புராணப் பெண் கதாப்பாத்திரங்களில் மிகவும் புகழ்வாய்ந்தவள் மெடூசா. ஆனால், அவளுக்குக் கிடைத்திருக்கும் புகழ்ச்சி முற்றிலும் எதிர்மறையானது. நீர்க்கடவுள் மீது அவள் காதல் வயப்பட்டதால் சபிக்கப்பட்டு ரத்தக் காட்டேரியாகி, முடியெல்லாம் பாம்பாக மாறி, பச்சை நிறத்தில் கோரமான உருவமடைகிறாள். அவளது முகத்தைப் பார்க்கும் எவரும் கல்லாக மாறிவிடுவார்கள் என்கிறது கிரேக்கப் புராணம். இதுவரை ஆண்கள் தவிர எந்தப் பெண்ணும் மெடூசாவால் கல்லாக மாறியதாகக் குறிப்புகள் இல்லை; அவளோடு உறவுகொண்டு விலகிய காதலனான நீர்க்கடவுளுக்கு எந்தத் தண்டனையும் வழங்கப்படவில்லை. ‘நீங்கள் மெடூசாவைக் காண, அவளை நேருக்கு நேர் மட்டுமே பார்க்க வேண்டும். அவள் ஒரு கொலைபாதகியல்ல. அவள் அழகானவள். மேலும், அவள் சிரித்துக்கொண்டிருக்கிறாள்’ என்கிறார் ஹெலன் சிக்ஷ். இதுவரை மெடூசாவை நேரில் பார்த்தவர்கள் அனைவரும் கல்லாகிவிட்டனர் என்றால் மெடூசாவின் கோரமான உருவத்தைப் பற்றி கல்லாகிப்போனவர்களால் இந்த உலகத்துக்கு எப்படிச் சொல்லியிருக்க முடியும்? பொய்யான பரப்புரைகளால் ஒடுக்கப்பட்டாள் மெடூசா.
நம் ஊரிலும் இப்படி ஒரு பெண் இருக்கிறாள். தமிழ் இலக்கியங்களில் சேக்கிழார் புராணம் தொட்டு இன்னும் பலருடைய எழுத்துகளில் தோன்றும் பழையனூர் நீலிதான் அவள். நமக்கு மிகவும் பரிச்சயமானவள். அவளுக்கென்று தனியாகக் கோயில் எழுப்பி வழிபட்டாலும் ‘நீலிக்கண்ணீர்’ என்ற சொல்லாடல் மூலம் வேஷக்காரியாகவே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறாள். தன்னைக் கொன்ற கணவனைப் பழிவாங்கத் துடிப்பவளாவும், பிசாசாக மாறி மரங்களில் தொங்கிக்கொண்டிருந்தவள் எனவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். நீலியிடமிருந்து அவளது கணவனைக் காப்பாற்ற முடியாமல்போனதற்காக எழுபது ஊர்களின் தலைவர்கள் தீயில் இறங்கியதாக பழையனூரின் கல்வெட்டுக்குறிப்பும்கூட நமக்குச் சொல்கிறது. இந்த இரண்டு புராணக் கதைகளிலும் பெண்களை ரத்தக்காட்டேரியாகவும் பிசாசாகவும் சித்தரிக்கும் அளவுக்கு அந்தப் பெண்கள் அப்படி என்ன குற்றம் இழைத்தார்கள்? மனதுக்குப் பிடித்த ஒரு ஆணை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்ததும், தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துக் குரல் கொடுத்ததும் குற்றங்களா? அவர்களுக்கு நிகழ்ந்த கொடூரங்களைக் கல்லைக் கட்டி கடலில் இறக்கிவிட்டு, அவர்களின் இன்னொரு பக்கத்தை மட்டும் மிகைப்படுத்திப் பேசுவது என்ன நியாயம்?
திருமணம் எனும் கலாச்சார நடவடிக்கை முற்காலந்தொட்டு சாதி, சமய வேறுபாடுகளெல்லாம் உருவாகும் முன்னரே பெண்களை ஒடுக்குவதற்கான கட்டமைப்பாகப் இருந்துவந்ததை மெடூசாவின் சாபம் வழியாகப் புரிந்துகொள்ளலாம். இவ்வாறு ஒரு ஆணின் மீது காதல் வயப்பட்ட பெண்ணை ஏறெடுத்துப் பார்க்கும் எந்த ஆணும் கல்லாக மாறிவிடுவான் என அச்சுறுத்தும் அளவுக்கு சுயமாகச் சிந்திக்கும் பெண்கள் மீது சமூகத்துக்குப் பயம் இருந்திருப்பதாகத் தோன்றுகிறது.
நீலியின் கதை திருமணத்துக்குப் பின் பெண்களுக்கு நிகழும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகிறது. பெண்ணுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் கேட்பது அவளது வேலையாக இருந்திருக்கிறது. ஒரு ஆணின் இறப்புக்குச் சமூகம் பொறுப்பேற்கும்போது ஒரு பெண்ணின் இறப்பைத் தனிநபர் பிரச்சினையாகச் சமூகம் கருதுகிறது. நீலிக்குக் கோயில் எழுப்பியதையும், இந்தக் கதையைப் பல தலைமுறைகளுக்குக் கடத்தி பெண்களின் பழிவாங்கும் எண்ணம் அவர்களை அழித்துவிடும் என்று சொல்வதையும் திருமணத்துக்குப் பின் சாந்த குணத்தை மட்டுமே எந்தச் சூழலிலும் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாடம் எடுப்பதற்காக நிகழ்ந்த அரசியலாகவும் பார்க்கலாம்.
- நவீனா, ‘லிலித்தும் ஆதாமும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writernaveena@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago