சட்டமன்றம், நாடாளுமன்றம், நகரமன்றம், பேரூராட்சிமன்றம் எதிலும் இடம்பெறும் வாய்ப்பற்ற என் போன்ற மக்கள்மன்றப் பொதுமக்களுக்கு அன்றாடப் பயணம் நரக வேதனை ஆகிக்கொண்டிருக்கிறது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பேருந்துக் கட்டணத்தை எந்தப் புண்ணியவான் நிர்ணயித்தாரோ அவர் ஏழு தலைமுறைக்குப் பேருந்துகளிலேயே பயணிக்காதவராகத்தான் இருந்திருக்க வேண்டும். சில்லறையே கிடைக்காத இக்காலத்தில் ஆறு ரூபாய், பதினோரு ரூபாய், பதினாறு ரூபாய் என்றெல்லாம் கட்டணங்களை வைத்து பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் அன்றாடம் உரசலை ஏற்படுத்திவிட்டார்.
“நானே இப்பத்தான் ஏற்னேன், எங்கிட்ட எங்க இருக்குது சில்லறை?” என்று நடத்துநர் (பயணி மீதும் ஏறி) ஆர்ப்பரிக்க, “நானும் இப்பத்தான் இருந்த சில்லறையை இன்னொரு பஸ்ல கொடுத்தேன்” என்று பயணியும் பரிதவிக்க முதல் கட்டம் முடிவுக்குவருகிறது. ஐம்பதோ நூறோ, சமயங்களில் ஐந்நூறாகவோ நோட்டைத் தந்துவிடும் பயணி, அடிக்கடி கழுத்தைத் திருப்பி நடத்துநர் நம்மை நோக்கி வருகிறாரா, மிச்சம் சில்லறையைத் தருவாரா என்று சிவசேனையின் திரும்புப் பயணத்துக்காகக் காத்திருக்கும் மகாராஷ்டிர பாஜகபோல சந்தேகத்துடன் பார்க்க வேண்டியாகிறது. நடத்துநரோ ‘மவனே அலய்டா’ என்கிற மைண்ட் வாய்ஸுடன் அவரையே பார்க்காமல் அவருடைய ரத்தக்கொதிப்பு, இதயத்துடிப்பு, ரத்த சர்க்கரை அளவு என்று எல்லாவற்றையும் ஏற்றிவிட்டு கடைசியாகத்தான் மீதி சில்லறை தருவார்.
இதற்கிடையில் சக பயணிகள், “வாங்கற சில்லறையெல்லாம் என்னா பண்ணுவாங்க?” என்று கேட்க, “அதையெல்லாம் கமிஷனுக்குக் கடைங்கள்ள குடுத்துட்டு அதுலே வேற சம்பாதிப்பாங்க” என்ற இன்னொருவர் விளக்கி இப்போது நடத்துநருக்கும் பிபி, சுகர், ஹார்ட்பீட் (இது மூணும் தமிழ்ங்க, அகராதியில ஏறிடுச்சு) எல்லாவற்றையும் ஏற்றிவிடுவார்கள். இதெல்லாம் மாநில நிதித் துறை செயலர், போக்குவரத்துத் துறை செயலர் அல்லது மாநகர போக்குவரத்துக் கழகத் தலைவர் போன்றவர்களுக்கெல்லாம் தெரிந்திருக்கவே நியாயம் இல்லை. காரணம் அவர்கள் எந்தக் காலத்தில் இம்மாதிரி சபிக்கப்பட்டவர்களுடன் பயணித்திருக்கிறார்கள்? அமைச்சர் பெருமக்களும் புதிதாக வாங்கியது சொகுசு வண்டியாக இருந்தால் உள்ளே உட்கார்ந்து வெள்ளோட்டம் பார்ப்பார்கள், சாதா‘ரண’ வண்டி என்றால் வெளியில் இருந்தே கொடியசைத்துத் தொடங்கி வைப்பார்கள்.
