தாமிரபரணி: ஆக்கிரமிப்புக் கரை ஆன ஆற்றங்கரை

By அ.அருள்தாசன்

தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை வேரோடு அகற்ற தலைமைச் செயலர், வனத்துறை முதன்மைச் செயலர், பொதுப்பணித் துறைச் செயலர் ஆகியோர் தனித் திட்டம் உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாமிரபரணியின் கரையோரங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி யிருப்பதை அதன்வழியாக பயணிக் கும்போது கண்கூடாக பார்க்கலாம். திருநெல்வேலி நகரில் கொக்கிர குளம், குருந்துடையார்புரம், சந்திப்பு கைலாசபுரம் பகுதிகளில் தாமிர பரணி ஆற்றங்கரைகளில் தடையை மீறி அதிகளவு பன்றிகள் வளர்க்கப் படுகின்றன. பன்றிகளின் கழிவுகளும் ஆற்றில் கலக்கின்றன.

ஆற்றை சூறையாடும் சூளைகள்

குறுக்குத்துறை, கருப்பந்துறை, வண்ணார்பேட்டை, வெள்ளக்கோவில், ராஜவல்லிபுரம், பாலாமடை, சீவலப் பேரி, மணப்படைவீடு, திருமலை கொழுந்துபுரம், கீழநத்தம், வல்லநாடு, வசவப்பபுரம் ஆகிய பகுதிகளில் ஆற்றங்கரைகளில் 200-க்கும் மேற் பட்ட செங்கல்சூளைகள் உள்ளன. சூளை களுக்காக வண்ணார்பேட்டை, ராஜ வல்லிபுரம், மணப்படைவீடு பகுதிகளில் 15 அடி ஆழம் வரை ஆற்றைத் தோண்டி களிமண், குறுமண், வண்டல் மண் அள்ளுகிறார்கள். தண்ணீரும் ஆற்றிலிருந்து மோட்டார் மூலம் உறிஞ்சப்படுகிறது. செங்கல்சூளை களை அமைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கனிம வளத்துறையின் அனுமதி பெற வேண்டும். ஆனால், பெரும்பாலான சூளைகள் அனுமதி பெறவில்லை. சூளைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் ஆற்றில்தான் கலக்கின்றன. இந்த் தண்ணீரைத்தான் உறைகிணறுகள் மூலம் உறிஞ்சி, குடிநீராக விநியோகம் செய்கிறது மாநகராட்சி.

ஆற்றை அழிக்கும் சீமைக்கருவேலம்

ஒருபக்கம் கழிவுகள் கலப்பு என்றால் இன்னொரு பக்கம் ஆக்கிரமிப்பு. திருநெல்வேலி மாநகர பகுதிக்கு உட்பட்ட கருப்பந்துறை முதல் வெள்ளக் கோவில் வரையில் சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு ஆற்றின் இரு கரை களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. திரு நெல்வேலி சந்திப்பு, கைலாசபுரம், மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, குறுக் குத்துறை பகுதிகளில் ஆற்றங் கரையை ஆக்கிரமித்து குடியிருப்பு களும், தோட்டங்களும் உருவாக்கப் பட்டிருக்கின்றன.

ஆற்றங்கரை முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் மண்டியிருக்கின்றன. வட இந்தியாவில் தார் பாலைவனம் பெரிதாகி கொண்டே சென்றது. இதைக் கட்டுப்படுத்த இங்கிலாந்தில் இருந்து இதன் விதைகள் வரவழைக்கப்பட்டு பாலைவனத்தின் ஓரங்களில் விதைக்கப் பட்டது. அதன்படி 1872-ல் 200 கிலோ விதைகள் தூவப்பட்டது. 1879-ல் மேலும் 100 கிலோ விதைகளை பயிரிட்டன. 1950-ல் குஜராத்தில் ராண் பாலைவனப்பகுதியில் விதைகள் விதைக்கப்பட்டன.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் விமானம் மூலம் நீர்கருவை விதைகள் தூவப்பட்டன. வறட்சியின் பிடியில் சிக்கியிருந்த மக்கள் நலன் கருதி இந்த திட்டத்தை காமராஜர் செயல் படுத்தினார். ஆனால் இப்போது கருவேல மரங்களால் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் கடந்த 9.1.2014-ம் தேதி நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகி யோர் கருவேல மரங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக ஆற்றங்கரையோரங்களில் உள்ள இந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் அந்த உத்தரவு முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. உத்தரவு வந்த புதிதில் மதுரை மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மேம்போக்காக நீர்க்கருவை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து தாமிரபரணியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றக்கோரி ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கண் ணன் விஸ்வநாத் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்,கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளை, “தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை வேரோடு அகற்ற தலைமைச் செயலர், வனத்துறை முதன்மைச் செயலர், பொதுப்பணித் துறைச் செயலர் ஆகியோர் தனித் திட்டம் உருவாக்க வேண்டும்.” என்று உத்தரவிட்டது.

ஆற்றை நிரப்பியுள்ள கருவேல மரங்கள். | படம்: எம்.லட்சுமி அருண்

இது நடைமுறைப்படுத்தப்பட்டால் தாமிரபணி மட்டுமல்ல ஏராளமான நதிகள் பாதுகாக்கப்படும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

பொற்காலம் புலருமா பொருநைக்கு?

‘பொற்காலம் புலருமா பொருநைக்கு?’ என்ற தலைப்பில் தாமிரபரணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் ந.காஜா முகைதீன் வெளியிட்ட குறுந்தகடு கண்ணீரை வரவழைக்கிறது. அவர் கூறுகையில், “தமிழகத்தின் சொத்து தாமிரபரணி. ஆற்றின் எல்லையை ஆங்கிலேயர் காலத்தில் எழுதப்பட்ட அரசிதழில் உள்ளபடி வருவாய்த்துறை ஆவணங்களின்படி அளந்து கரையின் எல்லைகளை வரையறை செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்ட புதர்களை அப்புறப்படுத்த வேண்டும். கரை எங்கும் நீர் மத்தி, அத்தி உள்ளிட்ட ஆற்றுக்கே உரிய மரங்களை நட வேண்டும். ஆற்று படுகைகளில் வீடுகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.

(தவழ்வாள் தாமிரபரணி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்