புத்தகமானார் நூலகர் சி.கே.சுந்தரராஜன்!

By இரா.சித்தானை

சென்னை கன்னிமாரா நூலகத்தின் நெடுநாள் வாசகர்களாயிருந்த ஒவ்வொருவருக்கும் சி.கே.சுந்தரராஜனின் முகம் நிச்சயம் பரிச்சயமாகியிருக்கும். சிகேஎஸ் என்று அவரைக் கூப்பிடுவார்கள். நாள் முழுவதும் புத்தக அடுக்குகளிடையே நடந்துகொண்டே இருப்பார். எந்தவொரு புத்தகத்தையும் அதற்கான அடுக்கில் வரிசைப்படி சரியாக அடுக்கி வைப்பதில் அவர் ஒருபோதும் அயர்வதே இல்லை. எஸ்.ஆர்.ரங்கநாதன் அறிமுகப்படுத்திய கோலன் பகுப்பு முறையின்படி கன்னிமாரா நூலகத்தின் புத்தகங்களை வரிசைப்படுத்தியதில் சிகேஎஸ்ஸுக்கு முக்கியப் பங்கு உண்டு.

யார் எந்தப் புத்தகம் குறித்துக் கேட்டாலும் உடனே அதை எடுத்துக்கொடுப்பார் சிகேஎஸ். வெறும் தகவல்களோடு அவரை அணுகினாலும்கூட எந்தப் புத்தகத்தில் அது கிடைக்கக்கூடும் என்று வழிகாட்டுவார். வாசகர்கள் இரவல் பெற்று எடுத்துச்செல்லும் புத்தகங்களைக் குறித்துக்கொள்கிறவராக மட்டும் அவர் இருக்கவில்லை; அவர்களின் தேடுதலை எளிமைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு துறை சார்ந்த புத்தகங்களைப் பற்றி அறிமுகப்படுத்தும் ஆய்வு வழிகாட்டியாகவே விளங்கினார். கன்னிமாரா நூலகத்தில் ஏறக்குறைய 40 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பிறகும்கூட அவர் நூலகராகவேதான் வாழ்ந்து மறைந்தார். கன்னிமாராவை அடுத்து, திமுக அலுவலகத்தின் பேராசிரியர் நூலகத்தில் மேலும் 25 ஆண்டுகள் பணிபுரிந்தார். 65 ஆண்டு கால நூலகர் பணி என்பது உலகில் எவருக்குமே வாய்க்காதது.

எப்போதும் அவரது கைகளில் சிறிய அளவில் கத்தரிக்கப்பட்ட தாள்கள் இருக்கும். கையெல்லாம் மசி கறையாக இருக்கும். நூலகத்தில் ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எழுதிக்கொண்டே இருப்பார். ஒரு நாள் இவர் என்னதான் எழுதுகிறார் என்று கவனித்தேன். பத்திரிகைத் தொகுதிகளை எடுத்து அவற்றின் உள்ளடக்கங்களைக் குறிப்புகளாகப் பக்க எண்களுடன் எழுதிக்கொண்டிருந்தார். அவற்றை அந்தத் தொகுதியின் இடையே செருகிவைப்பார். அதுபோல, புத்தகங்களுக்கும் அவர் குறிப்புகள் எழுதி வைத்திருப்பதை அறிவாலயத்தின் நூல்களில் பார்க்கலாம். இதைப் போல புத்தகங்களின் குறிப்புகளைத் தொகுத்த இன்னொரு நூலகர் ரோஜா முத்தையா.

அறிவாலயத்தில் சிகேஎஸ் பணியாற்றிய நாட்களில் திராவிட இயக்கம் பற்றி எந்தத் தகவலைக் கேட்டாலும் வாரி வழங்கும் அமுதசுரபியாக இருந்தார். பேராசிரியர் நூலகத்தின் ஆய்வாதார வளங்களுக்காகப் பழைய புத்தகங்களையும் இதழ்களையும் திரட்டும் முயற்சிகளுக்குப் பின்னாலும் அவர் இருந்தார். ஒரு தொகுப்பு வந்துசேர்ந்தவுடன் உடனே அதை கோலன் முறையில் வகைப்படுத்தி அலமாரியில் அடுக்கிய பிறகுதான் அவர் அமைதியடைவார். 10 ஆண்டுகளுக்கு முன்பு, பழமையான திராவிட இயக்க இதழ்களை நுண்பட முறையில் ஆவணமாக்கியபோதும் அதன் பின்னணியில் இருந்தார்.

கருணாநிதியின் காலத்தில் அறிவாலயத்தில் நூலகராக இருப்பது அவ்வளவு எளிதல்ல. ஓயாமல் இன்டர்காம் ஒலித்துக்கொண்டே இருக்கும். ‘‘அந்தப் பொதுக்குழு எந்த நாளில் நடந்தது? இந்தப் பிரச்சினை பற்றி தலைவர் என்றைக்குப் பேசினார்? ‘திராவிட நாடு’ இதழில் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்களா?’’ - இப்படிக் கேள்விகள் வந்துகொண்டே இருக்கும். சிகேஎஸ் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே இருப்பார். இதற்கிடையில், பத்திரிகையாளர்களும் அவரை மொய்த்துக்கொண்டிருப்பார்கள். இளம் ஆய்வாளர்களின் அசட்டுத்தனமான கேள்விகளுக்கும்கூட புத்தனைப் போன்ற பொறுமையுடன் பதிலளித்துக்கொண்டிருப்பார். ஒருமுறை அவரிடம், “இவ்வளவு பேர் இங்கு வந்து தகவல்களைச் சேகரித்து புத்தகம் எழுதுகிறார்கள். ஆனால், நன்றி என்று உங்கள் பெயரைக் குறிப்பிடுவதேயில்லை?” என்றேன். “நான் எதுக்கு அப்படி எதிர்பார்க்கணும்?” என்று உடனடியாக அவரிடமிருந்து பதில் வந்தது. பெரம்பூர் போவதற்காக வானவில் சிக்னலை வேகவேகமாகக் கடக்கும் அவரது ஒல்லியான தோற்றம்தான் இப்போதும் நினைவுக்குவருகிறது.

- இரா.சித்தானை, தொடர்புக்கு: aavanakalari@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

கருத்துப் பேழை

20 days ago

மேலும்