சென்னை மாநகரில் ஓடும் சொகுசுப் பேருந்துகளில், எதை சொகுசு என்று கருதுகிறார்கள் என்று இன்று வரை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. திருமணம் முடிந்து தேனிலவுக்குப் போகும் புதுமணத் தம்பதியர்கூட இரண்டு பேர் அமரும் இருக்கையில் அருகருகில் அமர்ந்தவுடன் நெருக்கத்துக்கு பதில் இடுப்புக் குறுக்கத்துக்கு ஆளாகி யாராவது ஒருவர் எழுந்துவிடுவார்கள். வாயுவேகம் - மனோ வேகத்தில் (!) செல்லும் இந்தப் பேருந்திலிருந்து பயணிகள் விழுந்துவிடாமலிருக்க, பக்கத்தில் தடுப்புக் கம்பியோ அல்லது கம்பித் தூணோ வைத்து அவர்களுடைய இடுப்பை ஒடிக்கிறார்கள்.
இந்த இரு நபர் இருக்கையில் யாராவது ஒருவர்தான் உட்கார முடியும். இன்னொருவருக்கு இதயத்தில் வேண்டுமானால் இடம் தரலாமே தவிர, பக்கத்தில் தர முடியாது. பெயரளவுக்கு வெள்ளை போர்டு சாதாரண கட்டணப் பேருந்துகளைச் சில தடங்களில் இயக்கிக்கொண்டு, எஞ்சியதையெல்லாம் ‘விரைவு’ அல்லது ‘சொகுசு’ என்று பெயரிட்டு மக்களை வஞ்சிப்பதை என்னவென்பது?
இதைவிடப் பெரிய அநியாயம் மறைமுகமாகக் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது. திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி பகுதி மக்கள் பேருந்துக் கட்டணம் பல மடங்காகிவிட்டது குறித்துப் புலம்புகிறார்கள். திருவண்ணாமலை தீபம், கும்பகோணம் மகாமகம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் திருக்குட முழுக்குக் காலத்தில் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாவிட்டாலும் கட்டணக் கொள்ளை அடித்துப் புண்ணியம் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆம்னி பேருந்து உரிமையாளர்களே அரசுப் போக்குவரத்துக் கழகம் மேற்கொள்ளும் உயர்வைப் பார்த்து ஆனந்தக் கண்ணீருடன் தங்கள் பேருந்துகளின் கட்டணங்களை உயர்த்திவருகிறார்கள்.
சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்கும், தமிழ்நாடு முழுக்க தனியார் வாகனங்கள், அதிலும் குறிப்பாக இருச்சக்கர வாகனங்கள் அதிகமானதற்கும் மூல காரணம் பொதுப் போக்குவரத்தை சேவையாகவும் நடத்தத் தெரியாமல், லாபகரமாகவும் நடத்த முடியாமல் தமிழக அரசு திணறுவதால்தான். சென்னை மாநகரில் 24 மணி நேரமும் எல்லாத் தடங்களிலும் பொதுப் போக்குவரத்து நடந்தால், இரவில் பணி முடித்துவருவோரும் வெளியூர்களிலிருந்து சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், கோயம்பேடு பகுதிகளுக்கு வரும் பயணிகளும் நிம்மதியாக வீடு போய்ச் சேர பேருந்துகளையே பயன்படுத்துவர். பயணியர் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும் தடங்களில் சிற்றுந்துகளை இயக்கலாம். இதற்கு இரண்டு அம்சங்கள் அவசியம். முதலாவது, மக்களுடைய பிரச்சினையைத் தன் பிரச்சினையாக நினைக்கும் அர்விந்த் கேஜ்ரிவால் மனோபாவம். இரண்டாவது, மாநகரப் போக்குவரத்தை எல்லாப் பகுதிகளுக்கும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் உரியதாக மாற்ற வேண்டும் என்ற அதிகாரவர்க்கத்தின் அர்ப்பணிப்புணர்வு.இரு நபர் இருக்கையில் யாராவது ஒருவர்தான் உட்கார முடியும். இன்னொருவருக்கு இதயத்தில் வேண்டுமானால் இடம் தரலாமே தவிர, பக்கத்தில் தர முடியாது!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago