தாமிரபரணி: மணல் கொள்ளையை தடுத்த தீரமிக்கப் போராட்டம்

By அ.அருள்தாசன்

ஊர்கூடி தேர் இழுத்த கதையாக கொங்கரயகுறிச்சி கிராம மக்கள் ஒற்றுமையாக போராடி மணல் கொள்ளையை தடுத்திருக்கிறார்கள். தாமிரபரணியையும் காப்பாற்றியிருக்கிறார்கள். கொங்கராயகுறிச்சியில் கடற்கரையைப்போல வெண் மணலுடன் பரந்து விரிந்திருக்கிறது தாமிரபரணி கரை கண்கொள்ளா காட்சியுடன் திகழ்கிறது. தாமிரபரணி ஓடி கடக்கும் எந்தப் பகுதியிலும் இப்படி வெள்ளை நிறத்திலான நெடிய மணல் பரப்பை காண முடியாது. வழிநெடுக மாசுபடுத்தப்பட்ட ஆறு இங்குதான் மீண்டும் தூய்மையடைகிறது. காரணம், மணல்வெளி. இதனால் இங்கே ஆற்றுத் தண்ணீரை அப்படியே குடிக்கிறார்கள். மேலும் இங்கு இயற்கையாக தூய்மைப்படுத்தப்படும் தண்ணீரை உறைகிணறுகள் மூலம் உறிஞ்சி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் விநியோகம் செய்கிறார்கள்.

வாழ்வோடு பிணைந்த மணல்வெளி

இந்த மணல் பரப்பை தங்கள் உயிரென கருதுகிறார்கள் கொங்கராயகுறிச்சி கிராம மக்கள். தென்மாவட்ட சாதி மோதலின் தாக்கம் இங்கே இல்லை. கிராமத்தின் முக்கியத் தொழில் விவசாயம். ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளில் கருங்குளம் பெருமாள் கோயிலில் இருந்து மணல் பரப்புக்கு சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எடுத்து வரப்படுகிறார். அதிகாலையில் ஆற்றில் மீன் பிடித் திருவிழா நடக்கிறது. தவிர, தினசரி மக்கள் குடும்பத்தோடு கூடும் பொழுதுபோக்கு இடமாகவும் இது திகழ்கிறது. இப்படி சுற்றுவட்டார பகுதி மக்களின் வாழ்க்கையோடும், வழிபாட்டு உணர்வுகளுடனும் ஆற்று மணல் பரப்பு பிணைந்திருக்கிறது.

இந்த மணல் பரப்பு மணல் மாபியாக்களின் கண்ணை உறுத்தியது. அதை வாரி எடுக்க திட்டமிட்டவர்களுக்கு அப்பகுதி மக்கள் சிம்மசொப்பனமாக திகழ்ந்தனர். கடந்த 15 ஆண்டுகளாக மணல் கொள்ளையை தடுக்க ஏராளமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலியிலுள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை தலைமை செயலகம் என்று பல்வேறு மணலைக் காக்க இப்பகுதி மக்கள் ஏறாத இடங்கள் இல்லை.

போராட்டங்களுக்கான மொத்த செலவையும் கிராமத்திலுள்ள ஒவ்வொரு குடும்பமும் பகிர்ந்து கொண்டன. சென்னையில் 20.9.2005 அன்று இவர்கள் நடத்திய சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்குப் பின்னர்தான் மணல் அள்ளும் பிரச்னை தீர்வை நோக்கி நகர்ந்தது.

நீதிமன்றத்தால் கிடைத்த வெற்றி

நீதிமன்றத்திலும் தாமிபரணி மணல் கொள்ளை எதிரொலித்தது. தோழப்பன்பண்ணையில் ஆற்று மணல் குவாரி மூலம் அத்துமீறி மணல் அள்ளும் பிரச்சினையை நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் எடுத்துரைத்து வாதிட்டார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. நீதிகேட்டு நடந்த போராட்டத்தில் அவர் வெற்றியும் பெற்றார். நீதிமன்ற உத்தரவின்படி, தாமிரபரணி முழுக்க ஆற்று மணலை அள்ளுவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தடை நீடிக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் அடையாளமாகிப்போன தாமிரபரணி பாதுகாக்கப்பட்டுள்ளது.

மணல் அள்ளும் தடையை தொடர்ந்து நீட்டிப்பு செய்ய நீதிமன்றத்தை தொடர்ந்து நாடவும் கொங்கராயக்குறிச்சி மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆழ்வார்கற்குளம், கருங்குளம், சேரகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் தண்ணீர் பம்ப் செய்ய ஆற்றங்கரையில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. உறைகிணறு அமைந்துள்ள பகுதியையொட்டி குறிப்பிட்ட தூரத்துக்கு மணல் அள்ள அனுமதிக்க கூடாது என்பது சட்டம்.

மணல் அள்ளும் பிரச்சினையின் நீட்சியாக இப்பகுதியில் இருவேறு நபர்கள் கொலை செய்யப்பட்டதால் கிராமத்தில் எப்போதும் போலீஸ் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது.

மணல் அள்ளும் பிரச்னை வந்துவிடக்கூடாது, எந்த அசம்பாவிதங்களும் நிகழக்கூடாது என்று அவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். மணல் அள்ளுவதை தடுத்து சாதித்துள்ள இம்மக்களின் பிரதிநிதியான கொங்கராயக்குறிச்சி ஊராட்சி தலைவர் எஸ்.ஜாகீர் உசேனி, ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்தப் பகுதியில் 40 அடியில் சுத்தமான நிலத்தடி நீர் கிடைக்கிறது. காரணம், ஆற்றின் மணல்வெளி. இங்கே மணல் அள்ளினால் நீர்மட்டம் அதல பாதாளத்துக்குச் செல்லும். பெரும் பள்ளங்களால் குளிக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஆற்றுமணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இனியும் மணல் அள்ள அனுமதி அளிக்கமாட்டோம்” என்றார் உறுதியுடன். இந்த உறுதி நிச்சயம் நதியை காக்கும் என்றே நம்பலாம்.

படங்கள்:எம்.லட்சுமி அருண்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்