க.அன்பழகன்: ஒரு யுகத்தின் இறுதி அத்தியாயம்!

By செய்திப்பிரிவு

செல்வ புவியரசன்

அரசியலின் சில விழுமியங்களைக் கடைசிவரையிலும் கட்டிக்காத்துவந்த ஒரு பெரும் வரலாற்றுக்குச் சாட்சியமாக இருந்தவர் க.அன்பழகன். ஒரு கட்சியின் நெடுநாள் பொதுச்செயலாளர் என்பதைத் தாண்டி, மக்கள் நல அரசின் முக்கியப் பொறுப்புகளான மக்கள் நல்வாழ்வு, கல்வி, நிதி ஆகிய துறைகளில் அமைச்சராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்ட அனுபவங்களின் திரட்சியாக இருந்தவர். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் என்பதைத் தாண்டி, ஜனநாயக அரசியலில் அமைச்சரவையிலும் எதிர்க்கட்சி வரிசையிலும் அவர் ஆற்றியிருக்கும் பணிகளையும் சேர்த்து நினைவுகூர்வதே அவருக்கான அஞ்சலியாக இருக்க முடியும்.

நீதிக் கட்சி தொடங்கி சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகப் பெயர் மாற்றம், திமுகவின் தோற்றம் என்று தமிழக அரசியலில் முக்கிய வரலாற்றுத் திருப்பங்களிலெல்லாம் பங்கெடுத்துக்கொண்டவர் அவர். 1940 தொடங்கி சுயமரியாதை இயக்க உறுப்பினர். நாற்பதுகளின் தொடக்கத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் கூட்டங்களெல்லாம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்களைச் சேர்ந்த விவாத அரங்குகளாக விளங்கிய வேளையில், அங்கு தன்னந்தனியராக சுயமரியாதை இயக்கத்தை ஆதரித்துப் பேசியவர். தனது சகமாணவர்கள் மத்தியில் அவர் தொடங்கி வைத்த பிரச்சாரம்தான், அடுத்த சில ஆண்டுகளில் அந்தப் பல்கலைக்கழகத்தையே திராவிட இயக்கத்தின் தவிர்க்க முடியாத மையங்களில் ஒன்றாக மாற்றியமைத்தது.

அண்ணாமலைப் பல்கலையில் இயங்கிய திராவிட மாணவர் இயக்கம், தனித்தமிழ் பெயர் மாற்றத்தை முன்னெடுத்தபோது, இராமையா என்ற தனது இயற்பெயரை அன்பழகன் என்று மாற்றிக்கொண்டார். 1943-ல் திருவாரூரில் பள்ளி மாணவராக இருந்த மு.கருணாநிதியின் அழைப்பை ஏற்று, அவர் நடத்திய தமிழ் மாணவர் மன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர்களுக்கு இடையிலான நட்பு தமிழக அரசியலின் தனிப்பெரும் அத்தியாயமாக அமைந்துவிட்டது.

1944-ல் கும்பகோணம், ஈரோடு, சேலம், லால்குடி என்று தொடர்ந்து நடத்தப்பட்ட மாணவர், இளைஞர் மாநாடுகள் அனைத்திலும் அன்பழகனுக்குப் பெரும் பங்கு உண்டு. இளைஞர்களிடம், குறிப்பாக மாணவர்களிடம் ஏற்பட்ட அரசியல் எழுச்சி உருவாக்கிய நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெரியார், திராவிடர் கழகப் பெயர் மாற்றத்துக்குத் தயாரானார் என்பது வரலாறு. சேலத்தில் பெயர் மாற்றத் தீர்மானத்தை அண்ணா முன்மொழிந்தபோது, அதை வழிமொழிந்தவர்களில் அன்பழகனும் ஒருவர். சேலம் மாநாட்டைத் தொடர்ந்து தஞ்சையிலும் புதுப்பேட்டையிலும் நடந்த மாணவர் மாநாடுகளிலும் அன்பழகன் முக்கியப் பேச்சாளராக இருந்தார்.

புதுவாழ்வும் குறள்நெறியும்

பெரியாரின் ‘குடிஅரசு’, ‘விடுதலை’ ஏடுகளோடு திராவிட இயக்கத் தலைவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகவும் இதழ்களை நடத்திவந்தனர். அவர்களில் ஒருவராக அன்பழகனும் 1948 பொங்கல் தினத்தில் ‘புதுவாழ்வு’ மாத இதழைத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 26.

ஏறக்குறைய ஓராண்டு காலம் பத்து இதழ்களோடு அந்த இதழ் தனது பயணத்தை முடித்துக்கொண்டது. ‘இமயம் சரிந்தது’ என்ற தலைப்பில் காந்தியின் மறைவையொட்டி அவர் எழுதிய தலையங்கம் மிக முக்கியமானது. ‘இந்தக் கொலை உணர்ச்சி மதப் பற்றினாலும் அதைவிட அதிகமான வைதீகப் பற்றினாலுமே வளர்கிறது என்பதைப் பொதுமக்கள் உணர வேண்டும்’ என்று அதில் அன்பழகன் வலியுறுத்தியிருந்தார்.

அந்த இதழில் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும்பாலும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான தடைகளைக் கண்டிப்பவையாக அமைந்திருந்தன. ‘இரணியன்’ என்ற இயக்க நாடகத்துக்கும் புலவர் குழந்தையின் ‘இராவண காவிய’த்துக்கும் விதிக்கப்பட்டிருந்த தடையை அவர் கண்டித்திருந்தார்.

கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதைக் கவனப்படுத்தியது அவரது மற்றொரு கட்டுரை. மேல்நாட்டு அறிஞர்கள் பற்றிய கட்டுரைகளுக்கும் அறிவியல் கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது அன்பழகனின் ‘புதுவாழ்வு’. அதே பெயரில் இயங்கிய பதிப்பகத்தின் வாயிலாக அவரது நூல்கள் சிலவும் வெளியாகியிருக்கின்றன.

திமுகவின் மீதான விமர்சனங்களை மறுக்கும் ‘தொண்டா? துவேஷமா?’, வகுப்புரிமை வரலாற்றைச் சொல்லும் ‘கிளர்ச்சி எதற்கு?’ ஆகியவை ‘புதுவாழ்வு’ வெளியீடுகளாக வந்தன. அவருடைய மொத்த நூல்கள் நாற்பதுக்கும் மேல். ‘வகுப்புரிமைப் போராட்டம்’ என்ற தலைப்பிலான அன்பழகனின் புத்தகம், நீதிக் கட்சியின் ‘கம்யூனல் ஜிஓ’ தொடங்கி இந்திய அரசமைப்புச் சட்டம் வரையிலான வரலாற்றை விரிவாகப் பேசுவது.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய நாட்களில், புரசை குறள்நெறிக் கழகத்தைத் தொடங்கி அவர் நடத்திவந்தார். வள்ளுவர் கண்ட அறமும் பொருளும் இன்பமும் தமிழ் மக்களிடத்தில் நிலைக்காததாலேயே பெரியார், அண்ணாவின் சீர்திருத்தச் சேவை தேவையானது என்று பேசினார். தமிழர் பண்பாடு நசிந்துவருவதைப் பற்றிய வருத்தமாகவே அன்பழகனின் பேச்சும் எழுத்துக்களும் இருந்தன. சமூகம் சீர்பெறுவதற்குப் பொருளாதாரப் புரட்சி மட்டும் போதாது, கலாச்சாரப் புரட்சியே அடிப்படை மாற்றத்தை உருவாக்கும் என்பஎன்பதைத் தொடர்ந்து வலியுறுத்திவந்தவர் அன்பழகன்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு

1963-ல் அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சிமொழிகள் பற்றிய 17-வது பகுதியை எதிர்க்கும் போராட்டத்திலும், 1965-ல் இந்தித் திணிப்பை எதிர்த்து திமுக துக்க நாளை அறிவித்தபோதும் கைது நடவடிக்கைகளுக்கு ஆளானார். 1967-ல் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 உறுப்பினர்களில் அன்பழகனும் ஒருவர்.

நாடாளுமன்றத்தில் திமுக கட்சித் தலைவராக அவர் பொறுப்பு வகித்தார். அவை விவாதங்களில் மட்டுமின்றி, நாடாளுமன்றக் குழுக்களின் விவாதங்களிலும் முக்கியமான பங்கு வகித்தார். 1968-ல் பெங்களூருவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, உடனே அதைத் தடுத்துநிறுத்த வேண்டும் என்று அப்போதைய உள் துறை அமைச்சர் சவானைக் கேட்டுக்கொண்டதோடு கலவரங்கள் நடந்த பகுதிகளை நேரில் சென்றும் பார்வையிட்டார்.

1971-ல் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலம் அது. அரசு விழாக்களில் மட்டுமின்றி, தான் கலந்துகொள்கிற பொதுக்கூட்டங்கள், திருமணங்கள் அனைத்திலும் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை வலியுறுத்தினார் அன்பழகன். ‘கர்ப்ப ஆட்சி’ என்ற பெயரில் பெரியார் நடத்திய பகுத்தறிவுப் பிரச்சாரத்தை அரசுத் திட்டமாக மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் அவருக்குத் தனியார்வம் இருந்தது. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இந்தியாவில் தமிழகம் பெற்றிருக்கும் வெற்றியில் அன்பழகனுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது.

ஆங்கில மருத்துவ முறையால் அழிந்துவரும் பாரம்பரியமான சித்த மருத்துவ முறை பாதுகாக்கப்பட வேண்டும் என்று அப்போது வலியுறுத்தினார் அன்பழகன். ஆனால், மிகவும் காலங்கடந்தே இந்திய அரசு பாரம்பரிய மருத்துவ முறைகளின் அவசியத்தையும் பங்கையும் உணர்ந்தது. இன்று பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் தனி அமைச்சகம் செயல்பட்டுவருகிறது.

நகரங்களைக்காட்டிலும் கிராமங்களில் மருத்துவமனைகள் அமைப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தனியாரைக் கேட்டுக்கொண்டார்.மக்கள் மருத்துவமனைகளுக்கு அரசை மட்டுமே நம்பியிராமல் கூட்டுறவு முறையில் தங்களுக்கான மருத்துவமனைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் மாற்றுப் பார்வையை அவர் முன்வைத்திருக்கிறார். திமுகவின் அடுத்தடுத்த ஆட்சிக் காலங்களில் நிதி அமைச்சராகவும் கல்வி அமைச்சராகவும் பொறுப்பு வகித்தபோதும் அவர் பதித்த முன்னோடித் தடங்கள் பல உண்டு.

தமிழர்களின் ஆயுதம்

நீதிக் கட்சி காலம் தொடங்கி திக, திமுக என்று பயணித்த மூத்த தலைவர்கள் பலரும் திமுக பிளவுபட்டபோதும், அதன் பிறகு கருத்து மாறுபாடுகளாலும் திமுகவை விட்டுப் பிரிந்துசென்றிருக்கிறார்கள். தனியாகவும் கட்சி தொடங்கி அந்த முயற்சியில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தன்னைவிட வயதில் இளையவரான கருணாநிதியின் தலைமையை ஏற்றுக்கொண்ட அன்பழகன், திமுக எதிர்க்கட்சியாக இருந்த நாட்களில் சட்டமன்றத்திலும் பொதுக்கூட்ட மேடைகளிலும் அவருக்கு வலுசேர்த்தார். ‘எனக்குக் கிடைத்திருக்கின்ற வலிமையான ஆயுதம் கலைஞர் என்ற காரணத்தால் ஆதரிக்கிறேனே தவிர அவருக்குக் கிடைத்த ஆயுதம் நான் என்று தயவுசெய்து நீங்கள் எண்ண வேண்டாம்’ என்று கருணாநிதியுடனான நட்புக்கு விளக்கமும் அளித்திருக்கிறார். அந்த ஆயுதத்தைக் கடைசி வரைக்கும் அவர் கைவிடவே இல்லை.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்