நெல் சாகுபடி ஒன்றே பிரதானமாகப் பார்க்கப்படும் காவிரிப் படுகையில், இன்னும் முயன்று பார்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம். தோட்டக்கலைப் பயிர்களை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். இப்படிப் புதிய முயற்சி எது ஒன்றில் நுழையும் முன்னரும் ஒன்றோடு ஒன்று சங்கிலியாக இணைக்கப்பட்ட சந்தை அமைப்பும் முக்கியம். விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக 2000-ல் அன்றைய முதல்வர் கருணாநிதியின் முன்னெடுப்பில் தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டன. பெரும் வரவேற்போடும், நிறைய சாத்தியங்களை உள்ளடக்கியும் தொடங்கிய திட்டம் இது. ஆனால், இன்றைக்கு அவை பெரும்பாலும் அரசுக் கோப்புகளில் மட்டுமே உயிர்ப்போடு இருக்கின்றன. உழவர் சந்தைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. எனினும், காவிரிப் படுகையில் ஒரு முன்னுதாரணம்போல செயல்படும் மன்னார்குடி உழவர் சந்தை பல புதிய சாத்தியங்களை நமக்குச் சுட்டுகிறது.
இடைத்தரகர் இன்றி விவசாயிகளே நேரடியாக விற்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுவதால், உழவர் சந்தையில் குறைந்த விலையில் காய்கறி கிடைக்கும் என்ற எண்ணம் அனைத்துத் தரப்பு மக்களிடமும் உள்ளது. அதன் காரணமாகத்தான், அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும் சில உழவர் சந்தைகள் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. அவற்றில், மன்னார்குடியில் செயல்பட்டுவரும் உழவர் சந்தையானது, மற்ற உழவர் சந்தைகளுக்கும் முன்மாதிரியாகக் கொள்ளப்பட வேண்டியது.
முன்மாதிரி உழவர் சந்தை
மன்னார்குடி உழவர் சந்தையில் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐயாயிரம் பேரேனும் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இது ஒட்டுமொத்த மன்னார்குடியில் வசிக்கும் பதினையாயிரம் குடும்பங்களில் மூன்றில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவு என்னவானது என்றால், இந்தச் சின்ன நகரத்தில் கூடுதலாக இன்னொரு உழவர் சந்தை திறக்கப்படும் சூழலை உருவாக்கியது.
இத்தனைக்கும், மன்னார்குடி பகுதியில் தோட்டக்கலைச் சாகுபடி பெரிய அளவில் ஊக்கப்படுத்தப்படவும் இல்லை; மன்னார்குடிக்குத் தேவையான எல்லாக் காய்-கனிகளும் இதைச் சுற்றியுள்ள பகுதியிலேயே கிடைத்துவிடவும் இல்லை. இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் அடங்கிய மன்னார்குடி ஒன்றியத்தில், 44 கிராமங்களில் மட்டுமே காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. அந்தக் காய்கறிகள் மன்னார்குடி உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இது மக்களின் தேவைக்குப் போதுமானதாக இல்லாத சூழலில், வெளியூர் சந்தைகளிலிருந்தும் காய்கறிகள் வாங்கப்பட்டு, மன்னார்குடி உழவர் சந்தையில் விற்கப்படுகின்றன. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நகரில் உள்ள ஏனைய தனியார் கடைகளின் காய்-கனி விலை உழவர் சந்தையோடு ஒப்பிடப்படுகிறது. அதீத விலைக்கு விற்பதை மறைமுகமாகக் கட்டுப்படுத்தும் அமைப்பாக உழவர் சந்தை இங்கே உருமாற்றம் அடைகிறது.
மன்னார்குடிக்குத் தேவைப்படும் - அதேநேரம் மன்னார்குடி பகுதியிலேயே விளைவிக்கச் சாத்தியமான எல்லா காய்-கனிகளையும் இப்பகுதியிலேயே விளைவித்து, மன்னார்குடியிலேயே சந்தைப்படுத்தினால் இங்குள்ள விவசாயிகளுக்கு அது எத்தகைய வாய்ப்பாக அமையும்? எந்தெந்தக் காய்-கனிகளை உற்பத்திசெய்யலாம் என்கிற ஆலோசனையை அரசே ஆய்வுசெய்து அளிக்கலாம். மேலும், இதேபோல காவிரிப் படுகை முழுவதும் உற்பத்தியும் சந்தைகளும் மேம்படுத்தப்பட்டு பரவலாக்கப்பட்டால் எப்படியிருக்கும்?
இது எப்படி ஒரு முன்னுதாரணம்?
மன்னார்குடி உழவர் சந்தையில் காய்-கனிக் கடைகள் மட்டும் அல்ல; ஊட்டி டீ தூள் உங்களுக்குக் கிடைக்கும். வெளிச்சந்தையைக் காட்டிலும் விலை குறைவு என்பதோடு, கலப்படம் ஏதும் இல்லாதது எனும் உத்தரவாதத்தோடு கிடைக்கும். தேயிலை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகப் பெற்று இங்கு கொண்டுவந்து விற்பதன் வழி நடப்பது இது. கூட்டுறவு அமைப்பு இன்னும் உயிர்போடு செயல்படும் இடங்களில் இது சாத்தியம் ஆகிவிடுகிறது. இதேபோல வாய்ப்புள்ள சரக்குகளையெல்லாம் இந்தச் சந்தையில் கொண்டுவந்தால் எப்படியிருக்கும்?
விவசாயிகள் இப்போது தம் விளைபொருட்களைத் தினந்தோறும் நேரில் வந்து உழவர் சந்தையில் விற்கிறார்கள்; மாற்றாக, பால் கொள்முதல் செய்வதுபோல கிராமங்களுக்கே நேரடியாகச் சென்று காய்கறிகளைக் கொள்முதல் செய்யும் அமைப்பையும் உருவாக்கி சந்தைக்குக் கொண்டுவந்து விற்றால் விவசாயிகளுக்கு மட்டும் அல்ல; நுகர்வோருக்கும் அது பெரும் பலன் அளிப்பதாக அமையும்!
- எஸ்.கோபாலகிருஷ்ணன்
தொடர்புக்கு: gopalakrishnan.siva@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago