போராடுவதற்கு இன்னொரு ஆயுதம்

By ம.சுசித்ரா

இசை பொழுதுபோக்கு மட்டுமல்ல; போராட்ட வடிவமும்தான்!

அது மூன்று தசாப்தங்கள் கடந்த ஒரு விவகாரம். எவ்வளவோ மக்கள் போராட்டங்களுக்குப் பிறகும், உதாசீனப்படுத்தப்பட்ட விவகாரம். இன்று மீண்டும் விசுவரூபம் எடுக்கிறது.

1983-ல், ‘பாண்ட்ஸ் இந்தியா’ (பின்னாளில் இந்துஸ்தான் லீவர் நிறுவனத்துடன் இணைந்தது) நிறுவனத்தால் தொடங்கப்பட்ட தெர்மா மீட்டர் உற்பத்தி நிறுவனத்தை நோக்கி விரல்கள் நீள்கின்றன. ‘அதிக அளவில் பாதரசம் உற்பத்தி செய்த அந்நிறுவனம், முறையான பாதுகாப்புடன் அதைக் கையாளவில்லை. அங்கு வேலை பார்த்த ஊழியர்களின் உடல் மேல் படிந்த பாதரசம் அவர்களை முழுவதுமாக உருக்குலைத்தது. அவர்கள் உடல், ஆடை வழியாக வீட்டையும் சென்றடைந்த பாதரசம், குடும்பத்தாரையும் பாதித்தது’ என்பது குற்றச்சாட்டு. பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்ட பின் பொதுமக்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சூழலியல் ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆணை பிறப்பிக்க… 2001-ல் நிறுவனம் மூடப்பட்டது ஆனால், இன்றும் அதன் கழிவுகள் மலைபோல் குவிந்துகிடக்கின்றன. மக்களும் உருக்குலைந்து கிடக்கின்றனர். கடந்த 14 ஆண்டுகளாக அத்தொழிற் சாலையின் முன்னாள் ஊழியர்களும் சூழலியல் ஆர்வலர்களும், அம்மக்களுக்கு நஷ்டஈடு தரும்படியும் கழிவுகளை அப்புறப்படுத்தும்படியும் போராடிவருகின்றனர். ‘ஹிந்துஸ்தான் யூனிலீவர்’ நிறுவனமோ தான் நடத்திவந்த பாதரசத் தொழிற் சாலையினால் அதன் ஊழியர்களுக்குச் சுகாதாரக்கேடு ஏதும் விளையவில்லை என வாதிட்டது.

இத்தகைய சூழலில், 2015 ஆகஸ்ட் 6-ம் தேதி ‘ஹிந்துஸ்தான் யூனிலீவர்’ நிறுவனத் தலைவர் பால் போமேன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொடைக்கானலில் பாதிப்புக்குத் தீர்வுகாண யூனிலீவர் பல ஆண்டுகளாக இடைவிடாது செயல்பட்டுவருகிறது’ எனப் பதிவிட்டதை அறிந்தபோது, கொடைக்கானல்வாசிகளே கொஞ்சம் ஆச்சரியப்பட்டுத்தான் போயினர். அடுத்தபடியாக ‘யூனிலீவர்’ நிறுவனம் பாதரசக் கழிவுகளை அப்புறப்படுத்துவதாக ஒப்புதல் அளித்தது. மேலும், தூய்மைப் பணியை மேற்கொள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்தின் அனுமதியையும் கோரியது.

`கொடைக்கானல் வோன்ட்'

இத்தனை காலம் கண்டுகொள்ளப்படாத சிக்கல், திடீரென வினைமாற்றத்தை உண்டாக்கக் காரணமாய் அமைந்தது, 30 ஜூலை 2015 அன்று யூடியூபில் வெளியான இரண்டு நிமிட ராப் இசைப் பாடல் ஒன்று. ‘கொடைக்கானல் வோன்ட்’ எனும் இப்பாடல், கடந்த இரு வாரங்களில் 30 லட்சத்துக்கும் அதிகமாகப் பகிரப்பட்டுள்ளது. அதற்கு முக்கியக் காரணம், வலுவான பாடல் வரிகளை எழுதி அதைத் தீர்க்கமான உடல்மொழி மூலமாகவும் அழுத்தமான குரலில் ராப் பாடலாகப் பாடியிருக்கும் சென்னை பெண் சோஃபியா அஷ்ரஃப். எடுத்த எடுப்பிலேயே, “நீங்கள் மாற்றங்கள் செய்யும்வரை கொடைக்கானல் தன் போராட்டத்தைக் கைவிடாது” என ஆங்கிலத்தில் அழுத்தந்திருத்தமாகப் பாடுகிறார்.

