தொடங்கியிருந்தார்கள் என்றால் 66% நோய்ப் பரவலைத் தடுத்திருக்க முடியும் என்கிறார்கள். ஆனால், இன்னமும்கூட இந்தியாவில் கரோனாவைக் கண்டறியும் சோதனைகளில் சுணக்கம்தான் நிலவுகிறது. மல வாய் மூலமாகவும் கரோனா வைரஸ் பரவலாம் என்று சீன ஆய்வுகள் கூறுகின்றன. இத்தகைய பரவல் முறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காத, சுகாதார வசதி இல்லாத இந்தியா போன்ற நாடுகளை மிகவும் பாதிக்கும். கரோனா வைரஸானது பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நுரையீரலில் 37 நாட்கள் வரை இருந்து, பிறருக்கு பரவும் ஆபத்து உள்ளது. இந்த வைரஸ் தொற்று உள்ளவர்களில் 26%, எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல், பிறருக்கு நோயைப் பரப்ப முடியும். இது போன்ற காரணங்கள், இந்த நோயைத் தடுப்பதில் மிகப் பெரிய சவாலை உருவாக்கியுள்ளன.

சீனாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

சீனாவில் கரோனா வைரஸ் பாதிக்க ஆரம்பித்த பிறகு, ஹூபேய் மாகாணம் முழுவதிலும் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. உணவு விநியோகத்துக்குக்கூட ட்ரோன், ரோபோடிக்ஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள். சீனாவில் பத்து நாட்களுக்குள் இரண்டு மருத்துவமனைகளைக் கட்டினார்கள். 2,500 படுக்கைகளுடன், நவீன வசதிகளுடன் அவை அமைக்கப்பட்டன. ஹெச்ஐவி, பன்றிக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான மருந்துகளைத் தங்களது சிகிச்சையில் பரிசோதனை அடிப்படையில் பயன்படுத்தினார்கள். ஹெச்ஐவி மருந்துகளை 34% நோயாளிகளுக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அண்மையில் புதிதாகக் கண்டறியப்பட்ட வைரஸ்களுக்கான மருந்தையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதற்குப் பயனும் இருந்தது. ஆராய்ச்சி செய்து நிரூபிக்கப்பட்ட பாரம்பரிய மருந்துகளையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். மலேரியா, மூட்டுவலி, பன்றிக்காய்ச்சல் நோய்களுக்கான மருந்துகள் பலனளித்திருக்கின்றன. ஏனென்றால், பன்றிக்காய்ச்சலுக்குக் காரணமான வைரஸும் கரோனோ வைரஸும் ஆர்என்ஏ வைரஸ்கள்தான். சீனாவில் தற்போது தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக சென் வெய் என்ற மருத்துவரின் தலைமையில் 7 பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்திருக்கிறார்கள். அந்தத் தடுப்பூசி வெற்றிகரமானதாக அமைந்தால், அதையே தொடர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா திரவத்திலிருந்து ஆன்டிபாடிஸைப் பிரித்தெடுத்து அதைத் தீவிர நோயாளிகளுக்கும் மருத்துவக் குழுவினருக்கும் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய வசதிகள் நம்மிடம் என்னென்ன இருக்கின்றன?

ஒரு வசதியும் இல்லை. ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு என்று எந்த வசதியும் நம்மிடம் இல்லை. நோயால் பாதிக்கப்பட்டவரின் நுரையீரலை ஸ்கேன் செய்யும்போது அதைச் செய்யக்கூடிய மருத்துவர் வெளியிலிருந்தே சோதனை செய்யும் அளவுக்கு அங்கு வசதிகள் இருக்கின்றன. முக்கியமாக, எல்லா நோயாளிகளுக்கும் தனித் தனியாக அறைகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். நகரில் இருந்த சமூகக் கூடங்களைத் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றிவிட்டார்கள். அதனால்தான், ஒரு மாதத்திலேயே அவர்களால் நோயைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது. புதிய நோயாளிகளின் தற்போதைய எண்ணிக்கை தற்போது 112 மட்டுமே. வியட்நாம் போன்ற சின்ன நாடுகளிலும்கூட வெற்றிகரமாக இந்த நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். தென்கொரியாவில் இறப்பு சதவீதம் 0.77% மட்டும்தான். சீனாவைக் காட்டிலும் குறைவு. ஏற்கெனவே, மெர்ஸ் தாக்கியபோது தென்கொரியா சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தற்போது அதை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை எடுத்தார்கள். இத்தாலி மிகவும் வளர்ந்த நாடாக இருந்தபோதிலும்கூட இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஈரானில் ஏற்கெனவே பொருளாதாரத் தடை இருப்பதால், போதுமான மருந்துகளும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளும் இல்லை. மற்ற நாடுகளில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று ஏன் சொல்கிறோம் என்றால், நம்முடைய நாட்டில் இன்றைய வரைக்கும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவமனைகள் கிடையாது. மக்கள்தொகைக்கு ஏற்ப அரசு மருத்துவமனைகள் கிடையாது. உலகத்திலேயே மிகவும் தனியார்ப்படுத்தப்பட்ட மருத்துவத் துறை இந்தியாவுடையதுதான். ஏறக்குறைய 80%-க்கும் மேல் மருத்துவ நிறுவனங்கள் தனியாரிடம் உள்ளது.

அரசுத் துறையுடன் தனியார்த் துறையும் சேர்ந்தால் இடரைச் சமாளிக்க முடியுமா?

தனியார்த் துறையைச் சேர்த்துக்கொண்டாலும் கஷ்டம்தான். ஏனென்றால், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் சிறு சிறு கிளினிக்குகளாக மட்டுமே இருக்கின்றன. பல நடுத்தரமான தனியார் மருத்துவமனைகளில்கூட அதற்குத் தேவையான அறிவியல் தொழில்நுட்பமோ மருத்துவப் பணியாளர்களோ கிடையாது. வென்டிலேட்டர்கள் கிடையாது.

நுரையீரலைத்தான் கடுமையாகப் பாதிக்கும் என்கிறார்கள். ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் கூடிய படுக்கைகள் அரசு மருத்துவமனைகளில் எவ்வளவு இருக்கின்றன?

மிக மிகக் குறைவு. கரோனா நோய் கண்டறியப்பட்ட நோயாளிகளை அனுமதிப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் படுக்கைகள் 200 மட்டும்தான். இதுவரைக்கும் தனி வார்டுகள் மட்டும்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த அறிவிப்புகளை எப்படி நம்புவது என்றும் தெரியவில்லை. 200 வென்டிலேட்டர்கள் என்றால் அவற்றை இயக்கக்கூடிய தொழில்நுட்பப் பணியாளர்கள், மருத்துவர்கள் இருக்கிறார்களா, அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதெல்லாம்கூட கேள்விக்குறிதான். தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை இந்த மாதிரி நோய்களுக்குப் பெயரளவுக்கு 2, 3 படுக்கைகளைப் போடுவார்களே தவிர முன்முயற்சி எடுத்துச் செய்ய மாட்டார்கள். ஏனென்றால், அங்கு பணிபுரியும் மருத்துவர்களில் யாருக்கேனும் தொற்று ஏற்பட்டால் மாற்று மருத்துவர்களை அவர்களால் ஏற்பாடு செய்ய முடியாது. அதையடுத்து, கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அனுமதித்தால் மற்ற நோயாளிகள் அந்த மருத்துவமனைக்குச் செல்ல மாட்டார்கள் என்றும் நினைப்பார்கள். இது அவர்களுக்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே குஜராத்தில் நிமோனிக் பிளேக் பரவியபோது எல்லாத் தனியார் மருத்துவமனைகளையும் மூடிவிட்டுப்போய்விட்டார்கள். அரசு மருத்துவர்களும் ராணுவ மருத்துவர்களும்தான் அப்போது சிகிச்சை வழங்கினார்கள். அதேபோல, 2002-2003-ல் சார்ஸ் பரவியபோது சுஷ்மா ஸ்வராஜ் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். அரசு மருத்துவமனைகளில் போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாதபோது தனியார் மருத்துவமனைகள் உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். வென்டிலேட்டர்கள் அப்போது அரசு மருத்துவமனைகளில் இல்லை. நல்லவேளை, சார்ஸ் இந்தியாவில் பரவவில்லை. ஆனால், அதே நிலைதான் இன்னமும் இந்தியாவில் நீடிக்கிறது.

அப்படி என்றால், அரசு மருத்துவமனைகளில் போதுமான வென்டிலேட்டர்கள் இருந்தால் சமாளிக்கலாம் இல்லையா?

அது மட்டும் போதாது. எக்மோவும் வேண்டும். நுரையீரல் செயலிழப்புக்கு உள்ளானவர்களுக்கு எக்மோ கருவியைப் பயன்படுத்தினால் 67% அவர்களைக் காப்பாற்றிவிடலாம். நுரையீரல் செயலிழந்தால் உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் போதிய அளவு போகாது. சிறுநீரகம் செயலிழக்கும். அதைத் தொடர்ந்து மற்ற உறுப்புகளும் செயலிழக்க ஆரம்பித்துவிடும். எக்மோ கருவியைப் பயன்படுத்தினால், உடலில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றிவிட்டு ஆக்ஸிஜனை அளிக்க முடியும். அந்த மாதிரியான எக்மோ கருவி ராஜீவ் காந்தி மருத்துவமனை போன்ற ஒன்றிரண்டு மருத்துவமனைகளில் மட்டும்தான் இருக்கிறது. பல அரசு மருத்துவமனைகளில் அந்த வசதி இல்லை.

நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, நாம் நகரின் மையப் பகுதியில் இருக்கிற மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோமே, சரியா?

மிக மிகத் தவறு. இவ்வாறான அறிவிப்பு வந்தபோதே எங்களது மருத்துவர் சங்கத்தின் மூலமாக அதைக் கடுமையாக எதிர்த்தோம். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் மதுரை ராஜாஜி மருத்துவமனையிலும் கரோனோ நோய்க்குச் சிறப்பு வார்டுகள் அமைக்கக் கூடாது என்றோம். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனி மருத்துவமனைகளை அமைக்க வேண்டும் என்றோம். அரசு செவிசாய்க்கவில்லை! விமான நிலையம் அருகிலுள்ள தாம்பரம் வட்டார மருத்துவமனையைக் காலி செய்துவிட்டு அதைச் சிறப்பு மருத்துவமனையாக அமைக்கலாம் என்ற யோசனையையும் சொன்னோம். சென்னை புறநகரில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகளையும்கூட அவ்வாறு பயன்படுத்தலாம். அதை விட்டுவிட்டு ஒரு நாளைக்கு முப்பதாயிரம் நோயாளிகள் வரக்கூடிய சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையைத் தேர்ந்தெடுப்பது மற்ற நோயாளிகளிடம் அது பரவுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். திருவள்ளூரில் கைவிடப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டிடத்தை வாடகைக்குப் பேசி அதைத் தற்கால மருத்துவமனையாகப் பயன்படுத்தலாம். சென்னையைச் சுற்றிலும் இருக்கக்கூடிய பொறியியல் கல்லூரிகள், சமூகக்கூடங்கள் ஆகியவற்றையும்கூட அவ்வாறு பயன்படுத்தலாம். முக்கியமாக, சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உடை, முகக் கவசம், கண்ணாடி ஆகியவற்றுக்கும்கூட பற்றாகுறை இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இதுதான் நிலை. ஜம்மு காஷ்மீரில் ஒரு போதிய பாதுகாப்பு உடை இல்லாமல்தான் மருத்துவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவற்றையெல்லாம்விட மோசமான விஷயம் என்னவென்றால், நிரூபிக்கப்படாத மருத்துவ முறைகளைப் பரிந்துரைப்பது. குறிப்பாக, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் யோகாவைப் பரிந்துரைக்கிறார். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோமியத்தைப் பரிந்துரைக்கிறார்கள். மத்திய அரசும்கூட நிரூபிக்கப்படாத மருந்துகளைத்தான் தொடர்ந்து பரிந்துரைத்துவருகிறது. இந்தக் கொள்ளைநோயிலிருந்து மனித சமூகம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நாம் நிறையவே அசட்டையாகவே இருக்கிறோம்.

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்