1979-ல் உறைந்திருக்கும் மத்தியக் கிழக்கு!

By தாமஸ் எல்.ஃப்ரைட்மேன்

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் நல்ல முயற்சிதான் என்றாலும் அதுமட்டும் போதாது

லெபனான் தலைநகர் பேரூத்தில் வெளிநாட்டுச் செய்தியாளராக 1979-ல் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன். வெளிநாட்டுச் செய்திகளைப் பொறுத்தவரை, குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளைப் பற்றிய செய்திகளைப் பொறுத்தவரை அந்த ஆண்டு மிகுந்த முக்கியத்துவம் கொண்ட ஆண்டாக இருக்கும் என்று அப்போது எனக்குத் தெரியாது. அந்தப் பிராந்தியத்தில் இன்றும் தாக்கம் செலுத்தும் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திய ஆண்டு அது. சொல்லப்போனால், மத்தியக் கிழக்கு பிராந்தியம் இன்றும் 1979-லேயே இருக்கிறது என்பேன். கடந்த ஜூலை மாதம் கையெழுத்தான ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் எழுப்பும் மிகப் பெரிய கேள்வி இதுதான். 1979-ல் உருவான வரலாற்றை இந்த ஒப்பந்தம் தகர்த்து, மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தைப் புதுப் பாதையில் செலுத்துமா? அல்லது அந்தக் காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை மேலும் முடுக்கிவிட்டு உலகையே உலுக்குமா?

பரஸ்பர உடன்பாடு!

சரி, என்ன நடந்தது 1979-ல்? மெக்காவின் பெரிய மசூதியை (கிராண்ட் மாஸ்க்) கைப்பற்றிய மதத் தீவிரவாதிகள், சவூதி அரச குடும்பத்தினர் கொண்டிருந்த இறை நம்பிக்கை குறித்துக் கேள்வியெழுப்பியதுடன், அரச குடும்பத்தின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து, சவூதி அரச குடும்பத்தினர் மத அடிப்படைவாதிகளுடன் இப்படி ஒரு பேரத்தை ஏற்படுத்திக்கொண்டனர்: எங்களை ஆட்சியதிகாரத்தில் தொடர விடுங்கள். சமூக விதிகள், பாலினங்களுக்கு இடையிலான உறவுகள், சவூதி அரேபியாவுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மதக் கல்வி ஆகியவற்றைத் தீர்மானிக்கும் விஷயத்தில் உங்களுக்குச் சுதந்திரம் கொடுப்போம். அத்துடன் உலகம் முழுதும் பெண்கள், ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான மதக் கோட்பாடுகளை மசூதிகள் முதல் பள்ளிகள் வரை பரப்புவதற்குத் தேவையான அளவுக்கு நிதியும் அளிக்கப்படும்.

சவூதியின் பின்னோக்கிய நகர்வும், 1979-ல் அயதுல்லா கொமேனியை ஆட்சிக்குக் கொண்டுவந்த மதப் புரட்சியும் ஒரே சமயத்தில் நடந்தவை. முஸ்லிம் உலகத்தின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதில் ஷியா ஈரானுக்கும், சன்னி சவூதி அரேபியாவுக்கும் இடையே போட்டியைத் தொடங்கிவைத்தது ஈரான் புரட்சிதான். எண்ணெய் விலையில் மிகப் பெரிய உயர்வுக்கு வழிவகுத்ததன் மூலம் ஷியா மற்றும் சன்னி அடிப்படைவாதத்தை ஏற்றுமதி செய்வதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெரும் செல்வத்தை இரண்டு நாடுகளுக்கும் அளித்ததும் அந்தப் புரட்சிதான்.

அதே ஆண்டில் ஆப்கானிஸ்தானுக்குள் சோவியத் ஒன்றியத்தின் பிரவேசமும் ஈரானுக்கும் சவூதிக்கும் இடையிலான போட்டியை மேலும் தூண்டிவிட்டது. சன்னி ஜிகாதி இயக்கத்தையும் பின்னர் அல்-கொய்தா இயக்கத்தையும் அது விதைத்தது. ஈரானில் நிகழ்ந்த புரட்சி அமெரிக்காவுடனான உறவு முறியவும் காரணமாக இருந்தது. இஸ்ரேலுடன் இருந்த இலைமறைவு காய்மறைவு உறவும் முறிந்து, ‘இஸ்ரேல் மடியட்டும்’ எனும் நிலைப்பாட்டையும் எடுத்தது ஈரான்.

அணுசக்தி யார் கையில்?

இப்படியான தருணத்தில், அமெரிக்கா ஈரான் இடையில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தம் பெரும் மாற்றத்துக்கு அடிகோலியிருக்கிறது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை முடிவுக்குக் கொண்டுவருகிறது. அதேசமயம், இந்த ஒப்பந்தம் 1979-ல் நிலவிய சூழலுக்கு எவ்வளவு எளிதாக முடிவுகட்டுமோ அதே அளவுக்கு எளிதாக அதை முடுக்கிவிடவும் முடியும். இந்த அணுசக்தி ஒப்பந்தம் ‘ரெவலூஷனரி கார்டு கார்ப்ஸ்’ என்று அழைக்கப்படும் ஈரான் ராணுவத்தின் ஒரு பிரிவை விடவும் நடுநிலையான / பொறுப்புள்ள சமூகத்துக்கு அதிகாரத்தை வழங்குமா? கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், ஈரானின் அணுசக்தித் திட்டம் நடுநிலையாளர்களின் கட்டுப்பாட்டிலோ அல்லது வழக்கமான ராணுவம் / உளவுத் துறையின் கட்டுப்பாட்டிலோ இல்லை என்பதுதான். சிறுபான்மையாக இருக்கும் மத அடிப்படைவாதிகளின் கையில்தான் அணுசக்தித் திட்டம் இருக்கிறது. உலகத்துடன் ஒன்றி வாழ ஈரானின் பெரும்பான்மையினர் விரும்புவதால், வேண்டா வெறுப்புடனாவது இந்த ஒப்பந்தத்தை அடிப்படைவாதிகள் ஏற்றுக்கொள்ளும் சூழல் ஏற்பட்டதுதான் இதில் நம்பிக்கையளிக்கும் விஷயம்.

அமெரிக்காவில் எரிபொருளுக்கான புதைபடிமங் களைக் கண்டுபிடிப்பதிலும் அகழ்வதிலும் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. எண்ணெய் உள்ளிட்ட ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவதில் நவீனத் தொழில்நுட்பம், சிக்கனம், வெகு ஆழத்தில் பாறை அடுக்குகளில் தேங்கியிருக்கும் எண்ணெயை அழுத்தத்தால் வெளியே எடுக்கும் நவீனத் தொழில்நுட்பம், காற்றாலை - சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் ஆகியவற்றால் புதைபடிம அகழ்வு அதிகரித்து எரிபொருள் உற்பத்தி பெருகிவிட்டது. இவைதான் எண்ணெய் விலை சரிவதையும் தீர்மானிக்கிறது. என்னிடம் ஐந்து ஆண்டுகளுக்கு 25 டாலருக்கு ஒரு பேரல் எண்ணெயைக் கொடுத்துப்பாருங்கள். பிறகு, ஈரானிலும் சவூதி அரேபியாவிலும் சீர்திருத்தவாதிகள் பலம்பெற்றிருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.

மக்கள்தான் முக்கியம்

எண்ணெய் விலை குறைவது அவசியம்தான் என்றாலும் அது மட்டும் போதாது. இரு நாடுகளும் தங்களுக்கு இடையே மோதிக்கொண்டு தங்கள் மதிப்பையும் அதிகாரத்தையும் தேடிக்கொள்வதை விட்டுவிட்டு, தங்கள் சொந்த மக்களை முன்னேற்றும் வழியைக் காண வேண்டும். ஈரானின் உதவியுடன் யேமனில் கிளர்ச்சி நடந்தபோது, யேமன் மீது சவூதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல் சுத்தப் பைத்தியக்காரத்தனம். அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம் தனக்குக் கிடைத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை வைத்து ஈரானால் அரபு உலகில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த முயலுமா? அப்படியும் நடக்கலாம். ஆனால் இராக், சிரியா, லிபியா மற்றும் யேமன் ஆகிய நாடுகள் முற்றிலும் உருக்குலைந்து கிடக்கின்றன. இதைத்தான் சொந்தம் கொண்டாட விரும்புகிறதா ஈரான்? அப்படிச் செய்வதன் மூலம் ஈரான் தனது பலத்தை அதிகரித்துக்கொள்வதற்கு மாறாக இழக்கவே செய்யும்.

சவூதி அரேபியாவின் மக்கள்தொகை 1975-ல் இருந்ததைப் போல் மூன்று மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு 130 பில்லியன் டாலர் நிதிப் பற்றாக்குறை ஏற்படலாம் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியிருப்பதாக ஜூலை 9-ல் பாரிசில் உள்ள ‘ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரெஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஈரானின் மக்கள்தொகை 1979-ல் இருந்ததைப் போல் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. அந்நாட்டின் 60 சதவீத மக்கள் 30 வயதுக்கும் குறைவானவர்கள். 20 சதவீதம் பேர் வேலையற்றவர்கள். நீர் ஆதாரங்கள் குறைந்துவருவதாலும் அதீத பயன்பாட்டின் காரணமாகவும் ஈரானில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், குடிநீர்ப் பயன்பாட்டில் முற்றிலுமாக மாற்றம் கொண்டுவரவில்லை என்றால், 70 சதவீத ஈரான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியிருக்காது என்றும் ஈரானின் முன்னாள் வேளாண் அமைச்சர் இஸ்ஸா கலந்தாரி கூறியதாக ‘அல்-மானிட்டர்’ இதழ் தெரிவிக்கிறது.

உண்மையில், இந்தப் பிராந்தியத்தில் அச்சுறுத்தலாக இருப்பது அணு ஆயுதங்கள் மட்டுமல்ல. ஈரானும் சவூதி அரேபியாவும் 1979-ம் காலகட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர கடுமையாக முயற்சிக்க வேண்டும். இதை அந்நாடுகள் செய்யும் என்று ஊகிப்பது கற்பனையான ஒன்றாக இருக்கலாம். ஆனால். அப்படிச் செய்யவில்லை என்றால், அந்த இரு நாடுகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்படும் என்பதை ஊகிப்பது முற்றிலும் நிதர்சனமான ஒன்றுதான்.

© நியூயார்க் டைம்ஸ்,

தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்