அமெரிக்கக் கறுப்பின மக்களின் வீதி நடன வடிவமான ஹிப் ஹாப் நடனத்தையும் இந்தியப் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பரத நாட்டியத்தையும் பின்புலமாக வைத்து, அமெரிக்க நிறுவனம் இந்திய மண்ணில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைக் காட்டமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் ரத்திந்தரன் பிரசாத். ‘ஜாட்கா. ஓஆர்ஜி’எனும் தொண்டு நிறுவனம் தயாரித்த இந்த வீடியோ பதிவு ‘யூனிலீவர்’ நிறுவனத்தின் உடனடி எதிர்வினையைத் தூண்டக் காரணம், அதன் இறுதி ஐந்து நொடிகள். வீடியோவைக் காணும் இணையவாசிகள் இணையத்திலேயே கையொப்பமிட்டு ‘யூனிலீவர்’ நிறுவனத்துக்கு மனு அனுப்பச் சொல்கிறது. “பெருநிறுவனங்கள் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி எனும் வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, மனித மற்றும் இயற்கை வளங்களைச் சுரண்டுகின்றன. நாங்கள் அவற்றைக் கேள்விக்குள்ளாக்குகிறோம்” என்கிறார் சோஃபியா.

சமூக அநீதியை விமர்சிக்க ராப் இசை சிறந்த வடிவம் என்று சொல்லும் சோஃபியா, 2008-ம் ஆண்டு முதல் சென்னையைச் சேர்ந்த ‘வெட்டிவேர் கலக்டிவ்’ எனும் அமைப்பு நடத்தும்

`ஜஸ்டிஸ் ராக்ஸ்' இசை நிகழ்ச்சிகளுக்கு ராப் பாடல்கள் எழுதிவந்திருகிறார். “பொதுவாக, கலை நிகழ்ச்சிகள் என்றால் ஸ்பான்சர்ஸ் இருப்பார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லுவது சம்பிரதாயம் இல்லையா! ஆனால், எங்கள் நிகழ்ச்சியில் நாங்கள் அன்-ஸ்பான்சர்ஸ் கண்டுபிடிப்போம். அதாவது, மனித உரிமைகளை மீறும், சுற்றுசூழலுக்குக் கேடு விளைவிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைக் குறிவைத்துக் கேள்வி எழுப்பிப் பாடுவோம்” என்கிறார். 2008-ல் போபால் விஷ வாயு விபத்தைப் பற்றி ‘டோண்ட் வர்க் ஃபார் டர்டி டவ்’ எனும் பாடலில் ஆரம்பித்த இவர் பயணம், இந்த வருடம் ‘யூனிலீவர்’ நிறுவனத்தை வந்தடைந்திருக்கிறது. ‘சமூக வலைதளங்கள் மூலமாக இளைஞர்களைக் கைப்பற்றியிருக்கும் நிறுவனங்களில் ஒன்று ‘யூனிலீவர்’. ஆக, எந்த ஊடகம் மூலமாக மக்களைச் சென்றடைகிறார்களோ அதையே நாங்களும் தேர்ந்தெடுத்தோம்” என்கிறார் சோஃபியா.

போராட்ட இசை…

கடந்த 20 ஆண்டுகளாக கொடைக்கானலில் நிகழ்ந்துள்ள சுற்றுச்சூழல்சீர்கேட்டுக்கு எதிராகப் போராடிவரும் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமனின் முயற்சிதான் இப்படம். “அமெரிக்காவில் மூடப்பட்ட நிறுவனத்தை தமிழ்நாட்டின் மலைப் பகுதியில் நிறுவியது ‘யூனிலீவர்’. உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது என்ற மகிழ்ச்சியில் கொடைக்கானல் மக்கள் உற்சாகமாக வேலையில் சேர்ந்தனர். ஆனால், பாதரசம் எங்கள் மக்கள் வாழ்வைச் சூறையாடியது. 20 ஏக்கர் பரப்பளவு ஏரியில் ஒரு வருடத்துக்கு ஒரு கிராம் பாதரசம் கலந்தாலே அந்நீரில் உள்ள மீன்கள் விஷமாகிவிடும். அப்படியிருக்க, பாம்பார் சோலை காட்டுப் பகுதியில் பல மடங்கு பாதரசம் காற்று மூலம் கலந்தது சூழலில் எத்தகைய நாசத்தை உருவாக்கியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எப்படியாவது பெருவாரியான மக்களிடம் இதை எடுத்துச் செல்ல விரும்பினோம்” என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.

மேற்கத்திய நாடுகளில் இசை பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், போராட்ட வடிவமாகவும் காலங் காலமாக இருந்துள்ளது. அதேபோல தமிழ்ச் சூழலிலும் அப்படியான மாற்றங்கள் நிகழ ஆரம்பித்திருப்பதை ஆர்ப்பாட்டமாக அறிவிக்கிறது சோஃபியாவின் குரல். காலத்துக்கேற்ப மக்கள் மீதும் சூழல் மீதும் சுமத்தப்படும் காரணிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. போராட்ட வடிவங்களும் அப்படி மாறித்தானே ஆக வேண்டும்!

ம.சுசித்ரா

தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

49 mins ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்