கே.கே.மகேஷ்
திமுகவில் கட்சியிலும் ஆட்சியிலும் சரி; கருணாநிதிக்கு எப்படி முதல் இடம் உறுதிசெய்யப்பட்டதோ, அதேபோல உறுதிசெய்யப்பட்ட இரண்டாமிடத்தில் அவருக்கு உற்றதுணையாக நீடித்தவர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.
அதிகார யுத்தமோ பனிப்போரோ இல்லாமல் தொடர்ந்து 40 ஆண்டுகளாக ஒரு கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளரும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்தது அரிதிலும் அரிதானது. ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலுக்காக க.அன்பழகன் அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...
கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி; இரண்டாவது இடத்திலிருந்து முதலிடம் நோக்கிச் செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்ததே இல்லையா?
கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல. தானாகவே உருவான தலைவர். தந்தை பெரியாரால் கண்டெடுக்கப்பட்ட தலைவர். அண்ணாவால் பாராட்டப்பட்ட தலைவர். சுருக்கமாகச் சொன்னால் அன்பழகனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர். நாவலர் நெடுஞ்செழியன் தலைமை இந்த இயக்கத்தைக் காப்பாற்றாது; கலைஞருடைய தலைமைதான் காப்பாற்றும் என்று உணர்ந்து ஏற்றுக்கொண்டவன் நான். அண்ணாவும் கலைஞரைத்தான் விரும்பினார். அவரைத் தவிர, வேறு யாரைக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்க முடியும்! அண்ணாவே ஏற்றுக்கொண்ட தலைவரை நான் தலைவராக ஏற்றுக்கொண்டதில் என்ன ஆச்சரியம்!
அரை நூற்றாண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சி சாதனையாக எதைச் சொல்வீர்கள்?
நான் வசித்த மயிலாடுதுறையில் மகாதேவ தெரு, பட்டமங்கலம் தெரு என்று இரண்டு தெருக்கள் உண்டு. பிராமணர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெரு. அவர்கள்தான் வழக்கறிஞர்களாக, ஆசிரியர்களாக, மருத்துவர்களாக இருப்பார்கள். சாமானிய மக்கள் அன்றைக்கு அந்தத் தெருக்களில் நுழைந்தாலே, ‘சாமி வீட்டுக்குப் போகிறேன்’ என்று சொல்வார்கள். அய்யர் வீடு என்றுகூட சொல்ல மாட்டார்கள்.
‘எந்தச் சாமி வீட்டுக்குப் போகிறாய்?’ என்று கேட்டால், ‘டாக்டர் சாமி வீட்டுக்குப் போகிறேன்; வக்கீல் சாமி வீட்டுக்குப் போகிறேன்’ என்று பதில் வரும். அவ்வளவு பய பக்தி! பிள்ளைவாள் வரச் சொன்னார், முதலியார் வீடு வரை போய் வருகிறேன் இப்படி எல்லோருமே சாதியால்தான் குறிப்பிடப்பட்டார்கள். மேல்சாதி என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு இதில் உள்ள பேதம் புரியாது. ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை எப்படி அழைத்திருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள். எனக்கு விவரம் தெரிந்து முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் வீடுகளில் தண்ணீர் குடிக்க யோசித்த இந்துக்கள் உண்டு. என்னுடைய அப்பாவின் நண்பர் ஒருவர் கோமுட்டிச் செட்டியார்.
அவர் நல்ல மனிதர். ஆனால், அவர் எங்கள் வீட்டுக்கு வந்தால், திண்ணையில்தான் உட்காருவாரே தவிர, வீட்டுக்குள் வர மாட்டார். அவரும் சைவர்; நாங்களும் சைவர்கள். ஆனால், அவரைச் சாப்பிடச் சொன்னால் சாப்பிட மாட்டார். “அரிசியைக் கொடுத்துவிடுங்கள். நானே பொங்கிக்கொள்கிறேன்” என்பார். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இன்றைக்குத் தமிழ்நாடு உள்ள நிலைமையை யோசித்துப்பாருங்கள். தமிழன் என்ற அடையாளத்தால் எல்லோரும் ஒன்றுபட்டிருக்கிறோமா, இல்லையா? அன்றைக்கெல்லாம் வெளிமாநிலங்களிலோ வெளிநாடுகளிலோ நம்மவர்களைப் பார்த்தீர்கள் என்றால், அவ்வளவு ஒடுங்கிப்போய் நிற்பார்கள்.
தமிழன் என்றாலே பிறவியிலேயே ஏதோ தாழ்ந்துவிட்டதாக எண்ணிய, இழிவாகக் கருதிய நாட்கள் எல்லாம் உண்டு. இன்றைக்கும் நாம் முழுக்க உயர்ந்து நிற்கிறோம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், நம் உடல் யார் முன்னாலும் குனிந்து நிற்கவில்லை அல்லவா? அதுதான் திராவிட இயக்கத்தின், திராவிடக் கட்சிகளினுடைய ஆட்சியின் பெரும் சாதனை என்று சொல்வேன்.
நீங்கள் வெவ்வேறு துறையில் அமைச்சராக இடம்பெற்றிருந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின் மைய நோக்கமாக எதைச் சொல்வீர்கள்?
திமுக ஆட்சி என்று சொல்லாமல் நம்முடைய ஆட்சி என்றே பெரியார் சொன்னார். “கருணாநிதி ஆட்சியில் 13 அமைச்சர்களில் 13 பேரும் தமிழர்கள். 18 உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 16 பேர் தமிழர்கள். அரசியலில் ஆளுங்கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் நூற்றுக்கு நூறு தமிழர்கள் உள்ளனர்” என்று பாராட்டினார் பெரியார்.
தொட்ட ஒவ்வொரு துறையிலும் மாற்றத்தை உருவாக்கியவர் கருணாநிதி. தொட்ட துறைகளில் எல்லாம் அதன் எல்லையைத் தொட்டவர். உற்ற நண்பனாகவும் உடனிருந்த நிதியமைச்சராகவும் ஆத்மார்த்தமாகச் சொல்கிறேன். ஏழைகளின் பார்வையிலிருந்து மக்களைப் பார்க்கிற தலைவர் அவர். மின் கட்டணம், பஸ் கட்டணம் ஏற்றுவதற்கெல்லாம் அவ்வளவு யோசிப்பார்.
பால் உற்பத்தியாளர்களுக்குப் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்; அதேசமயம், பால் நுகர்வோருக்கு விலையை ஏற்றாமல் இருக்க என்ன வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் யோசிப்பார். மக்கள் மீது சுமையை ஏற்ற கலைஞர் ஒருபோதும் விரும்புவது இல்லை. இது எனக்கு ரொம்பவும் பிடித்த விஷயம். அப்புறம் எங்கள் இருவருக்குமான ஆதார சுருதி - தமிழ், தமிழர் நலன். அதுவே எங்களது இணைப்புச் சங்கிலி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago